வடு அன்று, வேந்தன் தொழில்!

மன்னராட்சிக் காலத்தில் நாட்டின் எல்லையைச் சுற்றி "காவற்காடு' எனும் பெயரில் அடர்த்தியான காடுகளை உருவாக்கினர்;

மன்னராட்சிக் காலத்தில் நாட்டின் எல்லையைச் சுற்றி "காவற்காடு' எனும் பெயரில் அடர்த்தியான காடுகளை உருவாக்கினர்; வனவிலங்குகள் வாழ்வதற்கும் இடங்கொடுத்தனர். எதிரிகள் நாட்டிற்குள் எளிதில் நுழைந்து விடாமல் இருப்பதற்குக் காடுகள் உருவாக்கப்பட்டன. அந்தக் காட்டுக்குள் இருந்த விலங்குகள் நாட்டிற்குள் நுழைந்து மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கின்றபொழுது, மக்கள் மன்னனிடம் வந்து முறையிடுவார்கள். உடனே மன்னன் வீரர்கள் புடைசூழ காட்டிற்குள் நுழைந்து, கொடிய விலங்குகளை அம்பு எய்திக் கொலை செய்வான். இதற்கு "வேட்டையாடுதல்' எனப் பெயர்.
 அன்று நாட்டிற்குள்ளே புகுந்து தீங்கு விளைவித்த விலங்குகளை மன்னன் வேட்டையாடியது போல, இன்று சமூகத்திற்குத் தொடர்ந்து கேடு விளைவிக்கும் சமூக விரோதிகளை, ரெளடிகளை காவல் துறையில் சுட்டு வருகின்றனர். "நீதித்துறை என்று ஒன்று இருக்கின்றபொழுது, காவல்துறையினர் தன்னிச்சையாகச் சுட்டுக்கொல்லுதல் நியாயமா' என்றொரு கேள்வி இப்பொழுது எழுந்திருக்கிறது.
 தெய்வச் சேக்கிழாரே பெரிய புராணத்தில் எறிபத்த நாயனார் சரிதத்தைப் பாடுகின்ற பொழுது, தன்னிச்சையாகத் தண்டித்தலுக்குச் சான்று பகருகிறார். கரூரில் வாழ்ந்த எறிபத்த நாயனார், ஆண்டவனுடைய அடியார்களுக்கு யாராவது ஒருவர் தீங்கிழைத்தால், அவர்களை அங்கேயே தாம் கையில் வைத்திருக்கும் "பரசு' எனும் ஆயுதத்தால் வெட்டித் தள்ளுவார்.
 கரூரில் சிவகாமி ஆண்டார் எனும் சிவனடியார் அதிகாலை எழுந்திருந்து, பூக்கொய்து மாலை கட்டி பசுபதீஸ்வரருக்குச் சூட்டுதலைத் தொண்டாகக் கொண்டிருந்தார். ஒருநாள் மன்னனுடைய பட்டத்து யானை மதம் பிடித்து, வழக்கமாக பூக்கொய்து கொண்டு வருகின்ற சிவகாமியாண்டாரைத் தன்னுடைய துதிக்கையால் தள்ளிப் பூக்குடலையையும் நாசப்படுத்துகின்றது.
 அதனைக் கண்ட எறிபத்த நாயனார், அந்த யானையையும் வெட்டி, அதன் செயலைத் தடுக்க மறுத்த பாகர்களையும் வெட்டிக் கொல்கிறார். இதனால் "என்கவுன்ட்டர் எனும் பெயரில்லாவிட்டாலும், தன்னிச்சையாகத் தண்டித்தல் அன்றும் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
 சமூக விரோதிகளை ஈவு இரக்கமின்றிக் கொல்ல வேண்டும் என்பதில் திருவள்ளுவரும் ஒத்துப் போகிறார். "கொடியவர் சிலரைக் கொலைத் தண்டனையால் அரசன் ஒறுத்தல், பயிரைக் காப்பாற்ற களைகளைக் களைவதற்கு ஒப்பாகும் என்பது "கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல், பைங்கூழ் களைகட் ட தனொடு நேர்' எனும் திருக்குறளின் திரண்ட கருத்தாகும். கொலைக் கூட்டத்தின் தலைவனை "கொலையிற் கொடியார்' என அழைக்கிறார். "ரெளடி' என்ற சொல்லைக் காட்டிலும் அழுத்தமான தொடரை திருவள்ளுவர் கையாளுகின்றார்.
 "காவல்துறையினர் தன்னிச்சையாக செயல்படக் கூடாது; நீதிமன்றத் தீர்ப்பின்படியே நடக்க வேண்டும்' என்று சிலர் ஜனநாயகம் பேசுகின்றனர். ஆனால், சிலப்பதிகாரக் காலத்திலே பூம்புகாரில் நடுத்தெருவில் நின்ற சதுக்க பூதமே, நீதிமன்றப் பணி யையும் காவல்துறையினரின் பணியையும் ஒருங்கே நிகழ்த்தியிருக்கிறது.
 பூம்புகாரிலே தவ வேடத்தில் மறைந்து தவறுகளைச் செய்பவர்களையும், ஒழுக்கம் கெட்ட பெண்களையும், துறையிலே இருந்து கொண்டே கொலையாளிகளுக்குத் தகவல் கொடுப்பவர்களையும், பிறன் மனைவியை விரும்பும் பேதைகளையும், பொய் சாட்சி சொல்பவர்களையும், புறங் கூறுபவர்களையும் சதுக்க பூதம் தம் கையிலுள்ள பாசக்கயிற்றால் பற்றியிழுத்து, அடித்துக் கொன்றுவிட்டு, அவர்களுடைய உடல்களையும் தின்று விடுமாம். அதனை நான்கு வீதிகளுக்கும் தெரிவிக்கும் முகத்தான் ஓங்காரக் கூச்சலிடுமாம். சதுக்க பூதம் செய்ததை "என்கவுன்ட்டர் அல்லது "எதிர்ச்சிக் கொலை' என்றுதானே சொல்ல வேண்டும்.
 பண்டைய கிரேக்கத்திலேயே ஏதென்ஸ் நாட்டின் சமூக விரோதி ஒருவனை ஊர் மக்களே ஒன்று கூடிக் கொன்றிருக்கிறார்கள். ஏதென்ஸின் குடிமகன் ஒருவன் சமூக விரோதியாக மாறி, ஏதென்ஸின் ராணுவ ரகசியங்களை ஸ்பார்ட்டா எனும் நகரத்திற்குச் சொல்லி விட்டான். அந்தக் குடிகேடியைக் கொல்வதற்கு ஊரே திரண்டு விரட்டிக் கொண்டு போனபோது, அவன் அத்தீனா தெய்வத்தின் கோயிலுக்குள் நுழைந்து விட்டான்.
 அந்த நாட்டு வழக்கப்படி, ஒருவன் கோயிலுக்குள் நுழைந்து விட்டால், அவனைக் கொல்லக் கூடாது. அதனால் ஊர் மக்கள் ஒரு முடிவெடுத்து, அத்தீனா தெய்வத்தின் கோயில் நுழைவாயிலைச் சுவரெழுப்பி மூடி விட்டார்கள். அதில் வியப்பு என்னவென்றால், அந்தச் சுவரை எழுப்புவதற்கு முதல் கல்லை எடுத்து வைத்தவர், அவனைப் பெற்ற தாயார் என்பதாகும். அந்தக் கயவன் உள்ளேயே கிடந்து செத்தான். கூடி நின்று கொல்லுதல் அங்கேயும் வழக்கத்தில் இருந்திருக்கிறது.
 அரபு நாடுகளில் பாலியல் வன்முறையில் ஈடுபடுபவனை நடுத்தெருவில் நிறுத்தி, மரத்தில் கட்டிப் பொதுமக்கள் கல்லால் அடித்துக் கொல்வார்கள். சென்ற ஆண்டு கூடத் துபை இளவரசன் ஒருவன் அந்தத் தண்டனைக்கு உள்ளானான். துப்பாக்கியால் சுட்டால் ஒரே மூச்சில் செத்துவிடுவான்; கல்லால் அடித்துக் கொல்லப்படுகின்றபோது, அவன் நரகத்தை இங்கேயே பார்ப்பான்.
 தமிழ்நாட்டிலே மூதறிஞர் ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, வால்பாறையிலே தொழிற்சங்கவாதிகள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். குறைந்த அளவிலான காவல்துறையினரால், அந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உணர்ச்சிக் கொந்தளிப்பில் போராளிகள் முன்னேறிக் கொண்டு வந்தபோது, காவல்துறையினர் வேறு வழியின்றி துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். அதில் நான்கு தொழிலாளிகள் மாண்டுவிட்டனர்.
 இதனைக் கண்டித்து தமிழகத்துக் கட்சிகள் ஏகோபித்துக் குரல் எழுப்பின. விசாரணை கமிஷன் வேண்டுமென்று சட்டசபையிலேயே வற்புறுத்தின. அதற்கு ராஜாஜி, "துப்பாக்கி வெடித்தாலே நிலைமைக் கட்டுக்கடங்காமல் போய்விட்டது என்றுதானே அர்த்தம். அதற்குப் பிறகு என்ன விசாரணை' என்று ஒரேயடியாக மறுத்து விட்டார். அதன் பிறகு அப்பிரச்னை ஓய்ந்து விட்டது.
 காவல்துறையின் தேடுதல்களில் சிக்காமல், சட்டத்தின் பிடியில் அகப்படாமல் தொடர்ந்து கொலைக் குற்றங்களில் ஈடுபடும் கொலையாளிகளைத்தாம் காவல்துறையினர் என்கவுன்ட்டர் செய்கிறார்கள். என்றாலும், இதிலும் ஒரு பலவீனம் இருக்கின்றது. காவல்துறையினர் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும், ஆளுங்கட்சிக்கு எதிராகச் செயல்படும் நபர்களையும் என்கவுன்ட்டர் எனும் பெயரில் சுட்டு விடுகின்றனர்.
 தேசிய மனித உரிமை ஆணையத் தகவலின்படி, 2009-இல் இருந்து 2013-வரை, 555 போலி என்கவுன்ட்டர்களை காவல்துறையினர் நிகழ்த்தியுள்ளனர். நீதித்துறையினர் ஆற்ற வேண்டிய பணிகளை காவல்துறையே கையிலே எடுத்துக்கொண்டு செயல்படுவதில் நியாயம் இல்லை என மக்களாட்சியின் மாண்புகளை உணர்ந்தவர்கள் சொல்லுவதில் நியாயம் இல்லாமல் இல்லை.
 இந்தியாவில் முதல் என்கவுன்ட்டர் 11.1.1982 அன்று மும்பையில் நிகழ்ந்தது. "மன்யா சர்வே' எனும் கொலை பாதகன் இரண்டு காவல்துறை அதிகாரிகளால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டான். அவன் ஒரு கொலையை நிகழ்த்திவிட்டுத் தலைமறைவு ஆனவன். சில ஆண்டுகள் தொடர்ந்து தேடியும் பிடிபடாததால், அவன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டான். கொலை - கொள்ளைகளை நிகழ்த்துவதற்குப் பயங்கரவாதிகள் மும்பையையே கேந்திரமாக வைத்திருக்கின்றனர்.
 நாடு விடுதலை பெற்றதிலிருந்து கிரிமினல் குற்றவாளி ஒருவன் வளைகுடா நாடுகளில் அமர்ந்து கொண்டு, மும்பையில் இருக்கும் ஏஜெண்டுகளுக்கு, நிகழ்த்த வேண்டிய கொலை - கொள்ளைகளைத் திட்டமிட்டுக் கொடுத்து வருவதை நாடு அறியும். என்றாலும், சட்டத்தின் கரங்கள் அவன் பக்கம் நீளுவதே இல்லை.
 கர்நாடக மாநிலத்தில் தேவராஜ் அர்ஸ் முதலமைச்சராக இருந்தபோது, நீதிமன்றம் நடந்து கொண்டு இருக்கும்போதே, கொலைகாரக் கும்பல் உள்ளே நுழைந்து கூண்டிலே நிற்கின்ற குற்றவாளிகளை மீட்டுக் கொண்டு சென்றனர். அதனை நீதிபதி பார்த்துக் கொண்டுதான் இருக்க முடிந்ததே தவிர, வேறொன்றும் செய்ய முடியவில்லை.
 போலி என்கவுன்ட்டரில் ஈடுபடும் காவல்துறையினரை, நீதித்துறை கடுமையாகத் தண்டித்திருக்கிறது. 2009-ஆம் ஆண்டு டேராடூனில் படித்துக் கொண்டிருந்த 22 வயது மாணவனை, ஏழு காவலர்கள் என்கவுன்ட்டர் செய்து விடுகின்றனர். அந்த ஏழு காவலர்களுக்கும் ஜார்க்கன்ட் நீதிமன்றம், ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறது.
 1991-ஆம் ஆண்டு உத்தர பிரதேசம் பிலிபிட் மாவட்டத்தில் புனித யாத்திரை சென்று கொண்டிருந்த 11 சீக்கியர்களை, 47 காவலர்கள் சுற்றி வளைத்து சுட்டு விடுகின்றனர். அந்த 47 காவலர்களுக்கும் நீதிமன்றம், 2016-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்திருக்கின்றது.
 2015-இல் திருப்பதியில் செம்மரம் வெட்டுவதற்காகச் சென்ற இருபது பேரை ஆந்திர மாநில காவல்துறையினர் என்கவுன்ட்டர் செய்திருக்கின்றனர். வயிற்றுப் பிழைப்புக்காக செம்மரம் வெட்டச் சென்றவர்கள், கொலைகாரர்கள் அல்லர். அவர்கள் திருத்தப்பட வேண்டியவர்களே தவிர, கொல்லப்பட வேண்டியவர்கள் அல்லர்.
 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் ஹைதராபாத் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நான்கு ரெளடிகள் ஒரு கால்நடை மருத்துவரை பாலியல் வன்முறை செய்து, பின்னர் அவரைக் கொலையும் செய்தனர். அந்த நான்கு கொலைகாரர்களும் அதே இடத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். அதனை ஆந்திர மாநில மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவதைப் போல் கொண்டாடி, சுட்டுக்கொன்ற காவலர்களுக்குப் பாராட்டு விழாவும் நடத்தினர்.
 எனவே, ஜனநாயகவாதிகள் கண்ணில் என்கவுன்ட்டர் அநியாயமாகத் தென்பட்டாலும், பொது மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
 சில நாட்களுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தில் ஒருவன், எட்டு காவலர்களை சுட்டுக் கொன்றிருக்கிறான். இதற்கு முன்னர் அவன் 2001-இல் உள்ளூர் காவல் நிலையத்தில் வைத்தே அம்மாநில அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறான். இதுபோன்ற கயவர்களை என்கவுன்ட்டர் செய்வதில் எந்தத் தவறும் இல்லை.
 காட்டிலே இருக்கின்ற விலங்குகள் நாட்டிற்குள் நுழைகின்றபோது, மன்னர் வேட்டையாடி அவற்றைக் கொல்லுவது போல் கயவர்களைக் களைவதற்கு என்கவுன்ட்டர்களும் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாகும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com