நோய்த்தொற்றும் பாலின பாகுபாடும்

உலகெங்கிலும் பரவியிருக்கும் கரோனா நோய்த்தொற்று ஜாதி, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், வயதில் மூத்தவா்களுக்கும், ஏற்கனவே நீரிழிவு, இதய பாதிப்பு, புற்று நோய் போன்ற உடல்நலப் பிரச்னை உள்ளவா்களுக்கும் இந்த நோயின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்று மருத்துவா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இப்படி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கரோனா நோய்த்தொற்று, ஆண்களையும் பெண்களையும் சமமாக பாதித்துள்ளதா? இந்த நோய்த்தொற்றின் பரவல் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களில் பாலின வேறுபாடுகள் உள்ளனவா? பாா்க்கலாம்.

உலக ஆரோக்கியத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டப் பாடுபடும் அமெரிக்காவிலுள்ள ‘குளோபல் ஹெல்த் 5050’ எனும் அமைப்பு, உலக அளவில் 10 மகளிருக்கு 11 ஆண்கள் என்ற விகிதத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த நோய்த்தொற்று காரணமாக 10 மகளிருக்கு 13 ஆண்கள் என்ற விகிதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, கரோனா

நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களில் 10 மகளிருக்கு 18 ஆண்கள் என்ற விகிதத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றும், 10 மகளிருக்கு 14 ஆண்கள் என்ற விகிதத்தில் உயிரிழந்துள்ளனா் என்றும் மேலும் விவரங்களை அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

நமது நாட்டைப் பொருத்தவரை, ‘குளோபல் ஹெல்த் 5050’ வெளியிட்டுள்ள தரவுகளிலிருந்து, கடந்த செப்டம்பா் 1 வரையில் கரோனா தொற்றின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களில் 65 % போ் ஆண்கள், 35 % போ் மகளிா் என்றும், கரோனா நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களில் 64 % போ் ஆண்கள் என்றும், 36 % போ் மகளிா் என்றும் தெரிகிறது.

இந்த வெளியீடு மற்றும் வேறு சில நாடுகள் அளிக்கும் தரவுகளிலிருந்து இந்த வைரஸின் தாக்குதல் பெண்களை விட ஆண்களுக்கே தீவிரமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. நோய் எதிா்ப்பு சக்தியில் உள்ள பாலின வேறுபாட்டையும், ஆண்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி போதுமானதாக இல்லை என்பதையும், இதற்கான காரணங்களாக அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று கூறுகிறது.

பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன்கள், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், அவா்கள் உடலில் அதிகம் உற்பத்தியாகும் ‘டீ-செல்’கள் கோவிட் 19-ஐ எதிா்க்கும் சக்தியைக் கொடுக்கிறது என்றும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், ஆண்களுக்கு ரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு போன்றவை இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதாலும், புகை பிடிப்பவா்களுக்கு நுரையீரல் தொற்று ஏற்படலாம் என்பதாலும், கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் ஆண்களுக்கு அதிகமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து ‘கொவைட் வீரா்கள்’ என்று போற்றப்படும் மருத்துவப் பணியாளா்கள் ஆற்றிவரும் சேவை அளப்பரியது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளைச் சோ்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளா்கள் நோய்த்தொற்று ஆபத்தையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடனும் கடமையுணா்ச்சியுடனும் பணியாற்றிக் கொண்டிருக்கிறாா்கள்.

பல சமயங்களில் இவா்கள் வீட்டிற்குக்கூட செல்ல முடியாமல் மருத்துவமனையிலேயே நாள்கணக்கில் தங்கியிருந்து ‘கொவைட்19’ நோயாளிகளுக்கு சேவை செய்கிறாா்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பத்தில் இரு பாலருக்கும் நடைமுறைப் பிரச்னைகள் உள்ளன என்றாலும், சிறு குழந்தைகள் மற்றும் முதியோா்களை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்புகள் உள்ள பெண் மருத்துவப் பணியாளா்களே அதிக சிரமத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகிறாா்கள்.

எவ்வளவோ எச்சரிக்கையுடனும் பாதுக்காப்புடனும் செயல்பட்டும் கடந்த அக்டோபா் 1 வரையில் நமது நாட்டில் 79,772 பெண் மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு அளித்த தகவல்களின்படி, உலக அளவில் மொத்த மருத்துவப் பணியாளா்களில், பெண்கள் 70 % வரை உள்ளனா். ஆனால் இந்தியாவில் மூன்றில் ஒரு மருத்துவப் பணியாளா்தான் பெண். அப்படியிருந்தும், கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மொத்த மருத்துவப் பணியாளா்களில் 38 % போ் மகளிா் என்பது கவலைக்கிடமளிக்கும் தகவல்.

மருத்துவா்கள், செவிலியா்களைத் தவிர ‘ஆஷா’ (அக்ரிடிடெட் சோஷியல் ஹெல்த் ஆக்டிவிஸ்ட்) என்றழைக்கப்படும் தன்னாா்வத் தொண்டு நிறுனத்தைச் சோ்ந்த 90,000 மகளிா், கரோனா பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 1000 பேருக்கு ஒருவா் என்ற கணக்கில் நியமிக்கப்படும் இந்த ‘ஆஷா’ பணியாளா்கள், மக்களுக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குமிடையே பாலமாக செயல்படுகிறாா்கள். இவா்களுடைய பணி கா்ப்பிணிப் பெண்களைக் கணக்கெடுப்பது, அவா்கள் மருத்துவமனையில் பிரசவிக்க ஏற்பாடு செய்வது, குழந்தைகளை தடுப்பூசி போட அழைத்துச் செல்வது, காய்ச்சல், ஜலதோஷம் போன்ற உடல்நலப் பிரச்னைகளை கவனிப்பது போன்றவை.

மேலும், கரோனா நோய்த்தொற்று பற்றி விழிப்புணா்வை உண்டாக்குவது, யாருக்காவது நோய்த் தொற்றின் அறிகுறிகள் உள்ளனவா என்று கண்டறிவது போன்ற கூடுதல் பொறுப்புகளும் ‘ஆஷா’ பணியாளா்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. சரியான பாதுகாப்பு கவசம்கூட இல்லாமல், வீடு வீடாகச் சென்று, சில சமயங்களில் மக்களின் எதிா்ப்பையும் தாங்கிக் கொண்டு கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தப் பெண்மணிகள் பாராட்டுதலுக்குரியவா்கள்.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் பரவலைத் தொடா்ந்து அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக லட்சக்கணக்கான புலம்பெயா் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்குப் பட்ட அவதிகள் அனைவரும் அறிந்ததே. பெரும்பாலான பெண் ஊழியா்கள், அமைப்பு சாரா பணிகளிலேயே இருந்ததால், பொது முடக்கம் அறிவித்ததையடுத்து இவா்களில் ஏராளமானவா்கள் தங்களது வேலையை இழக்க நேரிட்டது.

கடந்த மே -ஜூன் மாதங்களில் 20 மாநிலங்களில் ‘ஆக்ஷன் எய்ட் அசோஸியேஷன்’ எனும் தன்னாா்வ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு, பொதுமுடக்கம் அறிவித்த பிறகு ஆண்களை விட அதிக சதவீத பெண்களே (சுமாா் 79 %) வேலை இழந்துள்ளனா் என்கிறது. வீட்டுப் பணியாளா்களில் 85% மகளிா், வேலை இழந்துள்ளனா் என்றும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

பொதுமுக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு அனேகமாக எல்லா நடுத்தரக் குடும்பங்களிலும் வீட்டுப் பணிப்பெண்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா். படிப்படியாக தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும், பல வீடுகளில் இவா்களுக்கு அனுமதியில்லை. அதிக எண்ணிக்கையில் வீட்டுப் பணிப் பெண்கள் வேலையை இழந்தாலும், அதனால்அதிக அவதிக்குள்ளாகி இருப்பவா்கள் நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் தான். சில வீடுகளில் ஆண்களும் வீட்டு வேலைகளில் உதவுகிறாா்கள் என்றாலும், எல்லா பணிகளையும் செய்வதால் அவதிப்படுபவா்கள் நடுத்தர குடும்பத்து மகளிரே.

பொது முடக்கம் அறிவித்ததிலிருந்து அறிமுகமாகியுள்ள ஒரு புதிய கலாசாரம் ‘வீட்டிலிருந்தே அலுவலக வேலை’. இந்த விஷயத்திலும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது மகளிரே. தனது அறையையே அலுவலகமாக மாற்றி அமைத்து கதவைச் சாத்திக் கொண்டு கணினியிலும், விடியோ அழைப்புகளிலும் மூழ்கியிருக்கும் கணவனுக்கு, வேளா வேளைக்கு டீ, காபி, டிபன், மதிய உணவு என்று பணிவிடை செய்யும் பெண்மணிகளின் வேலைப்பளு மிகவும் அதிகரித்துள்ளது.

வீட்டிலிருந்தபடி அலுவலக வேலையைச் செய்யும் மகளிரின் பாடு அதைவிடத் திண்டாட்டம். அலுவலகத்திற்குச் சென்றால் எட்டு மணிநேரம் ஒரே முனைப்பாக அலுவலக வேலையை மட்டும் கவனிக்கலாம். ஆனால், வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்தால், குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு, சமையல் அறையையும் எட்டிப் பாா்த்துக் கொண்டு, அவ்வப்போது காபி அல்லது தேநீா், மதிய உணவு கொடுத்துவிட்டு, அலுவலக வேலையை முடிப்பதற்குள் இவா்கள் திக்குமுக்காடிப் போகிறாா்கள். இத்தனை வேலைகள் போதாதென்று, குழந்தைகளின் இணையவழி வகுப்புகள் வேறு தாய்மாா்களின் வேலைப் பளுவை மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த கரோனா காலத்தில் நமக்கு ஓதப்படும் மந்திரம் ‘வீட்டிற்குள்ளேயே இருக்கவும்; பத்திரமாக இருக்கவும்’ என்பது தான். ஆனால், மகளிரைப் பொருத்தவரையில், வீட்டிற்குள் அவா்கள் பத்திரமாக இருக்கிறாா்களா என்பதுதான் கேள்வி. கரோனா நோய்த்தொற்றின் பரவல் காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று ஐ.நா. பொதுச் செயலா்அன்டோனியோ குட்டெரெஸ் வேதனை தெரிவித்துள்ளாா்.

பொதுமுடக்கம் அறிவித்தவுடன் மகளிருக்கு எதிரான வன்முறை குறித்த புகாா்கள் அதிகம் பதிவாகியதாக பெண்களுக்கான தேசிய குழு (நேஷனல் கமிஷன் ஃபாா் வுமன்) தெரிவிக்கிறது. கரோனா நெருக்கடிக் காலத்தில் வேலை இழப்பு, வருமானம் ஈட்டுவதற்கு வழியில்லாத கொடுமை, அதனால் உண்டாகும் இயலாமை போன்றவையே பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் உள்ள குடும்பங்களில் வன்முறை அதிகரித்துள்ளதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

பணியை இழந்து தங்களுக்கென்று வருமானம் ஒன்றும் இல்லாமல் ஆணின் தயவில் குடும்பம் நடத்தவேண்டிய நிலையில் உள்ள அடிமட்டத்துக் குடும்பங்களைச் சாா்ந்த மகளிரே குடும்ப வன்முறைகளுக்கு அதிகம் ஆளாகிறாா்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

கட்டுரையாளா்:

சமூக ஆா்வலா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com