சரிவின் விளிம்பில்...

இந்திய ஜனநாயகம் சரிவின் விளிம்பில் இருக்கிறது. ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடிக்கு நாம் தாவிக் கொண்டிருக்கிறோம். பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டாலும், எல்லாம் சரியாகவே இருப்பதாக நம்மை நா



இந்திய ஜனநாயகம் சரிவின் விளிம்பில் இருக்கிறது. ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடிக்கு நாம் தாவிக் கொண்டிருக்கிறோம். பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டாலும், எல்லாம் சரியாகவே இருப்பதாக நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், உண்மைநிலை அதுவல்ல.

சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை இந்த மூன்றும் அரசியல்சாசன ரீதியாக உருவாக்கப்பட்டவை. இந்த மூன்றில் கடைசியாக சொல்லப்பட்ட நீதித்துறைதான் உயர்ந்தது, மரியாதைக்குரியது என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றமோ சட்டப்பேரவையோ எடுக்கும் முடிவுகள் அரசியல் சாசனத்துக்கு உள்பட்டவைதானா என்று நீதித்துறைதான் தீர்மானிக்கிறது. நிர்வாகத்தை நடத்தும் அதிகாரிகள் தவறிழைத்தால் அதை நீதித்துறைதான் தட்டிக் கேட்கிறது. கண்டிக்கவோ தண்டிக்கவோ செய்கிறது.

அண்மையில், ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அல்லாமல் புதிய நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. அந்தக் கடிதத்தில் உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது நிலையில் உள்ள மூத்த நீதிபதி மற்றும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் சிலரின் நடத்தையும், செயல்பாடுகளும் கேள்விக்குரியதாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில விஷயங்களை அவர்கள் பகிரங்கப்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்தியாவில் உள்ள அரசியல் சாசன அமைப்புகள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்படுவதையே பெரும்பாலும் விரும்புகின்றன. குடிமக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவர்கள் மூலம் ஆதாயம் அடைவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. தேவைப்பட்டால் மக்களை அச்சுறுத்தவும் தயங்குவதில்லை. இதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

ஊடகங்களுக்கு ஒரு விஷயம் கிடைத்துவிட்டால் அவை அதை பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து பலவிதமான கருத்துகளை வெளியிடுகின்றன. ஆந்திர முதல்வரின் கடிதத்துக்கு  ஊடகங்கள் பல அர்த்தங்களைக் கற்பித்தன.

தற்போதுள்ள உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. அவருக்கு அடுத்த நிலையில் உள்ள உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி. ரமணாவை அந்தப் பதவிக்கு வரவிடாமல் தடுக்க பா.ஜ.க. மேற்கொண்டுள்ள திட்டத்தின் ஒருபகுதியே இது என்று சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்த நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, உயர்நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் ஆந்திர முதல்வரும் ஒருவர். அதனால், இது முதல்வர் ஜெகன்மோகனின் எதிர் நடவடிக்கை என்று சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெகன்மோகன் பா.ஜ.க.வின் கைப்பாவையாகச் செயல்படுகிறார். இதன் மூலம் ஆந்திர மாநில அரசியலில் பா.ஜ.க. ஊடுருவ முயல்கிறதா? தெலுங்குதேசம் கட்சி அல்லது ஜெகன்மோகன் கட்சி இரண்டில் ஒன்றை தன்பக்கம் இழுக்கும் பா.ஜ.க.வின் முயற்சியா? என்று பல கோணங்களில் விவாதிக்கப்படுகிறது. ஆனால், சில பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் இது குறித்து செய்தியை வெளியிடவே இல்லை.

இதுபோன்ற அரசியல் காய் நகர்த்தல்கள் பா.ஜ.க.வுக்கு புதிது அல்ல. இதுபோன்ற செயல்களை முந்தைய ஆட்சியாளர்களைவிட பா.ஜ.க. நன்றாகவே செய்து வருகிறது. ஆனால், தற்போதைய பிரச்னையை முதல்வர் ஜெகன் - நீதிபதி என்.வி.ரமணா அல்லது மோடி- ஷா கோணத்தில் மேலோட்டமாக அணுகக் கூடாது. தனிநபர்கள் தற்காலிகமானவர்கள். ஆனால், அவர்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் பதவிகள் நிரந்தரமானவை. 

கடந்த 2018, ஜனவரி 12-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தைச் சேர்ந்த நான்கு நீதிபதிகள் தில்லியில் பத்திரிகையாளர்களுக்கு பகிரங்கமாக பேட்டியளித்தனர். அப்போது உச்சநீதிமன்றத்தில் நடப்பவை அனைத்தும் சரியாக இல்லை என்றும் சில முக்கியமான வழக்குகள் குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு மட்டுமே பட்டியலிடப்பட்டு ஒதுக்கப்படுகின்றன என்றும் குற்றம் சாட்டியிருந்தனர். இப்போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் அதுவும் ஒன்று.

இதேபோல அருணாசல பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கலிக்கோ புல், 2016, ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய நாள், 60 பக்கங்கள் கொண்ட அதிரடிக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்த விஷயங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தன. நேர்மையான சிந்தனையாளர்கள் அதைப் படித்தால் கூனிக்குறுகிப் போவார்கள். அது மூடி மறைக்கப்பட்டு, இப்போது மறக்கப்பட்டுவிட்டது. நீதித்துறைக்கு அரசு உதவியிருக்கிறது.

ஒரே மாதிரியான வழக்குகளில் நீதித்துறையால் மாறுபட்ட உத்தரவுகள் வழங்கப்படும்போது,  உச்சநீதிமன்றம் கவலை கொண்டிருக்க வேண்டும். நீதிபதி ஒருவர், தான் பதவியேற்றபோது அளித்த உறுதிமொழியை மீறி நாட்டின் பிரதமரைப் புகழ்ந்து பேசியபோது முழு நீதிமன்றமும் அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனாலும் அந்த நீதிபதி, அவமதிப்பு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க ஏதோ தனக்கு மட்டும் உரிமை இருப்பதாக நம்புகிறார். 
நீதிபதிகளுக்கு பொறுப்புணர்வு இல்லாத நிலையில் சுதந்திரம் இல்லை என்பதை நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை.

ஒரு பத்திரிகையாளரின் மனுவை அவசரமாக விசாரிக்க  உச்சநீதிமன்றம் தயாராக உள்ளது.  இதேபோல ஆந்திர உயர்நீதிமன்றம், முன்னாள் அட்டார்னி ஜெனரலின் மனுவை இரவிலேயே விசாரித்து உத்தரவு பிறப்பிக்கத் தயாராக இருந்தது. ஆனால், ஓர் அரசாங்கமோ அல்லது மற்றவர்களோ தாக்கல் செய்த மனுவை ஏன் இரண்டு வாரங்களாகப் பட்டியலிடவில்லை என்று கேள்வி எழுப்பினால், அதை நீதி விசாரணையில் தலையிடுவதாகக் குறிப்பிடுகிறார்கள். நீதிபதி முரளிதர், தில்லி உயர்நீதிமன்றத்திலிருந்து அதிரடியாக மாற்றப்பட்டபோது, கேள்வி எழுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆந்திர உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளான நீதிபதி சஞ்சய் குமார் மற்றும் நீதிபதி எஸ்.வி. பட் ஆகிய இருவரும் நேர்மையாளர்கள் என்பதாலேயே பந்தாடப்பட்டனர். அதற்கான காரணம் இன்றுவரை தெரியவில்லை. 

இந்த நாட்டின் மிகச்சிறந்த நீதிபதிகளில் ஒருவரான கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.எம். சந்திரசேகர், உச்சநீதிமன்ற நீதிபதியாக தனக்குப் பதவி உயர்வு கிடைத்தபோது அதை ஏற்க மறுத்து விட்டார். "அது அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்ய உதவும்' என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.என். ரே. கூறியபோதும் அவர் ஏற்கவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதி பதவியை நிராகரிப்பதுகூட சுதந்திரம் என நினைத்தார்கள். இப்போது நீதிபதிகள் நமக்கு நினைவுபடுத்தும் சுதந்திரத்தை அல்ல. 

90-களில் "கொலீஜியம்' அமைப்பு நடைமுறைக்கு வந்தபோது இரண்டாவது நீதிபதி வழக்குக்குப் பிறகு ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், யாராவது ஒருவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட வேண்டுமானால், அமைச்சர்களுக்கு பதிலாக நீதிபதிகள் சிபாரிசு செய்யத் தொடங்கியுள்ளதுதான். நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து, அதன் பிறகு அதிகாரம் நீதித்துறைக்கு மாற்றப்பட்டபோது, நீதித்துறையை சீர்திருத்துவதற்கான ஒரு வாய்ப்பு தேசிய நீதித்துறை ஆணையம் வடிவத்தில் வந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் அதைத் தடுத்து விட்டது. இதுதொடர்பாக நீதிபதி செலமேஸ்வர், தனியாக வேறுபட்ட கருத்தை வெளியிட்டிருந்தார். 

நீதித்துறையின் நடைமுறைகள் சிதைந்து போய்விட்டன. அதை உடனடியாக சீர்திருத்த வேண்டும் என்று கூறினார். 

நீதித்துறை மட்டுமல்ல, ஒவ்வொரு நிறுவனமும் நொறுங்கிப் போயுள்ளது. மக்களின் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றன; விசாரணையே இல்லாமல் மக்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் எல்லா இடங்களிலும் சாதாரண ஆர்ப்பாட்டங்கள்கூட ஆட்சியாளர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றன.

வெறுப்புணர்வைப் பரப்புவது என்பது இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது. திரைப்பட நட்சத்திரம் ஒருவரைக் கொலை செய்ததாக இளம் பெண் ஒருவரை குற்றவாளி போல சித்தரித்து தொலைக்காட்சி சேனல்கள் தேவையற்ற விவாதத்தில் இறங்கியபோது, அதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. நாட்டின் முதன்மை மருத்துவ நிலையம், பிரேத  பரிசோதனை செய்து இது தற்கொலைதான் என்று அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டது. அதுவரை இந்த விவகாரத்தை 24 மணி நேரமும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்த ஊடகங்கள், தற்கொலைதான் என்று அறிக்கை வந்ததும் மின்சார சுவிட்சை அணைப்பதுபோல திடீரெனத் தங்கள் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டன. எந்த அடிப்படையில் அந்தப் பெண்ணை அவமானப்படுத்தும் காட்சிகள் அரங்கேறின என்று ஒருவர்கூட கேள்வி எழுப்பவில்லை.

மும்பையில் நடிகை ஒருவருக்கு சொந்தமான ஓர் இடம் இடிக்கப்பட்டது. இது ஒருவரின் அடிப்படை உரிமையை மறுப்பதாகவே நாம் பார்க்கிறோம் (அவருக்கு நோட்டீஸ் வழங்கப்படாமல் இருந்தால் நல்லது). ஆனால், தேசியத் தலைநகரில் வளர்ச்சிப் பணிகளுக்குத் தடையாக இருப்பதாகக் கூறி ஒரே இரவில் ஆயிரக்கணக்கான குடிசைகள் அகற்றப்பட்டதே! அது சரியான நடவடிக்கையா? அடிப்படைப் பிரச்னைகள் உடனடியாகத் தீர்க்கப்படாவிட்டால், நிர்வாகத்தை சரிவர நடத்தத் தவறி தோல்வியுற்ற நாடாக நம்நாடு மாறும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக சொல்லப்படும் வேறு எந்த வாதமும் ஆழமில்லாததாகவே இருக்கும்! 

கட்டுரையாளர்:  ஆசிரியர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com