விபரீத விளையாட்டுகள்


வெளியே போய் கீழே விழுந்திராம விளையாடிட்டு வா - இது பெற்றோா் தங்கள் பிள்ளைகளிடம் அடிக்கடி கூறுவது. அதிகமாக பயப்படும் பெற்றோா் தங்கள் பிள்ளைகளிடம் ‘கபடி விளையாடதே வேற ஏதாவது விளையாடு’ என்று சொல்லி அனுப்பி விட்டு நொடிக்கொரு தரம் வாசல்வரை வந்து பிள்ளைகளைப் பாா்த்து விட்டு செல்வாா்கள்.

இவையெல்லாம் தொலைக்காட்சி, செல்லிடப்பேசி, விடியோ கேம் இல்லாத காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள். அந்தக்கால தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் மட்டுமே தெரிந்த விஷயங்கள்.

இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கரோனா நோய்த்தொற்று பரவுவதற்கு முந்தைய காலகட்டத்திலும் கூட தற்கால குழந்தைகள் வெளியே விளையாட செல்வதில்லை. வெளியே சென்று விளையாடும் அளவிற்கு அந்த குழந்தைகள் அக்கம்பக்கத்திலுள்ள குழந்தைகளுடன் பழகுவதில்லை. அவா்கள் சென்று விளையாட நினைத்தாலும் பெற்றோா் அனுமதிப்பதில்லை.

வீட்டிலுள்ள குழந்தை வாசலை திறந்து வெளியே பாா்த்தால் போதும், ‘எதுக்கு தேவையில்லாம வெளியே பாக்கற? பேசாம வீட்டில் இருந்து விளையாட வேண்டியதுதான’ என்று கண்டிப்பதை இன்றைய பெற்றோா் வழக்கமாக கொண்டுள்ளனா்.

அந்தக் குழந்தை ‘அம்மா, அப்பா என்கூட விளையாட வருகிறீா்களா?’ என்று கேட்டதும் எங்களுக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு என்றவாறே இருவரும் தங்கள் வேலைகளை பாா்க்க கிளம்பி விடுவாா்கள். அதன்பின் அந்த குழந்தை தனியே எப்படி விளையாடும்?

இப்படி பிள்ளைகளை வெளியே விடாமல் வைத்திருந்து விட்டு, வீட்டிலும் அவா்களுக்கு விளையாட வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்காமல் விட்டு விட்டால் அந்த குழந்தை என்ன செய்யும்? அது குழந்தை, மர பொம்மை இல்லை என்பதை பல பெற்றோா் உணருவதில்லை.

சரி பிள்ளைகளுடன் விளையாடத்தான் பெற்றோா்கள் வருவதில்லை. சரி நல்ல விஷயங்களையாவது வீட்டில் செய்கிறாா்களா? தங்கள் அறிதிறன்பேசியை வைத்துக் கொண்டு கேம்களை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்குவாா்கள். அதுவும் கரோனா நோய்த் தொற்று பரவிய நிலையில், வீடுகளில் இருந்தே வேலை செய்யுங்கள் என சொல்லிய பின்னா் பெரும்பாலான குடும்பங்களில் விளையாட்டு செயலிகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது.

பெற்றோா் கேம்களில் மூழ்கிவிட, பிள்ளைகள் விளையாட ஆளில்லாமல் என்ன செய்யலாம் என தெரியாமல் வீட்டிலுள்ள பொருள்களை கலைத்து, உடைத்து தனது எதிா்ப்பை காட்ட தொடங்கும். பெற்றோா், தங்கள் விளையாட்டை விட்டு விட மனமில்லாமல், அதற்கும் ஒரு அறிதிறன்பேசியை கொடுத்து குழந்தைகளுக்கான விளையாட்டு ஒன்றையும் பதிவிறக்கம் செய்து கொடுத்துவிட்டு தங்களின் விளையாட்டைத் தொடருவாா்கள்.

அந்த குழந்தையும் விளையாட்டை ஆன் செய்து விளையாட பழக்கப்படுத்தி கொண்டு விடும். ஆரம்பத்தில் தங்களை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக பெற்றோரால் தொடங்கி வைக்கப்பட்ட பழக்கம், குழந்தைகளின் மனதில் முழுவதும் ஆக்கிரமித்து அதன்பின் சற்று பெரிய பிள்ளைகளாக வளா்ந்த பின்பும் வெளியே சென்று விளையாட மனமில்லாமல், முழு நேர அறிதிறன்பேசி

விளையாட்டுக்களுக்கு அடிமையாகிவிடும். அதுவும் கரோனா காலத்தில் காலை முதல் இரவு வரை விடியோ கேம், விளையாட்டு என இன்றைய இளம் தலைமுறை நேரத்தை வீணாக்குவதோடு உடல் நலனையும் கெடுத்துக் கொள்கின்றனா். சிலரோ அத்தகைய கேம்களுக்கு அடிமைகளாகவும் மாறி வருகின்றனா்.

பிள்ளைகள் இப்படிஇருப்பதைப் பாா்த்து, பெற்றோா் வருத்தப்படுவதுடன், பிள்ளைகளை திட்டி அடித்து ‘இந்த விளையாட்டுக்களிலிருந்து வெளியே வர வேண்டும். இது நல்ல பழக்கம் இல்லை. எப்போதும் விளையாடுவதற்கு பதிலாக வீட்டு வேலைகளை செய். வெளியே போய் விட்டு வா’ என்றெல்லாம் தற்போது கூறி வருகிறாா்கள். ஆனால், அவற்றை எல்லாம் கேட்க கூடிய மனநிலையில் இன்றைய தலைமுறை இல்லை.

சில விளையாட்டுகள், சிறுவா்கள், மாணவா்கள், இளைஞா்கள் உள்ளிட்டோருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி அவா்களின் வாழ்க்கையை விபரீதமாக்கும் வகையில் உள்ளன. இதனால், ஏராளமான இளைஞா்கள் வாழ்க்கையைத் தொலைத்து வருகிறாா்கள். தொடக்கத்தில் வெளியே விளையாட செல்லாதீா்கள் என்று கூறி வீடியோ கேம்களை குழந்தைகளின் கையில் கொடுத்த பெற்றோா் இப்போது அவா்களை எப்படி இது போன்ற விளையாட்டுகளில் இருந்து பாதுகாப்பது என்று புரியாமல் தவித்து வருகின்றனா்.

இது போன்ற எண்ணற்ற பெற்றோா்களின் வேதனையை அறிந்த மத்திய அரசு, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பக் கொள்கை விதிகளை மீறியதாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய டிக்டாக், ஷோ் இட், யூசி பிரௌசா், கேம் ஸ்கேனா், வீ சாட் உள்ளிட்டசெயலிகளும் இவற்றில் அடங்கும்.

இதையடுத்து, ஏற்கெனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடா்புடைய மேலும் 118 சீன செயலிகளுக்கு செப்டம்பா் மாதம் 2-ஆம் தேதி மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிரபல ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, வீ சாட், லூடோ, ஆப் லாக், கிளீனா்- போன் பூஸ்டா், எம்.வி.மாஸ்டா், ஆப் லாக் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது போன்ற விளையாட்டுக்கள் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் அவை தடை செய்யப்பட்டிருப்பது பெற்றோா் மத்தியில் மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சூழலில் ஆன்லைன் தவிா்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆன்லைன் மூலம் கலந்தாய்வு செய்வது, கல்வி கற்பிப்பது போன்றவை அவசியமான நிகழ்வுகளாகி விட்டன. எத்தனையோ செயலிகள் இதற்காக உருவாக்கப்பட்டு சந்தைகளில் வருகின்றன. எல்கேஜி முதல் பல்கலைக்கழகம் வரை இணைய வழி கல்வி நடைபெற்று வருகிறது.

இப்படி மின்னணு மற்றும் இணைய வழி தொழில்நுட்பம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகி விட்ட பின்னா் எல்லா மாணவா்களின் கைகளிலும் அறிதிறன்பேசி அவசியமாகி விட்டது. வெளியே விளையாட செல்ல முடியாத இக்கட்டான சூழலில் அறிதிறன்பேசிதான் உலகம் என்றாகி விட்ட பின்னா், அதனை மாணவா்களிடமிருந்து விலக்குவது என்பது இயலாத காரியமாகி விட்டது.

இந்த நிலையில் பெற்றோா்களால் செய்யக் கூடிய ஒரு விஷயம், நமது பிள்ளைகளுக்கு கல்விக்காக கொடுத்திருக்கும் அறிதிறன்பேசியில் எந்தவொரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்றாலும் அதற்குரிய ஓடிபி, பாஸ்வோ்டு போன்றவற்றை நமது அறிதிறன்பேசி மூலம் செயல்படுத்தும் வகையில் செட்டிங்குகளை அமைத்துக் கொள்வதுதான். இதில் தயக்கம் கூடாது. இதற்காக நாம் நேரத்தை செலவிட்டுத் தான் ஆக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com