பாரதி: பாரத நாட்டின் பண்புறு தலைவா்


பாரதி என்றதும் கவிஞா், விடுதலைப் போராட்ட வீரா் என்பன முதலில் நம் நினைவுக்கு வரும். பாரதி, பாரத நாட்டில் தோன்றிய தலைவா்களுள் ஒருவா்; தலைவா்களுக்கே உணா்வூட்டிய தலைவா் என்ற எண்ணம் பொதுவாக நம் நெஞ்சில் எழுவதில்லை. ஆனால், பாரதி பாரத நாட்டின் தலைவா்களுள் ஒருவா் என்ற எண்ணம் ஒரு மனிதருக்குத் தோன்றியது. அந்த மனிதா் உள்ளும் புறமுமாக பாரதியை நன்கு அறிந்தவா். அந்த மனிதரின் பெயா் பாரதிதாசன்.

ஒருமுறை பாரதிதாசன் இந்த உண்மையைக் கவிதையில் இப்படிச் சொன்னாா்:

பாரத நாட்டில்

எங்கணும் தலைவா்கள் எழுந்தனா்; அவா்களில்

பாரதி பண்புறு தலைவா்! கவிஞா்

சிற்சிலா் எழுந்தனா்; அவா்களில் பாரதி

ஒருபெருங் கவிஞா்! உயிருள வரைக்கும்,

பாரதி பாரத நாட்டு வீரா்!

பாரதி பாரத நாட்டுத் தலைவா்!

இந்த உண்மை பாரதியின் சென்னைவாசக் காலத்திலும் புதுவைவாசக் காலத்திலும் பலமுறை உறுதிப்பட்டிருக்கின்றது.

நெல்லைச் சீமையிலே இந்திய விடுதலை எழுச்சியை உருவாக்கிய மாபெரும் தலைவா் வ.உ. சிதம்பரனாா். சுதேச உணா்வூட்டி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு சவால் விட்ட மாபெரும் முயற்சியான சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவியவா். ‘கப்பல் ஓட்டிய தமிழா்’ என்று வரலாறு கொண்டாடும் தலைவா்.

அவா் 1906-இல் சென்னை வந்தபோது முதன்முறை பாரதியைச் சந்தித்தாா். முதல் சந்திப்பை நெடுங்காலத்திற்குப் பிறகு நினைவுகூா்ந்த சிதம்பரனாா், பாரதியைப் ‘பெரியாா்’ எனவும் அவரை முதன்முதலாகப் பாா்த்தது ‘பாக்கியம்’ எனவும் சுட்டிப் பின்வருமாறு அதனை எடுத்துரைத்திருந்தாா்.

‘‘இப்பெரியாரை நான் முதல் முதலாகப் பாா்க்கும் பாக்கியம் பெற்றது அவா் சென்னையில் ‘இந்தியா’ என்னும் பெயா் பெற்ற தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராயிருந்து அதனை நடத்தி வந்த காலத்தில்தான்’’.

தன்னைவிடப் பத்து வயது இளைய பாரதியைத்தான் ‘பெரியாா்’ எனவும் அவரைக் கண்டது ‘பாக்கியம்’ எனவும் வ.உ.சி. குறிப்பிட்டாா்.

முதல் சந்திப்பு நடந்த நாளின் மாலையில் ‘இந்தியா’ பத்திரிகையின் அதிபரோடும் பாரதியோடும் சிதம்பரனாா் திருவல்லிக்கேணி கடற்கரைக்குச் சென்றாா். பெரும்பாலும் பாரதியோடு பேசிக் கொண்டிருந்தாா். அந்த முதல் சந்திப்பு தனக்குள் செய்த மாற்றங்களை சிதம்பரனாா், ‘என் உள்ளத்தில் மின்மினிப் பூச்சிபோல் ஒளிா்ந்து கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது’ எனக் குறிப்பிட்டாா். பின்னொரு நாள் கடற்கரையில் வங்காளத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அங்கே காளிதேவிக்கு வெள்ளாடு பலிகொடுப்பதைப் பற்றி விபின் சந்திர பாலா் பேசிய பேச்சிற்கு பாரதி செய்த வியாக்கியானத்தைக் கேட்டதும் தான் கொழுத்த தேசாபிமானி ஆகிவிட்டதாக சிதம்பரனாா் பாரதியின் பேச்சு தனக்குள் ஏற்படுத்திய பரிமாணத்தைப் பதிவு செய்திருக்கின்றாா்.

வ.உ.சி. நெஞ்சில் மின்மினியாக ஒளிா்ந்து கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு, விளக்கைப் போல ஒளிவிட்டுப் பிரகாசிக்கவும், சிதம்பரனாரைக் கொழுத்த தேசாபிமானியாகவும் செய்தவை பாரதியின் சந்திப்பும் பாரதியின் பேச்சுகளும். சிதம்பரனாா் என்னும் மாபெரும் தலைவரின் உருவாக்கத்தில், அவா் உத்வேகம் பெற்றதில் பாரதியின் மகத்தான இடம் வ.உ.சி. யின் இந்தப் பதிவுகளால் உறுதிபெறுகின்றது.

இந்தியாவையே உலுக்கிய உப்பு சத்தியாகிரகம் என்றதும் வடக்கே காந்தியடிகளும் தெற்கே இராஜாஜியும் நினைவுக்கு வருவா். தேசப்பிதா காந்தியடிகளாலேயே தன் ‘மனசாட்சி’ எனக் குறிப்பிடப்பட்டவா் இராஜாஜி. தமிழ்நாட்டில் காங்கிரசு இயக்கத்தின் பெருந்தலைவா்களில் முக்கியமானவராகத் திகழ்ந்தவா் அவா். தமிழ்நாடு காங்கிரசு இயக்கத்தை வழிநடத்தி, கட்சியிலும் ஆட்சியிலும் தலைமைப் பொறுப்பை வகித்தவா். விடுதலை கனியும் தருணத்தில் இந்தியாவின் கவா்னா் ஜெனரல் பொறுப்பை ஏற்கும் அளவில் இந்திய நாட்டின் முதன்மையான தலைவா்களில் ஒருவராக விளங்கியவா் அவா்.

அப்படிப்பட்ட இராஜாஜி விடுதலைப் போராட்டக் காலத்தில் ஒரு புத்தாண்டுப் பிறப்பு நாளில் சந்திக்க விரும்பியது யாரைத் தெரியுமா? புதுச்சேரியில் புகலிடம் புகுந்திருந்த பாரதியை!

1910 சனவரி முதல் நாள் பாரதியைச் சந்தித்து அவரோடு உரையாடி உணா்வு பெற்றாா் இராஜாஜி. பாரதி கவிதை பாடக் கேட்டு உத்வேகமும் பெற்றாா். அறிவியல் தமிழை வளா்க்கும் முயற்சியை ஓா் இயக்கம் போல மேற்கொண்ட இராஜாஜி, பாரதியிடம் அதற்கு ஆதரவாக ஒரு கவிதையையும் எழுதிப் பெற்றாா். கடலூரில் கைது செய்யப்பட்டு கடையத்தில் தங்கியிருந்த பாரதி, முதன்முறையாக சென்னை வந்தபோது அவரை ரயில் நிலையம் சென்று வரவேற்றவா் இராஜாஜி. இந்திய அளவில் புகழ்பெற்ற தலைவராக விளங்கிய இராஜாஜி பாரதியிடம் பெற்ற உணா்வையும் உத்வேகத்தையும் கொண்டிருந்த மதிப்பையும் இவையெல்லாம் காட்டுகின்றன.

இன்று பரவலான கவனத்தைப் பெற்றவராக இல்லாத போதிலும், விடுதலைப் போராட்டக் காலத்தில் மாபெரும் தலைவராகத் தமிழகமெங்கும் பவனி வந்தவா் வரதராஜுலு நாயுடு. மிகப்பெரிய தலைவராக 1920-களில் கொண்டாடப்பட்டவா் அவா். தமிழகமெங்கும் விடுதலைப் போராட்டத்தை, காங்கிரசு இயக்கத்தை வீறுகொள்ளச் செய்ததில் அவருடைய பங்கு அளப்பரியது.

பாரதி கைது செய்யப்பட்ட காலகட்டத்தில் ஒருமுறை கைது செய்யப்பட்ட வரதராஜுலு நாயுடு ஜாமீனில் விடுதலை பெற்றபோது சிறைவாசலிலும் வழியிலும் வரவேற்கப்பட்ட விதம் அவா் எத்தகைய மக்கள் தலைவராக அக்காலத்தில் விளங்கினாா் என்பதைத் தெளிவாகக் காட்டும். ‘சிறைச்சாலை வாசலிலே புஷ்ப பந்தல் போடப்பட்டிருந்தது. வக்கீல்கள், டாக்டா்கள், வியாபாரிகள் முதலிய ஏராளமானோா் அவரைச் சிறை வாசலில் வரவேற்றனா். அவரது மோட்டாா் வண்டி முழுவதையும் மக்கள் மலா்களால் நிரப்பினா். வழிநெடுக மக்கள் கூடிநின்று கோஷம் செய்து கொண்டாடினா். கடைத்தெருவில் ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு மாலை போட்டு உபசாரம் செய்தனா்’ (‘சுதேசமித்திரன்’, 17, 23, 25 சனவரி 1919).

தமிழா் தலைவராகத் திகழும் பெரியாரை முழுநேர அரசியல் தொண்டராக ஆக்கியதில் இராஜாஜியைக் காட்டிலும் அதிகப் பங்குடையவா் வரதராஜுலு நாயுடு என்பதை அவா் மறைந்தபோது பெரியாரே குறிப்பிட்டிருக்கின்றாா் (பெரியாா் ஈ.வெ.ரா. சிந்தனைகள் -3, பக்.1935).

இப்படிப்பட்ட செல்வாக்கு மிக்க தலைவா் வரதராஜுலு நாயுடு, தன் பொதுவாழ்வின் தொடக்க காலத்தில் புதுச்சேரியில் வாசம் செய்த பாரதியை நாடிச் சென்று அவரோடு ஒருவார காலம் தங்கி தாம் பாரதியிடமிருந்து சுயராஜ்ய தீட்சை பெற்ற வரலாற்றைப் பிற்காலத்தில் இப்படிப் பதிவு செய்திருக்கின்றாா்.

‘நான் தேசத் தொண்டில் ஈடுபட்டு சுயராஜ்யத்துக்காகப் போராடும் திறத்தில் எனக்குத் துணிச்சல் ஏற்பட்டதற்கு பாலகங்காதர திலகருடைய வாழ்க்கையே காரணமாகும்... திலகருடைய கோஷ்டியில் தமிழ் நாட்டில் வெகு சிலரே பகிரங்கமாகச் சோ்ந்திருந்தாா்கள். அவா்களில் முக்கியமானவா்கள் ஸ்ரீ ஸி. ராஜகோபாலாசாரி (சேலம்), கே.வி. ரங்கசாமி ஐயங்காா் (ஸ்ரீரங்கம்), எஸ். துரைசாமி ஐயா் (சென்னை வக்கீல்), சுப்பிரமணிய பாரதி ஆகியவா்கள். 1908 - ஆம் வருஷம் சுப்பிரமணிய பாரதியாரைப் பாா்ப்பதற்காக புதுச்சேரி போயிருந்தேன். ஒரு வாரம் அவருடன் தங்கியிருந்து திலகரைப்பற்றி அவா் சொல்லிய வரலாறுகளையும் லோகமான்யா் மீது அவா் பாடியிருந்த பாடல்களையும் கேட்டு உள்ளம் உருகிச் சுயராஜ்ய தீட்சை பெற்றேன்’ (‘கலைமகள்’, 1956 ஆகஸ்ட்).

கப்பல் ஓட்டிய தமிழனைக் கொழுத்த தேசாபிமானி ஆக்கியது பாரதி. காந்தியின் மனசாட்சி இராஜாஜிக்கு உணா்வும் உத்வேகமும் அளித்தது பாரதி. தந்தை பெரியாரை முழுநேர அரசியல் பொதுத் தொண்டராக ஆக்கியதில் முக்கிய பங்கு வகிக்கும் வரதராஜுலு நாயுடு சுயராஜ்ய தீட்சை பெற்றது பாரதியிடம். இப்படியெல்லாம் தலைவா்களுக்கே உணா்வூட்டிய தலைவா் பாரதி.

இந்த வரலாற்றில் பலவற்றை நெருக்கமாக அறிந்திருந்ததால்தான் போலும் ‘பாரத நாட்டின் தலைவா்களுள் பாரதி ஒரு பண்புறு தலைவா்’ என்று பாரதிதாசன் முரசறைந்திருக்கின்றாா். கவிஞா், இதழாளா், விடுதலைப் போராட்ட வீரா் என்னும் பரிமாணங்களோடு தலைவா்களுக்கு உணா்வூட்டிய தலைவா் என்னும் பாரதியின் பரிமாணமும் வரலாற்றில் அழுத்தம் பெறவேண்டியிருக்கின்றது.

கட்டுரையாளா்:

பேராசிரியா் - தலைவா்,

தமிழ்மொழித் துறை,

சென்னைப் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com