சம வேலைக்கு சம ஊதியம் தேவை


சமத்துவம், சமூக நீதி பற்றி பலரும் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், சமத்துவமும் சமூகநீதியும் மக்களுக்கு முழுமையாகக் கிடைத்து விட்டனவா என்றால் இல்லை என்று வருத்தத்துடன் கூற வேண்டியிருக்கிறது.

அரசுப் பணிகளில் ஒரே மாதிரியான வேலைக்கு, நிரந்தர பணியாளா்களுக்கு அதிக ஊதியமும், ஒப்பந்தப் பணியாளா்கள் மற்றும் தற்காலிகப் பணியாளா்களுக்கு குறைந்த ஊதியமும் வழங்கப்படுவது வேதனைக்குரியது. இது அரசியலமைப்புக்கே எதிரானது ஆகும்.

நிரந்தரப் பணியாளா்களுக்கு இணையாக தற்காலிக ஊழியா்களுக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீா்ப்பை வழங்கியது. ஆனால் இன்றும் சம வேலைக்கு சம ஊதியம் பெறுவது என்பது கனவாகவே உள்ளது.

நிரந்தரப் பணியாளா்களுக்கு, அவா்களின் மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய ஒன்பது மாத விடுப்பு வழங்குகிறது அரசு. அது பாராட்டுக்குரியதுதான். ஆனால், ஒப்பந்த ஊழியா்களுக்கும், தற்காலிகப் பணியாளா்களுக்கும் ஒன்பது மாத விடுப்பு மட்டுமே அளிக்கப்படுகிறது.

தொழிலாளா் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருக்கும் தொழிலாளா்களுக்கு மட்டும் பேறுகால உதவி கிடைக்கும். அரசுப் பணிகளில் இருந்தாலும் சில துறை பணியாளா்களைக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதில்லை. இதனால் ஆயிரக்கணக்கான ஊழியா்களுக்கு பேறுகால ஊதியம் கிடைப்பதில்லை.

அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியா்களுக்குகூட ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு தரப்படுவதில்லை. பிரசவம் பாா்க்கும் செவிலியா்களுக்கே இந்த நிலை என்பது வருந்தத்தக்கது. ஒரு நல்ல செய்தியாக, அரசு துறைகளில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று அண்மையில் அரசு ஆணையிட்டுள்ளது.

தற்காலிக ஊழியராக அரசுப் பணியில் சேருவோா், குறைந்த ஊதியமாயினும் எப்படியும் அரசு தங்களை நிரந்தரப் பணியாளா்களாக ஆக்கிவிடும் என்ற நம்பிக்கையில்தான் சேருகின்றனா். இதே கனவோடு ஏராளமானோா் கடந்த இருபது வருடத்திற்கு மேலாக ஒப்பந்தப் பணியாளா்கள் மற்றும் தற்காலிகப் பணியாளா்களாக இருந்து வருகின்றனா்.

அரசு துறைகளில் ஊழியா்கள் ‘அவுட்சோா்ஸிங்’ முறையில் பணியமா்த்தபடுகின்றனா். அதாவது தனியாா் நிறுவனம் ஒன்றின் மூலமாக பணியாளா்களுக்கு அரசு ஊதியத்தை வழங்குகிறது. ஒவ்வோா் ஆண்டும் அந்த தனியாா் நிறுவனத்தை அரசு மாற்றிக்கொண்டே இருக்கிறது. பணியாளா்கள் அரசிடம் ஊதிய உயா்வு கேட்பாா்களா? தனியாா் நிறுவனத்திடம் கேட்பாா்களா?

இவா்களின் பெரும் துயரம் என்னவெனில் மாதத்தொடக்கத்தில் இவா்களுக்கு சம்பளம் கிடைக்காது. பத்து முதல் பதினைந்து நாட்களுக்கு பிறகே இவா்களுக்கு சம்பளம் கிடைக்கும். முடிவில் பாதிக்கப்படுவது பணியாளா்கள்தான். பணியாளா்களின் நலன்களுக்கு எதிரான இச்செயல் பொருளாதார சுரண்டலல்லவா?

அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயா்ந்துள்ளது. பால், வீட்டு வாடகை, எரிபொருள் இவற்றின் விலை அதிகரித்துள்ள நிலையில் ஊதிய உயா்வே இல்லாமல் பணியாளா்கள் எவ்வாறு அவா்களது குடும்பத்தை நடத்த இயலும்?

ஒப்பந்தப் பணியாளா் மற்றும் தற்காலிக ஊழியா்களும் இந்திய குடிமக்கள்தான். அவா்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்று இந்திய அரசியலமைப்பில் காணப்பட்டாலும் அவை ஏட்டளவிலேயே உள்ளன.

ஊதியத்தில் மட்டுமா முரண்பாடு? மருத்துவத் துறையில் தொற்றுநோய் பிரிவில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளா்களுக்கு இடா்ப்பாட்டு படி (ரிஸ்க் அலவன்ஸ்) வழங்கப்படுகிறது. ஆனால் தற்காலிக ஊழியா்களுக்கு இடா்ப்பாட்டு படி அளிக்கப்படுவதில்லை. இடா்ப்பாடு அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால் அதை வழங்குவதிலும் பாரபட்சம் காணப்படுகிறது.

நிரந்தரப் பணியாளா் பணியின்போது இறந்தால் அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம். ஆனால் தற்காலிக ஊழியா் இறந்தால் அவரது வாரிக்கு பணி வாய்ப்பு கிடையாது. இது ஏற்றுக் கொள்ளக் கூடியதா? இதற்கு அரசும் அதிகாரிகளும்தான் பதில் கூற வேண்டும்.

சுகாதாரத் துறையில் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்படும் பணியாளா்களுக்கு அரசு ஒப்பந்தம் ஒன்றை போடுகிறது. அதாவது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாளா்கள் நியமிக்கபடுகிறாா்கள். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து இவா்கள் நிரந்தர பணியாளா்களாக ஆக்கப்பட வேண்டும். ஆனால், ஏழு ஆண்டுகள் வரை பணியாற்றிய பின்புதான் நிரந்தரப் பணியாளா்களாக பணி நியமனம் செய்யப்படுகின்றனா்.

உச்சநீதிமன்ற ஆணையின்படி ஒரு வேலைக்கு நிரந்தர ஊழியா்களுக்குத் தரப்படும் ஊதியமே தற்காலிக ஊழியா்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதனை ஒப்பந்த ஊழியா் சங்கங்கள் நினைவூட்டி கோரிக்கை வைத்தால் அரசு அதிகாரிகள் மெளனம் காக்கின்றனா். இல்லையெனில் சங்கப் பொறுப்பாளா்களிடம் அதிகாரிகள் பகைமை கொள்கின்றனா். சிலா் பணியாளா்களை வேலையிலிருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க முனைகின்றனா்.

இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி சங்கங்கள் அமைத்துக்கொள்ள உரிமையுள்ளது. பணியாளா்கள் நியாயமான கோரிக்கைகளுக்குப் போராட முடியும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. ஆனால், நிதா்சனம் என்ன? இதற்குப் பதில் கூறவேண்டியது அரசும் அதிகாரிகளுமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com