முட்டாளும் முற்றாளும்

முட்டாள் என்பது தமிழ்ச்சொல். சிலையைப் பல்லக்கில் வைத்துத் தூக்கி வருகிறவர்கள், பல்லக்கைக் கீழே இறக்காமல் இளைப்பாறுவதற்காக இருபுறமும் மரத்தால் முட்டுக் கொடுப்பார்கள்.


முட்டாள் என்பது தமிழ்ச்சொல். சிலையைப் பல்லக்கில் வைத்துத் தூக்கி வருகிறவர்கள், பல்லக்கைக் கீழே இறக்காமல் இளைப்பாறுவதற்காக இருபுறமும் மரத்தால் முட்டுக் கொடுப்பார்கள். அவர்களுக்கு அந்த ஒரு வேலையைத் தவிர வேறு வேலை தெரியாது. இவர்கள் முட்டு + ஆள் - முட்டாள். 
முட்டாள் என சித்திரிக்கப்பட்டவர்களால்தான் உலகம் பல மாற்றங்களை கண்டியிருக்கிறது. தாய், தன்னை முட்டாள் எனச் சொன்னதற்காக துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள முயற்சித்தான் ஒரு சிறுவன். ஒரு முறையல்ல மூன்று முறை. என்ன அதிர்ஷ்டம் பாருங்கள்! மூன்று முறையும் அந்த துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை.  

முட்டாள் என அழைக்கப்பட்ட அந்த  சிறுவன்தான், பிற்காலத்தில் நவாபுகளை வென்று ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்ற காரணமாக இருந்தான். அவன்தான் ஆற்காட்டு வீரர் என அழைக்கப்படும் ராபர்ட் கிளைவ்.

முற்றன் என்பதற்கு முழுமையானவன் என்று பொருள். இச்சொல்லை தேவாரம், "முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினும்' எனப் பாடியுள்ளது.  

முற்று - முற்றன் அதாவது முழு நிறைவானவன்; முற்றும் -  முற்றாமை ; முற்றாமை - முடிவு பெறாமை ; முற்று + ஆ - முற்றா; முற்றவை - அறிவால் முதிர்ந்தோர் கூடிய அவை. முற்றறிவு என்பது முழுதுணரும் அறிவு. 

முற்றறிவன் என்றால் எல்லாம் அறிந்தவன். முற்று + ஆள் = முழுவதும் ஆள். இதற்கு முழுமகன் என்றொரு பொருளுண்டு. முழுமகன் என்றால் "அறிவிலி' என்கிறது  திவாகர நிகண்டு.

முதல் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதன் ஜூலியஸ் சீசர். இவர்தான் முதலில் நாட்காட்டி முறையை அறிமுகப்படுத்தினார். வருடத்திற்கு 365டீ நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டதும் இவர் காலத்தில்தான். 

சீசருக்கு முந்தைய காலத்தில் நாட்காட்டி முறை இருந்தாலும் அது சந்திரனை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. சீசர் சூரியனை அடிப்படையாகக் கொண்ட  நாட்காட்டி  முறையினை அறிமுகப்படுத்தினார். 

இந்த நாட்காட்டியானது பத்து மாதங்களைக் கொண்டும் வருடத்தின் முதல் மாதமாக  ஏப்ரலை கொண்டும் இருந்தது. ஏப்ரல் என்பதற்கு கிரேக்க மொழியில் தொடக்கத்திலிருந்து எனப் பொருள்படும்.  இந்த நாட்காட்டி  1581 வரை நடைமுறையிலிருந்தது. 

1582 ஆம் ஆண்டு தொடக்கத்தில் போப் கிரிகோரி புதிய நாட்காட்டி ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்த நாட்காட்டி 12 மாதங்களைக் கொண்டும் முதல் மாதமாக ஜனவரியைக் கொண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. அந்த நாட்காட்டிதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

உலகில் பல வகையான நாட்காட்டிகள் உண்டு. டிசம்பர் 21 உடன் முடிந்த மாயன் நாட்காட்டி, இஸ்லாமிய நாடுகளில் அரபிக் நாட்காட்டி, சீன நாட்காட்டி, தமிழ் நாட்டில் திருவள்ளுவர் நாட்காட்டி என பலவகையான நாட்காட்டிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. 

இந்தியாவில் மொகலாய மன்னன் ஒளரங்கசீப் காலம் வரைக்கும் கனிஷ்கர் அறிமுகப்படுத்திய சக ஆண்டு நாட்காட்டிதான் நடைமுறையில் இருந்தது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வருகைக்குப்பின் ஆங்கில நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் நம் நாட்டின் தேசிய காலண்டரும் சக நாட்காட்டிதான்.

ஐரோப்பிய நாடுகளில் இன்றும் இரண்டு விதமான நாட்காட்டிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு பிரிவினர் ஜனவரி முதல் தேதியைப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். மற்றொரு பிரிவினர் ஏப்ரல் முதல் தேதியைப் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். 
பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஆங்கில மொழியை தாய்மொழியாக் கொண்ட நாடுகள் ஒன்று கூடி  ஒரு முடிவை எடுத்தன. "ஜனவரி முதல் தேதியே புத்தாண்டு தினம். 
இதை ஏற்க மறுத்து  ஏப்ரல் முதல் தேதியைக் கொண்டாடுபவர்கள் முட்டாள்கள்' எனக் கூறின. அது முதல் ஏப்ரல் முதல் தேதி "முட்டாள் தின'மாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினம் எனச் சித்திரிப்பதை ஏற்க மறுத்தார். அதன்படி ஏப்ரல் முதல் தேதியில் புரட்சிகரமான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினார். 
1957-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி அவர் "ஏப்ரல் முதல் தேதியை உலகம் எப்படிப் பார்க்கிறதோ, நாம் இந்த நாளை  மாற்றத்தின் தினமாகப் பார்ப்போம்' என்றவர்  காலணா, அரையணா, நாணய முறையை ஒழித்து, தசம நாணய (ரூபாய்) முறையை அறிமுகப்படுத்தினார். 
உலக அளவிலான நாடாளுமன்ற விவாதத்தில் முட்டாள் சொல் பற்றிய விவாதமே மிகச்சிறந்த நகைச்சுவை விவாதமாகக் கருதப்படுகிறது. ஒருமுறை ஜெர்மனி நாடாளுமன்றத்தில் பிஸ்மார்க், "இங்கே இருப்பவர்களில் பாதிப் பேர் முட்டாள்கள்' என்றார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உடனே அவரது கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு "இங்கே இருப்பவர்களில் பாதிப் பேர் முட்டாள்கள் அல்ல' என்றார்.  
பிரெஞ்சு நாட்டுப் புரட்சியாளர் வால்டேர், "உலகில் வாழும் மனிதர்கள் எல்லோரும் புத்திசாலிகள் என நினைத்துக்கொண்டு இருந்துவிட்டேன், நான் ஒரு முட்டாள்' என்றார்.  
நீதிமன்றத்தால், முட்டாள் என குற்றம் சாட்டப்பட்ட சாக்ரடீஸ், நஞ்சு பருகி மரணத்தைத் தழுவும் முன் "நான் ஒரு முட்டாள் என்கிறீர்கள். அப்படியானால்  இனி இந்த உலகம் முட்டாள்களின் கீழ்தான் இயங்கபோகிறது' என்று கூறினார். 
அவரது கருத்துபடிதான் இன்றைய உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆமாம், இன்றைய உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கும், கணினிக்கு நாம் சூட்டியிருக்கும் பெயர்  "முட்டாள் இயந்திரம்' அல்லவா?

இன்று (ஏப். 1) முட்டாள்கள் நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com