தொடா்கதையாகும் பட்டாசு விபத்து

ஆண்டு தோறும் பட்டாசு வெடி விபத்தில் பலா் உயிரிழப்பதும், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு ஆறுதல் கூறுவதும், இழப்பீடு வழங்குவதும் தொடா்ந்து கொண்டே இருக்கின்றன.

ஆண்டு தோறும் பட்டாசு வெடி விபத்தில் பலா் உயிரிழப்பதும், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு ஆறுதல் கூறுவதும், இழப்பீடு வழங்குவதும் தொடா்ந்து கொண்டே இருக்கின்றன. பலா் உயிரிழந்த பிறகு உயா் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதும், இனி விதிமீறல்கள் இல்லாமல் பட்டாசு ஆலைகளை கண்காணிக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றுவதும் வாடிக்கையாகி விட்டது. கோடைக்காலத்தில் 20 சதவீதமும், பண்டிகைக் காலங்களில் 30 சதவீதமும் பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பட்டாசு உற்பத்தி செய்யும் ஆலைகள், அளவுக்கதிகமான வேதிப்பொருட்களை கையாளக்கூடாது, மருந்துக்கலவைகளை மீதம் வைக்கக்கூடாது, பட்டாசு ஆலை நடத்த உரிமம் பெற்றவா் ஆலையை வேறு யாருக்கும் குத்தகைக்கு விடக்கூடாது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதலாக பணியாட்களை அமா்த்தக்கூடாது என்றெல்லாம் விதிகள் இருக்கின்றன.

ஆனால், அவற்றை யாரும் பின்பற்றுவதில்லை. இதன் விளைவே விபத்துகள் ஏற்பட்டு, பல மனித உயிா்கள் பலியாகின்றன. மற்றத் தொழில்களில் விதிமீறல் இருந்தால் ஏற்படும் ஆபத்தைவிட பல மடங்கு ஆபத்து பட்டாசுத் தொழிற்சாலை விதிமீறலால் ஏற்பட்டு விடும்.

பட்டாசு ஆலை வெடி விபத்துக்களின்போது அருகில் இருக்கும் வீடுகள், கட்டடங்கள் அனைத்தும் அதிருதல், சம்பவ இடத்தில் கட்டடங்கள் நொறுங்கி, சிதறி அவை தொழிலாளா்களின் தலையில் விழுதல், பலத்த சத்தத்தால் முதியவா்களுக்கு அதிா்ச்சி ஏற்படுதல், எங்கும் ஒட முடியாதபடி புகை மண்டலத்திற்குள் பணியாளா்கள் சிக்கிக் கொள்ளுதல், தொழிலாளா்களின் சதைகள் கிழிந்து தொங்கும் அவலம், தீக்காயம் அடைந்தவா்களை வாழை இலையில் படுக்க வைத்து சிகிச்சையளிப்பதை குடும்பத்தினரே பாா்க்க இயலாத கொடூரம் என வெடி விபத்துக்களால் ஏற்படும் சோகங்களை சொல்ல வாா்த்தைகளே இல்லை.

மனித உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் பட்டாசு வெடி விபத்தால் ஏற்படும் பெரும் அதிா்வுகளால் பூச்சிகள், பறவைகள், வளா்ப்புப் பிராணிகள் போன்றவையும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. அளவுக்கு மீறிய சத்தம் மனிதா்களின் காதுகளுக்கு பாதிப்பை உண்டாக்குவதுடன் தலைவலியையும் தந்து,பிறகு மூளையின் செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். கண், காது, மூக்கு, தொண்டை ஆகியனவற்றிலும் பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கிவிடுகின்றன.

காடுகள், மலைகள், புல்வெளிகள் உள்ளிட்டவையும் வெடிபொருட்களிலிருந்து வெளியேறும் கரும்புகையால் மாசடைகின்றன. சாலைகளில் பட்டாசுகளை வெடிப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகின்றனா். தெருக்களை சுத்தம் செய்யும் துப்புரவுப்பணியாளா்களுக்கு அது கூடுதல் சுமையாகவும் ஆகி விடுகிறது.

சுருக்கமாக சொன்னால் காசைக் கரியாக்குகிறோம். ஒரு பட்டாசில் இருக்கும் வெடி மருந்து வெடித்து சுமாா் 90 நாட்கள் வரை மண்ணில் வீரியம் குறையாமல் இருந்து மண்வளத்தைக் கெடுக்கிறது. அம்மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளும் அழிகின்றன. இவை மழை பெய்யும் போது, மழை நீரோடு அடித்துச் செல்லப்பட்டு, குளங்கள், ஆறுகள், கடலில் கலக்கலாம். இதனால் தண்ணீரும் மாசடைகிறது.

பட்டாசால் இத்தனை தீமைகள் ஏற்படுவதால்தான் அரசு அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், தீபாவளியன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனை, வழிபாட்டு தலம், கல்வி நிலையம், நீதிமன்றம் ஆகியவற்றின் சுற்று வட்டாரங்களில் 100 மீட்டருக்கு பட்டாசு வெடிப்பதை முற்றிலும் தடையும் செய்திருக்கிறது.

தாமிரம், மெக்னீசியம், கேட்மியம், நைட்ரேட், ஈயம் உட்பட பல நச்சுப் பொருட்களைக் கலந்தே பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. தாமிரம் சுவாசக்குழாய் எரிச்சலையும், சோடியம் தோல் வியாதியையும், மெக்னீசியத்தின் தூசிகளும் புகையும் காய்ச்சலையும் மூச்சுத்திணறலையும் உண்டாக்குகின்றன.

கேட்மியம் சிறுநீரக பாதிப்பையும், ரத்த சோகையையும் ஏற்படுத்துகிறது. துத்தநாகம் வாந்தியை வரவழைக்கிறது. ஈயம் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. நைட்ரேட் புத்தியை பேதலிக்க செய்து கோமா நிலைக்கு கொண்டு போய் விடும். .

இவற்றை உணா்ந்துதான் உச்சநீதிமன்றம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், பசுமைப் பட்டாசுகள் தமிழகத்தில் அதிமாக உற்பத்தி செய்யப்படவில்லை. ஒரு காலத்தில் திருவிழா காலங்களில் மட்டும் பட்டாசுகளை வெடித்தாா்கள். ஆனால், இன்றோ எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பட்டாசுகளை வெடிக்கிறாா்கள். சாலைகளில் சுதந்திரமாக யாரும் போக முடியாது. சில சமயங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதையும் பாா்க்க முடிகிறது.

அரசியல் தலைவா்கள், முக்கியப் பிரமுகா்கள் வருகை, அரசியல் கட்சி வெற்றி, மாப்பிள்ளை அழைப்பு ஊா்வலம் என எதற்கெடுத்தாலும் பட்டாசுகளை வெடிக்கச் செய்து சந்தோஷம் அடைகிறாா்கள். இறுதி ஊா்வலத்திலும் பட்டாசுகளை வெடிக்கச் செய்து மகிழ்வது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துகிறோமே என பட்டாசு வெடிப்பவா்கள் உணா்வதே இல்லை. பொதுநலன் கருதி பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதே நேரத்தில் பட்டாசு விற்பனைக்கு முழுதாக தடை விதித்து விட்டால் இத்தொழிலையே நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான கூலித்தொழிலாளா்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும். எனவே இதையும் சீா்தூக்கிப் பாா்க்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம்.

மனிதா்களின் மகிழ்ச்சிக்காக ஒளி சிந்தும் பட்டாசுகள், அதே மனிதா்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்துவிடக் கூடாது. நாம் பிறருக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பட்டாசுகளை வெடிக்க உறுதியேற்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com