கனவு மெய்ப்படுமா?

 பூமி, மலை, ஆறு, கடல், நட்சத்திரம் என்று இயற்கையின் வடிவங்கள் அனைத்தையும் பெண்ணாகக் காண்பதும் போற்றுவதும் இந்திய மரபின் அடிப்படை. பெண்கள் தெய்வங்களாகப் போற்றப்பட்ட மண்ணில் காலமாற்றத்தாலும் இன்னபிற காரணங்களாலும் இந்த நிலை மாறிக்கொண்டே வந்தது. தெய்வநிலை, போற்றுதல், பாதுகாத்தல் என்று படிப்படியாக மாற்றங்களைக் கண்டு போகத்திற்கான பொருளாகப் பெண்ணை நினைக்கும் நிலையில் இன்று சமூகம் வந்து நிற்கிறது.
 இன்றைக்குப் பெண்களுக்கெதிரான குற்றங்கள் மலிந்து விட்டன. ஆண்டுதோறும் பாலியல் குற்றங்களும் துன்புறுத்தல்களும் பன்மடங்கு அதிகரித்து வருகின்றன. இந்தியா முழுவதும் இந்த நிலை தொடர்கிறது. பணியிடத்தில் பாலியல் சீண்டல்கள், அச்சுறுத்தல்கள், சைபர் கிரைம்ஸ் எனப்படும் இணைய வழி குற்றங்கள், குடும்பத்தில் நிகழும் துன்புறுத்தல்கள், பொது இடங்களில் பாதுகாப்பற்ற தன்மை என்று பலவிதங்களில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது ஒருபுறம் கவலையளிக்கிறது.
 மற்றொரு புறம் குழந்தைகள் மீதான வன்முறைகள், சீண்டல்கள், துன்புறுத்தல்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. பத்து, பதினொரு வயதுக்கு மேற்பட்ட பெண்குழந்தைகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
 பள்ளிக்கூடங்கள் கூட பாதுகாப்பற்றவையாக மாறியிருக்கின்றன. இரண்டாம் பெற்றோராக இருந்து குழந்தைகளை வழிநடத்த வேண்டிய ஆசிரியர்கள், பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு கைதாகிறார்கள்.
 வீடுகளில் உறவுகளின் பிடியில் குழந்தைகள் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் அவலம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நெருங்கிய உறவினர்களே குற்றச்செயலில் ஈடுபடுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போது ஐந்து, ஆறு வயது இளம் பிஞ்சுகள் கூட கொடூரமாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
 இந்தியாவைப் பொருத்தவரை வருடந்தோறும் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்காகப் பதிவு செய்யப்படுகின்றன. பாலியல் கொடுமையால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
 இந்தியாவில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரம் ஒன்று சொல்கிறது. இதில் 51 சதவிகிதக் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
 ஒரு நாளில் இந்தியாவில் முந்நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடப்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் 250 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடுகிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரம்.
 இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் வழக்குப் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையிலானவை. பதிவு செய்யப்படாமல் பயத்தின் காரணமாக மூடி மறைக்கப்பட்ட குற்றங்கள் இன்னும் பலமடங்கு இருக்கக்கூடும். அரசும் சட்டங்களைக் கடுமையாக்குகிறது; தண்டனைகளை மரணதண்டனை வரை அதிகரித்திருக்கிறது.
 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்க 2012-ஆம் ஆண்டு போக்ஸோ சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான புகார்கள் மூன்று மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்; பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாக்குமூலமே போதுமானது; நேரில் காவல்நிலையம் சென்று பிரச்னைகளைச் சொல்லவேண்டும் என்றில்லாமல் 1098 என்ற குழந்தைகளுக்கான உதவி எண்ணில் அழைத்துச் சொன்னாலும் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்தாக வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பல அம்சங்களை உள்ளடக்கிய இந்த சட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இன்னும் கடுமையாக்கப்பட்டது.
 பனிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு மரண தண்டனை தரலாம் என்றும் பதினாறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இக்கொடுமையை செய்தவர் ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்றும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
 கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் அனைவருமே மரணதண்டனை பெறுவர். இவ்வளவு கடுமையான சட்டங்களும் கொடுமையின் தீவிரத்தைக் குறைத்ததாகத் தெரியவில்லை.
 போக்ஸோ சட்டத்தின் 4, 6-ஆம் பிரிவின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் ஆயிரக்கணக்கில் நிலுவையில் இருக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதாகத் தப்பி விடுவதும் சாதாரணமாக இருக்கிறது. போக்ஸோ சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்படுவர்களில் தண்டனை பெறுவோர் வெறும் 14 சதவீதத்தினர் மட்டுமே என்ற உண்மை மனத்தில் கசப்பை ஏற்படுத்துகிறது.
 தமிழகத்தில் 2010-ஆம் ஆண்டு போக்ஸோ சட்டம் வருவதற்கு முன்பே நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சம்பவம் நடைபெற்றது. தமிழகத்தின் பெண்கள், தாய்மார்கள் யாரும் அந்த சம்பவத்தை மறக்க முடியாது.
 கோவையில் பதினொரு வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி துன்புறுத்தி கொலை செய்யப்பட்டதோடு உடனிருந்த சிறுமியின் எட்டு வயது சகோதரனும் கொலை செய்யப்பட்டிருந்தான். கொலை செய்த ஓட்டுநரையும் அவனது கூட்டாளியையும் காவல்துறை கைது செய்தது.
 அப்பொழுது கோவை மாநகரக் காவல் ஆணையராகப் பொறுப்பில் இருந்தவர் சைலேந்திர பாபு. அவருடைய தலைமையிலான குழு உடனடியாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கைது செய்வதில் முனைப்புக் காட்டியது. அவர்கள் மீது வழக்குகள் பதிவாயின.
 குற்றவாளிகள் இருவரையும் சம்பவ இடமான பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்றபொழுது வழியில் குற்றவாளி காவல்துறையினரைத் தாக்கியதோடு காவல்துறையினரின் துப்பாக்கியைப் பறித்து காவலர்களை வண்டியை நிறுத்தச் சொல்லி மிரட்டியதால், தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் குற்றவாளி மரணமடைந்தான் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. மற்றொரு குற்றவாளி இரண்டு தூக்கு தண்டனைகளும் மூன்று ஆயுள் தண்டனைகளும் பெற்றான்.
 இந்த சம்பவம் நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இதற்காக சைலேந்திர பாபுவைத் தமிழகம் வாழ்த்தியது. பெண்களும் தாய்மார்களும் கொண்டாடினார்கள். சரித்திர நிகழ்வாக அன்றைய முதல்வரான கருணாநிதி, எதிர்கட்சித் தலைவரான ஜெயலலிதா இருவருமே இந்த நடவடிக்கையை வரவேற்றுப் பாராட்டினார்கள்.
 இன்றைக்குத் தமிழகத்தின் நிலை என்ன? தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பலமடங்கு பெருகியுள்ளன. குழந்தைகள் வன்புணர்வுக்கு ஆளாகி கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இத்தகைய குற்றங்கள் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் இரண்டிற்கும் அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகம் நிகழ்வதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
 2013-ஆம் ஆண்டு 419 ஆக இருந்த பாலியல் குற்றங்கள், 2019 ஆம் ஆண்டில் (ஆறே ஆண்டுகளில்) 2,410 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. 2020-இல் இது இன்னும் அதிகம். மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் 2020 ஊரடங்கு நேரத்தில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் முன் எப்போதையும் விட அதிகரித்ததாகக் கூறுகிறது.
 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஆசிரியர்கள் இணைய வழியில் மாணவிகளுக்குப் பாலியல் சீண்டல் செய்ததாக போக்ஸோ சட்டத்தில் கைது நடவடிக்கை நிகழ்ந்திருக்கிறது. பள்ளிக்கூடங்களுக்குச் செல்ல முடியாமல் குழந்தைகள் வீட்டில் இருப்பதாலும் பெற்றோர்கள் அலுவலகம் செல்வதாலும் குழந்தைகள் இத்தகைய கொடுமைகளுக்கு ஆளானதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
 பொள்ளாச்சி சம்பவத்தையும் அதில் கேட்ட பெண்ணின் அலறலையும் எந்தத் தாயும் மறக்க இயலாது. அந்த நடுக்கம் தீரும் முன்னரே கோவையில் 2019-ஆம் ஆண்டு ஆறு வயதுப் பெண் குழந்தை வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதும் தமிழகத்தின் தாய்மார்களை நிலைகுலைய வைத்தது. இச்சைக்கு இணங்க மறுக்கும் பெண்கள், காதலை ஏற்க மறுக்கும் பெண்கள் கொல்லப்படுவதும் தொடர் கதையாகி இருக்கின்றன.
 சென்ற மாதம் சென்னையில் ஆறு வயதுக் குழந்தையைத் துன்புறுத்தியதற்காக 67 வயது முதியவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். காரைக்குடியில் வீட்டு மொட்டைமாடியில் விளையாடிய சிறுமியை ஆறு பேர் சேர்ந்து துன்புறுத்தியிருக்கிறார்கள்.
 சென்னையில், கடந்த மே மாதத்தில் மட்டும் 13 போக்ஸோ வழக்குகள் பதிவாகி தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகரம் மட்டுமல்லாது கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் என்று பல இடங்களிலும் பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் போக்ஸோ வழக்குகளும் தொடர்ந்து கொண்டே வருகின்றன.
 இத்தகைய நிலையில் கடந்த மாதம் முதல் நாளிலிருந்து, தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக சைலேந்திர பாபு பொறுப்பேற்றிருக்கிறார். இவருக்கு பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. 2010-ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் நிலைமை தற்போது மிகவும் சீர்கெட்டிருக்கிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது.
 அதே ஆட்சி. அதே துடிப்பு மிக்க அதிகாரி தலைமை இடத்தில் அமர்ந்திருக்கிறார். குற்றங்களுக்கு எதிரான அதே அதிரடி நடவடிக்கைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் மக்கள். அச்சமின்றி வாழ்வதற்கான, பாதுகாப்பும் அமைதியுமான சூழலை தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் உருவாக்கித் தரும் நிர்வாகத்தை விரும்புகிறார்கள் தாய்மார்கள்.
 பெண்குழந்தைகள் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தாயின் கனவு. அந்தக் கனவு மெய்ப்படுமா?
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com