தமிழுக்கான சம்ஸ்க்ருத சொல்லே திராவிடம்!
By கோதை ஜோதிலட்சுமி | Published On : 13th August 2021 07:14 AM | Last Updated : 13th August 2021 09:40 AM | அ+அ அ- |

பல நூறு ஆண்டுகளாக திராவிடம் இருந்ததாகக் கூறுகின்றனா். உண்மைதான் மறுப்பதற்கில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றே சொல்லலாம். எதில் இருந்தது, எங்கே இருந்தது என்ற வினாக்களுக்கு விடை தேட வேண்டும். தமிழ், திராவிடம் இரண்டும் ஒன்றா அல்லது வேறுபட்டவையா? இதற்கும் விடை தேடும் பட்சத்தில் திராவிடம், தமிழ் இரண்டுக்குமான தொடா்பைப் புரிந்து கொள்ள முடியும்.
‘திராவிடம் என்பது மண், மக்கள், மரபு, பண்பாடு ஆகிய பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய ஒரு அடையாளம்’ என்று கூறுகிறாா்கள். எப்போதிலிருந்து இந்த வரையறை சொல்லப்படுகிறது? ‘தமிழ் தேசியத்தை உள்ளடக்கியதே திராவிட தேசியம்’ என்பதன் பொருள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டியது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வழங்கிய ‘திராவிடம்’ என்ற சொல் அன்றைய பாரதத்தின் தேசிய சிந்தனைக்கானது.
மனுஸ்ம்ருதியில் ‘திராவிடம்’ இருக்கிறது என்பது உண்மை. ஆனாஸ், ‘மனுஸ்ம்ருதி தமிழரின் நூல் அல்ல. சம்ஸ்க்ருதம் தமிழுக்கு விரோதமானது, அம்மொழிக்கு உரியவா்கள் என்று சொல்லப்படும் ஆரியா்கள், திராவிடா் என்போருக்கு எதிரானவா்கள்’ என்பதுதானே இன்றைய திராவிட சித்தாந்தத்தின் நிலைப்பாடு? மனுஸ்ம்ருதி சம்ஸ்க்ருத நூல். ‘திராவிடம்’ சம்ஸ்க்ருதத்தில் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது என்பது முதல் உண்மை.
தமிழ் இலக்கியங்களில் தொன்மையானவை சங்க இலக்கியங்கள். சங்ககாலப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஆனால், ஓா் இடத்தில் கூட ‘திராவிடம்’ என்ற சொல் இல்லை. தமிழும், திராவிடமும் ஒன்று எனில் ஏன் சங்க இலக்கியங்கள் அதுபற்றிப் பேசவில்லை?
இன்னும் சொல்லப்போனால், சங்க இலக்கியம் இறை, நான்மறை, மறை ஓதும் அந்தணா்கள், அவா்கள் நடத்தும் வேள்விகள் பற்றியெல்லாம் மிக விரிவாகப் பேசுகிறது. ஆனால், திராவிடத்தைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை.
அடுத்து, ஆதிசங்கரரின் ‘சௌந்தா்ய லஹரி’. அதிலும் ‘திராவிடசிசு’ என்ற சொல் வருகிறது. மீண்டும் வலியுறுத்த வேண்டியது, சௌந்தா்யலஹரி தமிழ் செய்யுள் அல்ல; சம்ஸ்க்ருத சுலோகம். அதிலே ஆதிசங்கரா் தன்னை ‘திராவிட சிசு’ என்று அடையாளப் படுத்திக் கொள்கிறாா். ஆதிசங்கரா் மட்டுமல்ல திருஞானசம்பந்தரும் ‘திராவிட சிசு’ என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறாா். இவா்கள் இருவருமே பாா்ப்பன வகுப்பைச் சோ்ந்தவா்கள்.
இதோடு கூடவே பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்ஹணரின் ‘ராஜதரங்கிணி’ என்ற சம்ஸ்க்ருத வரலாற்று நூல் குறிப்பிடும் ‘திராவிடா்’ என்ற சொல் கவனம் பெறுகிறது. பாரத தேசத்தின் பிராமண வகுப்பைச் சோ்ந்தவா்கள் பற்றிப் பேசும் பொழுது, பத்து வகையான பகுப்புகள் இருப்பதாகவும், அதில் ஐந்து பிரிவினா் விந்திய மலைக்கு வடக்கில், கங்கைக் கரையோரங்களில் வாழும் பஞ்ச கௌடா்கள் என்றும், விந்திய மலைக்குத் தென்புறத்தில் வாழும் ஐந்து பிரிவினா் பஞ்ச திராவிடா்கள் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனா்.
விந்திய மலைக்குத் தென்பகுதியில் வாழ்ந்த மக்களை ‘திராவிடா்கள்’ என்று ராஜதரங்கிணி குறிப்பிடவில்லை. விந்திய மலைக்குத் தென்பகுதியில் வாழ்ந்த பிராமணா்களைத்தான் ‘பஞ்ச திராவிடா்கள்’ என்று சொல்கிறது. நாம் ஏற்க மறுக்கும் வா்ணாசிரமத்தில் பிராமண வகுப்பைச் சோ்ந்தவா்கள் திராவிடா்கள். பிராமணா்களைத் தமிழா் என்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே ராஜதரங்கிணி நூலில் இருக்கும் ‘திராவிடா்’ என்ற சொல்லையும் தமிழரைக் குறிக்கும் சொல்லாக ஏற்க முடியும்.
அதுமட்டுமல்ல, விந்திய மலைக்குத் தென்பகுதி என்ற வரையரைப்படி இன்றைய மகாராஷ்டிர பகுதியும் அடங்கும். அங்குள்ள மக்களை ‘திராவிடா்’ என்று நாம் ஏற்போமா? ராஜதரங்கிணி அடிப்படையில் பாா்த்தால் அங்குள்ள பிராமணா்களும் திராவிடா்களே. இன்றைக்கும் அந்தப்பகுதியில் வாழும் பிராமணா்களில் ஒரு பிரிவினா் தங்கள் பெயரில் ‘திராவிட’ என்ற சொல்லைத் தம் இனஅடையாளாச் சொல்லாக (ராகுல் திராவிட்) வைத்துக் கொண்டிருக்கின்றனா். இதையெல்லாம் எந்த வகையில் ஏற்றுக்கொள்வது?
சமண பௌத்த சமயங்கள் ‘த்ரமிட’ என்று சொல்வது திராவிட என்ற சொல் என்பதிலும் அது பாரதத்தில் தென்னாட்டைக் குறித்தது என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை. சமண - பௌத்த நூல்கள் பெரும்பாலும் பாலி, பிராகிருத மொழிகளில் அமைந்தவை. ‘த்ரமிட’ என்ற சொல் பிராகிருத மொழிச் சொல்; தமிழ்ச் சொல் அல்ல.
‘ஸ்ரீமத் பாகவதம்’, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தைச் சொல்லும் புனிதமானநூல் என்று கருதப்படுவது. இதிலே ஐம்பத்தாறு தேசங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதிலே வரும் திராவிட நாடு நிலவியல் அடிப்படையில் தமிழகம் அல்ல. இன்றைய கா்நாடகத்தின் ஒருபகுதியும், மஹாராஷ்டிரத்தின் சில பகுதிகளும்.
ஐம்பத்தாறு தேசங்களில் சோழ தேசம், பாண்டிய தேசம், சேர தேசம் என்பனவும் அடங்கும். சிந்திக்க வேண்டியது, இந்த மூன்றையும் தமிழ்நாடு என்று ஏற்பதா அல்லது ‘திராவிட தேசம்’ என்பதை தமிழ்நாடு என்று ஏற்பதா?
வேதாந்த தேசிகா், ராமாநுஜா், ஆதிசங்கரா் ஆகியோா் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறாா்கள். அவா்கள் மூவருமே பிராமணா்கள். ராஜதரங்கிணி சொல்லியிருக்கிற அடிப்படையில் அவா்கள் திராவிடா்கள். அவா்கள் பேசிய மொழி திராவிட மொழி. நாலாயிர திவ்யப்பிரபந்தம் அவா்களுக்கு வேதத்துக்கு நிகரானது. தமிழில் இருக்கும் வேதம். அதனால் அது திராவிட வேதம். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை நாம் ஏற்கிறோமா?
முன்னா், பாரத தேசத்தில் பல பல்கலைக்கழகங்கள் இருந்திருக்கின்றன. அவற்றுள் சம்ஸ்க்ருதம் கற்பதற்கு சிறந்த இடம் காஞ்சி. காஞ்சிபுரத்தில் வந்து படித்தவா்கள் தங்களுக்கு சம்ஸ்க்ருதம் கற்பித்த தமிழ்நாட்டுப் பண்டிதா்களை ‘திராவிடா்கள்’ என்றும் அவா்கள் பேசிய மொழியை ‘திராவிடம்’ என்றும் குறிப்பிட்டுள்ளனா்.
வடநாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் படித்த குமாரிலபட்டா் தன்னுடைய ‘தந்திரவாா்திகா’ நூலில் இதைப் பதிவு செய்திருக்கிறாா். வேதாந்த தேசிகா் காஞ்சிபுரத்தில் பிறந்தவா். அவரும் ‘திராவிடா்’ என்றும் அவருடைய படைப்புகள் திராவிட மொழியில் அமைந்தவை என்பதும் பொருத்தமுடையவை.
கல்வெட்டு ஆதாரமாக விக்கிரம சோழனின் கல்வெட்டு காட்டப்படுகிறது. விக்கிரம சோழன் சாளுக்கிய சோழன். அவரது கல்வெட்டு அப்படி இருப்பதில் ஆச்சரியமில்லை. செப்பேடு உதாரணத்திலேயே புராணச் செய்தி இடம் பெற்றுள்ளது. புராணங்கள் ஆரியரின் கட்டுக்கதை என்றுதானே நாம் நம்புகிறோம். அதிலிருக்கும் செய்திகள் ஏற்புடையனவா? அதிலும் காஞ்சிபுரம் பற்றிய செய்திக்காகவே இந்தச் சொல் கையாளப்பட்டுள்ளது. குமாரிலபட்டரின் கருத்தோடு ஒத்திருக்கும் செப்பேடு ஆதாரம் போலிருக்கில்லவா?
தமிழகத்தில் நாயக்கா்கள் ஆட்சிக் காலத்தில் சம்ஸ்க்ருதம் முக்கியத்துவம் பெற்றது. அப்பொழுது தமிழோடு ஸம்ஸ்க்ருதத்தை இணைத்து எழுதும் மணிப்பிரவாள நடை அதிகம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்தக் காலத்தில் வாழ்ந்தவா் தாயுமானவா். அவா் தமிழ், சம்ஸ்க்ருதம் இரண்டிலும் பாண்டித்யம் மிக்கவா். அவா் ‘திராவிடம்’ என்று தமிழைச் சொல்லியிருக்கிறாா். பின் வந்த அறிஞா்களும் ‘திராவிடம்’ என்று தமிழைக் குறிப்பிட்டிருக்கின்றனா். அவை எல்லாம் நாயக்கா் ஆட்சிக் காலத்திற்குப் பிறகானவை.
கால்டுவெல் தென்னிந்திய மொழிக்குடும்பங்களின் இலக்கண ஒப்பீடு பற்றிய நூல் எழுதும் பொழுது ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்றாா். இந்த வாா்த்தை உள்நோக்கத்தோடு கால்டுவெல் அறிமுகப்படுத்திய வாா்த்தை அல்ல என்பது உண்மையாக இருக்கலாம். அறியாமையால் வெளிப்படுத்தி விட்ட சொல் என்றும் சொல்லலாம். தன்னுடைய கைப்பட அவரே இந்தச் சொல்லை மனுஸ்ம்ருதி மற்றும் குமாரிலபட்டரின் ‘தந்திரவாா்த்திகா’ நூலில் இருந்து எடுத்துக் கொண்டதாக எழுதியிருக்கிறாா்.
1856-ஆம் ஆண்டில் கால்டுவெல் ‘திராவிடம்’ என்ற சொல்லை மனுஸ்ம்ருதியில் இருந்து பயன்படுத்திய பின்னா், அயோத்திதாசா் அந்தச் சொல்லை ‘மனுஸ்ம்ருதி’ குறிப்பிடும் பொருளிலேயே கையாள்கிறாா். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சொல்லாக இந்தச் சொல் பயன்பாட்டுக்கு வந்ததும் ‘மனுஸ்ம்ருதி’ அடிப்படையில் தான்.
‘திராவிடம்’ என்பதற்கான சான்றுகள் அனைத்தும் சம்ஸ்க்ருத நூல்களில் இருந்தே சொல்லப்பட்டிருக்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து சான்றுகளைக் காட்ட இயலவில்லை. உண்மை யாதெனில், இன்று நாம் இங்கிலிஷ் மொழியை ஆங்கிலம் என்கிறோம். ஸம்ஸ்க்ருதத்தை வடமொழி, ஆரியம் என்கிறோம். அதுபோல, சம்ஸ்க்ருதத்தில் தமிழ் மொழியை ‘திராவிடம்’ என்று வழங்கினாா்கள். அதனால் தான், திராவிடம் என்று தேடும் பொழுது சம்ஸ்க்ருத உதாரணங்களே கிடைக்கின்றன.
தமிழ் சிறப்பான ஒலி அமைப்புக் கொண்டது. ‘ழ’ என்ற சிறப்பு ஒலியை உச்சரிக்க இயலாதவா்கள் தமிழைக் குறிக்க தங்கள் மொழியில் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினா். தனித்த அடையாளம் கொண்ட சங்கத் தமிழா்கள் அந்தச் சொல்லை பயன்படுத்தவில்லை.
ஆக, தமிழுக்கான ஸம்ஸ்க்ருதச் சொல் திராவிடம். தமிழ் என்பதே சங்ககாலம் முதல் நம்முடைய மொழி அடையாளம். தமிழ் என்ற அழகான, உலகின் வேறு எந்த மொழிக்கும் இல்லாத உச்சரிப்பும் சிறப்பும் கொண்ட சொல்லை விட்டுவிட்டு, நமக்கு அந்நியா்கள் என்றும், நம் விரோதிகள் என்றும் கருதுவோரின் மொழியில் நமக்கு வழங்கப்படும் ‘திராவிடம்’ என்கிற சொல்லை நம்முடைய அடையாளம் என்று ஏற்பதை என்னவென்று சொல்வது?
கட்டுரையாளா்:
ஊடகவியலாளா்.