உறவுகளின் உன்னதம்

இரு நண்பர்கள் பேசிக்கொள்வதாக சமூக ஊடகங்களில் உலா வரும் நகைச்சுவைத் துணுக்கு ஒன்றில், ஒருவர் "முதியோர் இல்லத்துக்கு நன்கொடை கேட்டு உன் வீட்டுக்கு சிலர் வந்தார்களே, அவர்களுக்கு நீ என்ன கொடுத்தாய்' என்று கேட்பதாகவும் அதற்கு மற்றொருவர் "நான் என் அப்பாவைக் கொடுத்துவிட்டேன்' என்று கூறுவதாகவும் உரையாடல் இருந்தது.  இதனைப் படித்துவிட்டுப் பலரும் புன்னகையுடன் கடந்து சென்றிருப்போம். சிரிப்பு என்பதைத் தாண்டி சற்றே சிந்தித்துப் பார்த்தால் மனித சமுதாயத்தின் வேர்கள் அழுகத் தொடங்கியிருப்பதை உணர்த்தும் வாசகங்கள் இவை என்பதை அறிந்துகொள்ளலாம். 

வயதான பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை என்கின்ற நச்சுச் சிந்தனையை நமது மூளைகளில் மெல்ல மெல்லப் பதியவைப்பவை இவை போன்ற நகைச்சுவைகளே. இவற்றையெல்லாம் விட, பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைப்பதுதான் சரி, அங்கேதான் அவர்கள் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து வருபவை "சீனியர் சிட்டிசன் ஹோம்' என்ற பெயரில் பல்வேறு பெரிய நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் உருவாகிவரும் பணக்கார முதியோர் இல்லங்களின் விளம்பரங்கள்.
லட்சக்கணக்கில் முதலீடு செய்து சொந்தமாக ஓர் அடுக்குமனைக் குடியிருப்பை வாங்கிக்கொள்வது அல்லது மாதாமாதம் பல்லாயிரம் ரூபாய் வாடகையுடன் பராமரிப்புச் செலவையும் கொடுத்துத் தங்கியிருப்பது என்பது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களுடன் ஒளிபரப்பாகும் நவீன முதியோர் இல்ல விளம்பரங்கள் இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தும் தாக்கம் அளவிடமுடியாததாகும்.

ஆதரவற்ற ஏழை முதியோரை கவனித்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட முதியோர் இல்லங்கள், பொதுமக்களிடம் நன்கொடை கேட்டு ஊடகங்களில் விளம்பரம் தருவதைப் பார்த்திருக்கிறோம். இது புரிந்துகொள்ளக்கூடியதே. 
ஆனால், ஐந்து நட்சத்திர விடுதிகளைப் போன்ற புதிய கட்டடங்களின் புகைப்படங்களுடன் வரும் " சீனியர் சிட்டிசன் ஹோம்' விளம்பரங்களை வணிகமயமாக்கத்தின் இன்னொரு பரிமாணமாகவே பார்க்க முடிகிறது. 
வாரிசுகளே இல்லாத பெற்றோரும், தங்கள் வாரிசுகளுடன் அயல்நாடு சென்று வசிக்க இயலாத பெற்றோரும் இங்கு தனித்து வசிக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மைதான். வயதானவர்கள் இவ்வாறு தனியாக வசிப்பதால் அவர்களுடைய அவசர மருத்துவத் தேவைகள் நிறைவேறுவதில் சிரமங்கள் ஏற்படுவதோடு, அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். 

ஆகவே, இத்தகைய முதியவர்கள், தங்களின் பாதுகாப்பிற்காக ஒரு முதியோர் இல்லத்தை நாடுவதில் தவறில்லைதான். ஆனால், மேற்கண்ட பணக்கார முதியோர் இல்லங்களின் விளம்பரங்களில் அங்கே தங்கும் முதியவர்கள் தாங்கள் மிகவும் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகக் கூறும் வசனங்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாகும். 
இவ்வுலகில் எவரும் தன் குடும்பத்தினருடன் இணைந்து ஒரே கூரையின் கீழ் வாழ்ந்து வருவதன் மூலமே மகிழ்ச்சியைப் பெறுவர். குடும்ப உறவே வேண்டாம் என்ற துறவு மனப்பான்மை உள்ளவர்களைத் தவிர மற்ற யாருமே தனித்து வாழ்வதை விரும்ப மாட்டார்கள். தனது வீட்டைக் காட்டிலும் விடுதியே வசதி மிக்கது என்றாலும் கூட வசதி குறைந்த வீட்டில் குடும்ப உறவுகளுடன் வாழும் வாழ்க்கையே ஒருவருக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிப்பதாகும். 

ஆனால், இவ்விளம்பரங்களில் காட்டப்படும் வசதியான பணக்கார முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள், தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுவது, அவர்களுடைய பிள்ளைகளுக்கு நியாயமாக இருக்க வேண்டிய குற்ற உணர்வையும் துடைத்துவிடும். 

அம்முதியவர்களின் வாரிசுகள் வெளிநாட்டுப் பணியினை முடித்துக்கொண்டு நம் நாட்டிற்குத் திரும்பிய பின்னரும், தங்களுடைய பெற்றோரை அத்தகைய பணக்கார முதியோர் இல்லங்களிலிருந்து திரும்ப அழைத்துக்கொள்ளாமல் இருக்க இத்தகைய விளம்பரங்கள் தூண்டுகோலாக அமையும். 

அதுமட்டுமல்ல, நடுத்தர, உயர்நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரும் சற்றே அதிகமாகப் பணம் செலவழிந்தாலும் பரவாயில்லை,  நம்முடைய பெற்றோரை இத்தகைய இல்லங்களில் விட்டுவிடுவதே சிறப்பானது என்று முடிவெடுக்கவும் இவ்விளம்பரங்கள் காரணமாகக்கூடும்.

சென்ற தலைமுறைகளில் தழைத்திருந்த கூட்டுக்குடும்பங்களில் பெற்றோரும் அவர்தம் வாரிசுகளும் ஒன்றாக இருந்ததுடன், ஆதரவற்ற சில சொந்தங்களையும் அத்தகைய குடும்பங்கள் முகம் சுளிக்காமல் பராமரித்து வந்தன. இவ்வளவு ஏன், சென்னை போன்ற பெருநகரங்களில் குடியேறிய வெளியூர்க்காரர்கள்  தங்கள் ஊரிலிருந்து படிப்புக்காகவும் பிழைப்புக்காகவும் வருபவர்களைத் தங்களுடன் தங்க வைத்து உணவளித்து ஆதரித்து வந்த காலமும் உண்டு. உறவுப் பாசமும் ஊர்ப்பாசமும் தழைத்துச் செழித்த அந்தக்காலத்து மனப்பான்மை மீண்டும் வருமானால், இம்மண்ணில் முதியோர் இல்லங்களுக்குத் தேவை இல்லாமல் போய்விடும். 

தூரத்து உறவினர்களையும், சொந்த ஊர்க்காரர்களையும் பராமரிக்காவிட்டாலும் பரவாயில்லை. பிள்ளைகள், தங்கள் பெற்றோரையே சுமையாகக் கருதி முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் அவலத்தையேனும் நாம் உடனடியாகத் தவிர்க்க வேண்டும். தாத்தா, பாட்டிகளைத் தொந்தரவாக நினைக்காத மனப்பான்மையை நம் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும். 
ஆதரவற்ற முதியோரைப் பராமரிப்பது என்பது அறச்செயல் ஆகும். ஆனால், அரண்மனை போன்ற விடுதிகளைக் கட்டி, அவற்றை மிகையாக விளம்பரப்படுத்தி வரவினைப் பெருக்கும் செயல் அறத்தின் கணக்கில் சேராது. பெருவணிகமாகவே அது வகைப்படுத்தப்படும். 

எது எப்படியாயினும், சென்ற தலைமுறையுடன் முடிந்துபோன நமது கூட்டுக்குடும்பப் பாரம்பரியத்தின் வேர்கள்  மீட்டெடுக்கப்பட வேண்டும். எப்பாடுபட்டாவது அந்த வேர்களை மறுபடியும் தழைக்கச்செய்ய வேண்டும். அப்போதுதான், நம்முடைய அடுத்த தலைமுறையாவது  உறவுகளின் உன்னதத்தை உணரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com