இணையம் என்னும் ஆழ்கடல்!

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இணையப் பாதுகாப்பு நிறுவனத்தால் (என்எஸ்ஓ) உருவாக்கப்பட்ட "பெகாஸஸ்' எனப்படும் ரகசிய மென்பொருள் மூலம் நம் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் என பலர் வேவு பார்க்கப்பட்டதாக சொல்லப்படும் செய்தி, அண்மையில் பெருத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்தக் கருத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. இந்திய அரசு இந்த மென்பொருளைப் பயன்படுத்தியதா, இல்லையா என்பது உறுதியாகாத நிலையில் அதை பற்றிய விவாதங்கள் வேகம் எடுத்துள்ளன.
தேசவிரோத சக்திகள், தீவிரவாத குழுக்கள் இவற்றிடமிருந்து நாட்டைக் காக்கவும் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டவும் உளவு மேற்கொள்ள அரசுக்கு சட்டம் அதிகாரம் அளித்திருக்கிறது. உளவு பார்ப்பதற்கான காரணத்தை முன்வைத்து உரிய துறைகளின் ஒப்புதலோடு உளவு பார்ப்பதை சட்டம் அனுமதிக்கிறது. தேசப்பாதுகாப்பிற்கு உளவு அவசியமும் கூட. ஆனால், எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகங்களை அறிந்து கொள்வதற்காக அக்கட்சியினரின் கைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக நாட்டின் முக்கியப் புள்ளிகள் பலர் கொதிப்படைந்துள்ளனர்.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்
என்று கூறுகிறார் திருவள்ளுவர். அதாவது, "எல்லோரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் ஒற்றர் மூலம் விரைந்து அறிதல், அரசனுக்குரிய தொழிலாகும்' என்கிறார்.
இன்றைய தகவல் தொழில் நுட்ப யுகத்தில் நம்மைக் கண்காணிக்க நாமே அனுமதி அளிக்கிறோம். காலை முதல் இரவு வரை ஏன், உண்ணும்போதும் உறங்கும்போதும் கூட செல்லிடப்பேசியுடனே பயணிக்கிறோம். உளவாளியை 24 மணிநேரமும் நம்முடனே வைத்துக் கொண்டிருக்கிறோம்.
நம்மை பற்றி அறிந்து கொள்ள நாமே அனுமதி அளித்துவிட்ட நிலையில் யாரை நாம் குறை கூற இயலும்? எந்தவொரு மென்பொருளை தரவிறக்கம் செய்ய முற்படும்போதும் நம்மை அறிய அந்நிறுவனம் அனுமதி கோருகிறது. நாமும் அனைத்தையும் ஒப்புக்கொண்டு உள்நுழைகிறோம். நம்முடைய அனுமதியுடனே நம் தகவல்கள் அவர்கள் வசம் சென்றுவிடுகின்றன.
நாம் செய்யக்கூடிய பெரும்பாலான பணிகளை இணையப் பயன்பாடு எளிமையாக்கி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இணையத்தில் நன்மையும் தீமையும் சமஅளவில் விரவிக் கிடக்கின்றன. செய்யும் பணியோ, இருக்கும் இடமோ, சொந்தக் குடும்பமோ கொடுக்காத மனஉளைச்சலை, பலருக்கும் இன்று இணையம் கொடுத்துக் கொண்டிருக்கிறதென்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
கரோனா தீநுண்மியின் தாக்கத்திற்குப் பிறகு தகவல் தொழில் நுட்ப சாதனங்களின் உபயோகம் பன்மடங்கு அதிகரிக்க தொடங்கிவிட்டது. முதியவர்கள் கூட வேறு வழியின்றி இணையத்தை பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டனர். இணையத்தில் எப்போதும் ஒரு கும்பல் கழுகுப் பார்வையோடு நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கிறது. இணையம் ஆழ்கடலைப் போன்றது. பார்க்க அமைதியாகக் காட்சியளிக்கும். ஆனால் அதில் கவனமுடன் பயணிக்காவிட்டால் நம்மை அது மூழ்கடித்துவிடும்.
பிள்ளைகளிடம் செல்லிடப்பேசியைக் கொடுத்து விட்டு பெற்றோர்கள், பதைபதைப்புடன் உலவ வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டது காலம். கல்விக்காக பள்ளி மாணவர்களும் இணையத்தை பயன்படுத்துவதால் இதன் தாக்கம் சமூகத்தில் அதிகம் இருக்கிறது. 52% மாணவர்கள் செல்லிடப்பேசியைக் கற்றலுக்கு பதில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட பல விளையாட்டுக்களை 12 முதல் 18 வயதுடைய சிறுவர்கள் அதிகம் விளையாடி இருக்கிறார்கள்.
கணினி, இணையம் தொடர்பான மின்வெளித் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் தகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு நமக்கு மிக அவசியம். பொது இடங்களில் நம்மைப் பற்றிய தகவல்களை நாமே பகிரங்கமாக தெரியப்படுத்துவதை முதலில் தவிர்க்க வேண்டும். இன்று வணிக வளாகங்கள் முதல் பேரங்காடிகள் வரை எங்கு சென்று பொருட்களை வாங்கினாலும் நம் செல்பேசி எண் கேட்கப்படுகிறது.
இன்று நம்முடைய செல்லிடப்பேசியின் எண் வங்கி கணக்கு எண், ஆதார், சமையல் எரிவாயு இணைப்பு, வருமான வரி கணக்கு போன்ற பல எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் தகவல்கள் சுலபமாக கிடைத்துவிடும் வாய்ப்பு அதிகரிக்கிறது. கொஞ்சம் கவனக்குறைவுடன் செயல்பட்டாலும் இணையவழிக் குற்றங்கள் நம்மை கபளீகரம் செய்துவிடும். பொதுஇடங்களில் நம் கழுத்துச் சங்கிலியை பறித்துச் செல்லும் திருடர்களைக் காட்டிலும் ஆபத்தானவர்கள் இவர்கள்.
நாம் உதிர்த்த வார்தைகளை, சென்ற இடங்களை, பார்த்த மனிதர்களை நாமே காலப்போக்கில் மறந்து விடுகிறோம். ஆனால், நம்மை, நாம் பார்வையிட்ட வலைதளங்களை, பெற்ற தகவல்களை, பயன்படுத்திய முறைகளை நம்மை காட்டிலும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறது இணையம். அது நம்மை மறப்பதுமில்லை, நம் தரவுகளை அழிப்பதுமில்லை.
இலவசமாக கிடைக்கிறது என பல செயலிகளைப் பயன்படுத்துகிறோம். இலவசங்கள் கொடுப்பதே நம் கண்களைக் கட்டி நம் தகவல்களை பெறுவதற்குத் தான். செயற்கை நுண்ணறிவு சார்ந்த மிகப்பெரிய வணிகம் இதில் புழங்குகிறது. அந்த புரிதலுடன் நாம் அவற்றை அணுக வேண்டிய நேரமிது.
கூகுளைத் போன்று வேறு சில பாதுகாப்பான தேடுபொறிகளும் உள்ளன. இதே போல மின்னஞ்சலிலும் வேறு சில பாதுகாப்பான மின்னஞ்சல் சேவைகள் உள்ளன. ஆனால் நாம் பாதுகாப்பு பற்றி பெரிதும் அக்கறை கொள்ளாமல் கடிவாளம் கட்டிவிட்ட குதிரை போல் முன்செல்பவர்களைப் பின்பற்றியே ஓடிக் கொண்டிருக்கிறோம்.
நம் தேவைக்கானது சிறிய கடைகளில் கூட கிடைக்கும் எனும் நிலையில் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது என்று ஒரு பேரங்காடியைப் பயன்படுத்துவது போன்றது இது. நம் நேரத்தை மிச்சப்படுத்துகிறது என்று எண்ணிக் கொள்வதால் அதன் குறைகள் நம் கண்ணை மறைக்கின்றன.
மேலும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொதுஇடங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இலவச இணைய வசதியை பெறாது இருத்தல் நல்லது. என் தோழி ஒருசமயம் அவசரத்திற்கு விமான நிலையத்தில் இருந்த மின்னூட்டத்தில் தன் செல்லிடப்பேசிக்கு மின்னூட்டம் அளித்தார்.
அது முதல் தன் பேசியிலிருந்து முன்பின் அறிமுகம் இல்லாத எண்கள் சிலவற்றிற்கு அழைப்பு சென்றிருப்பதையும் அவசியமற்ற நேரங்களில் செல்லிடப்பேசி உஷ்ணம் தகித்ததையும் பார்த்து அதிர்ந்தார். இதனால் ஏகப்பட்ட மன உளைச்சல் அவளுக்கு. பின்னர் அனைத்திலும் உள்நுழைய பொதிந்து வைத்திருந்த கடவுச்சொல்லை முற்றிலும் புதிதாக மாற்றி அதிலிருந்து மீண்டார்.
நம்மிலும் பலர் தொடக்கத்தில் பொதிந்த அதே கடவுச்சொல்லுடன் பல வருடங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். யாரும் சுலபத்தில் ஊகிக்க முடியா வண்ணம் சொற்கள், எண்கள் அல்லது சின்னங்களில் ஏதேனும் ஒன்று நம் கடவுச்சொல்லில் இருப்பது போல் உருவாக்கி சீரான இடைவெளியில் அதை மாற்றிக் கொள்வது சாலச் சிறந்தது. உடலுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படின், தயங்காமல் அதை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் நோயுடனே வாழ வேண்டி இருக்கும். அது போன்றே இணைய பயன்பாட்டிலும் சிலவற்றை அவ்வப்போது வெட்டி எடுக்க வேண்டியிருக்கும்.
ஒரு காலத்தில் தகவல் தொழில் நுட்பத்தில் மென்பொருள் துறை எவ்வாறு கொடிகட்டிப் பறந்ததோ இன்று அந்த இடத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருக்கிறது. கனடாவில் வசிக்கும் பியூ ஜோஸ்வா என்பவர் தன்னுடைய காதலி ஜெஸ்ஸிகாவை 2012-இல் துரதிருஷ்டவசமாக இழந்தார். ஜெஸ்ஸிகா இறந்த துக்கத்தை ஜோஸ்வாவால் பல வருடங்கள் கடந்தும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தானியங்கி சாட்பாட் என்னும் திட்டத்தை வெற்றிகரமாக உருவாக்கினார். இதைத் தொடர்ந்து காதலி உயிருடன் இருக்கும் போது தன்னுடன் பேஸ்புக்கில் பேசிய தரவுகளை பதிவேற்றம் செய்தார். பெரிய ஆச்சரியம்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் தன் காதலி ஜெஸ்ஸிகாவைப் போன்றே அது பதில் அனுப்ப தொடங்கியது. இறந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தன் காதலி ஜெஸ்ஸிகாவுடன் அவரால் சாட் செய்ய முடிகிறது. இப்போது ஜோஸ்வா அந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை தன் காதலியாக நினைத்து தினந்தோறும் உற்சாகமாக பேசி வருகிறார். இப்பழக்கம், துணையை இழந்த இளைஞர்கள், பெரியவர்களிடம் வேகமாக பெருகி வருகிறது. தற்போது மனிதனுக்கு இது உகந்ததா அல்லது வருங்காலத்தில் மனதளவில் வேறேதும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை அறிய உளவியல் நிபுணர்கள் ஆய்வில் இறங்கியுள்ளனர்.
இன்று தகவல் தொழில்நுட்பம் நாம் நினைக்கும் வேகத்தையெல்லாம் விட அதிக வேகத்தில் முன்னே சென்று கொண்டிருக்கிறது. உலகில் தொழில் நுட்பம் இல்லாத இடமொன்று இல்லவே இல்லை எனும் நிலை உருவாகி வருகிறது. காலத்திற்கேற்ப மாறிவரும் புதிய தொழில் நுட்பங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்; அவற்றின் தீமைகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com