முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர்!

 அண்மைக்காலமாக சில மதப் பிரசங்கிகள் இந்தியர்கட்கு கல்வியை, விஞ்ஞானத்தை, நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தது ஆங்கிலேயர்களே, கிறித்துவ மதமே என்று மேடைதோறும் முழங்குகிறார்கள். ஏசுபிரான் தம்மை சிலுவையில் அறைந்தபோது "பிதாவே இவர்கள் தெரியாது செய்கின்ற பிழையை மன்னியுங்கள்' என்றதுபோல, நாமும் இவர்கள் தெரியாது செய்யும் பிழையை மன்னிக்க வேண்டுவோம்.
 கல்வியைப் பொருத்தவரை 11-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில்தான் இங்கிலாந்து நாட்டில் பள்ளிகள் தோற்றமெடுத்தன. ஆக்ஸ்போர்டு என்ற ஊரில் 1096-இல் தொடங்கப்பட்டதுதான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது 1209-ஆம் ஆண்டில்தான். ஆனால் பாரதத்தில் 18-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 7,32,000 உண்டு உறைவிட குருகுலங்கள் இருந்தன.
 குருகுலக் கல்வியின் பாடப்பிரிவுகளில் கணிதம், வானவியல், மருத்துவத்தில் ரண சிகிச்சை, மாற்று உறுப்பு சிகிச்சை, நீர் மேலாண்மை, வேளாண்மை, நெசவு, காடு வளர்த்தல், தோட்டப் பயிர் காத்தல், உலோகவியல், இயந்திரவியல், கப்பல் தயாரித்தல், வானூர்திகள் வடிவமைத்தல், போர்க்கருவிகள் செய்தல், கட்டடக் கலை, சிற்பம், ஓவியம், சோதிடம் போன்ற 64 கலைகளையும் கற்றுணர்ந்தார்கள்.
 ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே தட்சசீலம், காஞ்சி, காந்தளூர் சாலை, நாளந்தா போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்களை தோற்றுவித்தார்கள். நாளந்தா பல்கலைக்கழகம் 800 ஆண்டுகள் புகழ் பெற்று கோலோச்சியது. 1,400 ஏக்கர் நிலப்பரப்பில் ஒன்பது மாடி கட்டடத்தில் உயர்ந்து நின்றது. இதன் தொல்பெருமையை உணர்ந்த முன்னாள் குடியரசு தலைவரும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பிக்க முன் நின்றார்.
 அதில் சீனா, திபெத், இலங்கை, மியான்மர், துருக்கி, கிரேக்கம், பாரசீகம், சயாம், சாவகம், சுமத்ரா போன்ற நாடுகளிலிருந்து சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் தங்கிப் படித்தனர். 2,000 ஆசிரியர்கள், 11 மாணவர் விடுதிகள், 10 கோயில்கள், தியானக் கூடங்கள் உடையதாக அது இருந்தது. சீன நாட்டு அறிஞர் யுவான் சுவாங் இங்கு தங்கி 15 ஆண்டுகள் பெüத்தம் கற்று நாடு திரும்பினார்.
 பேராசிரியர் ஜான் ப்ளேஃபயர் 1789-இல் எழுதிய "பிராமணர்களின் வானவியல் ஆய்வுகள் பற்றி சில குறிப்புகள்' என்ற கட்டுரையில், கி.மு. 3102-இல் தொடங்கியதாகச் சொல்லப்படும் கலியுகம் உண்மையா, கற்பனையா என்று ஆய்வு செய்து முடிவாக, பிராமணர்கள் இந்த கிரகங்களை, அதன் நகர்வுகளை எப்படி கருவிகள் இல்லாமல் வெறும் கண்களால் கண்டு குறித்து உள்ளார்கள் என்று ஆச்சரியம் பொங்கச் சொல்லியுள்ளார்.
 இதன் தொடர்ச்சியே இன்றைய நாளின் "பஞ்சாங்கம்' எனில் மிகையில்லை. ஜான் ப்ளேஃபயர் இந்த அட்டவணைகளைப் பார்க்கும் போது அதை உருவாக்கியவர்கட்கு ஜியாமெட்ரி, எண் கணிதம், திரிகோணமிதிக்கு இணையான கால்குலஸ் போன்றவையெல்லாம் நன்கு தெரிந்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 மருத்துவத் துறையில் விழித்திரை லென்ஸின் ஒளி ஊடுருவும் திறன் குறைபடும் போது அதைச் சரிசெய்து பார்வையை மீட்டெடுத்து இருக்கிறார்கள் இந்தியர்கள். சிறுநீரகக் கல்லை நீக்க வயிற்றில் தற்போது ஐரோப்பாவில் எந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்கிறார்களோ அதே இடத்தில் இந்தியர்களும் செய்திருக்கிறார்கள்.
 உறுப்பு மாற்று சிகிச்சையும் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் மேற்கொள்ளபட்டதாக லண்டன் ராயல் சொசைட்டிக்கு 1872-இல் அனுப்பிய ஆவணத்தில் டாக்டர் ஹெச். ஸ்காட் குறிப்பிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகள் கழித்து அனுப்பிய மற்றொரு ஆவணத்தில், மூக்கு அறுபட்டவர்கட்கு புதிய மூக்கைப் பொருத்துகிறார்கள் என்றும், உடலின் உடைந்த பாகங்களை ஒன்று சேர்க்கும் பசை ஒன்றையும் லண்டனுக்கு அனுப்பி வைத்தார்.
 "நீர்ப்பாசனம், வேளாண்மை எல்லாம் பாரதத்திற்கு மட்டுமே சொந்தமான விஷயங்கள் அல்லதான். ஆனால், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அளவுக்கு விரிவாகவும், தொழில் நுட்ப நேர்த்தியுடனும் உலகில் வேறு எங்குமே மேற்கொள்ளப்படவில்லை' என்று வேளாண் நிபுணர் அலெக்ஸாண்டர் வாக்கர் கூறியுள்ளது நினைவுகூரத்தக்கது. இரும்பு, எஃகு உற்பத்திக்கென 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் இருந்த உருக்காலைகள் சுமார் பத்தாயிரம்.
 இந்திய இரும்பு - எஃகு நிறுவனத்தை நிறுவிய ஜே.எம். ஹீத் பின்னர் ஷெட்ஃபீல்ட் பகுதியில் எஃகு தொழில் வளரக் காரணமாக இருந்தவர். அவர் "இரண்டரை மணி நேரத்தில் இந்தியாவில் இரும்பை எஃகாக மாற்றி விடுகிறார்கள். நம் நாட்டில் (இங்கிலாந்தில்) இந்த கால அளவுக்குள் தரமான எஃகைத் தயாரிக்க முடிவதில்லை' என்று கூறினார்.
 1790-களில் பிரிட்டிஷாரின் விஞ்ஞான தொழில் நுட்பத் தேடலை பெரிதும் கவர்ந்த பொருள் "ஊட்ஸ் ஸ்டீல்'. இந்தியாவில் இருந்த டாக்டர் ஸ்காட் பிரிட்டிஷ் ராயல் சொசைட்டியின் தலைவரான சர் ஜே பேங்ஸீக்கு இந்திய எஃகின் சிறு துண்டு ஒன்றை அனுப்பி வைத்தார். இங்கிலாந்தில் பல உலோக நிபுணர்களின் சோதனைக்குப் பிறகு மிகச் சிறந்த எஃகு அது என்று மதிப்பிடப்பட்டது.
 உடல் அறுவை சிகிச்சைக்கு தேவையான மிக நுட்பமான, கூர்மையான கருவிகள் செய்ய இந்த எஃகு தான் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்று ராயல் சொசைட்டி தலைவர் கூறினார். (மதராஸ் பப்ளிக் புரொசீடிங்ஸ் - ஜனவரி-1825)
 செல்வச் செழிப்பில், நனிநாகரிகத்தில், தொல்மொழியில் செம்மாந்து நின்ற இந்தியர்களை ஏமாற்றி வணிகப் போர்வையில் ஒளிந்து வந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்கள் அந்நியர்கள். அவர்கள் முதலில் இந்நாட்டு கல்வி முறையில் கை வைத்தார்கள்.
 பாரதத்தில் இருந்து வந்த பாரம்பரிய குருகுலக் கல்வி முறையை மாற்றி, மெக்காலே கல்வி வரைவினை 1858-இல் அறிமுகப்படுத்தினார்கள். பாரத கல்வி முறையை ஆய்வு செய்த ஜி.டபுள்யூ. லூத்தர், தாமஸ் மன்றோ ஆகியோர், வட இந்தியாவில் 97 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும், தென் இந்தியாவில்100 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளதை கண்டு வியந்தனர்.
 அப்போது மெக்காலே, "இந்த இந்தியக் கல்விமுறை நடைமுறையில் இருக்கும் வரை இங்கிலாந்து என்றைக்கும் இந்தியாவை ஆட்சி செய்ய முடியாது. எனவே ஆங்கில கல்வி முறையை அறிமுகப்படுத்துவது அவசியம்' என்றார். 1850 வரை இந்தியாவில் இயங்கி வந்த குருகுலங்கள் தடைசெய்யப்பட்டன. சம்ஸ்கிருதம் சட்ட விரோதமான மொழி என்று கூறி, அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்களை அடித்தும், சிறைப்படுத்தியும் ஆங்கிலேயர்கள் கொடுஞ்செயல் புரிந்தார்கள்.
 முதன் முறையாக கல்கத்தா நகரில் "கான்வென்ட்' திறக்கப்பட்டது. இந்த கல்வி முறை அனைவருக்கும் என்று சொல்லப்பட்டது. பின்னர் கல்கத்தாவில், பம்பாயில், மதராஸில் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன.
 மெக்காலே தனது தந்தைக்கு எழுதிய புகழ்பெற்ற கடிதமொன்றில், "இந்த கான்வென்ட் பள்ளிகள் எல்லாம் இந்தியர்களாயினும் ஆங்கிலேய அறிவு கொண்ட பிள்ளைகளை வெளிக் கொணரும்.
 அவர்களுக்குத் தங்கள் நாட்டைப் பற்றிய அறிவு இருக்காது; தங்களின் நாகரிகத்தைப் பற்றித் தெரியாது. அவர்கள் தங்கள் பாரம்பரியம் பற்றியும், மரபுவழி மொழி பற்றியும் அறியாதவர்களாக இருப்பர். பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறினாலும் இந்நாட்டில் வாழும் பிள்ளைகள் ஆங்கில மொழியில் இருந்து விடுபட முடியாது' என்று எழுதியது இன்றைய நாளில் நாம் உணர்ந்து வரும் உண்மையாகும்.
 பாரத தேசமெங்கிலும் எவரும் ஆங்கிலத்திற்கு அளிக்கும் மதிப்பை தம் தாய்மொழிக்கு அளிப்பதில்லை. இதனால்தான் மகாகவி பாரதியார், ஆங்கில மொழிக் கல்வி கற்போரை, "முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும்மிந் நாளின் இகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார் பேடிக்கல்வி பயின்றுழல் பித்தர்கள்' என்று தனது மனக்குமுறலைக் கொட்டினார்.
 கவியரசர் தாகூர் தமிழ்நாடு வந்தபோது அவருக்கு பாராட்டிதழை ஆங்கில மொழியில் வடித்து வழங்கியபோது அதை மகிழ்ச்சியாக ஏற்காது "ஏன் உங்களின் தாய்மொழியில் வழங்க கூடாது' எனக் கேட்டார். ஆங்கிலேயர்கள் இந்நாட்டில் இருந்த செல்வங்களைக் கொள்ளை கொண்டது மட்டுமல்லாது, நம்மை மொழியில் வேறுபடுத்தி ஜாதி, மத பேதத்தில் பிளவுபடுத்தி ஆண்டுகள் பலவாக அடிமைப்படுத்தி இருந்தனர் என்பதே உண்மை.
 சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு யூனியன், உரையாற்ற அழைத்தது. சசி தரூர் உரையாற்றுகையில், "ஆங்கிலேயே அரசு உலகின் மிகப் பெரிய செல்வந்த நாடாக இருந்த இந்தியாவை அடிமைப்படுத்தி உலகின் மிக ஏழை நாடாக்கி விட்டது. கி.பி 1765 முதல் 1938 வரையிலான காலகட்டத்தில் இங்கிலாந்து 45 டிரில்லியன் டாலர்களை (சுமார் ரூ.3,348 லட்சம் கோடி) கொண்டு வந்து விட்டது. இது இன்றைய யு.கே.யின் தற்போதைய ஜி.டி.பி.யின் அளவைக் காட்டிலும் 17 மடங்கு அதிகம்.
 இந்தியாவில் ஆங்கிலேய அரசு அமைந்தபோது ஜி.டி.பி. 23% ஆக இருந்தது. இங்கிலாந்து அரசு இந்தியாவை விட்டு வெளியேறும் போது ஜி.டி.பி வெறும் 4% ஆகக் குறைந்தது. உண்மையாக இப்போது இங்கிலாந்து அந்த லாபத்தை எல்லாம் இந்தியாவுக்கு திருப்பி வழங்க வேண்டும், அது தான் நீதி' என்று கூறினார்.
 நம் முன்னோர்கள் முட்டாள்களல்லர்; உலகத்துக்கே முன்னோடிகள். "பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்' என்ற மகாகவி பாரதியாரின் வரிகள் உணர்த்துவது அதைத்தான்.
 
 கட்டுரையாளர்:
 தலைவர்,
 திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com