அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரே!

"அனைத்து சாதியினரும் அர்ச்சகர்' திட்டத்தின்கீழ் தமிழக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் அர்ச்சகர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டு

"அனைத்து சாதியினரும் அர்ச்சகர்' திட்டத்தின்கீழ் தமிழக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் அர்ச்சகர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல "அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம்' கோயில்களில் துவக்கப்பட்டுள்ளது. பெண்கள் விரும்பினால் அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி கொடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், பெண் ஒருவரை ஓதுவாராக நியமித்து பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் ஏற்கெனவே பணியில் இருந்த அர்ச்சகரை நீக்கிவிட்டு புதிய நியமனம் நிகழ்ந்ததாக செய்திகள் பரவி வருகின்றன. சாத்தூர் பெருமாள் கோயிலில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர் பொறுப்பேற்கச் சென்றபோது அங்கே ஏற்கெனவே பணியில் இருந்த முதியவரைக் கட்டாயமாக வெளியேற்றியதாக அவரின் மகள் புகார் எழுப்பியுள்ளார். திருச்சி, வயலூர், சமயபுரம் பகுதிகளில் உள்ள கோயில்களிலும் கோயில் சாவியைப் பறித்துக் கொண்டார்கள் என்பது போன்ற தகவல்கள் பரவி வருகின்றன. 

தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இதுகுறித்து பதிலளிக்கும்போது, "ஏற்கெனவே பணியில் உள்ள அர்ச்சகர்களை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை. காலிப் பணியிடங்களை மட்டுமே நிரப்பி உள்ளோம். ஆகம விதிகளுக்கு மாறாக நாங்கள் நடக்கவில்லை. ஆகம விதிகளின்படியே பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்' என்று கூறியுள்ளார். இத்திட்டத்தைத் தொடர்ந்து அமல்படுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள் புடைசூழ திராவிடர் கழக தலைமை நிலையமான பெரியார் திடலுக்குச் சென்று திக தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். ஈவெரா}வின் இதயத்தில் தைத்திருந்த முள்ளை 40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது அகற்றிவிட்டதாகப் பெருமிதத்தோடு பேசியுள்ளார்.

தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் அவரவர் சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் அர்ச்சகராக, பூசாரிகளாக உள்ளனர். பிராமணர்களின் குலதெய்வக் கோயில்களில் பிற சமூகத்தைச் சார்ந்தவர்கள் பூசாரிகளாக, அர்ச்சகர்களாக உள்ளனர். சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில், காஞ்சி சங்கராச்சாரியாரின் குலதெய்வக் கோயிலாகும். இக்கோயிலில் பிராமணர் அல்லாதோரே பூசாரியாக உள்ளனர். இந்தக் கோயிலில் சங்கராச்சாரியாரே கருவறைக்குள் நுழைய முடியாது; பூஜை செய்ய முடியாது. அவரும் பக்தர்களின் வரிசையில் நின்றுதான் பூசாரிகள் அளிக்கும் பிரசாதத்தை பெற்றுக் கொள்வார்.

குலதெய்வக் கோயில்களிலும், கிராமக் கோயில்களிலும், இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மையான கோயில்களில் பிராமணர்கள் பூசாரிகளாக, அர்ச்சகர்களாக இல்லை. அறநிலையத் துறைக்கு உள்பட்ட சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே அர்ச்சகர்களாக, பூசாரிகளாக உள்ளனர்.

பெரும்பாலான பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் போற்றுதலுக்குரிய பண்டார சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர். கோயில்களில் பூஜை செய்ய விரும்பி வருகின்றவர்களுக்கு ஜாதி, பேதம் இல்லாமல் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர் பயிற்சி வகுப்புக்களை விஸ்வ ஹிந்து பரிஷத், பூஜாரிகள் பேரவை, தமிழகத்தின் ஆதீனங்கள், திருமடங்கள் நடத்தி வருகின்றன. இங்கேயெல்லாம் பயிற்சி முடித்து, சான்றிதழ் பெற்றவர்கள் பல திருக்கோயில்களில் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். 

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அர்ச்சகர் பயிற்சி வகுப்புக்கள் உருவாக்கப்பட்டு அதற்கான பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பயிற்சி வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன. அதில் பயிற்சி முடித்தவர்களும் ஏராளமான பேர் உள்ளனர்.

இது விஷயத்தில் ஆகம முறைகளின்படி அமைந்த கோயில்களிலும், ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட கோயில்களிலும், ஆகம முறைப்படியே அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பது நீதிமன்றங்களில் நிலைநாட்டப்பட்டதும், நடைமுறையில் உள்ளதும் ஆகும். சைவ ஆகமங்களின்படி உள்ள கோயில்களில் சிவாச்சாரியர்களும்,  வைணவ ஆகமங்களின்படி உள்ள கோயில்களில் பட்டாச்சாரியர்களும், வழிவழியாக சேவைகள் செய்து வருகிறார்கள். 

ஆதிசைவ அந்தணர்கள் சிவாலயங்களில் பூஜை செய்வதற்காகவே சிவபெருமானால் படைக்கப்பட்டவர்கள். இவர்கள் பரம்பரையாக சிவனுக்கு அடிமையாக சேவகம் செய்து வருபவர்கள். சம்பளத்துக்கு மட்டுமே பணியாற்றுபவர்கள் அல்ல. 

சிவாச்சாரியார்களான இவர்கள் சிறு வயது முதலே பக்தியும், பயிற்சியும் கல்வியும் பெற்று சிவதீக்ஷை பெற்று சிவபூஜை செய்து வருபவர்கள். இவர்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். இவர்கள் சைவ ஆகமங்களைப் பின்பற்றி அதன்படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள். சமயக் குரவர் நால்வரில் சுந்தமூர்த்தி நாயனார் ஆதிசைவ அந்தணர் மரபைச் சார்ந்தவர். பெரியபுராணத்தில் ஆதிசைவ அந்தணர்களின் பெருமை விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

"ஆதிசைவ அந்தணர்கள் தமிழர்கள் இல்லை. அவர்கள் ஆரியர்கள்' என்று திராவிடக் கருத்தியலைப் பின்பற்றுபவர்கள் தவறான புரிதலைக் கொண்டுள்ளார்கள். பிராமண வெறுப்புணர்வு காரணமாக கோயிலில் இருந்து பிராமணர்களை அகற்றிட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள். 
"கடவுள் இல்லை, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி, பரப்புபவன் ஆயோக்கியன்' என்று சொல்பவர்கள் கோயில்களில் யார் பூஜை செய்ய வேண்டும், கடவுளை எந்த மொழியில் அர்ச்சிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது ஒரு பெரும் நகைமுரணாகும். நாத்திகக் கொள்கைகளைப் பின்பற்றிய ஈவெரா உள்ளத்தில் கடவுளை வணங்கினால்தான் முள் தைக்கும், ரத்தம் வழியும். மாறாக எல்லோரும் அர்ச்சகராக மாறிவிட்டால் ஈவெராவின் இதயம் மகிழும் என்று கூறுவது எந்த வகையில் உகந்தது என்று ஈவெராவின் வாரிசுகள்தான் விளக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்று பணி நியமன ஆணை பெற்றுள்ள ஒரு சிலர் ஈவெரா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, கோயில்களில் வந்து பணி செய்வது எந்த வகையில் நியாயம் என்பதை அவர்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறோம். இறைநம்பிக்கை இல்லாதவர்களை இறைப்பணியில் அமர்த்தி ஆன்மிகம் வளர்க்க நினைக்கும் தமிழக அரசின் நோக்கம் அதில் வெளிப்படுகிறது.

சரி, இந்தப் புரட்சி எல்லாம் கோயில்களில் மட்டும்தானா? இதனை மசூதிகளிலும், மாதா கோயில்களிலும் செயல்படுத்த முடியுமா? மசூதிகளில் தமிழில் ஓதி தொழுகை அழைப்பு கொடுக்க முடியுமா? பெண்கள் மெüல்விகளாகப் பள்ளிவாசல்களில் ஏற்றுக்கொள்ளப் படுவார்களா? மாதா கோயில்களில் அனைத்து சாதியினரும் பிஷப்புகளாக, பாதிரியார்களாக மாற முடியுமா? ஓர் இந்தியர் போப்பாண்டவராக முடியுமா?

முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் தமிழர்கள்தான் என்று குறிப்பிடுகிறோம். ஏன் மசூதிகளில் தமிழ் ஒலிக்க வழிவகை செய்யக் கூடாது? ஹிந்துக் கடவுளுக்குத் தமிழில் வழிபாடு நடத்தினால் கேட்காதா என்கிற அதே கேள்வியை, "ஏக இறைவனுக்குத் தமிழ் தெரியாதா' என்றும் ஏன் கேள்வி எழுப்புவதில்லை, எழுப்பக் கூடாது? 

தமிழில் அர்ச்சனையைத் தொடர்ந்து, அடுத்த கோரிக்கை மசூதிகளில் தமிழில் தொழுகை என்று எழப் போகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால், இஸ்லாமியர்கள் தமிழர்களல்ல என்றாகிவிடும்.

சர்ச்சுகளில் பின்பற்றப்படும் தீண்டாமை இழிவை நீக்க முடியாதா? கிறிஸ்தவ சகோதரர்கள் சாதி சமத்துவத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? அவர்கள் தமிழர்கள் இல்லை என்பதை நீங்கள் மறைமுகமாகச் சொல்கிறீர்களா?
கிறித்தவத்தில் ஜாதி இல்லை என கிறித்தவர்கள் கூறுகிறார்கள். ஹிந்து சமயத்தில் ஜாதி கொடுமை உள்ள காரணத்தில்தான் கிறிஸ்தவர்களாக மதம் மாறினர் என்று திகவினரும் கூறுகின்றனர். அப்படியானால் ஏன் சர்ச்சுகளில் அனைத்து ஜாதியினரும் பிஷப்புகளாக மாற முடியவில்லை என தலித் கிறிஸ்தவர்கள் போராடுகின்றனர். மதம்மாறி ஜாதியத் தீங்கு விலகிவிட்டதாகக் கூறுபவர்கள், ஏன் தங்களுக்குப் பட்டியலின இடஒதுக்கீடு கோரிப் போராடுகிறார்கள்?

உண்மையில் இந்து சமயத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் இல்லை. இந்து சமயம் சீர்திருந்தங்களை உள்வாங்கிக் கொண்டு தன்னை செழுமைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. சங்கரர், ராமாநுஜர், சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் உள்ளிட்டோர் பல சீர்திருத்தங்களைச் செய்துள்ளனர்.

தீண்டாமை இழிவுகளுக்கு எதிராகவும் அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளையும் இந்து சமயத்தில் அவ்வப்போது தோன்றிய  விவேகானந்தர், வள்ளலார் போன்ற அருளாளர்கள் மாற்றி அமைத்துள்ளார்கள். கோயில்களில் சாதி பேதம் ஒழிக்கப்பட்டுள்ளது. 

ஆகமங்கள் ஜாதிகளோடு தொடர்புடையவை அல்ல. ஆகமங்கள் ஆண்டவன் அருளியது. "ஆகமமாகி நின்று அன்னிப்பான் தாழ்போற்றி!' என்கிறது சிவபுராணம். சிவாகம விதிகளில் தலையிட முடியாது. 

இதேபோல வைணவத்தில் பூஜை முறைகள் வைணவ ஆகமங்களான பஞ்சராத்திரம், வைகானச முறைப்படி நடந்து வருகிறது. இதன்படி உள்ள கோயில்களிலும், கோயில் நடைமுறைகளிலும் தலையிட முடியாது என நீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன. 

அர்ச்சகர்கள், சிவாச்சாரியர்கள், குருக்கள், பட்டாச்சாரியர்கள், ஆதிசைவ அந்தணர்கள், பூசாரிகள் இவர்கள் அனைவரும் கோயிலையும், வழிபாட்டையும், தமிழையும், பாரம்பரியத்தையும் பாதுகாத்து வருபவர்கள். இவர்களைக் கோயில்களில் இருந்து அகற்ற நடைபெறும் எந்த ஒரு முயற்சியையும் ஹிந்து மத நம்பிக்கையைச் சிதைத்து, மாற்று மதங்களின் மதமாற்ற எண்ணத்துக்கு உதவுவதாகத்தான் அமையும். அதனால், இவர்களைப் பாதுகாப்பது நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதாகும்.

தமிழில் அர்ச்சனை என்பது சமஸ்கிருதத்துக்கு விரோதமானது அல்ல. தமிழும் சமஸ்கிருதமும் பின்னிப்பிணைந்து ஒன்றை ஒன்று செழுமைப்படுத்திக் கொண்டு வந்துள்ளது. வடமொழியும், தென்தமிழும் நமக்கு முக்கியமானதாகும். தமிழ் நமது தாய்மொழி. சமஸ்கிருதம் நமது தந்தை மொழியாகும். 

தாய்மொழி வழிபாடு என்பதை அனைவரும் ஏற்று போற்றுகிறோம். அதேநேரத்தில் சமஸ்கிருதம் என்பது சாஸ்திர மொழியாகும்.  மந்திரங்களுக்கு மொழி கிடையாது. மந்திர ஒலிகளுக்கு மொழி பேதம் இல்லை. மந்திரங்களின் அதிர்வுகளும், அற்புதங்களும் மொழி கடந்தது. சமஸ்கிருதத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படுத்துவது முட்டாள்தனமாகும்.

ஆண், பெண் சமத்துவம் என்பது நமது கோயில்களில் வழிபாட்டில், வாழ்வியலில் நிலைநாட்டப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்களிலும், திருஈங்கோய் மலை லலிதாம்பிகை பீடம் உள்ளிட்ட பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக, அர்ச்சகர்களாக உள்ளனர். ஏன் முதல்வர் முக.ஸ்டாலினின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் எவ்வளவு சிறப்பாக லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட மந்திரங்களை பாராயணம் செய்து பூஜை செய்கிறார். இங்கு பெண்கள் பூஜை செய்வதை யாரும் எதிர்க்கவில்லை.

கோயில்களின் பாரம்பரியத்தைப் பாதுகாத்திட வேண்டியது அனைவரின் கடமையாகும். தமிழ் அர்ச்சனை திட்டம் என்பது 1956இல் இருந்து நமது கோயில்களில் நடைமுறையில் உள்ளது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்ற பெயர்ப் பலகையை மாற்றி தமிழ் அர்ச்சனை செய்யப்படும் என்றானது. தற்போது அன்னைத் தமிழ் அர்ச்சனை திட்டம் என்று பெயர் மாற்றி செயல்படுத்துகிறார்கள், அவ்வளவுதான். இதனை ஆட்சியாளர்களின் 100 நாள் சாதனைகளில் ஒன்றாக விளம்பரப்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்களை யாரும் எதிர்க்கவில்லை. 

ஆகமங்களுக்கு மாறாக நடந்தால் என்ன நடக்கும் என்பதை திருமூலர் திருமந்திரத்தில் அருளியுள்ளார்.

பேர்கொண்ட பார்ப்பான், பிரான்தன்னை 
            அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்குப் பொல்லா 
            வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்கு பஞ்சமும் 
            ஆம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே!

திருமூலர் அருளிய திருமந்திரம் இது.

இந்து சமயத்தில் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு நடைமுறை, பாரம்பரியம், சாஸ்திரம் உள்ளது. இது பன்முகத்தன்மை வாய்ந்தது. ஏற்கெனவே ஆகம விதிமுறைப்படி உள்ள கோயில்களில் அதே முறை தொடரட்டும். ஆயிரமாயிரம் கோயில்கள் பராமரிப்பின்றி பூஜையின்றி, அர்ச்சகரின்றி பாழடைந்து கிடக்கிறது. இந்த கோயில்களை எல்லாம் எடுத்து புதுப்பித்து, பராமரித்து அர்ச்சகர்களை நியமிக்கலாம். இதில் பாதிக்கப்பட்டுள்ள அர்ச்சகர் சமூகத்துக்கு அனைவரும் துணை நிற்போம். இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்போம். 

எத்தனையோ ஆயிரம் கோயில்கள் விளக்கின்றி, வழிபாடின்றி பாழடைந்து கிடக்கிறது. அந்த கோயில்களில் எல்லாம் உரிய பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற ஆவன செய்வோம். அதை விட்டுவிட்டு, தேவையில்லாத புதிய சர்ச்சைகளைக் கிளப்பித் தங்களது பெரியார் விசுவாசத்தையும், இறைமறுப்புக் கொள்கையையும், பிராமண எதிர்ப்பை முன்னெடுப்பது, தங்களது நிர்வாக பலவீனத்தை மறைப்பதற்காகவும் இருக்கலாம்; சிறுபான்மை வாக்குவங்கிக்காகவும் இருக்கலாம்; பிராமணர் எதிர்ப்பைக் காட்டுவதற்காகவும் இருக்கலாம்; எதுவாக இருந்தாலும், அது அவர்களுக்கு நல்லதல்ல!

கட்டுரையாளர்: தலைவர், இந்து மக்கள் கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com