கைவிடப்பட்ட தேசம்

அண்மையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அதிரடி நிகழ்வுகள் அனைத்து நாடுகளையுமே கவலை கொள்ள வைத்திருக்கின்றன. அமெரிக்கப் படைகள் பெருமளவு விலகிக்கொண்ட நிலையில், ஒவ்வொரு மாகாணமாகக் கைப்பற்றிக்கொண்டே வந்த தலிபான்கள் கடந்த ஞாயிறு அன்று ஆப்கன் தலைநகர் காபூலையும் கைப்பற்றிவிட்டனர். 

தலிபான் படைகள் ஒவ்வொரு மாகாணமாகக் கைப்பற்றி இறுதியில் தலைநகர் காபூலை நெருங்குகையில் "அதிகாரப் பகிர்வு தொடர்பாகவும் அவர்களுடன் பேசத் தயார்' என்று கூறி ஆப்கன் அரசு இறங்கி வந்தது. 

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, ஆப்கன் ராணுவம் ஏறக்குறைய தலிபான் படைகளிடம் சரணடைந்துவிட, அந்நாட்டு  அதிபர் அஷ்ரஃப் கனியோ நாட்டை விட்டே தப்பிச் சென்றிருக்கின்றார்.

மன்னராட்சி, இடதுசாரிகளின் ஆதிக்கம், தீவிரவாதிகளின் எழுச்சி, ஜனநாயகத்தின் மலர்ச்சி என்று நீண்ட காலமாகவே ஆப்கானிஸ்தானில் ஒருவித ஸ்திரமற்ற தன்மை நீடித்து வந்திருக்கிறது.

அமெரிக்கா - ரஷியா இடையிலான பனிப்போர் காரணமாக இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆப்கானிஸ்தானில் ஓயாத போர்ச்சூழல் நிலவியது. ஆப்கனிலிருந்த இடதுசாரி ஆதரவாளர்களுக்கு ரஷியாவும், அவர்களை எதிர்த்த முஜாஹிதீன்களுக்கு அமெரிக்காவும் ஆதரவாக இருந்தன. 

1989-ஆம் ஆண்டில் ஒருவழியாக ரஷியப்படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி, அதன் ஆதரவு பெற்ற இடதுசாரி அரசு வீழ்ந்தபிறகு நிலைமை மோசமாகி, தலிபான்கள் தலையெடுக்கத் தொடங்கினர். வடக்கு முன்னணி என்ற பெயரில் மற்றொரு குழுவினர் தலிபான்களை எதிர்த்தாலும் அதனால் குறிப்பிடத்தக்க விளைவு ஏதுமில்லை. 

2001 செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பிறகு வீறுகொண்டு எழுந்த அமெரிக்கா, தலிபானையும், தலிபானால் ஆதரிக்கப்பட்ட அல்-காய்தா இயக்கத்தையும் அழிப்பதற்காக தன்னுடைய படைகளைப் பெருமளவில் ஆப்கானிஸ்தானில் குவிக்கத் தொடங்கியது. வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் படைகளும் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து கொண்டன.

அந்நேரத்தில் இடைக்கால ஏற்பாடாக ஆப்கனின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஹமீத் கர்சாய் பின்னர் ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அதிபர் பதவியில் தொடர்ந்தார். ஹமீத் கர்சாய் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் ஆப்கானிஸ்தானில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஜனநாயகம் மலர்ந்ததுடன், அவருடைய அரசு உலக நாடுகள் பலவற்றாலும் அங்கீகரிக்கப்பட்டது. பெண்கள் கல்வி கற்கவும், தேர்தலில் வாக்களிக்கவும் அனுமதிக்கப்பட்டது மிகப் பெரிய முன்னேற்றமாகப் பார்க்கப்பட்டது. 

2011-ஆம் ஆண்டு அல்-காய்தாவின் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பின்பு ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து அமெரிக்கா தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது. கூடவே, ஆப்கனில் அமைதி நிலவுவதற்காக தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

2014-ஆம் ஆண்டு ஆப்கன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீப காலம் வரையில் அப்பதவியில் தொடர்ந்த அஷ்ரஃப் கனி சற்று பலவீனமான அதிபராகவே காணப்பட்டார். அம்மண்ணில் நீண்ட காலமாகத் தன்னுடைய துருப்புகளை நிறுத்தி வைத்து தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட அமெரிக்க அரசு, அப்படைகளுக்காகப் பெருமளவில் பணம் செலவழித்ததுடன் தன்னுடைய படைவீரர்கள் பலரையும் பலிகொடுத்தது. அப் படைவீரர்களைத் திரும்ப அழைத்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் வலுப்பெறத் தொடங்கியது.

ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மைக்கு அந்நாட்டு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிவிட்ட அமெரிக்க நிர்வாகம் தற்போது சுமார் ஆறாயிரம் அமெரிக்கப் படைவீரர்களை மட்டுமே ஆப்கானிஸ்தானில் நிறுத்தி வைத்துள்ளது. 

இதற்காகவே காத்திருந்தது போன்று, தலிபான்கள் அந்நாட்டு அரசைக் கைப்பற்றியுள்ளனர். தலிபான்களை எதிர்த்து ஆப்கன் அரசுப் படைகள் தீவிரமாகப் போராடாததால் பெரும் ரத்தக்களரி தவிர்க்கப்பட்டிருப்பது மட்டுமே சற்று ஆறுதலைத் தருகிறது. 

ஆனால், தலிபான்களின் தலைமையில் நடக்கவிருக்கும் ஆட்சி அவர்களுடைய பழைய வழிமுறைகளின்படியே தொடருமா, பெண்களின் கல்வி உரிமையும் ஜனநாயகமும் மதிக்கப்படுமா, உலக நாடுகளின் அங்கீகாரம் இப்புதிய அரசுக்குக் கிடைக்குமா என்பவை போன்ற கேள்விகளுக்கு எதிர்காலம்தான் விடை கூற வேண்டும். 

பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தைக் கைப்பற்றிய தலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. ஆப்கனிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

அம்மண்ணில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் இந்தியாவுக்குத் திருப்பி அழைத்துவரப்படுவதே தற்போதைய அவசர அவசியத் தேவையாகும். அதேசமயம், ஆப்கனில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்றிருப்பதும், தலிபான்களுடன் நட்புணர்வுடன் செயல்படப் போவதாக சீனா அறிவித்திருப்பதும் இந்தியாவிற்குக் கவலையளிக்கக்கூடிய விஷயங்களே. 

லடாக் பகுதியில் தனது துருப்புகளைக் குவித்து வைத்து நமது நாட்டிற்கு பதற்றத்தைக் கொடுக்கும் சீனா, தலிபான்களுடன்  தோழமை கொள்வது நிச்சயம் நமக்குத் தலைவலியைத் தருவதாகவே இருக்கும். எனவே, நமது ராணுவம் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். 
2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு சற்றே ஜனநாயகக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய ஆப்கானிஸ்தான்  தற்போது அனைவராலும் கைவிடப்பட்ட தேசமாகி, கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. 

தற்போதைய நிலையில் நம்மால் ஆப்கன் மக்களின் நலனுக்காக பிரார்த்திக்க மட்டுமே முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com