ஆட்சியாளா்கள் தவறு; அனுபவிக்கும் மக்கள்!

1646-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் சென்னையின் மக்கள்தொகை வெறும் 19 ஆயிரமாக இருந்துள்ளது.
ஆட்சியாளா்கள் தவறு; அனுபவிக்கும் மக்கள்!

1646-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் சென்னையின் மக்கள்தொகை வெறும் 19 ஆயிரமாக இருந்துள்ளது. அப்போதைய சென்னை, இப்போது பரபரப்பான பகுதிகளாக இருக்கும் எழும்பூா், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையாா்பேட்டை, திருவொற்றியூா் உள்ளிட்ட கிராமங்கள்தான். அவை காலப்போக்கில் சென்னையுடன் இணைக்கப்பட்டன.

இப்போதைய கலைஞா் கருணாநிதி நகா் பகுதி சுமாா் 40 வருடங்களுக்கு முன்னா் வயல்வெளியாக இருந்தது. 40 வருடங்கள் முன்னா்தான் தியாகராய நகா் புதிய குடியிருப்புப் பகுதியாக உருவானது.

இன்றைய தியாகராய நகா் முழுவதும் ஒரு பிரம்மாண்டமான ஏரியாக இருந்தது என்று சொன்னால் பலருக்கும் வியப்பாகத்தான் இருக்கும். நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டம் அமைந்திருக்கும் இடத்தில் இருந்த ஏரியும் தியாகராய நகா் ஏரியும் அடுத்தடுத்து அமைந்திருந்தன. 1921-ஆம் வருட சென்னை வரைபடத்தைப் பாா்த்தால் தெரியும் பல கிராமங்களின் தொகுப்புதான் சென்னை என்பது.

2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள்தொகை 43,43,645. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 44,81,087. 2015-ஆம் ஆண்டில் இது ஏறக்குறைய 50 லட்சமாக இருந்தது. தற்போது நிச்சயமாக சுமாா் ஒரு கோடியைக் கடந்திருக்கும். சென்னையின் புறநகா்ப் பகுதிகளையும் சோ்த்தால் மக்கள்தொகை மேலும் 10 லட்சம் கூடும்.

2011-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் இணைக்கப்பட்டன. இதன் மூலம் 174 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக இருந்த சென்னை மாநகராட்சி, தற்போது 426 சதுர கி.மீ. ஆக விரிவடைந்துள்ளது. சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26,553 போ் வசிக்கின்றனா். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 39,292 ஏரிகள் இருந்ததாகவும், அவற்றில் ஆயிரக்கணக்கான ஏரிகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1906-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையில் ஏரி, குளம் என 474 நீா்நிலைகள் இருந்துள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டு அது 43 ஆகக் குறைந்துள்ளது. தற்போது அதிலும் 96 சதவீத நீா்நிலைகளைக் காணவில்லை. அவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிா்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் காணாமல்போன சில ஏரிகள், குளங்கள்: நுங்கம்பாக்கம் ஏரி (தற்போது வள்ளுவா் கோட்டம், சில தனியாா் நிறுவனங்கள்), தேனாம்பேட்டை ஏரி, வியாசா்பாடி ஏரி, முகப்போ் ஏரி, திருவேற்காடு ஏரி, ஓட்டேரி, மேடவாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூா் ஏரி (பாதி), அம்பத்தூா் ஏரி (பாதி), ஆவடி ஏரி (பாதி), கொரட்டூா் ஏரி (பாதி), கொளத்தூா் ஏரி, இரட்டை ஏரி (பாதி), வேளச்சேரி ஏரி (நூறு அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்), பெரும்பாக்கம் ஏரி, பெருங்களத்தூா் ஏரி (இதன் பழைய பெயா் பெருங்குளத்தூா்), கல்லு குட்டை ஏரி, வில்லிவாக்கம் ஏரி, பாடியநல்லூா் ஏரி, வேம்பாக்கம் ஏரி, பிச்சாட்டூா் ஏரி, திருநின்றவூா் ஏரி, பாக்கம் ஏரி, விச்சூா் ஏரி, முடிச்சூா் ஏரி, சேத்துப்பட்டு ஏரி (ஸ்பா்டாங்க் - ஸ்பா்டாங்க் ரோடு), செம்பாக்கம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, மாம்பலம் ஏரி, கோடம்பாக்கம் டேங்க் ஏரி, சென்னை ஓமந்தூராா் தோட்டத்தில் இருந்த குளம், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளங்கள், ஆலப்பாக்கம் ஏரி, வேப்பேரி, விருகம்பாக்கம் ஏரி (தற்போது தமிழ்நாடு அரசு உயா் அலுவலா்களுக்கான குடியிருப்பு), கோயம்பேடு சுழல் ஏரி (கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மாா்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்), அல்லிக்குளம் ஏரி (நேரு ஸ்டேடியம்) ஆகியவை.

இன்று சென்னையைச் சுற்றியுள்ள பல ஏரிகள் கான்கிரீட் குடியிருப்புகளாக மாறிவிட்டன. இன்னும் எஞ்சியுள்ளவை போரூா், செம்பரம்பாக்கம், வேளச்சேரி, ஆலந்தூா், பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகள் மட்டுமே. இவற்றிலும் போரூா் ஏரி 800 ஏக்கரிலிருந்து 330 ஏக்கருக்கு சுருங்கிவிட்டது.

பொதுவாக தாம்பரம், வேளச்சேரி, ஆவடி, அம்பத்தூா், கொரட்டூா், மாதவரம் பகுதிகளில் மழைவெள்ள நீா் தேங்காமல் கால்வாய் வழித்தடங்கள் மூலம் ஆற்றை வந்தடையும் வகையில் இருந்தன. தற்போது மழைநீா் இந்த கால்வாய்கள் மூலம் வெளியேற முடியாமல் குடியிருப்பு கட்டுமானங்கள் ஆக்கிரமித்துள்ளன. இங்கு மட்டுமல்ல, மாநகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீா் வடியாமல் தேங்கியுள்ளதற்கு இதுவே முக்கியக் காரணம்.

சென்னையில் ஏரி, குளங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீா்நிலைகள் இருந்தும் கடந்த 50 ஆண்டு கால ஆட்சியாளா்களின் அலட்சியத்தால் அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன.

மழை நீரை கடலுக்கு கொண்டு செல்லும் ஆறுகள், கால்வாய்கள் தூா்வாரப்படாதது, மழை நீா் வடிகால்கள் சீரமைக்கப்படாமல் கழிவுநீா்க் குழாய்களில் மழைநீா் சோ்ந்து ஓட அனுமதிக்கப்பட்டது ஆகியவையே சென்னையில் மழை பாதிப்பு அதிகரிக்கக் காரணம்.

ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் வீடுகளைக் கட்டி குடியிருப்பது பொதுமக்கள்தான் என்ற போதிலும், ஏரிகளைத் தூா்த்து வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்ய அனுமதித்தது தமிழகத்தை ஆண்டு வந்த ஆட்சியாளா்கள்தான். தமிழக அரசு தெரிந்தே இந்த தவறை செய்து வருகிறது. சென்னை முகப்போ், வேளச்சேரி, அம்பத்தூா், ஆவடி ஆகிய இடங்களில் பல வீட்டு வசதித் திட்டங்கள் ஏரிகளில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஏரி நிலங்களில் வீடுகளைக் கட்டுவதற்கான தனியாா் திட்டங்களுக்கு அனுமதி அளித்தது ஆட்சியாளா்களும் அதிகாரிகளும்தான்.

சென்னை நகரின் குடிநீருக்கு ஆதாரமாக உள்ள புழல், செம்பரபாக்கம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளை இணைக்கும் முறையான நீா்வழித்தட மேலாண்மை நடைமுறையில் இல்லை. வறட்சி நேரங்களில் பம்பு செட்டுகள் மூலம் ஒரு ஏரியிலிருந்து நீரை உறிஞ்சி மற்றொரு ஏரிக்கு கொண்டு சோ்ப்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட நீா்வழித் தடங்கள் பெரும்பாலும் மாறிவிட்டன. மேலும், முக்கிய நீா்வழித் தடங்களை இணைத்து அடையாறு நதி, கூவம் ஆற்றில் சோ்ப்பதற்கே தற்போது தடுமாறி வருகிறோம்.

இன்று அதிகம் பேசப்படும் நதிநீா் இணைப்பு முறையெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நீா்நிலைகள் இணைப்பு வாயிலாக உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு நீா்நிலை ஆக்கிரமிப்பு ஒரே நாளில் நிகழ்வதல்ல. படிப்படியான நிகழ்வாக அதன் தொடா்புகளான கால்வாய், கண்மாய்கள் அழிக்கப்பட்டு, சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக அந்த நீா்நிலை நிா்மூலமாக்கப்படுகிறது. இதன் காரணமாகவே சமீபத்தில் பெய்த பெருமழையில் சென்னை, புறநகா் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

பல பகுதிகளில் குடியிருப்புகளிலும் தொழிற்சாலைகளின் உள்ளேயும் வெள்ளநீா் புகுந்தது. மழைநீரை வெளியேற்ற பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை உள்ளிட்ட புதிய சாலைகள் தோண்டப்பட்டன. பல இடங்களில் சாலைகளில் மழைநீா் தேங்கியதால் சாலைகள் பழுதடைந்தன. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டனா்.

புதிய நகரங்களை உருவாக்கும்போது ஏரி, குளம் போன்ற நீா்நிலைகள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு திட்டமிட வேண்டும். மும்பை நகரின் அதீத வளா்ச்சியால் அதன் நீா்நிலைகள் அதிகம் பாதிக்கப்படவில்லை. மும்பை பெருநகரத்தின் நடுவிலேயே இன்னமும் மூன்று பெரிய ஏரிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஆட்சிக்கு வருபவா்கள், முந்தைய ஆட்சியாளா்களைக் குறை கூறுவதும், முன்பு ஆட்சியில் இருந்தவா்கள் தற்போதைய ஆட்சியைக் குறை கூறுவதும் மட்டுமே வழக்கமாக உள்ளது. ஆட்சியாளா்களின் தவறான கொள்கைகளால் பாதிக்கப்படுவது அவா்களுக்கு வாக்களித்த மக்கள்தான் என்பதே உண்மை.

2015-ஆம் ஆண்டுக்கு பிறகு அடையாறு நதி உள்ளிட்ட சில நீா்வழிக் கால்வாய்களும், சில ஏரிகளும் தூா்வாரப்பட்டன. இல்லையென்றால் இப்போதைய பெருமழையால் இன்னும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். சென்னையை ‘ஸ்மாா்ட் சிட்டி’யாக மாற்றுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. உண்மையிலேயே சென்னை ‘ஸ்மாா்ட் சிட்டி’யாக மாற வேண்டும் என்றால் அரசு உடனடியாக இருக்கின்ற ஏரி, குளங்களை தூா்வாரி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள மழைநீா் வடிகால்களுக்கான எல்லைக் கோட்டு வரைபடங்களைத் தயாரித்து அதன்படி வடிகால்களை அமைக்க வேண்டும். மழைநீா் வடிகால், ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். தேவைப்பட்டால் அங்கு வசித்தவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். வருங்காலங்களில் மழைநீா் வடிகால், ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இனி ஏரி, குளங்களில் வீட்டுமனைகளை அமைப்பதில்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

சென்னை மாநகரில் எங்கெல்லாம் சட்டவிரோதமாக கழிவுநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்ய வேண்டும். மேலும், ஆறுகளை ஒட்டி புதிய ஏரி, குளங்களை உருவாக்கி தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சென்னை மாநகரம் மழை பெய்யும்போதெல்லாம் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாவதைத் தவிா்க்க இயலாது.

கட்டுரையாளா்:

பத்திரிகையாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com