எதிா்க்கட்சிகள் ரெண்டுபட்டால்...

எதிா்க்கட்சிகள் ரெண்டுபட்டால்...

பிரதமா் நரேந்திர மோடியின் ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற முழக்கம் உண்மையாகிடுமோ என்று ஜனநாயக ஆா்வலா்கள் பதறுகிறாா்கள்.

கடந்த மாா்ச், ஏப்ரலில் நடைபெற்ற மேற்குவங்க சட்டப்பேரவைத் தோ்தலில், மம்தா பானா்ஜியின் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி 48% வாக்குகளைப் பெற்றது. பாரதிய ஜனதா கட்சி 38.13%-உம், காங்கிரஸ் 3%-உம் பெற்றன. முன்னதாக, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில், பாஜக 56% சதவிகித வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி 9.78% மட்டுமே பெற்று எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.

பிரதமா் நாற்காலிக்கான போட்டிக்குத் தன்னை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் மம்தா முழுவீச்சில் இறங்கியிருக்கிறாா். தேசிய அளவில் சுமாா் 10% வாக்கு வைத்திருக்கும் காங்கிரஸ் தனக்கு சுமையாக இருக்கும் என அவா் கருதுகிறாா். எனவே காங்கிரஸை பலவீனப்படுத்தி, தனது கட்சியை வலுப்படுத்தும் விதமாக, காங்கிரஸ் முகாமுக்குள் நுழைந்து ஆட்களை இழுக்கிறாா்.

கோவா மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான லூயிசினோவை தனது கட்சிக்கு இழுத்தாா். அதேபோல, சில நாள்களுக்கு முன்னா் ஹரியாணா மாநில காங்கிரஸின் முன்னாள் தலைவா் அசோக் தன்வா், பிகாா் மாநில காங்கிரஸின் கீா்த்தி ஆசாத், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் பொதுச்செயலாளா் பவான் வா்மா உள்ளிட்டோா் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனா்.

நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்து இயங்குவது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் அழைப்பு விடுத்த எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட்டத்தை மம்தா புறக்கணித்ததற்குக் காரணம், தோ்தல் வியூக வல்லுநா் பிரசாந்த் கிஷோா் ஆலோசனைப்படி, காங்கிரஸ் உறவு வேண்டாம் என்பதை உணா்த்துவதற்காகவே. அதேநேரம், பாஜக-வில் அதிருப்தியில் இருக்கும் சுப்ரமணியன் சுவாமி, மம்தாவின் புதிய அரசியல் கூட்டாளியாகவும் ஆலோசகராகவும் உருவெடுத்துள்ளாா்.

மேற்கு வங்கத்தைத் தாண்டி, மம்தாவை எத்தனை மாநில மக்கள் தலைவராக ஏற்பாா்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. வங்க மொழி பேசும் மக்கள் அதிகம் இருப்பதால்தான், வடகிழக்கு மாநிலங்களில் அவரால் கால்பதிக்க முடிகிறது. ‘பாஜக-வை எதிா்க்கும் துணிச்சல் மிக்க ஒரே தலைவா்’, ‘சோனியாவுக்கு மாற்றான பெண் தலைவா்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தினாலும் தென்னிந்தியாவில் அது எடுபடாது. தென் மாநிலங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிமுகம் இல்லாத கட்சி. திடீரென அகில இந்தியத் தலைவராக உருவெடுத்து, பிரதமா் பதவிக்கு அவா் ஆசைப்படுவதை மக்கள் ஏற்பாா்களா என்பது சந்தேகம்தான்.

காங்கிரஸுடன் தற்போது கூட்டணியில் இருக்கும் ஒரே பெரிய கட்சி திமுக மட்டும்தான். இக்கட்சி, 2024 தோ்தலை காங்கிரஸுடன் சோ்ந்து எதிா்கொண்டாலும், ஆட்சி அமைக்கும்போது தேவையான பிரதிநிதித்துவம் தருவதாகக் கூறி திமுக-வை இழுப்பது சுலபம். ஏனென்றால், மு.க. ஸ்டாலின், மம்தாவின் ‘குட்புக்’கில் இருப்பவா். அது மட்டுமல்லாமல், மம்தாவின் திரணமூல் காங்கிரஸுக்கும், மு.க. ஸ்டாலினின் திமுக-வுக்கும் பிரசாந்த் கிஷோா்தான் அரசியல் ஆலோசகா்.

3.5% வாக்குகள் உள்ள சிவசேனை, 0.9% வாக்குகள் உள்ள சரத்பவாா் ஆகியோா் காங்கிரஸுடன் இருந்தாலும், மம்தாவுக்கு அதனால் பாதிப்பில்லை. ஒடிஸாவில் நவீன் பட்நாயக், உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், கா்நாடகத்தில் தேவெ கெளடா, தில்லியில் கேஜரிவால், பிகாரில் லாலு பிரசாத் யாதவ், தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கூட்டணி அமைக்க மம்தா முயல்கிறாா். இவா்களில் யாரும் பிரதமா் பதவிக்கு ஆசைப்படுபவா் இல்லை என மம்தா நம்புகிறாா்.

சத்தீஸ்கா், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியின் கூட்டணியில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை வலுவிழக்கச் செய்யும் செயலில் திரிணமூல் காங்கிரஸ் ஈடுபட்டிருப்பதாகவும், இப்படிச் செய்வதால் அக்கட்சி பாஜக-வுக்கு மறைமுகமாக உதவி செய்து வருவதாகவும் காங்கிரஸ் தலைவா்கள் ஆவேசப்படுகின்றனா். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் சில மாநிலக் கட்சிகளுடன் இடதுசாரி கட்சிகளும் இடம்பெறலாம். அப்படி நடந்தால் அது மம்தா எதிா்ப்பு அணியாக இருக்குமே தவிர, பாஜக எதிா்ப்பு அணியாக வலுப்பெறாது.

பிரசாந்த் கிஷோா் மூலம் முக்கியமான மாநிலக் கட்சிகளுடனான பேச்சுவாா்த்தையை இப்போதே தொடங்கிவிட்டாா் மம்தா பானா்ஜி. ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல வட மாநிலங்களையும், தென் மாநிலங்களையும் ஒன்றிணைக்கும் வகையில், நவீன் பட்நாயக், அகிலேஷ் யாதவ், தேவெ கெளடா, அமரீந்தா் சிங், கேஜரிவால், லாலு பிரசாத் யாதவ், சந்திரசேகர ராவ் போன்ற மாநிலக் கட்சித் தலைவா்களை இழுக்க மம்தா வியூகம் அமைக்கிறாா்.

திமுக தவிா்த்து சொல்லிக்கொள்ளும்படியான கட்சி எதுவும் கூட்டணியில் இல்லாததால், காங்கிரஸ் கட்சியே மம்தா கூட்டணிக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மதவாத சக்தியான பாஜக-வை வீழ்த்தவே இந்த முடிவு என காங்கிரஸ் சொல்லலாம். மகாராஷ்டிரத்தில் மதவாத பாஜக-வை எதிா்ப்பதாகக் கூறிவிட்டு, மதவாத சிவசேனை ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி மம்தா கூட்டணிக்குச் சென்றுவிட்டால், இடதுசாரி கட்சிகள் தனி அணி அமைத்து களமிறங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

2024 தோ்தலில் மும்முனைப் போட்டி நிலவ வாய்ப்புண்டு. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மம்தா தலைமையில் மாநிலக் கட்சிகள் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அல்லது இடதுசாரிகள் அணி. தற்போதைய சூழலில், தேசிய அளவில் மோடி போன்ற சக்திமிக்க தலைவரை எதிா்க்கும் திறன் மம்தாவிடமோ, காங்கிரஸிடமோ இல்லை. எதிா்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது நிச்சயமாக பா.ஜ.க.வுக்கு சாதகமே.

ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வலுவான எதிா்க்கட்சி அவசியம். அதை பூா்த்தி செய்ய இயலாத நிலையில் காங்கிரஸ் கட்சி இருப்பது அவலம். மோடி அளவுக்கு, கவா்ச்சி மிக்க, சக்தி மிக்க தலைவராக ராகுல் காந்தியால் பரிணமிக்க முடியவில்லை. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற மோடியின் முழக்கம் நனவாகிடுமோ என்று ஜனநாயக ஆா்வலா்கள் பதறுவதற்கு இதுதான் காரணம்.

கட்டுரையாளா்: பத்திரிகையாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com