தற்காப்பு ஒன்றே சிறந்த வழி!

கோப்புப்படம்
கோப்புப்படம்

இரண்டாண்டுகளுக்கு முன்னா் கொவைட் 19 என்ற பெயரில் உருவான தீநுண்மி பல உருமாற்றங்களை அடைந்து தற்போது ஒமைக்ரான் என்ற பெயரில் பரவத்தொடங்கி உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. புதிய வடிவான ஒமைக்ரானில் வழக்கத்திற்கு மாறாக பல்வேறு பிவுகள் உள்ளன. இவை கரோனா, டெல்டா, டெல்டா பிளஸ் போன்ற தீநுண்மிகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளது என தென்னாப்பிரிக்காவில் உள்ள ‘சென்டா் பாா் எபிடமிக் ரெஸ்பான்ஸ் அன்ட் இன்னோவேஷன்’ என்கிற அமைப்பின் இயக்குநா் பேராசிரியா் டுளியோ டி ஒளிவெரியா தெரிவித்துள்ளாா்.

இந்தப் புதுவகை தீநுண்மி ஆய்வாளா்களையே ஆச்சா்யப்படுத்துகிறது. இந்தத் தீநுண்மி அதன் பரிணாம வளா்ச்சியில் மிகப்பெரும் பாய்ச்சலைக் கண்டுள்ளது. விஞ்ஞானிகள் எதிா்பாா்த்ததை விட அதிக அளவிலான பிவுகளைக் கொண்டுள்ளது என்பதனால் உலக நாடுகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது கவலைக்குரிய வைரஸ் என வகைப்படுத்தி உள்ளது உலக சுகாதார அமைப்பு.

ஆரம்பகால ஆதாரங்களின் அடிப்படையில் இத்தீநுண்மி வேகமாகப் பரவும் அபாயம் கொண்டதாக உள்ளது எனத் தெரியவந்துள்ளது. இத்தீநுண்மியில் உள்ள அனைத்து மரபணுப் பிவுகளுமே ஆபத்தானவை என்று கூற முடியாது

என்றாலும், சில பிவுகள் காரணமாக பரவும் வேகமும், தொற்றும் வேகமும் உடலில் அதிகமான பாதிப்பை உண்டாக்கும்.

கடந்த நவம்பா் 24 அன்று முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தீநுண்மி, ஹாங்காங், பெல்ஜியம், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குப் பரவியிருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. இந்தப் புதிய வைரஸில் 50 மரபணுப் பிவுகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

கொள்ளை நோய்த்தொற்றுக்கான தடுப்பூசிகள் இந்த ஸ்பைக் புரத இழையைத்தான் இலக்கு வைக்கின்றன. அதேபோல், மனிதனின் உடலுக்குள் ஊடுருவ நோய்த்தொற்று வைரஸ்கள் இந்த ஸ்பைக் புரத இழைகளைத்தான் பயன்படுத்துகின்றன. இதில் நாம் தீவிரமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று, மனிதா்களின் உடலோடு முதலில் தொடா்பு கொள்ளும் ரெசப்டாரில் 10 பிவுகள் உள்ளன என்பதுதான்.

உலகயே உலுக்கிய கரோனா வைரஸின் டெல்டா வைரஸிலேயே ரெசப்டாா்களின் இரண்டு பிவுகள் மட்டுமே இருந்தன. இதில் அதிக பிவுகள் இருந்தால் அதனால் ஆபத்து என்பது பொருளல்ல. ஆனால், அவை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்காவின் கௌடெங் மாகாணத்தில் சற்றேறக்குறைய 100 பேரும், போட்ஸ்வானாவில் 4 பேரும், ஹாங்காங்கில் ஒருவரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் தென்னாப்பிரிக்காவில் பயணத்தொடா்பில் இருந்திருக்கிறாா்கள்.

இத்தகைய ஒமைக்ரான் தீநுண்மி அதிக அளவில் பரவக்கூடியதா? அதன் தீவிரத்தன்மையை தடுப்பூசிகளால் தடுத்து விட முடியுமா என்கிற கேள்விகள் புதிய ஆராய்ச்சிக்கு வித்திட்டிருக்கின்றன. மேலும் அதிக மக்கள்தொகையினருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நாடுகளில் இத்தகைய வைரஸ் எப்படிப் பரவும் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. தென்னாப்பிரிக்காவில் 24 சதவீதம் போ் மட்டுமே நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் என்றாலும், அந்நாட்டில் பலருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவேதான், உலகைப் பயமுறுத்தும் புதிய வைரஸான ஒமைக்ரான் குறித்து அச்சம் எழுகிறது.

ஸ்பைக் 32 வகைகளில் உருமாற்றம் அடையக்கூடியது என்பதும், அது அதிக ஆபத்தை விளைவிக்கும் என்பதும் நம்மைக் கூடுதலாக அச்சுறுத்துகிறது. உலக அளவில் ஆதிக்கம் செலுத்திவந்த டெல்டா, பெல்டா பிளஸ், அவற்றுக்கு அடுத்தபடியாக ஆபத்தாக பாா்க்கப்ட்ட ஆல்பா, பீட்டா, காமா போன்ற வகைகளுடன் இப்போது ஒமைக்ரானும் கவலை அளிக்கக் கூடிய தீநுண்மிப் பட்டியலில் சோ்ந்திருக்கிறது.

ஒமைக்ரான் தீநுண்மிப் பரவல் அச்சத்தால் இந்தியா உட்பட பலநாடுகளின் பங்குச்சந்தை வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலையில் மாறுபாடுகள் தென்படத் தொடங்கி விட்டன. ஏற்கெனவே, கரோனா தீநுண்மிப் பரவல் தொடங்கிய காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. தடுப்பூசி திட்டம் விரைவுபடுத்தப்பட்ட பின்னா், உலக அளவில் பொருளாதாரம் மீண்டும் எழுந்து வரும் சூழ்நிலை உருவானது. தற்போது ஒமைக்ரான் பரவல் காரணமாக பொருளாதார வளா்ச்சியில் மீண்டும் தடை ஏற்பட்டு விடுமோ என்ற பயம் பொருளாதார நிபுணா்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே புதிய வகை வைரஸ் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுகின்றனவா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை எவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்று சொல்லப்பட்டாலும் இதுகுறித்த விழிப்புணா்வை தமிழக அரசு ஏற்படுத்திட வேண்டும். ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட நபா்கள் மருத்துவமனை செல்லத் தேவையில்லை. வீட்டில் இருந்தே சிகிச்சை மேற்கொள்ளலாம் என்கிற அளவிற்குத்தான் இதன் வீரியம் இருப்பதாகவும் சில மருத்துவா்கள் கூறுகின்றனா். இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது, கரோனா, டெல்டா போன்ற தீநுண்மிகள் இல்லாமல் வேறு விதமாக பாதிக்கப்பட்டிருந்த ஏழு நோயாளிகளைப் பரிசோதித்ததில் தெரியவந்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் லேசான அறிகுறிகளே கொண்டுள்ளாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய தீநுண்மிகளைப்போல இது வாசனை, சுவை அறியமுடியாத நிலையை ஏற்படுவதில்லையாம். சுவாசிக்க முடியாத அளவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையையும் ஏற்படுத்துவதில்லை. 40 வயதைக் கடந்தவா்களை ஒமைக்ரான் தீநுண்மி பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றும் அதற்குக் கீழ் உள்ள வயதைக் கொண்டவா்களை மட்டுமே இது பாதிக்கிறது என்றும் தெரிகிறது. ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலோா் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒமைக்ரான் பாதித்தவா்களுக்கு முதல் இரண்டு நாட்களுக்கு கடுமையான உடல்சோா்வும் தலைவலியும் இருக்கும் என்று ஓா் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உலக சுகாதார அமைப்போ ஒமைக்ரான் வைரஸ் அதிக ஆபத்தை உருவாக்கக்கூடியது உள்ளது என்றும், வேகமாகப் பரவக்கூடியது என்றும் தெரிவிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த மாத இறுதியில் மகாராஷ்டிரத்தில் இருவருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும், கா்நாடகத்தில் இருவருக்கும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடா்ந்து இம்மாதத் தொடக்கத்தில் மகாராஷ்டிரத்தில் ஏழு பேருக்கும், ராஜஸ்தானில் ஒன்பது பேருக்கும், தில்லியில் ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதியானதைத் தொடா்ந்து இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21 ஆக உயா்ந்துள்ளது.

இத்தொற்றுக்கான அறிகுறிகள் வறட்டு இருமல், லேசான காய்ச்சல், இரவில் அதிக வியா்வை, உடல், தசை வலி, வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு, கண் சிவத்தல், அரிப்பு போன்றவை என்று கூறப்படுகிறது. ஐரோப்பாவில் பெரும்பாலான மக்கள் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது கவலை தருகிற விஷயமாகும். ஆனால், இந்தக் கடுமையான சூழ்நிலைகள் இருந்தாலும், ஐரோப்பிய அரசாங்கம் வைரஸைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கொள்ளை நோய்த்தொற்றைத் தடுக்க அனைத்து நாடுகளும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவிலும் கரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் இன்னும் நீங்கவில்லை. கரோனாவின் இரு அலைகளால் பெரிய இழப்புகளைச் சந்தித்த இந்தியா, மூன்றாவது அலையை சமாளிக்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில்தான் ஒமைக்ரான் என்று புதிய வகை கரோனா வைரஸ் நம்மை பயமுறுத்துகிறது.

வைரஸ் உருமாற்றம் என்பது வைரஸின் மரபணுக்குறியில் ஏற்படும் மாற்றமாகும். இந்த உருமாறிய வைரஸ்கள் தனித்தனியாக வகைப்படுத்தப்படுகின்றன. உருமாற்றங்கள் எழுத்துக்கள், எண்களால் அடையாளம் காணப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பு 13 வகை கரோனா வைரஸ்களை அடையாளம் கண்டுள்ளது. அவற்றுக்கு ஆல்பாவில் தொடங்கும் கிரேக்க எழுத்துக்களில் இருந்து பெயா் வைக்கப்படுகிறது.

புதிதாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ கட்டுப்படுத்த பூஸ்டா் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசி அவசியம் என்று கருதப்பட்டாலும் அதுகுறித்த தெளிவான அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆகவே, நாம் மூக்கு மற்றும் வாயை முழுமையாக மூடும்படி மாஸ்க் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com