ஆக்கிரமிப்பால் விளையும் அவலம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலரும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதன் பேரில் பொதுப்பணித் துறை,  நில அளவைத் துறை அதிகாரிகள்  நீர்நிலைகளை அளவீடு செய்யும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். நீர்நிலை ஆக்கிரமிப்புக் கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் தடை விதித்துள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்குத் துணைபோன அதிகாரிகளை நீதிமன்றம் கடுமையாகச் சாடியிருக்கிறது. 

இவையெல்லாம் நம்பிக்கையூட்டுகின்ற நிகழ்வுகள். ஆனால், அதே வேளையில் ஆக்கிரமிப்புகள் நீர்நிலைகளில் மட்டுமல்லாது வனங்களில், விவசாய பூமிகளில், கோயில் நிலங்களில், மலைகளிலும் நடக்கின்றன என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மழைநீர் வடியாமல் வெள்ளம் ஏற்பட இவையும் காரணங்களாகின்றன என்பதை உணரவேண்டும்.


சென்னை, கடலூர், காவிரி டெல்டா மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுவது ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிகிறது. ஆனால், கோவை, நீலகிரி, ஈரோடு  மாவட்டங்கள் இந்த வருடம் வடகிழக்குப் பருவமழையில் பட்ட பாடு அங்கு வசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். இங்கு நடந்திருக்கும், நடந்துகொண்டிருக்கும் ஆக்கிரமிப்புகள் எண்ணிலடங்கா! 


மழை பொழிவதற்கு முக்கிய காரணம் காடுகள். அந்த வனங்களிலே நெடுங்காலமாகக் குடியிருக்கும் ஆதிவாசிகளின் உறைவிடம், உணவு, வாழ்க்கை முறை எல்லாமே, வனங்களின் சூழலைச் சற்றும் சிதைக்காத வகையில் இருந்தன. நவீன நாகரிகம் உள்ளே நுழைந்ததால் காடுகளுக்கு வந்தது கேடு. கான்கிரீட் வீடுகள், இருசக்கர வாகனங்கள், டிஷ் ஆன்டெனா, ஜீப்புகள், டெம்போக்கள், வாகனங்களை நிறுத்த சிமென்ட் தளமிட்ட இடங்கள் என்று பெருகிக்கொண்டே போனதால் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. 


காடுகளைப் பொறுத்தவரை ஒரு மரம் வெட்டப்பட்டால் கூட அது விபரீதத்திற்கு வழிவகுத்துவிடும். வனங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் விவசாயம் செய்ய முடியும்; குறிப்பிட்ட சில பயிர்களைத்தான் பயிரிட முடியும்.  அளவுக்கு மீறிய விவசாயமும், பொருந்தாத பயிர்களும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மோதலை உருவாக்கிவிடும். இதனால்தான் வனத்துறை இவ்விடங்களில் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.  


அரசியல்வாதிகளுக்கு இவையெல்லாம் தெரிவதில்லை. வாக்குவங்கியை மட்டுமே கருத்தில் கொண்டு, காப்புக் காடுகளுக்குள்ளேயே இருந்த ஆதிவாசிகளுக்கு பட்டா அளித்து உத்தரவிடுகின்றனர். அவர்களோ கொடுக்கப்பட்ட இடத்தைவிடக் கூடுதலாக ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டிக் கொள்கின்றனர். வால்பாறையில் சமீபத்தில் இந்த பிரச்னையினால் வனத்துறையினருக்கும் பழங்குடிமக்களுக்கும் மோதல் உருவானது. அரசு ஆதரவும், பொதுமக்களின் ஆதரவும் பழங்குடியினருக்கே உள்ளது. 


வனத் துறை குற்றமிழைத்ததாகக் கூறப்படுகிறது. அரசே ஆக்கிரமிப்பாளர்களை ஆதரித்து, சட்டத்தை நிலைநாட்டப் பணியாற்றும் வனத்துறையைக் கண்டித்தால், பின் அந்த ஊழியர்கள் எப்படி வேலை செய்வார்கள்? ஆக்கிரமிப்பாளர்கள் எப்படி அவர்களுக்குக் கட்டுப்படுவார்கள்? இது மிக மோசமான முன்னுதாரணம். மேலும் மேலும் ஆக்கிரமிப்புகளுக்கே இது வழிகோலும். 


அரசே வனங்களை ஆக்கிரமிக்கும் விநோதமும் சில இடங்களில் நடக்கிறது. வனங்களுக்குள் தார்ச்சாலைகளும் ரயில் பாதைகளும் அமைப்பதால் எத்தனையோ விலங்குகள் உயிரிழந்துள்ளன. சமீபத்தில் கோவைக்கு அருகே ரயிலில் அடிபட்டு  மூன்று யானைகள் இறந்ததும், அஸ்ஸாமில் இரண்டு யானைகள் இறந்ததும் வன ஆக்கிரமிப்பினால் நிகழ்ந்த அவலங்கள் அல்லவா? சூழல் சுற்றுலா என்ற பெயரில் அரசே காடுகளைப் பலவிதங்களில் ஆக்கிரமித்துள்ளது.

 
வனத்துறை அதிகாரிகளுக்கென ஒவ்வொரு வனச்சரகத்திலும் ஒன்றோ இரண்டோ ஓய்வு விடுதிகள் தேவைதான்; வனத்துறை ஊழியர்களுக்குக் குடியிருப்புகளும் அவசியம்தான். அவை தவிர வனப்பகுதிக்குள் இருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்கும் விடுதிகள், சாலை வசதிகள், கேளிக்கை வசதிகள், தகவல் மையங்கள் போன்றவை ஆக்கிரமிப்புக் கட்டுமானங்களே. "சூழல் சுற்றுலா' என்பது மாநில அரசின் கொள்கை முடிவே தவிர, அது அரசாணையாக வெளியிடப்படவில்லை. எனவே, சுற்றுலாவுக்கென அரசு வனங்களை ஆக்கிரமிப்பது தவறு.


பெரும் கட்டுமான நிறுவனங்கள், விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றில் குடியிருப்பு வளாகங்களையும், ஓய்வு இல்லங்களையும் கட்டும் போக்கு இப்போது அதிகரித்துள்ளது. இவை பெரும்பாலும் அனுமதி இல்லாமல்தான் கட்டப்படுகின்றன. கன்னியாகுமரி பகுதியில் வயலுக்கு நடுவில் மிகப் பெரிய ஆடம்பர மாளிகை ஒன்று கட்டப்பட்டிருந்த புகைப்படம் வலைத்தளங்களில் பரவ, அந்த மாவட்ட ஆட்சியரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


அந்த மாளிகை ஒரு நாளிலா கட்டப்பட்டிருக்கும்? அடித்தளம் போடப்பட்டபோதே அதிகாரிகள் அதைத் தடுத்திருக்கலாமே? பணம் பாதாளம் வரை பாய்ந்ததால், வீடு வானம் வரை எழும்பியுள்ளது. நகரங்களை விட்டுத் தள்ளி விலை குறைவாக விற்கப்படும் மனைக்கட்டுகள் எல்லாமே ஒரு காலத்தில் விளைநிலங்களாக இருந்தவைதான். உரிய அனுமதியின்றித்தான் இவை விற்கப்படுகின்றன. தெரிந்தோ தெரியாமலோ மக்கள் அவற்றை வாங்குகிறார்கள்; வீடு கட்டுகிறார்கள். இவை எல்லாமே அரசு அதிகாரிகளுக்குத் தெரிந்துதான் நடக்கிறது. 


சென்னை நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் மட்டுமே பொதுவெளியில் விவாதிக்கப்படுகின்றன. கோவையில் பல குளங்களும் ஏரிகளும் வருடக்கணக்காக ஆக்கிரமிக்கப்பட்டுக் கரையோரங்களில் ஏகப்பட்ட வீடுகள் வந்துவிட்டன. அங்கு குடியிருக்கும் மக்களுக்கு, குடும்ப அட்டை, மின்வசதி, குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டன. ஆக்கிரமிப்பு இடத்தில் அரசே இத்தனை வசதிகள் செய்து தந்ததால்,  மக்கள் அங்கு வசதியாக வாழ்ந்து வந்தார்கள்.  


திடீரென்று அரசு விழித்துக்கொண்டு அவர்களைக் காலி செய்யச் சொல்லி உத்தரவிட்டது. மாற்று ஏற்பாடாக வேறு இடத்தில் குடியிருப்புகளும் கட்டிக் கொடுத்தது. மக்கள் போவார்களா? மறுத்தார்கள். மாநகராட்சி நீதிமன்றத்துக்குச் சென்றது. மக்களும் சென்றார்கள். பல வருடங்களாக இவ்வழக்கு இழுபறி நிலையில் இருந்து வந்தது.பொலிவுறு நகர் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பல நீர்நிலைகளை மேம்படுத்தும் பணியைச் செய்து வரும் கோவை மாநகராட்சி நீதிமன்றத்தின் உத்தரவோடு அந்த ஆக்கிரமிப்புகளில் பெரும்பகுதியினை அகற்றியது. 


இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், ஆக்கிரமிப்பு இடிபாடுகளை அப்படியே அந்த நீர்நிலைகளிலேயே தள்ளிவிட்டுவிட்டது. ஆக்கிரமிப்பு என்று கூறிக் குடியிருப்புகளை அகற்றிய அதே மாநகராட்சி, இப்போது நகரவாசிகளின் உல்லாசத்துக்காக அதே இடத்தில் கேளிக்கை வசதிகளுக்காக பல கட்டுமானங்களைக் கட்டியுள்ளது; உணவுக்கூடங்களை நடத்தத் தனியாரிடம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. பொதுமக்கள் குடியிருந்தால் ஆக்கிரமிப்பு; மாநகராட்சி செய்தால் பொலிவுறு நகரம். விந்தைதான். 


கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலையின் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இங்கு எந்தவொரு கட்டுமானமும், வேளாண்மைத் துறை, சுரங்கம் - கனிமவளத் துறை, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றின் அனுமதி பெற்றே மேற்கொள்ளப்பட வேண்டும். விதிகளை மீறி சில கட்டுமான நிறுவனங்கள் பல ஏக்கரில் குடியிருப்பு வளாகங்களையும், முதியோருக்கான ஓய்வு இல்லங்களையும் கட்டி வருகின்றன. இதனால் மலையிலிருந்து இறங்கி வரும் மழைநீர் ஓடும் பாதைகளான கால்வாய்கள் அடைபட்டு நொய்யலாற்றுக்குச் செல்ல வேண்டிய நீர் விளைநிலங்களில் புகுந்து சேதம் விளைவிக்கிறது. 


கேரளத்திலிருந்தும் கர்நாடகத்திலிருந்தும் முதுமலைக்கு இடம்பெயரும் யானைகளின் வழித்தடங்கள் அடைபட்டு விட்டதால் அவை ஊருக்குள் நுழைகின்றன. சின்னத் தடாகம், கணுவாய் போன்ற இடங்களில் விளைநிலங்களை ஆக்கிரமித்து அனுமதியின்றிச் செயல்பட்டுவந்த செங்கல் சூளைகள் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மூடப்பட்டன. என்றாலும் அந்த ஆக்கிரமிப்பாளர்கள் சிறிது சிறிதாக  தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி ஆகிய பகுதிகளில் தங்கள் தொழிலைத் தொடங்கி விட்டார்கள். இவை குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் புகார் செய்தும்  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


கொச்சியில், கடற்கரைக்கருகில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்பை இடிக்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அது போன்றே நொய்டாவில் கட்டப்பட்ட நாற்பது மாடி அடுக்குமாடிக் குடியிருப்பை இடிக்கச் சொல்லி நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதைப்போல் இங்கும், விதிகளுக்குப் புறம்பாக நீர்நிலைகள், வனங்கள், வேளாண் நிலங்கள், மலைப்பகுதிகள் ஆகியவற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்துத் தள்ள நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். அவற்றுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படவேண்டும். அதிகாரிகளை கட்டாயப்படுத்திய அரசியல்வாதிகளுக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் அளிக்க வேண்டும். அப்போதுதான் ஆக்கிரமிப்புகளும் அவற்றால் விளையும் அவலங்களும் குறையும்.

கட்டுரையாளர்:

சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com