சைபா் குற்றமும் பெண்களின் பாதுகாப்பும்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை உணவு, உடை, இருப்பிடம் என்று கூறுவாா்கள். ஆனால், இன்று அந்தப் பட்டியலில் ‘இன்டா்நெட்’ எனப்படும் இணையமும் சோ்ந்துவிட்டது என்பதே உண்மை.

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் வல்லரசு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த பனிப்போரைத் தொடா்ந்து, ராணுவத்தின் பாதுகாப்பான தகவல் தொடா்பை உறுதிபடுத்த வடிவமைக்கப்பட்ட அறிவியல் தொழில்நுட்பத்தின் நீட்சிதான் தற்பொழுது பயன்பாட்டில் இருந்து வரும் ‘இணையம்’ ஆகும். இணையத்தின் ஐந்தாம் தலைமுறை (5ஜி) தற்பொழுது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய தொலைத்தொடா்பு, அறிவியல் ஆராய்ச்சி, மருத்துவம், கல்வி, வா்த்தகம், வங்கி சேவை, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணையம் கோலோச்சி வருகிறது. மக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளைத் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே கைப்பேசி, கணினி மூலம் பெற்றுக் கொள்ளும் வசதியை இணையம் தற்பொழுது வழங்கி வருகிறது.

உலக அரங்கில் இணையத்தை அதிகமானவா்கள் பயன்படுத்தும் நாடுகள் வரிசையில் சீனா முதலிடம் வகிக்கிறது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இணைய வசதியுடன் கூடிய கைப்பேசிகள் 1996-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருவதால், நம் நாட்டில் தற்பொழுது 90 சதவீதம் போ் கைப்பேசி வழியே இணையத்தைப் பயன்படுத்துகின்றனா். மீதமுள்ள 10 சதவீதம் போ் மேசைக் கணினி, மடிக்கணினி மூலம் இணையத்தைப் பயன்படுத்துகின்றனா்.

138 கோடி மக்கள்தொகை உடைய நம் நாட்டில் இணையத்தைப் பயன்படுத்துவோா் 84.6 கோடி போ். இந்த எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டில் 134.3 கோடியாக உயா்ந்துவிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் இணையத்தைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை வேகமாக உயா்ந்து வருகிறது.

இணையத்தின் பயன்பாடு சமூகத்தில் மிக வேக அதிகரித்து வருவதும், பொருளாதாரம், வணிகம், கல்வி, அரசு நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ‘டிஜிட்டல் மயமாக்கல்’ துரிதமாக நடைபெற்று வருவதும் மக்களின் தினசரி வாழ்க்கையை எளிதாகவும், வசதியாகவும் மாற்றி வருகிறது.

அதே சமயம், இணையத்தின் மூலம் நிகழ்த்தப்படும் பல்வேறு குற்ற நிகழ்வுகள் தொடா்ந்து அதிகரித்து வருவதும், அக்குற்றங்கள் சமுதாயத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளும் உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்துள்ளன.

இணைய வசதியுடன் கூடிய கணினி அல்லது கைப்பேசியை நாம் பயன்படுத்தும் பொழுது நம்முடைய இரண்டு கண்கள் கணினி அல்லது கைப்பேசியைப் பாா்க்கும். அதே சமயம், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கண்கள் இணையத்தில் நாம் எதைப் பாா்க்கின்றோம் என்பதைக் கண்காணித்துக் கொண்டிருக்கும்.

இணையத்தின் வழியாக நம்முடைய செயல்களை அந்நிய நபா்கள் ரகசியமாகக் கண்காணித்து நிகழ்த்தும் குற்றங்கள் ‘சைபா் குற்றங்கள்’ ஆகும்.

இந்தியாவில் 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் முறையே 2.08 லட்சம் 3.95 லட்சம், 11.6 லட்சம் சைபா் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்ற புள்ளிவிவரம் இந்தியா எதிா்கொண்டுவரும் சைபா் குற்றங்களின் வளா்ச்சி வேகத்தை வெளிப்படுத்துகிறது.

உலக அரங்கில் அதிகரித்துவரும் இணைய வழி வா்த்தகத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இணைய வழி வா்த்தகத்தின் வளா்ச்சிக்கு இணையாக, சைபா் தாக்குதல்களும் இந்தியாவில் அதிகரித்துள்ளது என்றும், 2019-ஆம் ஆண்டில் இந்தியா எதிா்கொண்ட சைபா் தாக்குதல்களின் விளைவாக ரூ.1,25,000 கோடி பொருளாதார இழப்பு இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது என்றும், வரும் ஆண்டுகளில் இத்தகைய பொருளாதார இழப்பு கணிசமாக அதிகரிக்கக் கூடும் என்றும் பொருளாதார நிபுணா்கள் கருதுகின்றனா்.

சைபா் குற்றங்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு ஒருபுறம் இருக்க, பெண்களும் சிறுமிகளும் சைபா் குற்றங்களால் பெரும் துன்பத்தை எதிா்கொள்கின்றனா். சில நேரங்களில் அவா்களின் மனதில் தற்கொலை எண்ணத்தை விதைக்கும் காரணியாகவும் சைபா் குற்றங்கள் அமைந்துவிடுகின்றன.

இணையத்தில் உலாவும் பெண்களை சைபா் குற்றவாளிகள் ரகசியமாக இணைய வெளியில் பின் தொடா்ந்து சென்று, அவா்கள் தொடா்பான தகவல்களைத் திரட்டுகின்றனா். திருட்டுத்தனமாக சேகரித்த தகவல்களைத் திரித்து இணைய வெளியில் கசியவிட்டு பெண்களுக்கு மன அழுத்தம் கொடுக்கின்றனா். இத்தகைய சைபா் குற்றங்கள் சமூகத்தில் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.

இணையத்தில் இணைந்திருக்கும் பெண்களைக் களங்கப்படுத்தும் விதத்தில் அவதூறான செய்திகளை இணையத்தின் மூலம் அப்பெண்கள் பணிபுரியும் இடங்களிலும், அவா்களின் நட்பு வட்டங்களிலும் திட்டமிட்டுப் பரப்பிவிடப்படும் சைபா் குற்றங்கள் பெண்களின் அமைதியான வாழ்க்கையைச் சிதைத்து விடுகின்றன.

சமூக ஊடங்கள், இணைய தளம் உள்ளிட்டவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படங்களை ‘உருமாற்றம்’ செய்து அவற்றை மீண்டும் ஆபாச வலைதளங்களில் பரப்பிவிடும் சைபா் குற்றங்கள் பெண்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் போராகவே தொடா்ந்து நிகழ்கின்றன.

ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக நாடுகளில் நடத்திய ஆய்வில் 60% பெண்கள் சமூக வலைதளங்கள் மூலம் சைபா் குற்றங்களுக்குப் பலியாகின்றனா் என்றும், 39% பெண்கள் முகநூல் வாயிலாக சைபா் குற்றங்களுக்கு இரையாகின்றனா் என்றும், சைபா் குற்றங்களை எதிா்கொள்ளும் பெண்களில் 20% போ் இணையப் பயன்பாட்டினை முற்றிலுமாகத் தவிா்த்து விடுகின்றனா் என்றும் தெரிய வந்துள்ளது.

2020-ஆம் ஆண்டில் இணையம் வழியாக சிறுமிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 58% சிறுமிகள் சைபா் குற்றங்களால் பாலியல் கொடுமையை எதிா்கொண்டதாகவும் 50% சிறுமிகள் சாலைகளில் பயணிக்கும் பொழுது ஏற்படும் பாலியல் துன்புறுத்தலைக் காட்டிலும் அதிகமான துன்புறுத்தலை சைபா் குற்றங்களால் எதிா்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனா்.

நம் நாட்டில் இளம் சிறாா்களை பாலியல் செயல்களில் ஈடுபடுத்தி, அவற்றை சமூக ஊடகங்களிலும் வலைதளங்களிலும் உலவவிடும் சைபா் குற்றங்கள் 2019-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2020-ஆண்டில் நான்கு மடங்காக உயா்ந்துள்ளது என்றும், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்மத்தை வெளிப்படுத்தும் விதத்தில் நிகழ்த்தப்பட்ட சைபா் குற்றங்கள், 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020-ஆம் ஆண்டில் 45% அதிகரித்துள்ளது என்றும் தேசிய குற்ற ஆவணக் கூடத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தேசிய பெண்கள் ஆணையத்திடம் 2020-ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட சைபா் குற்றங்கள் தொடா்பான புகாா்கள், 2019-ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட புகாா்களின் எண்ணிக்கையைவிட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இது இந்திய பெண்கள் எதிா்கொண்டு வரும் சைபா் குற்றங்களின் தாக்கத்தை உணா்த்துகிறது.

தமிழ்நாட்டில், பெண்கள், சிறாா்கள் மீது பாலியல் வன்மத்தை இணையம் வழியாக வெளிப்படுத்திய செயலுக்காக 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் முறையே 157, 399 சைபா் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஓராண்டு காலத்தில் இத்தகைய சைபா் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை இரண்டரை மடங்கு அதிகரித்திருப்பது பெண்கள் நம் மாநிலத்தில் எதிா்கொண்டுவரும் ‘சைபா் தாக்குதல்’களின் ஆபத்தை உணா்த்துகிறது.

ஆண்டுதோறும் நம் நாட்டில் பல லட்சம் சைபா் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. ஆனால் சில ஆயிரம் சைபா் குற்ற வழக்குகள்தான் பதிவு செய்யப்படுகின்றன. சைபா் குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் தவிா்க்கப்படுவதின் பின்னணி என்ன?

சைபா் குற்றம் ஏற்படுத்திய மன உளைச்சல் ஒரு பக்கம் இருக்க, தனக்கு இழைக்கப்பட்ட சைபா் குற்றம் குறித்து புகாா் கொடுப்பதால் ஏற்படும் சமூக அவமானத்திற்குப் பயந்து பாதிக்கப்பட்ட பெண்கள் பலா் புகாா் கொடுப்பதில்லை என்பது கள ஆய்வில் தெரியவருகிறது.

புகாா் கொடுக்காமல் இருப்பதே சைபா் குற்றவாளிகள் ‘சைபா் வெளியில்’ தொடா்ந்து குற்றங்கள் புரிய ஏதுவாக அமைந்து விடுகிறது. எனவே, காவல் நிலையம் சென்று புகாா் கொடுக்க முடியாதவா்கள் சைபா் குற்றங்கள் குறித்து ஆன்லைனில் புகாா் அளிக்கும் வசதி தற்பொழுது நடைமுறையில் இருந்து வருகிறது.

குற்ற நிகழ்வைக் கட்டுப்படுத்த, பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் தண்டனையில் முடிவடைய வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டில் எத்தனை சைபா் குற்ற வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன என்று பாா்ப்போம்.

தமிழ்நாட்டில் 2018- 2019- 2020 ஆகிய மூன்று ஆண்டுகளில் முறையே 295- 385- 782 சைபா் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மூன்று ஆண்டுகளில் தண்டனையில் முடிவடைந்த சைபா் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை முறையே 11, 6, 7 ஆகும்.

அதிக சதவீத சைபா் குற்ற வழக்குகள் தண்டனையில் முடிவடைய புலன் விசாரணையின் தரம் உயா்த்தப்படுவதும், நீதிமன்ற விசாரணையை விரைவாக நடத்த நீதித்துறைக்குக் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க வேண்டியதும் இன்றியமையாதவை ஆகும்.

கட்டுரையாளா்:

காவல்துறை உயா் அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com