ஒலிம்பிக்கும் புறக்கணிப்பும்

கடந்த 2015-இல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் ஒன்றுகூடி, 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டியை எங்கு  நடத்துவது என்று விவாதித்தபோது, சீன தலைநகர் பெய்ஜிங் என்ற முடிவு சிறிய ஆதரவுடனே வெற்றிபெற்றது.
ஒலிம்பிக்கும் புறக்கணிப்பும்

கடந்த 2015-இல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் ஒன்றுகூடி, 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டியை எங்கு  நடத்துவது என்று விவாதித்தபோது, சீன தலைநகர் பெய்ஜிங் என்ற முடிவு சிறிய ஆதரவுடனே வெற்றிபெற்றது. சில லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்பதால், பல ஐரோப்பிய நாடுகளும் போட்டியில் இருந்து  பின்வாங்கிய நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு இரண்டு இடங்கள் வாய்ப்பு இருந்தது. ஒன்று சீனாவின் பெய்ஜிங், மற்றொன்று கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி  நகரம். 

இதில், சீனா வெற்றிபெற்றபோது, இது ஒரு பாதுகாப்பான தேர்வு என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் மகிழ்ச்சியடைந்தார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பெய்ஜிங் சிறந்த  தேர்வாக அவருக்குத் தோன்றியிருக்கலாம். ஆனால், இன்று மனித உரிமை மீறல்களுக்காக பலத்த எதிர்ப்பை சீனா சந்தித்து வருவதால், ஒலிம்பிக் கமிட்டி சார்ந்தவர்கள் தடுமாறி வருகின்றனர். 
தற்போதைய நிலையில், பன்னாட்டுப் புறக்கணிப்பு அச்சுறுத்தல்கள் குறைந்துவிட்டாலும், பெய்ஜிங்கில்  நடைபெறும் போட்டிக்கு தங்கள் ராஜீய பிரதிநிதிகளை அனுப்புவதில்லை என்று அறிவித்துள்ள அமெரிக்காவின் நிலைப்பாடு, சீனாவுக்கு தனிப்பட்ட முறையில் எரிச்சலையும், சர்வதேச அளவில் பெரிய சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

டோக்கியோவில்  நடைபெற்ற கோடைக் கால ஒலிம்பிக் போட்டி, கரோனா தொற்று காரணமாக பெரிய நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், தற்போது பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டி அரசியல் புறக்கணிப்பு, ஒமைக்ரான் தொற்று பரவல் என்ற இரு நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.

உய்கர், கசாக்ஸ், பிற இன சிறுபான்மையினரை நடத்தும் விதத்தில், சீனாவுக்கு எதிராக சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

கற்பித்தல் முகாம்கள், கலாசார அழிப்பு, இனப்படுகொலை, ஹாங்காங்கில் ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் மீதான ஒடுக்குமுறைகள், திபெத், மங்கோலியா, தைவானில் நடைபெறும் ஆக்கிரமிப்பு செயல்பாடுகள் ஆகியவை சீனாவை பிறநாடுகளில் இருந்து தனிமைப்படுத்தியுள்ளன.

இந்த மாதம் திபெத்திய மாணவர்கள் ஸ்விட்சர்லாந்தின் லொசானில் உள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைமையகத்திற்கு வெளியே, ஒலிம்பிக் வளையங்களில் தங்களை சங்கிலியால் பிணைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி, "பெய்ஜிங்கை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும்  நகரமாக அனுமதிப்பது, ஒலிம்பிக் சாசனத்தை கேலிக்கூத்தாக்குகிறது. விளையாட்டின் உலகளாவிய நெறிமுறை கொள்கைகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

விளையாட்டுகளில் அரசியல் ஊடுருவியதற்கு வரலாற்று முன்னுதாரணங்கள் உள்ளன. சோவியத் யூனியன், ஹங்கேரி புரட்சியை நசுக்கியதற்கு பதிலளிக்கும் விதமாக, 1956 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் இருந்து மூன்று ஐரோப்பிய நாடுகள் விலகின. 1976-இல் தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கை தொடர்பான போராட்டத்தால், 20-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க, அரபு நாடுகள் போட்டிகளில் பங்கேற்க மறுத்தன. 

சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்ததை எதிர்த்து 1980 மாஸ்கோ விளையாட்டுப் போட்டியை 65 நாடுகள் புறக்கணித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 1984-இல் லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை சோவியத் யூனியன் தவிர்த்தது.

ஆனால், தற்போதைய நிலையில், அமெரிக்கா கடுமைக் குறைவான புறக்கணிப்பை அறிவித்துள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக கடுமையாக பயிற்சி செய்து, போட்டியை எதிர்பார்த்திருக்கும் வீரர்களுக்கு தண்டனை விதிப்பது சரியான நடவடிக்கையாகக் கருதவில்லை என அது கூறியுள்ளது.

பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அமெரிக்காவை வழிமொழிந்து குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ராஜீய ரீதியில் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமை மீறல்களைத் தவிர்க்க பெரு நிறுவன ஆதரவாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில், சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவாய், முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தினார். இது ஊடகங்களில் பரவிய நிலையில், அந்த வீராங்கனை காணாமல் போனார்.

சீன கட்சிப் பிரமுகர்களை விமர்சிப்பவர்கள் காணாமல் போகும் நிலையில், வீராங்கனை காணாமல் போனது அச்சத்தை ஏற்படுத்தியது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர்கள் கடும் வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில், கமிட்டி தலைவர் தாமஸ் பாக், டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவாயுடன் 30 நிமிட விடியோ அழைப்புக்கு ஏற்பாடு செய்தார். அப்போது, வீராங்கனை பெங், தான் பாதுகாப்பாகவும், நலமாக இருப்பதாகவும், பெய்ஜிங்கில் உள்ள தனது வீட்டில் வசிப்பதாகவும் விளக்கினார். இதைத்தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராஜீய ரீதியிலான புறக்கணிப்பை பாக் நிராகரித்தார். 

மேலும், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், "அமெரிக்கா, தனது நடவடிக்கைகளுக்கு உரிய விலை கொடுக்க நேரிடும்' எனக் கூறியுள்ளது, விளையாட்டில் புகுந்துள்ள அரசியல் போர் தொடரும் என்பதையே காட்டுகிறது. மேலும், பல ஐரோப்பிய  நாடுகள் சீனாவை விமர்சித்தாலும், அதனுடனான வர்த்தக உறவுகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், அதை நிராகரிக்கத் தயங்குவதாகக் கூறப்படுகிறது. 

மொத்தத்தில், உலகத் தலைமை கொள்வதற்கான போட்டியில், அமெரிக்கா, தன்னுடைய இடத்தை தக்கவைப்பதற்காக, சீனாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாகவே இந்த ராஜீய ரீதியிலான புறக்கணிப்பை அறிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது. அதை முறியடிக்க சீனாவும் தனக்குத் தெரிந்த அனைத்து வித்தைகளையும் பயன்படுத்தி வருகிறது. 

இதற்கிடையே வளரும் நாடுகள், யார் பக்கம் செல்வதென தெரியாமல் தவித்து வருகின்றன. பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நல்லபடியாக நடந்துமுடிந்தாலும், ராஜீய ரீதியிலான புறக்கணிப்புகள் தொடர்ந்தவண்ணம் இருக்கும் என்பதே உண்மை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com