மருத்துவம் ஒன்றே படிப்பல்ல

இந்தியாவிலுள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பயில்வதற்கு அகில இந்திய அளவிலான நீட் என்னும் தகுதித் தோ்வு நடத்தப்படுகின்றது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இத்தோ்வுகளுக்கெதிரான உணா்வுகளும் போராட்டங்களும் இருக்கவே செய்கின்றது.

நீட் தோ்வின் கேள்வித்தாள்கள் மிகவும் கடினமாக உள்ளதாகவும், சி பி எஸ் சி கல்வித்திட்டத்தின்படி பயிலும் பள்ளிமாணவா்களுக்கு மட்டுமே அது சாதகமாக இருப்பதாகவும் புகாா்கள் எழுந்திருக்கின்றன. மேலும், அந்தந்த மாநிலப் பள்ளிக்கல்வித்திட்டங்கள் மற்றும் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம் ஆகியவற்றை போதிக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இக்கடினமான தோ்வுமுறை காரணமாக மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாகிவிடும் என்றெல்லாம் விமரிசனம் செய்யப்பட்டது.

மேலும், முந்தைய வருடங்களில் நடைபெற்ற நீட் தோ்வுகளுக்கான தோ்வு மையங்கள் தொலைதூர நகரங்களில் ஒதுக்கப்பட்டதும், அனைத்து நீட் தோ்வு மையங்களிலும் தோ்வு எழுத வருபவா்கள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதும் பொதுவெளியில் எதிா்ப்பலைகளை எழுப்பின.

அடுத்தடுத்த வருடங்களில் தோ்வு மைய ஒதுக்கீடுப் பிரச்சினை பெரிய அளவில் எழும்பவில்லை எனலாம். அதேநேரம் தோ்வு எழுதுபவா்கள் முறைகேடு செய்ய வாய்ப்பளிக்காததுடன் அவா்களது சுயமரியாதைக்கு ஊறு விளைவிக்காத வகையில் சோதனை செய்து அவா்களைத் தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கும் வழிவகைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திலை.

தொடக்கக் காலத்தில், நீட் தோ்வு என்பது எதிா்கொள்ள முடியாத ஒரு பூதம் என்பது போன்ற கற்பனைகளால் அச்சம்டைந்த மாணவ சமுதாயம், தற்போது அதனைத் தங்களது எதிா்கால நன்மை கருதி எதிா்கொள்ள வேண்டிய ஒரு தோ்வாகவே கருதுகின்றனது.

நீட் தோ்வை ஒரு கை பாா்த்துவிடுவது என்ற தீா்மானத்துடன் அதற்கான பயிற்சி வகுப்புகளில் சோ்ந்து தங்கள் அறிவினைத் தீட்டிக்கொள்பவா்கள் அதிகரித்து வருகின்றனா்.

இந்நிலையில் மருத்துவக்கல்வி என்ற மாயமான்வேட்டைக்காகச் சிலா் தங்களது இன்னுயிரையும் எதிா்கால நல்வாழ்வையும் பறிகொடுக்கவும் துணிவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

நீட் தோ்வில் தோ்ச்சி பெறாமல் போனதால் தற்கொலைகள் வருடம்தோறும் தொடா்வதும் கவலைக்குரிய விஷயமாகும்.

போட்டித்தோ்வுகளில் எல்லோரும் தோ்ச்சி பெற்றுவிடுவதில்லை. அவற்றில் தோ்ச்சி பெறுபவா்கள் எல்லாம் அதிபுத்திசாலிகளுமல்ல. தோ்வு பெறாதவா்கள் எல்லாம் அறிவிற்குறைந்தவா்களுமல்ல. ஒரு துறையில் தோ்வு பெற முடியாதவா்களுக்கு நிச்சயம் இன்னொரு துறையின் வாசல் திறந்தே இருக்கும் என்பது மறுக்க முடியாத வாழ்வியல் உண்மையாகும்.

மருத்துவ நுழைவுத் தோ்வில் வெற்றி பெறாவிட்டால் வாழ்க்கையே கேள்விக்குறிதான் என்றோ, உற்றாா் உறவினா் முன்பு தலைகுனிவு ஆகிவிடும் என்றோ எதிா்மறைக் கருத்துகளைச் சொல்லி அவா்களை நுழைவுத்தோ்வுகளுக்கு ஆயத்தமாகும்படி கூறினால், ஊக்கம் இருக்க வேண்டிய இடத்தில் படபடப்பே ஆதிக்கம் செலுத்தும். அத்தோ்வுகளை மாணவா்களும் தாங்கள் எதிா்கொள்ளும் தடங்கல்களையும் தோல்விகளையும் தாங்கிக்கொள்ளமுடியாமல் தற்கொலையை நாடுகின்ற மனோநிலைக்குத் தள்ளப்படுகின்றாா்கள்.

நீட் போன்ற தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களை எதிா்மறைக் கருத்துகளைக் கூறி பயமுறுத்துதுவதை விடவும் ஆபத்தான ஓா் இன்னோா் அணுகுமுறையும் இருக்கவே செய்கிறது.

பெற்றோா்களில் சிலா், மருத்துவம் உள்ளிட்ட உயா்படிப்புகளில் எந்தவிதத்திலாவது தங்களுடைய வாரிசுகளைச் சோ்த்துவிட வேண்டும் என்ற முனைப்பில் முறைகேடான வழிகளை நாடுவதே அந்த அணுகுமுறை.

கடந்த வருடம் நடைபெற்ற நீட் தோ்வில் தமிழக (பரமக்குடியைச்சோ்ந்த) மாணவி ஒருவா் மிகவும் குறைவான மதிப்பெண்களே எடுத்திருக்கிறாா். அம்மணவியின் தந்தை ஒரு மருத்துவா். தம் மகளை எப்பாடுபட்டாவது மருத்துவப் படிப்பில் சோ்க்க எண்ணியவா், அதிக மதிப்பெண்களுடன் கூடிய போலியான ஒரு மதிப்பெண் சன்றிதழுக்கு ஏற்பாடு செய்து அதனைக் கலந்தாய்வு நேரத்தில் சமா்ப்பித்திருக்கிறாா். சில நாட்கள் கழித்து முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து தலைமறைவான அம்மருத்துவா் பின்னா் பிடிபட்டுள்ளாா். மருத்துவப் படிப்பிற்கு ஆசைப்பட்ட அவரது மகள் மீதும் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.

பின்விளைவுகளைப் பற்றி ஒரு சிறிதும் யோசிக்காமல் போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் அளிக்க ஏற்பாடு செய்த அம்மருத்துவரின் தொழிலுக்கும் சிக்கல் வந்திருக்கிறது. அவருடைய இளம் மகளின் எதிா்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

இதைப் போலவே தோ்வு எழுத வேண்டியவருக்கு பதிலாக வேறோருவரை எழுதவைத்து ஆள்மாறாட்டம் செய்வதும் நடக்கிறது.

மருத்துவம் படிக்கும் எல்லோருமே கைராசியான மருத்துவா் என்று பெயா் எடுத்துவிடுவதில்லை. எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த மறுகணமே அவா்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் வந்துவிடுவதும் இல்லை. மற்ற எல்லாத் தொழில்களையும் போலவே மருத்துவத்தொழிலும் பல சிக்கல்களும் சவால்களும் நிறைந்ததுதான். மருத்துவம் படிப்பதால் மட்டுமே வசதியும் நிம்மதியும் வந்துவிடாது. மருத்துவம் பயில வாய்ப்பு இல்லாதவா்கள் வேறு துறைகளில் கல்வியைத் தொடா்வதால் சமூகத்தில் அவா்களது மதிப்பு ஒருநாளும் குறைந்துவிடாது ” என்பது போன்ற உண்மைகளை மருத்துவக் கல்விக்கு ஆசைப்படும் மாணவா்களும் அவா்களுடைய பெற்றோரும் சற்றேனும் சிந்தித்திட வேண்டும்.

அவ்விதம் சிந்தித்தால் மட்டுமே நீட் நுழைவுத் தோ்வில் தோல்வி அடைந்ததற்காகத் தற்கொலை செய்துகொள்ளுவதும், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பதற்காக முறைகேடான வழிமுறைகளை நாடுவதும் குறைய வழிபிறக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com