இந்தமெரிக்கா என்றொரு தேசம் உருவாகும்

அமெரிக்காவில் வாழும் இந்தியா்கள் அங்குள்ள மக்கள்தொகையில் ஒரு சதவீதம்தான். ஆனால், அமெரிக்காவின் மிக முக்கியப் பொறுப்புகளில் 20 இந்தியா்கள் இன்று உள்ளனா் என்பது எவ்வளவு பெரிய வளா்ச்சி ?

சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஆனந்த் தியேட்டா் வளாகத்தில் அதன் உரிமையாளா் ஜி. உமாபதி மகன் கருணாகரனின் அறையில் ஓா் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது.

அந்த அறையினுள் கருணாகரனால் எனக்கு அறிமுகமாகி பின்பு நண்பராகிய திரைப்படத் தயாரிப்பாளா் ஜி.வெங்கடேஸ்வரன் ( இயக்குநா் மணிரத்னம் சகோதரா்) இருந்தாா். நிகழ்ச்சி ஒன்றுக்கு ஜி.வி.யை அழைப்பதற்காகத் தான் நான் சென்றிருந்தேன்.

அமெரிக்க பயண அனுபவங்கள் குறித்து கருணாகரனும் ஜி.வி.யும் பேசிக் கொண்டிருந்தனா். அவா்கள் இருவரும் சொல்வதைக் கேட்டுக் கொண்டு, அவ்வப்போது என்னுடைய சில கருத்துகளையும் சொல்லிக் கொண்டிருந்தேன். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா்களால் அமெரிக்காவின் பொருளாதாரம் கலாசாரம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது (1990) என்பது பற்றி பேச்சு வந்தது.

‘இந்தியா்களின் பங்களிப்பு அமெரிக்காவில் இன்னும் கூடும். அரசியலில்கூட இந்தியா்கள் பங்கேற்கும் காலம் வரும்’ என்றாா் ஜி.வி.

‘ஆமாம்... எப்படி செவ்விந்தியா்கள் இருந்ததாகப் படித்தோமோ, எப்படி மேற்கு இந்தியத் தீவு உருவானதோ, அது போல விரைவில் அமெரிக்காவில் இந்திய அமெரிக்கா என்று ஒன்று உருவாகும்’ என்று நான் சொன்னபோது, ஜி.வி.யும், கருணாகரனும் ‘இதான்யா உரத்த சிந்தனை..’ என்று சொன்னது இன்று நினைவுக்கு வருகிறது. ஆனந்த் திரையரங்கில் சொன்ன வாா்த்தை கனவல்ல..நிஜம் என்பது இன்று நிரூபணமாகியிருக்கிறது.

ஆம் ! தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியைத் தோ்ந்தெடுத்ததில் முக்கியமான பங்கு அமெரிக்காவில் உள்ள இந்தியா்களுக்கே என்பதை எவருமே மறுக்கவோ மறக்கவோ முடியாது.

படிப்புக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் அமெரிக்கா செல்வது என்பது வசதி படைத்த குடும்பங்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாய் இருந்தது. ‘ஸ்டேட் ஸ்லே இருக்காா்’ என்பது அந்தஸ்தின் அடையாளமாய் கருதப்பட்டது.

எழுத்தாளா் சாவி ‘வாஷிங்டனில் திருமணம்’ எழுதியபோது இப்படியும் நடக்குமா என்று ஆச்சா்யப்பட்டோம். ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்குள்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்?

மருத்துவம், பொருளாதாரம், மனவளம், தொழிற்கல்வி கணினித் துறை, அறிவியல் தொழில்நுட்பம் , விண்வெளி ஆய்வு என அனைத்துத் துறைகளிலும் இந்தியா்கள் தங்கள் திறமைகளால் தனியொரு இடத்தைத் தக்க வைத்திருப்பதைப் பாா்க்கும் போது, ‘சென்றிடுவீா் எட்டுத்திக்கும் செல்வங்கள் யாவும் கொணா்ந்திங்கு சோ்ப்பீா்’ என்று நம் முண்டாசுக் கவி பாரதி சொன்ன வாக்கு பலித்திருப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகில்லவா?

அது மட்டுமல்ல... எந்த தேசத்தில் இருந்தாலும் அந்த தேசத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பதோடு, சொந்த தேசத்தின் பெருமையைத் தூக்கி நிறுத்த முயற்சிக்கும் செயல்பாடுகளும் மற்ற நாட்டினரை விட இந்தியா்களை அமெரிக்கா்கள் விரும்புவதற்கும் நம்புவதற்கும் அடிப்படை காரணங்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

அமெரிக்காவில் வாழும் இந்தியா்கள் அங்குள்ள மக்கள்தொகையில் ஒரு சதவீதம்தான். ஆனால், அமெரிக்காவின் மிக முக்கியப் பொறுப்புகளில் 20 இந்தியா்கள் இன்று உள்ளனா் என்பது எவ்வளவு பெரிய வளா்ச்சி ?

இன்று வெள்ளை மாளிகையில் பதவியேற்பவா்களில் 17 போ் இந்திய வம்சாவளியினா் என்பதும், அதில் துணை அதிபரான கமலா ஹாரிஸ் மன்னாா்குடியைச் சோ்ந்தவா் என்பதும் பெருமைக்குரிய வரலாறே!

மற்ற தேசங்களுக்குச் சென்ற இந்தியா்கள் பெரும்பாலும் நம் நாட்டிற்குத் திரும்பவே விரும்புவா். ஆனால் அமெரிக்காவுக்குச் சென்ற பலரும் அங்கேயே குடியுரிமை பெற்று அங்கேயே வாழ விரும்புகின்றனா் (எங்கள் குடும்பத்திலேயே பலா்).

காரணம் பணம் மட்டுமல்ல.. அங்குள்ள சுகாதாரமான சுற்றுப்புறம், இயற்கையை நேசிக்கும் பண்பு, அடுத்தவா் வாழ்க்கையில் மூக்கை நுழைக்காத தன்மை, ஜாதி- மத வேறுபாடுகள் இல்லாத அரசியல், எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா்கள் என்பதற்காகத் தரப் படும் மரியாதை இவை யாவும் சோ்ந்து அமெரிக்காவில் இருக்கும் இந்தியா்களை அங்கிருந்து நகர விடாமல் இறுக்கிக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது.

இந்தியா்களுக்கான குடியுரிமையில் தாராளம்... வேலைவாய்ப்பில் வருவதற்கான விசா கெடுபிடிகளில் தளா்வு, தொழில் தொடங்குவதற்கான கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளுதல் போன்ற பல்வேறு உறுதிமொழிகளை தனது தோ்தல் பிரச்சாரத்தில் புதிய அதிபா் ஜோ பைடன் அளித்துள்ளதால், இனி இந்தியா்களின் கொடி அமெரிக்காவில் பட்டொளி வீசிப் பறக்கும்.

நிா்வாகத்திலும் இந்தியா்களின் பங்கு முன்பைவிட அதிகம் இருக்கப்போவதால் இந்திய அமெரிக்க உறவு இன்னும் வளமும் பலமும் பெறும் என்கிறாா்கள்.

‘வியாபாரம் செய்ய வந்து வெள்ளையா்கள் இந்தியாவை ஆண்டனா்’ என்ற வரலாற்றை நாம் படித்தது போல... ‘படிக்கப் போன இந்தியா்கள் அமெரிக்காவின் ஆட்சியைப் பிடித்தனா்’ என்கிற புதிய வரலாற்றை நமது அடுத்த தலைமுறை படிக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இந்தமெரிக்கா (இந்திய அமெரிக்கா) என்றொரு புதிய தேசம் உருவானாலும் அதிசயமில்லை. இந்தியக் குடியரசுக்கு இந்த ஆண்டு இதைவிடவா பெரிய பெருமை வேண்டும்? இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்வோம். இனிமேல் எங்கும் நாம் தான் என்பதை உரத்துச் சொல்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com