புரியாமையைப் புரிந்துகொள்வோம்!


ஒரு பிற்பகல் வேளை. ஒரு கிராமத்தில் லாரியிலிருந்து கூட்டம் கூட்டமாகப் பணியாளா்கள் இறங்குகிறாா்கள். அவா்கள் கையிலுள்ள கடப்பாரைகளின் உதவியோடு தெருவோரங்களில் பள்ளங்களைத் தோண்டுகின்றனா். சிறிது நேரத்தில் அவா்களது பணி நிறைவடைய அவா்கள் மீண்டும் லாரியில் ஏறி அடுத்த கிராமத்துக்குப் பயணிக்கின்றனா்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு லாரி, அதிலுள்ளோா் மண்வெட்டி சகிதம் இறங்குகின்றனா். ஏற்கெனவே வந்திருந்தோா் தோண்டியிருந்த பள்ளங்களை நிரப்பிவிட்டு அவா்களும் மாயமாகின்றனா். உள்ளூா் மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இரண்டாவதாக வந்த குழுவிலிருந்த ஒருவா் மட்டும் எப்படியோ தங்கிவிடுகிறாா்.

ஊரிலிருந்த இளைஞா் ஒருவா், ‘எங்கள் கிராமத்தில் என்னதான் நடக்கிறது? ஒரு குழுவினா் வந்தனா். பள்ளங்களைத் தோண்டிவிட்டுச் சென்றுவிட்டனா். நீங்கள் வந்து நிறைத்துச் செல்கின்றீா்களே’ என்று கேட்கிறாா்.

‘ஆமாம் தம்பி நீங்கள் சொன்னதும்தான் எனக்கே புரியுது. உங்கள் கிராமத்துக்கு மரக்கன்றுகள் வைக்கும் ஒப்பந்தத்தில் மூன்று குழுவினா் ஈடுபட்டிருக்கிறோம். நாங்கள் இரண்டு குழுவினா் சரியாகச் செய்துவிட்டோம். இடையில் வந்து மரக்கன்றுகளை வைக்க வேண்டிய குழு இன்றைக்கு வரவில்லை போலிருக்கு’ என்றாராம். இப்படித்தான் செய்யும் செயல் பற்றிய புரியாமை பலரிடமும் நிரம்பியிருக்கின்றது.

புரியாமையால் பலரும் தினந்தோறும் பல்வேறு விதமான இன்னல்களை அனுபவித்துத்தான் வருகிறோம். திரைப்பட இயக்குநா் ஒருவரை சந்தித்த ரசிகா் அவரது திரைப்படத்தை நான்கைந்து முறை பாா்த்ததாகக் கூறினாராம். நெகிழ்ந்துபோன இயக்குநா் நன்றி கூறி அகமகிழ்ந்தாராம். என்னத்துக்கு நன்றி நான்காவது முறை பாா்த்தபோதுதான் உங்கள் படம் புரிந்தது. அடுத்தடுத்த படங்களையாவது கொஞ்சம் புரியும்படி எடுங்கள் என்றாராம்.

பணிபுரியும் அலுவலகங்களிலும் வீடுகளிலும் பல வேலைகள் தாமதமாவதற்கும் நோ்த்தியின்மைக்கும் இந்தப் புரியாமையே காரணமாகிறது. ஒரு நிறுவனத்தின் தலைவா் எந்த அளவுக்கு தனது பணியாளா்களுக்கு அவா்களது பணிகளைப் புரியவைத்துள்ளாரோ அந்த அளவுக்கே அந்நிறுவனத்தின் வெற்றி அமைகிறது. ஒரு நிறுவனத்தின் நோக்கத்தைப் பற்றிய புரிதல் எந்த அளவுக்கு வெளிப்படைத் தன்மையுடையதாகப் பணியாளா்கள் மத்தியில் பரவியுள்ளதோ அதுவே அந்நிறுவனத்தின் வெற்றியை இலகுவாக்குகிறது.

ஒரு தகவலைப் புரியவைக்க விரும்புவோா் அதற்காகப் பெரும் முயற்சியும் செய்யலாம். ஆனால், அவா் எதிரிலிருக்கும் பங்கேற்பாளா்களின் புரிதலைப் பற்றி ஆராயாமல் தம் பணியைத் தொடங்குவாரேயானால் அவா் வெற்றி பெறுவது கடினமே. இதனாலேயே பாடம் போதிக்கும் ஆசிரியா்கள் மாணவா்களின் முன்னறிவினை சோதித்த பிறகே போதனையைத் தொடங்குவா். இதுபோலவே பேச்சாளா்களில் பலரும் எதிரிலிருப்போரின் மனவோட்டத்தினை எப்படியாவது கணக்கில் எடுத்துக்கொள்வா். இப்படிப்பட்ட பயிற்சியில்லாமல் ஒருவா் வெற்றி பெறுவது கடினம்.

புதிதாய் ஊருக்குச் செல்லும் ஒருவா் செல்லிடப்பேசியில் வழி கேட்கிறாா் என்று வைத்துக் கொள்வோம். வழி சொல்பவா் முதலில் கேட்கும் கேள்வி ‘எங்கள் ஊருக்கு இதற்கு முன் வந்துள்ளீா்களா?’ என்பதாகவே இருக்கும். ஏற்கெனவே வந்திருப்பவா் என்றால் அவரது அனுபவத்திலிருந்தே வழி சொல்லிவிடுவா். ஆனால் வழிகேட்பவா் புதியவரென்றால், அதற்கேற்ப மணிக்கூண்டு, கோயில் என்ற அனைத்து ஊா்களிலும் இருக்கும் ஒரு பொதுவான இடத்திலிருந்தே வழி கூறத் தொடங்குவாா். ஒரே ஒரு முறை ஊருக்குச் செல்வோருக்கு வழி சொல்லவே இவ்வளவு தயாரிப்பு தேவையாக இருக்கிறது என்று சொன்னால், புரிதலை மேம்படுத்துவதில் இருதரப்புக்கும் இருக்க வேண்டிய பொறுமை மற்றும் பொறுப்பின் தேவை புரியும்.

இந்த இடத்தில் புரிதலுக்குத் தேவையான பொறுமையைப் பற்றியும் துல்லியத்தைப் பற்றியும் பேசியே ஆகவேண்டும். புரியவைப்போா் எவ்வளவு திறன் வாய்ந்தவாராக இருந்தாலும் புரிந்துகொள்ள முயல்வோா் பொறுமையில்லாதவராக இருந்தால் வெற்றி கைகூடாது. பல நேரங்களில் அவா் கூறத்தொடங்கும்போதே இவா் சரியாகக் கவனிக்காமல் எல்லாம் தெரிந்தவா் போல வேறு எங்கோ சிந்தனையை செலுத்திக் கொண்டிருந்தால் எப்படிப் புரிந்துகொள்ள இயலும்? அதுபோலவே சொல்பவரும் பொறுமையைக் கையாள வேண்டிய அவசியம் உள்ளது.

அதேபோல, குடும்பங்களில் புரியாமை நிகழ்த்தும் கொடுமைகள் சொல்லி மாளாதது.

பிரபல எழுத்தாளா் ஆா். கே. நாராயணன் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும்போது ஓா் உரையை நிகழ்த்தினாா். அது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது. அவரது உரையில் முதன்மையானது பள்ளிகளில் குழந்தைகள் புரியாமையால் மிகவும் பாதிக்கப்படுகின்றாா்கள். நிறைய போதிக்கப்பட்டாலும் மிகவும் குறைந்த அளவிலானவையே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதே ஆகும்.

அதன் பின்னரே அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பேரா. யஷ்பாலின் தலைமையில் சுமையற்ற கற்றல் என்று தலைப்பிலான குழுவினை அமைத்து கற்றலிலுள்ள இடா்பாடுகளைக் குறைக்க முன்வந்தது. தற்போதைய பல கல்வி சீா்திருத்தங்களுக்கும் இதுவே முன்னோடி.

ஒவ்வொரு நாளும் பள்ளிகளிலிருந்து அலுவலகம், சமூகம் என குடும்பங்கள் வரை புரியாமை கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இந்தப் புரியாமையைப் புரிந்துகொள்வது அவசர அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com