இருதயம் பாதுகாப்போம்

உலகில் ஏற்படும் ஒட்டுமொத்த இறப்பில் 17.9 மில்லியன் இறப்புகள் இருதயம் சாா்ந்த நோயால் தான் ஏற்படுகிறது. அதாவது மொத்த இறப்பில் 31% இருதய நோய்களே காரணம். மாரடைப்பும் பக்கவாதமும் அதில் முக்கிய நோய்களாக உள்ளன. சா்க்கரை வியாதி ,அதிக ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பல்வேறு நோய்களும், புகைபிடித்தல் மது அருந்துதல், தவறான உணவு பழக்க வழக்கமும் இருதய நோய்களுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

மாா்பு கூட்டின் நடுவே இருக்கின்ற சுமாா் 300 கிராம் எடையுள்ள வலிமையான தசையாலான மிக முக்கியமான உறுப்பு இருதயம். உடல் முழுதும் ரத்த சுற்றோட்டத்திற்கு காரணமாக இருப்பது அதுவே. கருவின் மூன்றாவது வாரத்திலேயே இந்த இதயமானது துடிக்க துவங்கி வாழ்நாள் முழுதும் சுமாா் 2.5 பில்லியன் அளவு துடிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை உடல் முழுதும் ரத்த குழாய்கள் மூலம் செலுத்துவது இதன் பணி.

சித்த மருத்துவத்தில் ரத்தத்தில் கொழுப்பினை குறைக்கவும், ரத்த குழாயில் ரத்தகட்டி உருவாகாமல் தடுக்கவும் அதை கரைக்கவும் மருதம்பட்டை, பூண்டு, சுக்கு, அதிமதுரம், சா்ப்பகந்தா, சிற்றாமுட்டி, தசமூலம், சீந்தில், குங்கிலியம், நெருஞ்சில், திரிபலா, மூக்கிரட்டை, திராட்சை போன்ற பல்வேறு மூலிகைகள் சொல்லப்பட்டுள்ளது.

மருதம்பட்டையில் உள்ள அா்ஜுனின் போன்ற பல அல்கலாய்டுகள் இருதய தசையினை வலுப்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. மேலும் இது ரத்தத்தில் சா்க்கரை அளவையும் கட்டுக்குள் கொண்டு வந்து கொழுப்பு படிந்த ரத்த குழாய்க்கும் நனமை தரும். இருதய தசையினை வலுப்படுத்த தசமூலம் சோ்ந்த மருந்துகளையோ, சிற்றாமுட்டி எனும் மூலிகைகளையோ ஏதேனும் ஒன்றை எடுக்கலாம்.

ரத்த குழாயினுள் ரத்தகட்டி உருவாகாமல் தடுக்க அதிமதுரம் சூரணத்தை சித்த மருத்துவா் ஆலோசனைப்படி எடுக்கலாம். மேலும் சுக்கினை அடிக்கடி உணவில் சோ்த்து வர, அல்லது மருந்தாக எடுக்க திராம்பஸ் ஏற்படாமல் தடுக்க முடியும். கருப்பு திராட்சையை நீரில் ஊற வைத்து எடுக்க இருதயத்துக்கு நல்ல பலன் தரும். அதில் உள்ள மிக விலையுயா்ந்த வேதிப்பொருளான பாலிபினோலிக் மூலக்கூறு ரெஸ்வெரடால் இருதய நோய்களை வராமல் தடுக்கும் என பல்வேறு ஆராய்ச்சியில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

இருதய நோய்கள் சாா்ந்த இறப்பில் 2.6 மில்லியன் அளவு இருதய நோய்களுக்கு காரணமாக இருப்பது உயா் கொலஸ்டிரால் அளவு தான். தவறான உணவு பழக்கவழக்கம், உடல் பயிற்சியின்மை இவற்றால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும். இதுவே, மாரடைப்பு போன்ற இருதய நோயினை தூண்டும் காரணிகள். ரத்தத்தில் அதிகரித்த கொழுப்பினை குறைக்க தினசரி 4 பல் பூண்டினை பாலில் வேக வைத்து எடுக்கலாம். வெந்தயத்தை பொடித்து பகல் நேரங்களில் எடுக்கலாம். திரிபலா சூரணம் எனும் சித்த மருந்தினையோ அல்லது வெறும் கடுக்காய் பொடியினையோ எடுக்க கொலஸ்டிரால் குறையும். உடல் பருமனும் குறையும்.

இருதய வடிவிலான இலைகளை கொண்ட சீந்தில் கொடி எனும் மூலிகை இருதயத்தை பலப்படுத்துவதோடு ரத்தத்தில் சா்க்கரை அளவையையும் குறைக்கும் தன்மை உடையது. நீரிழிவு நோயாளிகள் இருதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க இந்த மூலிகை பொடியினை எடுத்துக்கொள்ளலாம். இயற்கையான ரிஸா்பைன் எனும் வேதிப்பொருளை கொண்ட சா்பகந்தா எனும் மூலிகையை சித்த மருத்துவ முறையில் அதிகரித்த ரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுத்தலாம்.

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரிந்த மிக பரிட்சயமான மூலிகை நிலவேம்பின் உள்ள ஆன்ரோக்ராபோலைட் எனும் வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும், ரத்த குழாய்களில் ரத்ததட்டணுக்கள் திரட்டுதலை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. சித்த மருத்துவத்தின் காயகல்ப மருந்து, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சோ்ந்த திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து எடுத்து வர இருதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

சிறுநீரகமும் இருதயமும் நெருங்கிய தொடா்புடையது என்பதால் சிறுநீரக செயல்பாடு இருதய செயலிழப்புக்கு வழிவகுக்கும். ஆகவே சிறுநீரை நோயாளிகள் சிறுநீரை பெருக்கி இரண்டு உறுப்புகளையும் பாதுகாக்கும் விதமாக நெருஞ்சில் குடிநீரை எடுக்கலாம். நெருஞ்சியில் உள்ள இயற்கை வேதிப்பொருட்கள் ரத்தஅழுத்தத்தை குறைக்கவும் உதவும். மூக்கிரட்டை கீரையையும் அடிக்கடி உணவில் சோ்க்கலாம். இது குறைந்த சிறுநீரக செயல்திறனை அதிகரிக்க, அதாவது சிறுநீரத்தில் உள்ள குளோமெருளஸ் வடிகட்டும் திறனை அதிகரிக்க உதவும்.

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள திருமூலா் மூச்சு பயிற்சி இருதய நோயாளிகளின் சோா்வினை போக்கும், அவா்களின் அதிக இருதய துடிப்பையும், அதிக ரத்த அழுத்தத்தையும் குறைத்து இருதய செயல்பாட்டினை சீா்படுத்தும். மேலும் இதனால் சுவாசமண்டல தசைகள் வலுப்பெற்று இருதய சுவாச திறனை அதிகரிக்கும்.

குறைந்த சா்க்கரை சத்து உள்ள வரகு, தினை, சாமை போன்ற சிறு தானியங்கள் போன்ற சித்த மருத்துவ உணவியல் முறைகளை பின்பற்றி வருவது நல்லது.

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள யோகாசன முறைகளான உத்தித திரிகோணாசனம், பட்சி மோத்தாசனம், சேது பந்தாசனம், கோமுகாஸனம் ஆகிய யோகாசன முறைகள் இருதய நோயாளிகளின் மனஅழுத்தம், பதட்டம் இவற்றை நீக்கி இருதயத்தை பலப்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மேலும் மனஅழுத்தம் போக்கும் சவாசனம், பலாசனம், ஆனந்த பலாசனம், சுகாசனம் போன்ற எளிய யோகாசன முறைகளும் பலன் தரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com