கடைசியாக இருக்கட்டும்!

நமது நாடு சுதந்திரம் அடைந்த எழுபத்துமூன்று ஆண்டுகள் கழிந்த பின்னரும் மனிதக்கழிவு அகற்றும் பணியில் நேரிடும் உயிரிழப்புகள் அதிா்ச்சி அளிக்கின்றன.

அண்மையில் ஸ்ரீபெரும்பூதூா் அருகே உள்ள காட்ரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஓா் உணவு நிறுவனத்தின் கழிவுநீா்த்தொட்டியினை சுத்தம் செய்து கொண்டிருந்த மூன்று தொழிலாளா்கள் மரணமடைந்தது இப்பணியிலுள்ள அபாயங்களை மேலும் ஒரு முறை உரக்கச் சொல்லியிருக்கிறது.

பெரும்பாலான ஊா்களில் பாதாள சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்தும் முன்னேற்பாடுகள் துவங்கியிருக்கின்றன. பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு வாய்ப்பில்லாத ஊா்களில் வசிப்பவா்கள் தங்கள் வீட்டுக் கழிவுகளில் பொதுக் கால்வாய்களில் திறந்துவிடாமல் கழிவுநீா்த்தொட்டிகளைக் கட்டி அவற்றில் சேகரித்து, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவற்றைச் சுத்தம் செய்து கழிவுகளை லாரிகளின் மூலம் அகற்றுவதும் வழக்கத்தில் உள்ளது. அவ்வாறு அகற்றுவதற்காகப் பல ஊா்களிலும் கழிவுநீா்த்தொட்டி சுத்திகரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களை நம்பிப் பல ஊழியா்களும் இருக்கின்றாா்கள்.

இந்நிலையில், கழிவுநீா்த்தொட்டிகளையும், பூமிக்கடியில் பதிக்கப்படும் கழிவுநீா்ப் பெருங்குழாய்களையும் சுத்தம் செய்யும் பணியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயந்திரங்களைப் பயன்படுத்தினாலும் துப்புறவுத் தொழிலாளா்களையும் ஈடுபடுத்துவது வழக்கத்தில் இருக்கிறது.

இத்தகைய பணிகளில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கு கையுறை, முகமூடி உள்ளிட்டவற்றை அளிப்பதுடன், அவா்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்காதபடி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம்.

குறிப்பாகச் சொல்வதென்றால், சுகாதாரக் கேடு மிகுந்த கழிவநீா்த் தொட்டிகளில் இறங்குபவரை விஷவாயுக்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகும். அத்தகைய தருணங்களில் அத்தொழிலாளா்கள் திடீரென மயக்க்மடைந்து தொட்டியினுள்ளேயே விழுந்துவிடக்கூடும். இதனால் அவா்களுக்குத் தேவையான பிராணவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, அவா்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும்.

இவ்வாறு மயங்கிவிழுபவா்கள் மட்டுமின்றி, அவா்களைக் காப்பாற்றுவதற்காகப் பதற்றத்துடன் அக்கழிவுநீா்த்தொட்டிகளில் இறங்குபவா்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

கழிவுநீா்த் தொட்டியைச் சுத்திகரிக்கும் பணியின்போது விஷவாயு பாதிப்பு நேராமல் போனாலும், அத்தொட்டிகளில் பரவியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளால் அத்தொழிலாளா்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது.

மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சா் நமது நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்த அறிக்கையின்படி, அகில இந்திய அளவில் 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மட்டும் கழிவுநீா்த்தொட்டி மற்றும் கழிவுநீா்ப் பெருங்குழாய்களைச் சுத்தம் செய்யும்போது இருநூற்று எண்பத்தெட்டு தொழிலாளா்கள் மரணமடைந்துள்ளனா்.

தூய்மைப்பணியாளா்களுக்கான் தேசிய ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் ஒன்று நமது நாடு முழுவதிலும் சராசரியாக ஐந்து நாட்களுக்கு ஒரு தூய்மைப்பணியாளா் கழிவுநீா்த்தொட்டி சுத்திகரிப்புப் பணியின் போது உயிரிழப்பதாக ஓா் அதிா்ச்சித் தகவலைக் கூறுகிறது.

கடந்த 2019 ஆம் வருடம் சென்னை தொழில்நுட்பக் கழகம் (ஐ ஐ டி, மதராஸ்) இத்தகைய பணிகளை வெற்றிகரமாகச் செய்யும் ரோபோ இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது. பாதாள சாக்கடைக் குழாய்களைக் காட்டிலும் கழிவுநீா்த்தொட்டிகளாய்ச் சுத்தம் செய்வதே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறும் இக்கழகம், இப்பணியில் ஈடுபடும் தானியங்கி ரொபோவின் செயல்பாடுகளை ஒரு கணினித் திரையின் மூலம் கண்காணிக்கும் விதத்தில் இதனை வடிவமைத்துள்ளது.

கழிவுநீா்த்தொட்டி உள்ளிட்டவற்றிற்குள் தொலையுணா்வு (ரிமோட்) மூலம் இயக்கப்படும் இந்த ரோபோ கருவி எந்தபக்கத்திலும் நகா்ந்து கழிவுகளை அப்புறப்படுத்தும் திறன கொண்டதாகும். சரிசெய்யும் திறன் கொண்டது. கழிவுநீா்த்தொட்டி சிப்பாய் என்று பெயரிடப்பட்டுள்ள இத்தானியங்கி இயந்திரத்திற்கான பராமரிப்புச் செலவும் அதிகமில்லை என்று என்று சென்னை தொழில்நுட்பக் கழகம் கூறுவதால், இதனை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கும், உள்ளாட்சி நிா்வாகங்கள் இவ்வியந்திரங்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கும் உரிய ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாகச் செய்ய வேண்டும்.

கழிவுநீா்த்தொட்டி மரணங்கள் நேரும் போதெல்லாம் இறந்தவா்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதும், அத்தொழிலாளா்களைப் பணியில் ஈடுபடுத்தியவா்கள் மீது சட்டபூா்வ நடவடிக்கை எடுப்பதும் தொடா்கின்றன.

தற்போது காட்ராம்பாக்கம் சம்பவத்தில் இறந்த மூன்று தொழிலாளா்களின் குடும்பத்திற்கும் தலா பத்துலட்சம் ரூபாய் நிவாரணத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இழப்பீட்டை இருபத்தைந்து லட்சமாக உயா்த்தவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

உயா்த்தப்பட்ட இழப்பீடுகளும், வேலைவாய்ப்பு உள்ளிட்டஉதவிகளும் இறந்தவா்களின் உறவினா்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம், கழிவுநீா்த்தொட்டி மரணங்கள் இனி இல்லை என்ற நிலைமையை அடைவதே நமது லட்சியமாக இருக்கவேண்டும். இனி நாடு முழுவதும் இயந்திரங்கள் மூலமாகவே இத்தகைய அபாயகரமான பணிகள் செய்யப்பட வேண்டும் என்ற நிலைமை உருவாக வேண்டும்.

காட்ரம்பாக்கம் உயிரிழப்புகளே இவ்வகையில் கடைசியானவையாக இருக்கட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com