Enable Javscript for better performance
பழைமை பாராட்டும் பண்பு!- Dinamani

சுடச்சுட

  

  பழைமை பாராட்டும் பண்பு!

  By கிருங்கை சேதுபதி  |   Published on : 23rd February 2021 12:53 AM  |   அ+அ அ-   |    |  

   

  பழையதென்றால் ஒன்றுக்கும் பயனில்லாதது என்று கருதும் மனப்போக்கு
  எல்லாருக்குள்ளும் ஒரு தீநுண்மி போல இருக்கிறது. தூய்மைப்படுத்துதல் என்னும் பெயரில் பழையதைக் கழிக்கும் பணியாய்ப் பண்பாட்டுக்கு முரணியதாய் அது பரவியும் வருகிறது.

  பழந்தமிழ்ப்பண்புகளுள் பழைமை பாராட்டல் மிகவும் இன்றியமையாதது. "முன்னைப்பழைமைக்கும் முன்னைப் பழம்பொருளாகப்' பரம்பொருளைப் பார்க்கும் மரபு நம்முடையது. நட்பில் பழைமைக்குத் தனித்த இடத்தைத் திருக்குறள் கொடுக்கிறது. உணவில் கூடப் "பழைய'தற்கு அமுதம் என்றுதான் பெயர். பழகிப் பழகிப் பழையதாகிப் போனதில் இருக்கும் பதிவும் பக்குவமும் பயனும் புதியதில் வந்துவிடாது.

  பழைமையில் இருந்துதான் புதுமையே தோன்ற முடியும்.

  என்னதான் பாவேந்தர், "கிழியட்டும் பழம்பஞ்சாங்கம்' என்று பாடினாலும், இன்னும் பல வீடுகளில் "பழம்பஞ்சாங்கங்களைப்' பாதுகாக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிலும் பலர், பழந்தமிழ் ஏடுகளைப் பாதுகாக்கத் தவறியதால்தான் செம்மொழிச்சிறப்புக்குரிய தொன்னூல்கள் பலவற்றை நாம் இழந்திருக்கிறோம் என்பதை உ.வே.சா. போன்றவர்களின் உயர் தியாக வாழ்க்கையில் இருந்து அறிகிறோம்.

  "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல' என்று நன்னூல் சொன்னதையே பாடிப் பொருளுரைக்கும் புண்ணியவான்களுக்குப் பணிவோடு சொல்லிக் கொள்வது, பழையன தானாய்க் கழியும்; நீங்களாக எதையும் கழிக்கவேண்டாம் என்பதுதான்!

  பழையன கழிப்பதில் முதலாவது இடத்தில், ஓலைச்சுவடிகள் இருந்தன; இப்போது பத்திரிகைகள், புத்தகங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் மனிதர்களும் அவ்வாறே ஆக்கப்பட்டுவருகிற அவலம் மலிந்துவருகிறது.

  விருட்சங்களுக்கு வேர்கள் முக்கியமானவை. இலையும், தளிரும், பூவும், பிறவும் இடையில் தோன்றி, இடையிலே விடைபெற்றுக் கொள்ளுபவை. அவை தொடர்ந்து தோன்ற, வளர, வாழ, வேர்கள் இன்றியமையாதவை; வரலாற்றுக்கும் அப்படித்தான்; அதுஉண்மைகளால் கட்டமைக்கப்படுவது. இது, இவ்விதம், இன்று நடந்தது என்பது செய்தி; நோக்கமும் விளைவும் உயர்வுடையதாயிருப்பின் காக்கவும் பேணவும் வேண்டுமெனத் தேடுவோருக்குப் புனைவுகள் உறுதிச்சான்றுகள் ஆகமுடியாது. அந்த இடத்தில் ஆவணப்படுத்திக் காக்க வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கிறது. அதில்தான் வரலாறு உயிர்க்கிறது.

  அதனால்தான். காலமும் இடமும் தன்னிரு கால்களாய்க் கொண்டு நடந்துவரும் வரலாற்றின் சுவடுகளை, நம்முன்னோர்கள், கல்லிலும், செம்பிலும், பனையோலைகளிலும் பதித்து வைத்துப் பழ(க்)கினார்கள். அந்த வரிசையில் பின்னர் வந்து வளர்ந்த அச்சு ஊடகங்களும் தனித்த இடத்தைப்பிடித்துக் கொண்டன.

  இன்றைக்கு எத்தனையோவிதமான நவீன அச்சுமின் ஊடகங்கள் வளர்ந்து விட்டன. ஆனபோதிலும், "ட்ரெடில்" எழுத்துகள் தாங்கி வெளிவந்த, பழைய காலத்துப் பழுப்பேறிய ஒற்றைத்தாள் கிளர்த்தும் நினைவுகளும், பதிவுப் பாங்கும் தருகிற அனுபவங்கள் அடர்த்தியானவை; சிறப்பானவை.

  படிக்கத் தெரியாதபோதும் பழங்காலப் பெண்மணிகள் அச்சடிக்கப்பெற்ற பழைய தாள்களையோ, பழநூல்களையோ தம்மையறியாமல் மிதிக்க நேர்ந்துவிட்டால், கையில் எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொள்வார்கள். "சரஸ்வதி' என்று போற்றுவார்கள். அதைப் பார்த்தபோதுதான் ஒரு தெளிவு பிறந்தது, "சமயவாதிகளுக்கு வெள்ளைத்தாமரைப் பூவில் இருக்கும் சரஸ்வதி, சராசரியான மக்களுக்கு வெள்ளைத்தாளில் பிரசன்னமாகிறாள்' என்று!

  இவர்களால்தான் பழந்தமிழ்ப் பனுவல்கள் நமக்குப் பார்க்கவும் படிக்கவும் கிடைத்திருக்கின்றன.

  பழந்தமிழ் நூல்கள் என்றவுடன் சங்க இலக்கியமும் சமய இலக்கியமும்தான் என்று நினைத்துவிடவேண்டாம்; சமகாலத்திற்குச் சற்றுமுந்திய பாரதி, பாரதிதாசன் போன்றோர்களது படைப்புகளையே இன்னும் முற்ற முழுக்கத் தேடித் தொகுக்க முடியவில்லையே!

  அண்மையில் மறைந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களைக்கூட முழுதாய்ப் பார்க்க முடியவில்லையே! படைப்பாளிகளைத்தான் பாதுகாக்கத் திராணியற்றுப் பழகிப்போனோம் நாம்; படைப்புக்களையுமா?

  அதிலும் இலட்சியப் படைப்பாளிகளின் இல்லங்களிலேயே, அவர்கள் சேகரித்துப் படித்த, படைத்த ஆக்கங்கள் அலட்சியப்படுத்தப்படும் அவலங்களை யாரிடமும் சொல்லமுடியாதே! (அவர்களே அக்கதிக்கு ஆளாக்கப்படுவது தனிக்கொடுமை!)

  அதைவிடவும் தலைமுறை பலவாய்த் தேடித்தொகுத்து வைத்த இதழ்களையும், நூல்களையும் நம் கண்ணெதிரிலேயே கரையான் அழித்துவிட்டிருக்கும் கொடுமையால் ஏற்படும் இழப்புணர்வை எதுகொண்டும் ஈடு செய்வது? மிகவும் ருசிகரமான படைப்புகள் எவையென்று நம்மைவிடவும் தெரிந்து சுவைத்துவிடுகின்றன, கரையான்கள்.

  அதற்குப் பயந்துதான் பலரும் பழைய புத்தகக் கடைகளுக்கு கொடுத்துவிடுகிறார்கள்.

  பெருநகரங்களின் தெருவோரங்களில் பரத்திக் கிடக்கும் அந்தக் கடைகளில், வெயிலில் மயங்கிக் கிடக்கும் புத்தகங்களைக் காண வெதும்பும் மனம். அவற்றின்முன் மண்டியிட்டு, அந்தப் பழைய வாசத்தை நுகர்ந்தபடியே புரட்டிப்பார்ப்பதில் ஒருவித ஆறுதல். ஏற்கெனவே, வீட்டில் இருக்கிற நூலாக இருந்தாலும் இன்னொரு பிரதியையும் வாங்கிக்கொள்வதில் நிறைவு!

  பசியால் எரியும் வயிற்றைத் தண்ணீர் ஊற்றி நிறைத்து விட்டு கைகள் நோக எப்படியெல்லாம் எழுதியிருப்பார், அந்த நூலாசிரியர்; விரல் நுனிகள் எரிச்சலுற ஒவ்வோர் எழுத்தாய் எடுத்துக் கோத்திருப்பாரே, அச்சகத்தோழர். வரி வரியாய்ப் படித்துப் பிழை திருத்தி அச்சிட்டு, பைண்டிங் முடித்தபின், முழுநூலாய்ப் பார்த்து முத்தமிட்ட தருணம் எப்படியிருக்கும் என நினைத்துக்கொள்வேன்!
  என்னால் எழுதப்பட்ட புத்தகங்களின் பழைய பிரதிகளை அங்கே கண்டபோது, நான் பரவசம்தான் அடைந்திருக்கிறேன். விரும்பித் தேடுகிறவர்களின் கரங்களில் ஏறுகிறபோது, அது புத்தம்புதுநூலாக அவதாரம் எடுத்துவிடுமே.
  அதுபோல் பழைய இதழ்களில் வரும் படங்களுடனான தொடர்களை, அதன் இடையிடை இடம்பெறும் துணுக்குகளை, விளம்பரங்களை அப்படியே பைண்டிங் செய்து வைத்திருக்கும் தொகுப்புகளைக் கண்டுவிட்டால், ஏற்படும் உற்சாகமே தனிதான். எழுத்தாளர், ஓவியர், இதழாளர் இவர்களையெல்லாம் கடந்த, ரசனை மிகுந்த வாசகர் உள்ளம் போல் அது அமைந்திருப்பதைத் தரிசிப்பதில் அமைதிநிறைந்த மகிழ்வு பரவிச் சுகம் தருமே!
  அவற்றையெல்லாம் இனிவரும் தலைமுறை எப்படிப் பெறும்?
  இணைய ஊடகங்களின் வழியிலான மின்னூலாக்கப் பணிகளால் பல அரிய ஆக்கங்கள் பேணப்பட்டிருக்கின்றன. என்றாலும், கைகளில் எடுத்து விரித்துப் படிக்கும் புத்தகங்கள் தரும் வாசிப்பு நலனுக்கு ஈடாக முடியுமா?
  புதிதாய் வரும் புத்தகங்களை பேணி, வருகிற வாசகர்களுக்குத் தருகிற நூலகங்கள் உண்டு. அவற்றால் மிகவும் பழையவை எனப் புறக்கணிக்கப்படுகிற, பயன்படுத்த இயலாதவை எனக் கழிக்கப்பெறுகிற புத்தகங்களின் ஓரிரு பிரதிகளையேனும், குறைந்தபட்சம் மாவட்டத் தலைநகர நூலகங்களில் ஆவணங்களாகப் பாதுகாக்கலாமே!

  பழையதாகிவிட்டதென்று பணத்தாள்களை எடைக்குப் போட, நம் மனம் எவ்வாறு இசையாதோ, அவ்வாறே, ரசனையோடு வாங்கிப் படித்தவற்றைத் தூக்கிப் போடவும் முடியவில்லை.

  என்ன செய்வது? வாடகை வீட்டின் பெரும்பகுதியை, அடைத்துவைத்திருக்கும் பழைய நூல்களுக்கு மத்தியில், புதிதாய் வருவனவற்றிற்கு ஏது இடம்?

  இந்தக் கவலையோடு இருக்கிற நிலையில்தான் புதுக்கோட்டை "ஞானாலயா' கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து கைப்பேசி அழைப்பு. "நீங்கள் தொகுத்துவைத்திருக்கும் இதழ்களை அனுப்புவதாகச் சொன்னீர்களே' என்ற கேள்வியால் சிறு நம்பிக்கை பூத்தது. படித்துப் பயன்பெற்றதை மற்றவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அவர் அமைத்திருக்கும் அழகிய புத்தகக் கோயில்தான் "ஞானாலயா'.

  வைப்புமுறை, வரிசை, காப்பொழுங்கு அனைத்தையும்விட, அவற்றுள் ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தைத் திறனாய்வுப் பான்மையுடன் எடுத்துரைத்து, தவறுகளை இடித்துரைத்து, எந்தவித முணுமுணுப்பும் முகச்சுழிப்பும் இல்லாமல் கொடுத்து உதவி, எழுதிய, பதிப்பித்த, வாசித்த எல்லாருடனும் தோழமை பூண்டு, அதன் சுவடுகளைப் பதிவாக்கி அடுத்த தலைமுறைக்கு அளித்து உதவுகிற அவரைப்போல், சிலர் இத்தகு அறப்பணிகளைச் செய்துவருகிறார்கள்.
  இந்தச் சிலர் பலராகும் வாய்ப்பு வளர்கிற வரைக்கும், ஆர்வமுள்ளவர்கள் குழுவாய்க் கூடி, இந்த முயற்சியில் இறங்கி, பணியாற்றத் தொடங்கினால், நல்லோர் பலர் முன்வந்து உதவுவார்கள். தன்னார்வக் குழுக்களும் இந்த முயற்சியிலும் இறங்கலாமே.

  எத்தனையோ ஞானிகளின் இதயங்களிலிருந்தும் மூளைகளில் இருந்தும் வந்து உருப்பெற்ற புத்தகங்களின் தாள்கள் வேண்டுமானால் பழையதாகிப் போயிருக்கலாம்; பயன்தரும் பாங்கில் எடுத்துப் படிப்போருக்குள் புத்தாக்கம் தருகிற செயல்பாட்டில் அவை எப்போதும் புதியவைதான். பண்புடையாளர்களின் தொடர்பு பயில்தொறும் எவ்வாறு பயன் தரும் என்பதற்கு, "நவில்தொறும் நூல் நயம் போலும்' என்று உவமை கூறுகிறார் திருவள்ளுவர். பண்புடையாளர்கள் மறைந்துவிட்டாலும் அவர்கள் தந்த பயன்மிகு நூல்கள், அவர்களை மட்டுமன்றி, அவர்களின் உயர்பண்புகளையும் உயிர்ப்புடன் பாதுகாத்து வாழ்வித்துத் தொடர்புடையோர்க்குப் பக்குவமாய்ப் பண்பாட்டைக் கற்றுத் தரும் என்பதற்குத் திருக்குறளே முன்னுதாரணம்.

  நமக்கு முன் விரிந்த எந்தவொரு பழநூலும், நம் முந்தைய ஆவணம்; பேணுவாரைப் பேணும் உலகைக் காண வேண்டும் விரைவில்.

  "நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
  பண்புபா ராட்டும் உலகு!'

  - என்பது வள்ளுவம்.

  அதற்கு முன்னோட்டமாய் அமையட்டும்; "பழைமை பாராட்டும் பண்பு!'

  கட்டுரையாளர்: பேராசிரியர்.

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp