தாமதித்தது போதும்

குறைந்தபட்ச ஆதரவு விலையின் பயன்பாட்டை பெரு விவசாயிகள் மட்டுமே அறுவடை செய்வதாகவும், சிறு விவசாயிகள் அதன் பயன்பாட்டைப் பெறவில்லை என்றும் கருதப்படுகிறது.



வேளாண்துறையில் சீர்திருத்தம், புத்தாக்கங்களை புகுத்த மத்திய அரசு முயற்சிப்பது ஒன்றும் புதிதல்ல. 1991-இல் தேசம் பொருளாதார தாராளமயமாக்கலை தழுவிய காலத்திலிருந்தே உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தியாவில், வேளாண்மையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர ஆளும் அரசுகள் முயற்சித்து வருகின்றன.

தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் நிறைவேற்றப்பட்டிருக்கும் வேளாண் சட்டங்கள், விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நீர்த்துப்போகச் செய்துவிடும் என்பதே விவசாயிகளின் குற்றச்சாட்டு. 

சந்தையில் விளைபொருள்களின் விலை குறைந்தாலும், அரசு நிர்ணயித்த விலையின் அடிப்படையிலேயே அரசு முகமைகள் வேளாண் பொருள்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலை முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பெரும்பாலும் அரிசி, கோதுமை கொள்முதலுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே விவசாயிகளின் உயிர்நாடியான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளித்து, மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதே தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

அத்தியாவசிய பொருள்களை இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பை தளர்த்த வகை செய்யும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத் திருத்தம், பதுக்கலுக்கு வழிவகுக்கும் என்பதால் அதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இச்சட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, சர்க்கரை, வெங்காயம், உருளைக் கிழங்கு போன்ற அத்தியாவசிய பொருள்களை வர்த்தகர்கள்  ஏகபோகமாக இருப்பு வைத்துக் கொள்ள இயலும். 

இதன்மூலம் வர்த்தகர்கள் சந்தையில் விலையேற்றத்துக்கு வழிவகுத்து, முற்றுரிமை (மோனோபோலி) பெற்று விளங்குவர். மேலும் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மெல்ல மெல்ல வர்த்தகர்களின் கரங்களுக்குச் சென்று, சந்தை விலையிலும் அவர்களால் ஆதிக்கம் செலுத்த இயலும்.

பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஒரு சில மாநில விவசாயிகள் மட்டுமே பயன் பெறுவதாகவும், பிற மாநில விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசின் கொள்முதல் பரவல் கொள்கை (டிசிபி) வாயிலாக குறைந்தபட்ச ஆதரவு விலையின் பயன்பாடு பெரும்பாலான மாநில விவசாயிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.

1997-98-இல் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்முதல் பரவல் கொள்கை, தொடக்கத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், 2005-க்குப் பின்னர் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமும் இக்கொள்கையை ஏற்கத் தொடங்கியது. அதன்படி, பொது விநியோகத் திட்டத்துக்கான கொள்முதல் பொறுப்பு அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசால் பகிர்ந்தளிக்கப்பட்டு, அதற்கான தொகையும் விடுவிக்கப்படுகிறது.

2015 ஜூலை வரையிலான நிலவரப்படி, 15 மாநிலங்கள் இம்முறையை ஏற்றுக் கொண்டதாகவும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாநிலங்களுக்கு இடையே வேறுபாடு நிலவுவதாகவும் உணவுப் பாதுகாப்புக் கழகம் குறிப்பிடுகிறது.

மத்திய அரசால் அரிசி, கோதுமை அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படும் மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தரப் பிரதேச பகுதிகளிலிருந்து கொள்முதல் நடவடிக்கை திசைமாறி, பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டதே கொள்முதல் பரவல் கொள்கையின் சாதனையாகக் கருதப்படுகிறது.

2000-ஆம் ஆண்டு வரை 90% கோதுமை, அரிசி மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் கொள்முதல் செய்யப்பட்டு, வெறும் 10% மட்டுமே பிற மாநிலங்களில் பெறப்பட்டன. கொள்முதல் பரவல் கொள்கை விரிவுபடுத்தப்பட்ட பின்னர், பிற மாநிலங்களின் பங்களிப்பு கடந்த 2012-13 காலகட்டத்தில் 25-35% ஆக உயர்ந்தது. குறிப்பாக, அரிசியை எடுத்துக் கொண்டால், நாட்டில் மொத்த கொள்முதலில் சத்தீஸ்கர், ஒடிஸô ஒவ்வொன்றும் 10% பங்களிப்பை நல்குகின்றன. 

கோதுமையை பொருத்தவரை 2020-21-இல் மட்டும் பஞ்சாபை விட மத்திய பிரதேசத்தில் அதிகப்படியாக, அதாவது 33% பொது முகமைகளால் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. அதேவேளையில் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகளிடமிருந்து முறையே 22%, 18% மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. 

இதன்மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையின் கீழ் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் மட்டுமே பயன்பெறுவதாகக் கூறுவது ஏற்புடையது அல்ல என்பதை உணரலாம். 

இதேபோல், குறைந்தபட்ச ஆதரவு விலையின் பயன்பாட்டை பெரு விவசாயிகள் மட்டுமே அறுவடை செய்வதாகவும், சிறு விவசாயிகள் அதன் பயன்பாட்டைப் பெறவில்லை என்றும் கருதப்படுகிறது. ஆனால், தேசிய அளவில், அரசு முகமைகளுக்கு அரிசி சப்ளை செய்யும்  10 ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் வைத்திருக்கும் பெரு விவசாயிகளின் பங்களிப்பு வெறும் ஒரு விழுக்காடு மட்டுமே. 

அதேசமயம், 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளின் பங்களிப்பு 70%-ஆகவும், நடுத்தர விவசாயிகளின் பங்களிப்பு 29%-ஆகவும் இருக்கிறது. கோதுமை சப்ளையில் மூன்று விழுக்காடு பெரு விவசாயிகளும், 56% சிறு விவசாயிகளும் இடம்பெறுகின்றனர். 

வேளாண்துறையில் மேற்கொண்டு சீர்திருத்தங்களை புகுத்தும் வண்ணம் கொண்டுவரப்பட்ட சட்டங்களின் சர்ச்சைக்குரிய உட்கூறுகளை நிறுத்திவைத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களிடம், வெளிப்படையான ஆலோசனை நடத்தி, சுமுக முடிவை எடுக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com