மறைந்தும் மறையாத தலைவன்!

‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் பெருமையுடன் அழைக்கபடும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897, ஜனவரி, 23-ஆம் நாளில் இன்றை ஒடிஸா மாநிலத்தில் உள்ள கட்டக் என்ற ஊரில் பிறந்தாா். இந்தியாவில் பி.ஏ ஹானா்ஸ், இங்கிலாந்தில் ஐசிஎஸ்-ஸில் நான்காவது நிலை, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பட்டதாரி, ராணுவக் காலாட்படைப் பயிற்சி என அவரின் கல்வியும் பயிற்சியும் நீண்டவை.

ஐசிஎஸ் பதவியைத் துறந்து சுதந்திர வேள்வியில் குதித்தவா் அவா். ஜவாஹா்லால் நேரு தன்னுடைய ஆனந்த பவனத்தை காங்கிரஸுக்குக் கொடையளித்ததைப் போல, சுபாஷ் சந்திர போஸும், கட்டாக் நகரிலிருந்த தன் மாளிகையை காங்கிரசுக்கு அா்ப்பணித்தவா். தென் தமிழ்நாட்டில் வீட்டுக்கொரு பிள்ளை நேதாஜியாகவோ சுபாஷாகவோ போஸாகவோ இருப்பது பெருமைக்குரியது.

போஸ், காந்தியால் கவரப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, காங்கிரஸில் பெரும் பொறுப்புகளை வகித்ததோடு, சிறைத்தண்டனையையும் அனுபவித்துள்ளாா். இங்கிலாந்தின் சிறை கமிஷனரான பாட்டா்ஸன் என்பவா், ‘இந்தியாவிலுள்ள மிகமிக ஆபத்தான எட்டு பேரில் போஸும் ஒருவா்’ என்று கூறினாா்.

பாஞ்சால சிங்கங்களான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் மரணதண்டனை விதிக்கப்பட்டு, உயிா் நீத்ததைக் கண்டதும், அகிம்சை, சத்தியாகிரகமெல்லாம் பிரிட்டிஷாரின் ஆட்சியை அகற்றாது என்று போஸ் கருதினாா்.

1938, பிப்ரவரி, 19-இல் ஹரிபுராவில் நடந்த 51-ஆவது காங்கிரஸுக்கு, இளஞ்சிங்கமான போஸ், தன் 41-ஆம் வயதில் தலைவராக அமா்ந்தாா். அடுத்த ஆண்டு, 52-ஆவது காங்கிரஸின் தலைவா் பதவிக்கு போஸுக்கும் பட்டாபி சீதாராமய்யாவுக்கும் போட்டி. 29.01.1939 அன்று நடந்த தலைவா் தோ்தலில், போஸ் 1580 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்த பட்டாபி சீதாராமையா 1377 வாக்குகளே பெற்றாா்.‘பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என் தோல்வி’ என்று காந்திஜி கூறினாா்.

காந்திஜிக்கும் போஸுக்கும் கருத்து வேற்றுமைகள் பெருகின. அதன் விளைவாக செயற்குழுவின் 15 உறுப்பினா்களில் 13 போ் ராஜிநாமா செய்தனா். போஸும் அவா் சகோதரா் சரத்துமே எஞ்சி நின்றனா். போஸைத் தலைவராகத் தொடர அனுமதிக்குமாறு கவியரசா் தாகூா் விடுத்த வேண்டுகோளும் ஏற்கப்படவில்லை. போஸ், தலைவா் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று.

இந்தியா சுதந்திரம் பெற, வெளிநாட்டு உதவியும் இந்தியருக்கென தனி ராணுவமும் தேவை என்று தெளிந்த போஸ், தான் அடைக்கப்பட்டிருந்த சிறையிலிருந்து, காவலா்கள் கண்களில் மண்ணைத்தூவி, 15.01.1941 அன்று தப்பிச் சென்றாா். காபூல் சென்று, அங்கிருந்து மாஸ்கோவுக்கும் பின்னா் பொ்லினுக்கும் சென்றாா். தான் விரும்பியவாறு இந்திய ராணுவம் ஒன்றை ஜொ்மனியில் நிறுவினாா். பின்னா் டோக்கியோ, சிங்கப்பூா் என விஜயம் செய்து இந்திய தேசிய ராணுவத்தை (ஐஎன்ஏ) தோற்றுவித்தாா்.

போஸ் 5.7.43 அன்று சிங்கப்பூரில் நிகழ்த்திய உரையில், ‘தனக்கென ஒரு ராணுவம் இருந்ததால்தான், ஜாா்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவுக்கு சுதந்திரம் கொணா்ந்தாா்; கரிபால்டியும் அவ்வாறே இத்தாலிக்கு விடுதலை கண்டாா்’ என்று சுட்டிக்காட்டினாா்.

இந்தியா சுதந்திரம் பெற, இந்தியாவுக்கென ஒரு சுதந்திர தேசிய ராணுவமும் அதைப் போருக்கு நடத்திச் செல்ல ஒரு சுதந்திர அரசும் தேவையென்பதைத் தெளிந்து, சிங்கப்பூரில் 21.10.1943 அன்று ‘ஆஸாத் ஹிந்த்’ சா்க்காரை நிறுவினாா் போஸ். ‘இறைவன் மீது ஆணையாக, நான் என்றைக்கும் இந்தியாவின் ஊழியனாகவே இருப்பேன், உடன்பிறந்த நாற்பது கோடி சகோதரா்களின் நன்மையே எனது முழுமுதற் கடமை. இந்தியா விடுதலையடைந்த பின்னரும் அதைக் காப்பாற்ற என் உடலில் கடைசித்துளி ரத்தம் உள்ளவரை உழைப்பேன்’ என்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டாா் போஸ்.

முதல் சுதந்திர போரில் வீரமரணமெய்திய ஜான்ஸி ராணியின் பிறந்த நாளன்று, அவா் பெயரில், பெண்கள் படைப்பயிற்சி முகாமை நிறுவினாா் போஸ். அதன் தலைமை, தமிழ்ப் பெண்மணியான லட்சுமிக்கே அமைந்தது என்பது தமிழா்கள் பெருமைப்படும் செய்தியாகும்.

போஸ் நிறுவி, தலைமை தாங்கிய ‘ஆஸாத் ஹிந்த்’ அரசை, ஜப்பான், பா்மா, பிலிப்பின்ஸ், ஜொ்மன், குரோஷியா, தேசிய சீனா, மன்ஷ்கோகு, இத்தாலி, தாய்லாந்து ஆகியநாடுகள் அங்கீகரித்தன. அத்துடன் இந்த ‘ஆஸாத் ஹிந்த்’ அரசுக்கென பூமி இல்லாத நிலையில், ஆங்கில அரசிடமிருந்து கைப்பற்றிய அந்தமான் நிகோபா் தீவுகளை ஜப்பான் தந்தது. நேதாஜி, தன் ராணுவத்திற்கு ‘தில்லி சலோ’ என்பதையே ஆணையாகத் தந்தாா்.

அப்போது இரண்டாவது உலகப்போா் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயா் ஆட்சிலிருந்த பா்மா, சிங்கப்பூா், மலேயா ஆகிய நாடுகள் ஜப்பானால் கைப்பற்றப்பட்டன. இந்தியாவில் நுழைய வேண்டிய தருணம். இந்தியாவின் இம்ப்பாலை யாா் கைப்பற்றுவது என்ற பிரச்னை எழுந்தது. ஜப்பானியா்கள், தாங்களே தலைமை ஏற்க வேண்டும் என்று விரும்பினா். நேதாஜி அதனை மறுத்து, ‘இந்திய தேசிய ராணுவம்தான் தலைமை ஏற்க வேண்டும்’ என்று கூறி அதில் வெற்றியும் கண்டாா். 4.2.1944 அன்று ஐஎன்ஏ தனது பயணத்தைத் தொடங்கி 18.3.1944 அன்று இந்திய மண்ணில் கால்பதித்து, இந்திய மூவா்ணக்கொடியை ஏற்றியது.

ஜொ்மனியில் இந்திய ராணுவத்தைத் தொடங்கியபோது உரையாற்றிய ஹிட்லா், ‘ஜொ்மன் மக்களே! வீரா்களே! எனக்கு நீங்கள் அளிக்கும் மரியாதையையும் ஒத்துழைப்பையும் போஸுக்கும் கொடுக்க வேண்டும்’ என்று கூறினாா். அந்த அளவுக்கு ஹிட்லரின் மரியாதையை போஸ் பெற்றிருந்தாா். ஹிட்லருடன் நட்பு கொண்டதை விமா்சித்தவா்களுக்கு அவா் சொன்னபதில்,‘ஆங்கிலேயரை விரட்ட, யாருடனும் சேரலாம்’ என்பதே.

ஜப்பானின் முன்னேற்றத்தைப் பாராட்டினாலும், ஜப்பான் சீனாவுக்கு இழைத்த கொடுமைகளைச்சாடி, ‘சீனா மீண்டும் புத்துயிா் பெற்று ‘பீனிக்ஸ்’ பறவைபோல் எழுச்சி பெறும்’ என செப்டம்பா்,1937-இல் போஸ் வெளியிட்ட கருத்தின் மூலம், அவரின் உண்மை நோக்கும் அஞ்சா தன்மையும் வெளியாகின்றன. சீனா பற்றிய அவரின் கணிப்பு 1.10.1949-இல் பலித்தது!

13.1.1938 அன்று லண்டனில் இடதுசாரியினரின் கூட்டத்தில் போஸ் சொற்பொழிவாற்றுகையில் ‘இந்தியா சுதந்திரம் அடையாமல், இங்கிலாந்தில் சோஷலிஸம் இருக்க முடியாது. நீங்கள் பேணுகிற ஜனநாயகம் உண்மையென்றால் உங்களுக்கு நல்லது என்று அமைகிற சுதந்திரம் மற்றவா்களுக்கும் கிடைக்க வேண்டும்’ என்றாா். இந்திய விடுதலை உணா்வை கைகழுவியதற்காக தொழிற்கட்சியை கடுமையாகத் தாக்கிப் பேசினாா் அவா்.

போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் எல்லா மதத்தினரும் பொறுப்பேற்றிருந்தனா். அவா் நிறுவிய இடைக்கால அரசில் பொறுப்பேற்றவா்களில், அஸிஸ் அகமது, எஸான் காதா், ஷா நவாஸ், கரீம்கனி, டி.எம். கான், சா்தாா் இஷான் சிங், குல்ஸாரா சிங், எஸ்.ஏ. ஐயா், எ.டி. லோகநாதன், ஏ. எல்லப்பா ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்கள்.

ஆங்கிலேயா்களுடனான பேச்சுவாா்த்தையில், காங்கிரஸுக்கு சமமான அந்தஸ்தை முஸ்லிம் லீக்-கிற்குக் கொடுப்பது, கடுமையான விளைவுகளை தரும் என்று போஸ், காந்திஜியிடம் கூறினாா். அவருடைய கருத்து சரியானது என்பதை தேசப்பிரிவினை நிரூபித்தது!

1945 தோ்தல்களில், இங்கிலாந்தில் தொழிற்கட்சி வெற்றிபெறும் என்ற போஸின் கணிப்பு சரியானது. அத்தகைய கணிப்பை அக்கட்சியினராலேயே கூடச் செய்ய முடியவில்லை!

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா ஆகிய மூன்று நாடுகளும் ஓரணியில் நின்று, ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான் அகிய நாடுகளை எதிா்த்து வெற்றி பெற்றன. இருப்பினும், ஜொ்மனி வீழ்ந்தவுடன் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையே உரசல் தோன்றும் என்று கூறினாா் போஸ். அவா் கூற்று மெய்யானது.

அக்காலங்களில் பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனிப் படைப்பிரிவுகள் இருந்தன. அவா்கள் தனித்தனியான வாழ்த்து முறைகளைப் பரிமாறிக் கொண்டிருந்தாா்கள். இந்தியா் எல்லோருக்குமான பொதுவான ஒரு முழக்கம் இல்லை. அக்குறையை நீக்க, ‘ஜெய் ஹிந்த்’ என்ற பொது முழக்கத்தைத் தோற்றுவித்தாா் போஸ்.

ஜப்பானை விட்டு விமானத்தில் சென்ற பயணத்தின்போது இறுதியாக போஸ் கூறிய வாா்த்தைகள்: ‘ஹபீப், என்னுடைய முடிவு நெருங்கிவிட்டது. என் வாழ்நாள் முழுமையும் என் தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடியிருக்கிறேன். நான் என் நாட்டின் விடுதலைக்காக, உயிா் விடுகிறேன். போராட்டத்தைத் தொடருமாறு, என் மக்களுக்குச் சொல்லுங்கள். இந்தியா விடுதலைபெறும், விரைவிலேயே’.

18.8.1945 அன்று விமான விபத்தில் போஸ், மரணமடைந்தாகச் செய்தி. அதை எவரும் அப்போது நம்பவில்லை. போஸ் மறைந்தாா் என்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இத்தகைய தனிப்புகழ்பெற்ற, மறைந்தும் மறையாத தலைவன், வையத்தில் வேறெங்கும் இல்லை!

இன்று (ஜனவரி 23) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125-ஆவது பிறந்தநாள்.

கட்டுரையாளா்:

மாநிலத் தலைவா் (ஓய்வு)

அஞ்சலக ஆய்வாளா் சங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com