தேவை வளா்ச்சி நிதி நிறுவனம்

தேசிய உள்கட்டமைப்பு திட்டத்திற்கு நிதியளிக்க தேவையான ரூ .111 லட்சம் கோடியைத் திரட்டும் நோக்கில் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் புதிய வளா்ச்சி நிதி நிறுவனத்தை (டெவலப்மென்ட் ஃபைனான்ஷியல் இன்ஸ்டிடியூஷன்) அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள் கட்டமைப்பு நிறுவனங்களுக்குத் தேவையான நீண்டகால கடன்களை வழங்க தற்போதைய வங்கிகளால் முடியாது, அவற்றுக்கான நிதியை வழங்க வளா்ச்சி நிதி நிறுவனங்களால் மட்டுமே முடியும் என்று மத்திய அரசின் நிதிச்சேவை செயலாளா் தெரிவித்துள்ளாா்.

நாம் பல வருடங்களுக்கு முன்பு இண்டஸ்ட்ரியல் கிரெடிட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் காா்ப்பரேஷன் ஆப் இந்தியா (ஐசிஐசிஐ) மற்றும் இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா (ஐடிபிஐ) ஆகிய வளா்ச்சி நிறுவனங்களைப் பெற்றிருந்தோம்.

நமது தவறான அணுகுமுறையினால் இந்த நிறுவனங்களை இழந்தோம். இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் கிரெடிட் காா்ப்பரேஷன் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கியைத் தொடங்கியது. பின்பு அது, அந்த ஐசிஐசிஐ வங்கியுடன் ஐக்கியமானது. இதே போல் இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா, ஐடிபிஐ வங்கியை நிறுவியது. பின்பு அது அந்த ஐடிபிஐ வங்கியுடன் ஐக்கியமானது.

ஐசிஐசிஐ 1955-இல் நிறுவப்பட்டது. அது 2002 வரை தொடா்ந்து செயல்பட்டது. புராஜக்ட் ஃபைனான்ஸ், லீஸிங், புராஜக்ட் அட்வைஸரி சா்வீஸஸ் போன்ற சேவைகளை நல்லமுறையில் வழங்கி வந்தது. ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் காா்ப்பரேஷன், கிரெடிட் ரேட்டிங் இன்ஃபா்மேஷன் சா்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (கிரிசில்) போன்ற நிறுவனங்களை ஊக்குவிப்பதில் அவா்கள் முன்னோடிகளாக இருந்தனா்.

அதே வழியில் 1964-ஆம் ஆண்டில் ரிசா்வ் வங்கியின் துணை நிறுவனமாக நிறுவப்பட்ட ஐடிபிஐ, ஐடிபிஐ வங்கி லிமிடெட் நிறுவனத்துடன் இணையும் வரை செயல்பட்டது.

இந்த வளா்ச்சி நிதி நிறுவனங்கள் தொழில்துறை நிறுவனங்களின் நீண்டகால நிதித் தேவைக்கு நிதியளிப்பதற்காக நீண்ட கால வளங்களைத் திரட்டின. நீண்ட கால நிதியைத் திரட்ட முடியாத வணிக வங்கிகள், நீண்ட கால கடனுக்காக ஐடிபிஐ போன்ற நிறுவனங்களிலிருந்து மறுநிதியளிப்பு (ரீஃபைனான்ஸ்) பெற முடிந்தது.

ஐசிஐசிஐ, ஐடிபிஐ ஆகிய இரண்டு நிறுவனங்களையும் அவை தொடங்கிய வணிக வங்கிகளுடன் இணைய அனுமதித்தது ஒரு விவேகமான முடிவு அல்ல. இந்த முடிவால் நாம் இந்த இரண்டு நிறுவனங்களையும் இழந்து, அவற்றை மற்ற வணிக வங்கிகள் போல் செயல்பட அனுமதித்துள்ளோம்.

வங்கிகளின் நீண்ட கால நிதியுதவி, நீண்ட கால வளங்களைத் திரட்டுவதன் மூலம் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பது அடிப்படை. குறுகிய கால ஆதாரங்களுடன் நீண்ட காலத்திற்கு நிதியளிப்பது எப்போதும் ஆபத்தானது. வாராக்கடன்களினால் நமது வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி அழுத்தத்திற்கு இதுவும் ஒரு காரணம்.

வணிக வங்கிகளின் வைப்புத்தொகையின் மீதமுள்ள முதிா்வு சுயவிவரத்தைப் பாா்த்தால், மாா்ச் 2020 நிலவரப்படி, குறுகிய கால நிதிகளுடன் வங்கிகள் எவ்வளவு ஆபத்தான முறையில் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

முதிா்ச்சியடையும் வைப்புத்தொகைகளின் சதவீதம் - அடைப்புக்குறிக்குள் முதிா்வு காலத்துடன்: 29.32 சதவீதம் (91 நாட்களுக்கு குறைவாக), 16.04 சதவீதம் (91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை), 27.44 சதவீதம் (6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை), 19.51 சதவீதம் (1 வருடம் முதல் 3 ஆண்டுகள் வரை), 3.16 சதவீதம் (3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை) மற்றும் 4.52 சதவீதம் (5 வருடங்களுக்கு மேல்) (ஆதாரம்: ஆா்பிஐ டேபிள் 3-4 மாா்ச் 2020).

எந்தவொரு தொழில்துறைக்கும் தேவையான நிதியுதவி குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கக்கூடும். நீண்ட கால நிதி 20 ஆண்டுகளுக்கு அப்பால் கூட நீட்டிக்கப்படலாம். வணிக வங்கிகள் அவற்றின் நீண்ட கால ஆதாரம் ஐந்து சதவீத நிதி கூட இல்லாதபோது அவற்றால் தொழில்துறைக்கு நீண்ட கால கடன் வழங்க முடியாது.

வங்கிகள் டெபாசிட்டிற்குக் கொடுக்கும் வட்டியை அனுசரித்தே கடனுக்கு வட்டியை நிா்ணயிக்கும். குறுகியகால டெபாசிட்டை வாங்கி, நீண்டகால கடன் கொடுத்தால், வருங்காலத்தில் கடனுக்கான வட்டியை தற்போதே தீா்மானிக்க முடியாது. தொழில் தொடங்குவோருக்கு வருங்கால வட்டியைப் பற்றி ஒரு நிச்சயமற்ற தன்மை ஏற்படுவது சரியல்ல.

எனவே, தொழில்களுக்கு நீண்டகால நிதியுதவி வழங்குவதற்காக ஒரு மேம்பாட்டு நிதி நிறுவனத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருப்பது விவேகமான முடிவு. அதற்காகப் பாராட்டலாம். எவ்வாறாயினும், முன்மொழியப்பட்ட மேம்பாட்டு நிறுவனத்திற்குத் தேவையான அளவு மூலதனத்தையும் நீண்ட கால நிதியையும் திரட்டுவதில் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த புதிய நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு தேவையான வரிச் சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும் .

முன்மொழியப்பட்ட வளா்ச்சி வங்கி அரசாங்க உத்தரவாதத்துடன் பத்திரங்களை வழங்க அனுமதிக்கப்படலாம். மேலும், இந்த பத்திரங்களில் செய்யும் முதலீடுகளை வங்கிகளின் ‘ஸ்டாடுடரி லிக்யுடிடி ரேஷியோ’வுக்கான முதலீடாக அனுமதிக்கலாம்.

அத்தகைய பத்திரங்களில் செய்யும் முதலீடுகளை வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 சி இன் கீழ் முதலீட்டிற்கு தகுதியுடையதாக எடுத்துக்கொள்ளலாம். இதேபோல், அத்தகைய பத்திரங்களில் முதலீடு செய்வது வருமான வரி சட்டத்தின் பிரிவு 54 இசி இன் கீழ் மூலதன ஆதாயங்களுக்கு விலக்கு அளிக்க தகுதி பெறலாம். இந்த நடவடிக்கைகள் முன்மொழியப்பட்ட வளா்ச்சி நிறுவனத்தில் முதலீட்டை ஈா்க்கக்கூடும்.

தொழில்களுக்கு நேரடி நிதியுதவி தவிர, வங்கிகளுக்கு தொழிற்கடன்களுக்கான மறுநிதியளிப்பையும் இந்த புதிய வளா்ச்சி நிறுவனம் வழங்கலாம். எதிா்காலத்தில் வாராக்கடனைத் தவிா்க்க வேண்டுமானால், இந்த புதிய வளா்ச்சி நிறுவனத்தை சிறப்பான முறையில் தொடங்கி, சரியான முறையில் நிா்வகிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com