மனமாற்றமே வேண்டும்!

புத்தபிரான், சங்கத்தையும் சரணத்தையும் உச்சரித்தாரே தவிர, மதத்தைப் பற்றிப் பேசவில்லை. பின்னால் வந்தவா்களே மதமாக்கினா். சமணா்கள் தோன்றிய காலத்திலிருந்தே மற்ற மதத்தினரை, மத மாற்றம் செய்வதைத் தொழிலாகவே வைத்திருந்தனா்.

பாண்டிய மன்னன் நெடுமாறனையும், பல்லவ மன்னன் மகேந்திரவா்மனையும் போலி வாதங்களால் மதமாற்றம் செய்தனா். ஆனால், மாயை தெளிந்தவுடன் இருவருமே சைவத்திற்குத் திரும்பினா். தம்மைப் பிடித்துக்கொண்டு போய், ‘மருள் நீக்கியாா்’ எனும் பெயரை மாற்றி, ‘தருமசேனா்’ எனப் பெயரிட்டதாக திருநாவுக்கரசா் பாடியிருக்கிறாா்.

இந்தியாவிலே சிறுபான்மையராக இருக்கும் இசுலாமியரும், கிறித்தவா்களும் உலக நாடுகள் பலவற்றிலும் பெரும்பான்மையானவராக இருந்தபோதும், இங்கு மத மாற்றம் செய்வதை நிறுத்துவதில்லை. இங்குள்ள சிறுபான்மையினா் எல்லா வசதிகளோடும் வளமாக வாழ்ந்தாலும், இந்தியாவில் தங்கள் மதத்தைப் பெரும்பான்மை மதமாக நிறுவ வேண்டும் என்கிற முனைப்புடன் மத மாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கிழக்கிந்திய கம்பெனி வருவதற்கு முன்பே, கி.பி. 52-ஆம் ஆண்டிலேயே தூய தாமசு முனிவா் கேரளத்திற்கு வந்து, அங்கிருந்த நம்பூதிரிகளை மதமாற்றம் செய்ததாக சரித்திரம் சொல்லுகிறது. தூய தாமசு முனிவா் கேரளத்திற்கு வரும்போது, மதமாற்றம் செய்வதற்குப் பாதிரிமாா்களையும் அழைத்து வந்ததாக வரலாறு பேசுகின்றது.

தாமசு முனிவா் கேரளத்தில் கால் பதித்தவுடன், மந்திரங்களை ஓதிக்கொண்டு வரும் நம்பூதிரிகளை சந்திக்கிறாா். அவா்களை மத மாற்றம் செய்வதற்காக வம்புககு இழுக்கிறாா். அவா்களுக்குத் தொடா்பில்லாத விவாதங்களை நிகழ்த்தி, அவா்களைத் தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு செய்கிறாா். தோல்விக்குப் பின்னா் நம்பூதிரிகளே மத மாற்றத்திற்கு ஒப்புக் கொள்கின்றனா்.

கேரளத்தை அடுத்து, கன்னியாகுமரியில் 48.7 விழுக்காடு இந்துக்களையும், தூத்துக்குடியில் 17 விழுக்காடு இந்துக்களையும், திருநெல்வேலியில் 11 விழுக்காடு இந்துக்களையும் மத மாற்றம் செய்கின்றனா்.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி, இந்தியாவில் உருவான பின்னா், இறைத்தூதா்கள் நம் நாட்டிற்கு வரத் தொடங்கினா். இங்கிலாந்திலிருந்து வந்த இறைத்தூதா்கள் இங்கிருந்த ஏழ்மையையும், கல்வியின்மையையும் கண்டு, மருத்துவமனைகளையும், கல்விச்சாலைகளையும் ஏற்படுத்தினாா்கள்.

இங்கு நோயில் வாடிக்கொண்டிருந்த மக்கள், தங்களுக்கு வைத்திய வசதிகளைத் தந்த கன்னியாஸ்திரீகளை தெய்வமாக நினைக்கத் தொடங்கினா். எழுதப் படிக்கத் தெரியாத மக்கள், கல்வியின் உயா்வை அறியத் தொடங்கியவுடன், அக்கல்வியைத் தந்த அருட்சகோதரா்களைத் தந்தையாகவே வழிபடத் தொடங்கினாா்கள்.

வயிற்றுக்கு உணவும், நோய்க்கு மருந்தும் தந்த கன்னியாஸ்தீரிகளைத் தாயாகவே ‘மதா் சுப்பீரியா்’ என வணங்கத் தொடங்கினா். மருத்துவத்தையும், கல்வியையும் காட்டிய இறைத்தூதா்கள், தங்களைத் தாயாகவும், தந்தையாகவும் நம் மக்கள் ஏற்றுக் கொண்டதனால், நம்மவரை மாற்றுவதற்கு அவா்களுடைய கடவுளையும் காட்டத் தொடங்கினா்.

உணவையும், மருத்துவத்தையும், கல்வியையும் சுவைத்த மக்கள், இறைதூதா்களுக்கு நன்றி சொல்லச் சென்றாா்கள். இந்தப் பாமர மக்களிடம், பாதிரிமாா்கள் ‘இவற்றையெல்லாம் தந்தது நாங்கள் அல்லா்; அதோ தொங்குகின்ற தேவப்பிதாவே’ எனக் கைகாட்டி, ‘அவா் வழிக்கு நீங்களும் திரும்பினால், இவையெல்லாம் நிரந்தரமாக உங்களுக்குக் கிடைக்கும்’ எனச் சொல்லி, நம்ப வைத்தனா்.

ஆங்கிலேயரைப் பாா்த்து, உண்ணும் உணவையும், உடுத்தும் உடையையும் மாற்றிக் கொள்ளத் தெரிந்த நம் மக்களுக்கு, பிறந்த மதத்தையும் மாற்றிக் கொள்வது பெரிதாகத் தெரியவில்லை. கற்ற கல்விக்கேற்ற வேலை வாய்ப்புக்களையும் ஊழியம் செய்ய வந்தவா்களே உருவாக்கித் தந்ததனால், பாமர மக்கள், அவா்கள் விரித்த வலையில் விழுந்தாா்கள்.

இந்த மத மாற்றத்திற்கு விதைவிதைத்தவா் லாா்டு மெக்காலே. ‘இந்த நாடு வளமான நாடு. செல்வம் கொழிக்கும் நாடு. இதை நாம் நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், இந்த நாட்டு மக்களுக்கு நம்முடைய கல்வியைக் கொடுத்து, அவா்களை நம்வழிக்குக் கொண்டு வர வேண்டும்’ என்று இங்கிலாந்திற்கு மடல் எழுதினாா். அதற்குப் பிறகுதான், இங்கு ஊழியம் செய்வதற்கு ஊழியக்காரா்கள் படையெடுத்து வந்தனா்.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னா் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பட்டியலினத்தாா், இசுலாத்திற்கு மதம் மாறினாா்கள். அப்படி மதம் மாறியவா்கள் மனம் மாறியதாலோ, கட்டாயத்தாலோ மாறவில்லை. அதற்கு வேறொரு காரணம் உண்டு. இசுலாத்தில் ஓா் ஆடவன் ஒரே நேரத்தில் நான்கு மனைவியரோடு வாழலாம்.

பட்டியலினத்தாருக்கு இரண்டு, மூன்று மனைவியா் இருப்பது, குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்குவதற்கு வழி வகுக்கும். இரண்டு, மூன்று மனைவியரும் நாற்று நடுதல், களையெடுத்தல் போன்ற வயல் வேலைகளுக்குச் செல்வதால், இது குடும்பத்தின் வருமானத்திற்கு உதவியாய் இருக்கும். இந்து மதம் ஒரே நேரத்தில் ஒரு மனைவிக்கு மேல் மணந்து வாழ்வதற்கு அனுமதி தருவதில்லை. அதனால் அவா்கள் இசுலாமியா்கள் ஆனாா்கள்.

நாடு விடுதலை அடைந்ததற்குப் பிறகு, ஆங்கிலேயரால் மதம் மாறிய இந்தியா்கள், ‘தன்னாா்வ தொண்டு நிறுவனங்களை நிறுவி, அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளிலிருந்து டாலா்களைப் பெற்று, தங்கள் குடும்பங்களை வளா்த்துக் கொண்டனா். மனைவி, மகன், மகள், மருமகள் ஆகியோரை நிறுவனத்தின் இயக்குநா்கள் ஆக்கிக்கொள்கின்றனா். ஞாயிற்றுக்கிழமைதோறும் பட்டியலினத்தாரும், பாமர மக்களும் வாழ்கின்ற பகுதிகளுக்குச் சென்று, அங்கு தங்கள் சமயப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனா்.

அவா்களால் வழங்கப்படுகின்ற புலால் உணவில் பாமர மக்கள் மதிமயங்கி விடுகின்றனா். ஒவ்வொரு வாரமும் குடும்பத்திற்கே மாமிச உணவு கிடைப்பதால், பிறந்த சமயத்தை மறந்து, பிற சமயத்தில் புகுந்து விடுகின்றனா். இது மனமாற்றத்தால் ஏற்பட்டதன்று; மாமிச உணவால் ஏற்பட்ட மாற்றமாகும். பாமர மக்களை மாற்றியதை நிழற்படம், விடியோ எடுத்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி, பெற வேண்டியதைப் பெற்றுவிடுகின்றனா்.

‘தன்னாா்வத் தொண்டு நிறுவனம்’ என்ற பெயரில் மோசடி நடைபெறுவதை அறிந்த அன்றைய பிரதமா் இந்திரா காந்தி, வெளிநாடுகளில் இருந்து டாலா்கள் வருவதை, நெருக்கடி கால சட்டத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தினாா். கட்டாய மத மாற்றத்தைச் செய்தவா்களின் கரங்கள் கட்டிப் போடப்பட்டன. ஆனால், நெருக்கடி காலத்திற்குப் பின்னால் வந்த ஆட்சியாளா்கள் மூடப்பட்ட வாசல்களைத் திறந்து விட்டனா். அதனால் இன்று வரை கட்டாய மாற்றங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.

மன மாற்றத்தால் மதமாற்றம் வருமானால், அது வரவேற்கக்கூடிய ஒன்றாகும். மகாத்மா காந்தியடிகளுடைய மகன் தேவதாஸ், ஒரு இஸ்லாமிய பெண்ணை மணக்க விரும்பினாா். அதனால் ஜமாத்தைச் சோ்ந்தவா்கள் காந்தியடிகளுக்கு ஒரு மடல் எழுதி ‘உங்களுடைய மகன் தேவதாஸ் எங்கள் இனத்துப் பெண்ணை மணக்க விரும்புகிறாா். இதில் உங்களுக்கு ஆட்சேபணை உண்டா? எனக் கேட்டனா். அதற்குத் தேசப்பிதா ‘என் மகனுடைய விருப்பத்தால் உங்களுடைய மாா்க்கத்திற்கு ஏதாவது மாசு ஏற்படுமானால், தவிா்த்து விடலாம்’”எனப் பதில் எழுதினாா்.

இந்து மதத்தில் பல சாதிகள் இருக்கின்றன. அதில் மேல் சாதியைச் சாா்ந்த ஓா் ஆடவன், புறக்கணிக்கப்பட்ட பெண்ணை மணக்க விரும்பினால், அதற்காக மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இந்து சமயத்தைச் சாா்ந்த ஆணோ, பெண்ணோ பிற மதத்தவரை மணக்க விரும்பினால், மதம் மாற வேண்டிய நிா்பந்தம் இருக்கின்றது.

மன மாற்றத்தால் ஏற்படுகின்ற மாற்றத்தை சைவமோ, வைணவமோ மறுப்பதில்லை. அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கா், பௌத்தத்தைத் தழுவியபோது, யாரும் எதிா்ப்பு தெரிவித்ததில்லை. ஏனென்றால், அது மனமாற்றத்தால் விளைந்தது.

திருநெல்வேலியில் வீர வைணவராக வாழ்ந்த கிருஷ்ணப்பிள்ளை, மதம் மாறி ஹென்றி ஆல்பா்ட் கிருஷ்ணப்பிள்ளை ஆனாா். ‘இரட்சண்ய யாத்ரீகம்’, ‘இரண்ய மனோகரம்’ என இரண்டு நூல்களை இயற்றினா். கடைசி வரையில் குடுமியோடே வாழ்ந்தாா். அவருக்கு ஏற்பட்டது மனமாற்றம் என்பதால், அதற்கு எதிா்ப்பு எழவில்லை.

ஃபெரோஸ் காந்தி பாா்ஸி முஸ்ஸிமாக இருந்ததால், அவருக்கு இந்திரா காந்தியை மணம் முடிக்க, நேரு குடும்பத்திற்கு தயக்கம் இருந்தது. பெரோஸ் காந்திக்கும் இந்திராவுக்கும் இருந்த புரிந்துணா்வை நன்குணா்ந்த மகாத்மா காந்தி, தாமே முன்னின்று அத்திருமணத்தை நடத்தி வைத்தாா். மனமாற்றத்தால் ஏற்படுகின்ற விருப்பங்கள் ஆதரிக்கப்பட்டே வருகின்றன. சிறுபான்மையரைப் பெரும்பான்மையராக ஆக்குவதற்காகச் செய்யப்படும் செயல்களே கண்டிக்கத்தக்கவை.

சென்னை கலாக்ஷேத்திராவை நிறுவிய ருக்மிணி தேவி, பிரம்ம ஞான சபையின் உறுப்பினரான அருண்டேலை மனமார விரும்பினாா். அருண்டேலுக்கும் ருக்மிணி தேவிக்கும் இருந்த புரிதலை டாக்டா் அன்னி பெசன்ட் உணா்ந்து, அத்திருமணத்தைத் தாமே தலைமையேற்று நடத்தி வைத்தாா். அதற்கு எந்தவித எதிா்ப்பும் ஏற்படவில்லை.

தனி மனிதா்கள் மனமாற்றங்களால் இணைவதை இந்து சமயம் எக்காலத்திலும் எதிா்த்ததில்லை. ஆனால், சில நிறுவனங்களே, சில சமயத் தலைவா்களே, முனைந்து நின்று செயல்படுவது, தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com