பணம் புரண்டால், பற்றாக்குறை அகலும்!

எஸ்தர் டஃப்லோ, பேராசிரியர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ரியர் ஜீன் ட்ரீஸ், எஸ். நாராயண் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பது நல்ல முன்னெடுப்பாகும்.

 தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்திருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் முதல் ஆளுநர் உரையில், ஆட்சிக்கு ஆலோசனை வழங்கிட எஸ்தர் டஃப்லோ, பேராசிரியர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ரியர் ஜீன் ட்ரீஸ், எஸ். நாராயண் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பது நல்ல முன்னெடுப்பாகும். 1996-இல் ஆட்சி அமைந்தவுடன் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி வல்லுநர் குழுவின் ஆலோசனையின் பேரில் ஒவ்வொரு துறையின் முன்னேற்றத்திற்கும் துறைவாரி ஆங்கில அறிக்கைகளாகப் பத்து தொகுதிகளை வெளியிட்டதை இது நினைவுபடுத்துகிறது.
 நோய்த்தொற்று மற்றும் பொருளாதார ரீதியான நெருக்கடியான நிலையில், தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றுள்ளது. பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலையில் தமிழகம் இருப்பதால், அவற்றை எதிர்கொள்ள பொருளாதாரம், அறிவியல், சமூகவியல் என்பதை மையப்படுத்தி ஆலோசனைகளைப் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது.
 தமிழக சட்டப்பேரவையில் முந்தைய அதிமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின்படி, தமிழக அரசின் கடன் ஏறத்தாழ ரூ.5.7 லட்சம் கோடி. இந்தக் கடனோடு மாதாந்திர, வருடாந்திர வட்டியும் கூடி வருவதால் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தக் கடன்கள், மாநில அரசு மற்றும் அதைச் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களை உள்ளடக்கியதாகும்.

 நிலுவையில் உள்ள மற்றும் செலுத்த வேண்டிய வட்டித் தொகை ரூ. 82,730 கோடி (மாநில அரசின் வட்டி ரூ. 53,600 கோடி மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களின் வட்டி ரூ. 29,130 கோடி). இன்றைய நிலவரப்படி நிதி நிலைமையைப் பார்த்தால் மாநிலத்தின் கடன் ரூ. 8 லட்சம் கோடியும், வட்டிக்கான செலவினங்கள் ரூ. 80,000 கோடியுமாக இருக்கும். சுமாராக மாநில குடிமக்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ. 1 லட்சத்துக்கும் மேல் கடன் சுமை உள்ளதாகக் கருதலாம்.

 2020-21-ஆம் ஆண்டின் வருவாய் ரூ. 3,13,700 கோடி (மாநில வரிகளில் இருந்து ரூ. 1,09,000 கோடி, மத்திய அரசு வரியில் இருந்து ரூ. 23,039 கோடி மற்றும் இதர வருமானங்கள் ரூ.1,87,000 கோடி). நிதி பற்றாக்குறை ரூ.59,000 கோடி.
 தலைமை கணக்குத் தணிக்கைக் குழுவின் (சி.ஏ.ஜி.) சமீபத்திய அறிக்கையின்படி, தமிழகத்தின் 2020-21-ஆம் ஆண்டின் மொத்த வருவாய் 1,74,256 கோடி ரூபாயாவும், மொத்த செலவினங்கள் 2,66,561 கோடி ரூபாயாகவும், மொத்த நிதிப்பற்றாக்குறை 92,305கோடி ரூபாயாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

 தமிழக அரசில் 34 துறைகள் உள்ளன. இதில் சமூக நலத்துறை, புள்ளிவிவரத் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து பெரிய வருமானங்கள் மாநில அரசுக்கு வருவதில்லை. மற்ற துறைகளிலிருந்துதான் தமிழக அரசு வருவாயை ஈட்ட வேண்டும்.

 தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரே நிதியாண்டில் ரூ.13ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கைத் துறையின் அறிக்கை கூறுகின்றது. அதுபோல மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் ரூ.1,000 கோடி பயனற்ற முறையில் சென்று விட்டதாகவும் 2019-ஆம் ஆண்டிலேயே நான்கு லட்சம் கோடி தமிழக அரசின் கடன் எட்டப்பட்டுள்ளதாகவும் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது  இது குறித்து தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 தமிழ்நாடு அரசின் மொத்த கடன் சுமை 2018-ஆம் ஆண்டு மார்ச்சுடன் முடிந்த காலத்தில் ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்து 426.63 கோடியாக இருந்தது. இந்தக் கடன் அளவு 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்து 599.33 கோடியாக உயர்ந்தது.

 அதாவது, ஒரே நிதியாண்டில் ரூ.43 ஆயிரத்து 172.07கோடி கூடுதலாக கடன் பெறப்பட்டுள்ளது. இதில், உள்நாட்டில் பெறப்பட்ட கடன்கள் 2018-ஆம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 634.40 கோடியாகவும், 2019-ஆம் ஆண்டு மார்ச்சில் 3 கோடியே 4 லட்சத்து 350.06 கோடியாகவும் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச்சில் ரூ.4 லட்சம் கோடியாக இருந்த கடன்சுமை, நோய்த்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பாலும், அதிகரித்த மருத்துவக் கட்டமைப்புச் செலவினங்களாலும், நிவாரண அறிவிப்புகளாலும் நிகழ் நிதியாண்டில் மேலும் அதிகரிக்கும். கடன் சுமையின் அளவு சுமார் ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டும்.

 தமிழக அரசின் கீழ் 51 வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் மொத்தக் கடன் 2018 மார்ச் வரை 168 லட்சம் கோடி. இதற்கு அடிப்படைக் காரணம், நிறுவனத்தின் வருவாயை விட நடப்பு செலவுகள் அதிகமாக உள்ளன. இந்த நிறுவனங்களை சீர்திருத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
 கடந்த காலங்களில் தமிழகத்தில் கூடுதல் மின்சாரம் வாங்கியதில் 424 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மின்சாரம் கூடுதலான விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தேவையில்லாத செலவினங்களால் நிதி சுமை ஏறிவிட்டது.

 சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாநிலங்கள் தங்களது சொந்த வருமானத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. மறுபுறம் செலவினங்களைக் கட்டுப்படுத்த அதிக முயற்சி எடுக்கப்படவுமில்லை.

 அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஒய்வூதியங்கள், கடன் சேவை, மானியங்கள் என மூன்று முக்கிய செலவினங்கள் மாநில அரசை எதிர்கொள்கின்றன. அதற்கும் வருவாய்க்கும் அதிக இடைவெளி இருப்பதால்தான், புதுக்கடன் வாங்க நேர்கிறது. புதிய பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகம் செலவிட முடியவில்லை.
 மானியங்களும், நிவாரணங்களும் தேவைதான் என்றாலும், இலக்கின்றி அனைத்து மக்களுக்கும் இவற்றை வழங்குவது ஏற்புடையதன்று. இத்தகைய நலத்திட்டங்கள், சமூகத்தின் பலவீனமான மக்களுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

 அனைத்தையும் உள்ளடக்கிய பொது விநியோக அமைப்பு (பிடிஎஸ்) அல்லது அனைவருக்கும் மின்சாரம், பேருந்து கட்டணம், சொத்து வரி போன்ற பொதுப் பயன்பாடுகளுக்கான கட்டணங்களையும், விலைகளையும் அதிகரிக்க அரசு தைரியமாக முடிவெடுக்க வேண்டிய தருணமிது.
 இப்படிச் சுமையான காலகட்டத்தில் அரசு வழங்கும் இலவசத் திட்டங்கள், சலுகைகளை நிறுத்தி விடவும் முடியாது. மதுவிலக்கு என்பதும் கேள்விக்குறியாக இருக்கின்றது.

 கொவைட் 19 நோய்த்தொற்றால் பல பாடங்களைக் கற்றுக் கொண்டோம். அந்த வகையில் பொது சுகாதாரம், மக்கள் நல்வாழ்வு என்பவை அடிப்படை வசதிகளாக எளிதில் எப்போதும் கிடைக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வு, கல்வி, விவசாயம் போன்றவற்றிற்கு தாராளமாக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு சாமானியனுக்கு அதன் பலன் சேரக் கூடிய அளவில் இந்த மூன்று துறைகளும் இயங்க வேண்டும்.

 தமிழக அரசின் நிதி ஆதாரங்களை எப்படிப் பெருக்கலாம்?
 நூறு ரூபாய் ஒரு நாளைக்கு எத்தனை நபர்களிடம் கை மாறுகிறதோ அந்த அளவிற்கு வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட பணம் அதிகபட்சம் பதினைந்து லட்சம் கோடி ரூபாய்தான். ஆனால் ஒரு நாளைக்கு டிரில்லியன் கணக்கில் பரிவர்த்தனைஆகிறது. ஆங்கிலத்தில் இதை "லிக்யூடிட்டி' என்பார்கள்.
 பணம் ஒரே இடத்தில் தேங்காமல் அந்தப் பணம் 24 மணி நேரமும் சுற்றி வர வேண்டும். அந்தப் பணச்சுற்றே தனிமனிதப் பயன்பாட்டு வருவாய் என்ற நிலையில் சுழலுகின்றது. பல பணப் பரிவர்த்தனைகள் பல முறை மாறி சுற்றுகளாக வரும்போது இயற்கையாகவே பணப்புழக்கம் கூடுதலாகின்றது. இதனால் நாட்டின் வருவாயும் நேர்முக, மறைமுக வரிகளாக கூடுகின்றது. மக்களுக்கும் ஒரு பக்கம் செலவினம். இன்னொரு பக்கத்தில் இன்னொரு தரப்பினருக்கு வருமானமும் கிடைக்கின்றது.

 அதனால் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் மட்டும்தான் அரசின் நிதியாதாரத்தை அதிகரிக்க முடியும்.
 1996-2001-இல் திமுக ஆட்சியில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் சென்னை பற்றிய ஒரு தொலைநோக்குத் பார்வை திட்டத்தைத் தயாரிக்க நிபுணர் குழுவை நியமித்தார் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி. ஆனால், அவருக்கு பிறகு பதவியேற்ற ஜெயலலிதா அரசு 2001-இல் அதனைக் கைவிட்டது.
 ஜெயலலிதா தலைமையிலான அரசு, "தமிழகம்- விஷன் 2023' என்ற தொலைநோக்குத் திட்டத்தை 2017-இல் வெளியிட்டது. ஆனால், அது இன்றளவும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது; செயல் வடிவம் பெறவில்லை. தற்போது தமிழ்நாடு 2030 மட்டுமல்ல 20-40 வரையான ஒரு தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

 தமிழகத்தைப் பொருத்தவரை அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போல நீர்வளம், வனவளம், தாதுவளம் நமக்கு அதிகமில்லை. மனித ஆற்றல் மட்டும் நிறையவே இருக்கின்றது. இதோடு, பெறப்படுகிற நிதி ஆதாரங்களைக் கொண்டு நிர்வாகத்தை நடத்தவேண்டிய சூழல்.
 மத்தியத் தொகுப்பிலிருந்து சமன்பாடான நிதி ஒதுக்கீடு மாநிலங்களிடையே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1960-களிலிருந்து எழுந்துள்ளது. அந்த வகையில் மத்தியத் தொகுப்பிலிருந்து வருவாயைப் பெறுவதில் அன்றைய மேற்கு வங்க முதல்வரான ஜோதிபாசு தனது அரசின் வெள்ளை அறிக்கை வாயிலாக மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வழங்குகின்ற நிதியை ஓரளவு அதிகம் பெறக்கூடிய வகையில் போராடி பெற்றார்.
 இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
 வகுத்தலும் வல்லது அரசு (குறள்: 385)

 அதாவது முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும். அதற்கானத் திட்டமிடல்தான் இன்றைய தேவை.
 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com