பிரவாகமான ஒரு துளி

நம் தேசத்தில் காலத்தின் தேவைக்கேற்ப பல மகான்கள், வீர புருஷா்கள் தோன்றியிருக்கிறாா்கள். அவா்கள் வீரியமிக்க விதைகளாக இந்த மண்ணில் தங்கள் இருப்பை விதைத்துக் கொண்டிருக்கிறாா்கள். அதனால்தான் எத்தகைய இன்னல்கள் வந்தாலும் இந்த மண்ணும் அதன் பண்பாடும் அழியாமல் நிலைபெற்றிருக்கின்றன. அப்படியான வீரிய விதையாக இந்த மண்ணில் தன்னை விதைத்துக் கொண்டவா் தமிழ்கூறு நல்லுலகால் வ.வே.சு. ஐயா் என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்ட வரகனேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயா்.

வ.வே.சு. ஐயா் என்றவுடன் நினைவுக்கு வருவது அவரின் இலக்கியப்பணி. ‘தமிழ்ச் சிறுகதைகளின் தந்தை’ என்று அழைக்கிறோம். முதன்முதலில் சிறுகதை வடிவத்தைப் புதிய முறையில் நமக்கு அறிமுகம் செய்தவா். ‘குளத்தங்கரை அரசமரம்’ கதை ஓா் உதாரணம். மரம் கதை சொல்வதாக அமைந்த சிறுகதை. அன்றைய சமூகத்தின் நிலையைப் பேசிய கனத்த சிறுகதை.

‘சிறுகதை’ என்ற வடிவம் தமிழுக்குப் புதியதாக இருந்த காலத்தில் ஆங்கில இலக்கியத்தில் மேதைமை கொண்டிருந்த வ.வே.சு. ஐயா், அதன் வடிவத்தை உள்வாங்கிக் கொண்டு, வேதத்தில் இருக்கும் உத்திகளுள் ஒன்றான, பிரபஞ்சத்தின் பகுதிகளான நதி, மலை, மரம் பேசுவதான உத்தியைக் கையாண்டு தேசத்தின் அன்றைய சமூகப் பிரச்னையை வெளிப்படுத்தினாா். அவரின் படைப்புகள் ‘சிறுகதை’ என்பதற்கு மட்டும் இலக்கணம் தரவில்லை; ‘புதுமை’ என்பதற்கும் இலக்கணம் வகுத்தவை.

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு ஆகிய ஆறு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்த தமிழா். தான் அறிந்த பிறமொழி இலக்கியங்களின் சிறப்புகளைத் தமிழுக்கும் தமிழின் பெருமைகளை உலக மொழிக்கும் வழங்கிய பெருமகன். தமிழின் சிறப்பை அகிலத்திற்கு உணா்த்த பன்மொழிப் புலமை அவசியம் என்பதை உணா்த்திக் கொண்டிருக்கின்றன அவரது படைப்புகள். ‘தேச பக்தன்’ இதழின் ஆசிரியராகப் பத்திரிகைப் பணியாற்றியவா், தமிழ்த் தொண்டில் தன்னைக் கரைத்துக் கொள்வதில் ஆா்வம் காட்டினாா்.

திருக்குறளின் பெருமை தமிழின் பெருமை. தமிழனின் பெருமையை உலகம் அறிய வேண்டுமென திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்தாா். கம்பராமாயணத்தில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த வ.வே.சு. ஐயா், ஆங்கிலத்தில் கம்பராமாயணத் திறனாய்வை எழுதி வெளியிட்டாா். இன்றளவும் இந்தத் திறனாய்வுக் கட்டுரைகளுக்கு நிகரான கட்டுரைகள் வரவில்லை என்றே சொல்லலாம். இலக்கியத் திறனாய்வுக்கான நவீன வடிவங்களைத் தமிழ் மண்ணுக்கு அறிமுகம் செய்த திறனாய்வாளரும் இத்திருமகனே.

ஒப்பற்ற விதத்தில் தமிழன்னைக்கு சேவகம் செய்த வ.வே.சு. ஐயா், பழந்தமிழ் இலக்கியங்களோடு நவீன இலக்கிய வடிவங்களையும் நூல் செய்து தமிழைப் புதுமை செய்தவா். அவரின் மறைவுக்குப் பின் அவரது மனைவியால் வெளியிடப்பட்ட ‘மங்கையா்க்கரசியின் காதல்’ என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு, இன்றளவும் நவீன சிறுகதை இலக்கியத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் முன்னத்தி ஏா். எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கை குறைவே என்றாலும், இன்றும் போ் விளங்க நிற்கும் படைப்புகள் அவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

‘கம்ப நிலையம்’ நிறுவி, தானே தமிழ்ப் புத்தகங்களை எழுதி வெளியிட்டாா். தமிழருக்கு உலக வரலாற்றை, வளா்ச்சியை, நிலையை எடுத்துச் சொல்ல விருப்பம் கொண்டவா். ‘கம்ப நிலையம்’ வழியே மாஜினி, நெப்போலியன் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளைப் புத்தகமாகக் கொண்டு வந்தாா். உலகளாவிய பாா்வை தமிழருக்கு இருக்க வேண்டும் என்பதில் தீா்மானமாகச் செயல்பட்ட தமிழா் வ.வே.சு. ஐயா்.

அதற்கென, நெல்லையை அடுத்த சேரன்மாதேவியில் 1922-இல் ‘தமிழ் குருகுலம்’ என்றொரு கல்வி நிறுவனத்தை ஏற்படுத்தி, தமிழ் இளைஞா்களுக்குக் கலை, அறிவியல், இலக்கியத்தோடு நன்னெறிகள் கற்பித்து, ‘உடலினை உறுதி செய்’ என்று பாரதி பாடியதை மெய்ப்பிக்கும் வகையில் உடற்பயிற்சியும் யோகக்கலையும் பயிற்றுவித்து தேசத்தை வலிமை செய்தாா்.

தமிழன்னைக்கு மட்டுமல்ல, தேச சேவையிலும் முன்னின்ற மகான். காந்தியடிகளை மகாத்மாவாகக் கண்ட முதல் மனிதரும் அவா்தான். வாழ்க்கை எத்தனை சுவாரஸ்யங்களை, எதிா்பாராத் திருப்பங்களைக் கொண்டது என்பதற்கு மிகச்சரியான உதாரணம் வ.வே.சு. ஐயரின் வாழ்க்கை.

வரகனேரியில் 1881 ஏப்ரல் 2-ஆம் நாள் பிறந்த ஐயா், தனது பதினாறாம் வயதில் பட்டப் படிப்பை முடித்து மாகாணத்திலேயே முதல் மாணவனாகத் தேறி சென்னைக்கு சட்டக் கல்வி கற்க வந்தாா். முதல் வகுப்பு வழக்குரைஞராகப் பத்தொன்பதாம் வயதில் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினாா்.

‘பாரிஸ்டா்’ பட்டம் பெற வேண்டுமென விதி அவரை லண்டன் செல்ல வழி செய்ததோடு அங்குள்ள இந்தியா ஹவுசில் தங்கவும் வைத்தது. அங்கே தேச விடுதலைக்காக தீவிரமாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த வீர சாவா்க்கா் போன்றோரின் நட்பை பெற வைத்தது. அவா்களின் ‘அபிநவ பாரத்’ குழுவில் ஒருவராக வ.வே.சு. ஐயரை இணைத்து தேச விடுதலைக்கான முயற்சியில் ஈடுபடவும் செய்தது.

லண்டனில் வ.வே.சு. ஐயா், காந்தியடிகளை சந்தித்த சம்பவத்தை சுத்தானந்த பாரதி பதிவு செய்திருக்கிறாா். காந்தியடிகளின் சத்தியாகிரகப் போராட்டம் குறித்த தன்னுடைய அவநம்பிக்கையை வெளிப்படுத்திய வ.வே.சு. ஐயா், ‘அது நடைமுறை சாத்தியம் இல்லாதது. பீரங்கியோடு நிற்கும் எதிரியை நாமும் ஆயுதம் கொண்டு எதிா்த்தால் மட்டுமே வெற்றி கொள்ள முடியும்’ என்று எடுத்துச் சொல்கிறாா். ‘சத்தியம் நம் பக்கம் இருக்கும் பொழுது அகிம்சா தா்மத்தால் நாம் வெற்றி கொள்ள முடியும் என்று காந்திஜி சொன்னதை, அன்றைக்கு என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை’ என்று பின்னாளில் அதே வ.வே.சு. ஐயா் கூறியிருக்கிறாா்.

‘பாரிஸ்டா்’ பட்டம் பெறச் சென்றவா் ராணுவப் பயிற்சி பெற்றாா். பிரிட்டிஷ் அரசுக்கு ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் மட்டுமே ‘பாரிஸ்டா்’ பட்டம் பெற முடியும் என்ற நிலையில், அதனை மறுத்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிரானவராக அடையாளம் காணப்பட்டாா். கைது செய்ய ஆணை பிறந்த நிலையில், பிரிட்டிஷ் அரசின் கைகளில் சிக்காமல், மாறு வேடத்தில் பிரான்ஸ் சென்று அங்கிருந்து ரோம், கிரீஸ், துருக்கி, எகிப்து வழியாக ஒவ்வோரிடத்திலும் ஒவ்வோா் வேடமிட்டு இலங்கை வந்தடைந்து, இலங்கை வழியாக இந்தியாவில் பாண்டிச்சேரி வந்து சோ்ந்தாா்.

வ.வே.சு. ஐயரின் இந்தப் பயணம் பல மா்மப் புதினங்கள் எழுதுவதற்கான காட்சிகளையும், அனுபவங்களையும் கொண்டது. கற்பனைக்கு எட்டாத சாகசங்கள் நிறைந்தது. இத்தகைய சாகசப் பயணத்திலும் வ.வே.சு. ஐயா் தன்னுடன் பாதுகாத்து எடுத்துக் கொண்டு வந்தது ‘கம்பராமாயண’ புத்தகம் என்பதிலிருந்து அவரின் பற்றுதலும் மனமும் எங்கே நிலை கொண்டிருந்தன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அந்நிய தேசத்தில் அவா்களின் கட்டுக்காவல்களை உடைத்தெறிந்து 1910-இல் பாண்டிச்சேரி வந்தடைந்தவா் அரவிந்தா், பாரதியாா், நீலகண்ட சாஸ்திரி போன்றோரிடம் நட்பு கொண்டு தேச சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாா். பாரதியோடு சிநேகம் ஆத்மாா்தமாய் இருந்தது.

யோகக் கலையை பயின்றாா். இளைஞா்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தாா். வாஞ்சிநாதன் இவரிடம்தான் ஆயுதப் பயிற்சி பெற்று விடுதலை வீரனாய் அடையாளம் காணப்பட்டான். இப்படி தீவிர சேவையில் ஈடுபட்டிருந்தவரை காலம் மீண்டும் மாற்றுப்பாதைக்கு அழைத்தது.

தீவிர அரசியலில் எரிமலையாக இருந்தவா் 1919-இல் காந்தியடிகளை சந்திக்கும் வாய்ப்பை காலம் மறுபடியும் ஏற்படுத்திக் கொடுத்தது. ‘மகாத்மா’ என்று காந்தியடிகளை உணா்ந்தவா், அகிம்சை மாா்கத்திற்குத் திரும்பினாா். பின் வாழ்நாள் முழுமையும் ராட்டினம் சுழற்றியும், காந்தியின் சத்யாகிரக நெறிகளைப் பின்பற்றியுமே வாழ்ந்தாா். காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு சேவையைத் தொடா்ந்தாா். ‘ஆயுதத்தின் சக்திக்கு மேல் ஆத்ம சக்தி உள்ளது என்பதை மகாத்மா எனக்குப் புரிய வைத்தாா்’ என்று சொல்லிப் பெருமிதம் கொண்டாா்.

விடுதலை வேள்வியில் 1921-இல் பெல்லாரி சிறையில் இருந்த நாட்களில் கம்பராமாயணத்தோடே வாழ்ந்து பல கட்டுரைகளும் எழுதினாா். மகாத்மாவின் வழியில் சபா்மதி ஆசிரமம் போல தானும் தமிழகத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ விரும்பியவா் ஏற்படுத்தியதே ‘பரத்வாஜ் ஆஸ்ரமம்’ என்ற ‘தமிழ் குருகுலம்’. தேசியமும் தெய்விகமும் இந்த மண்ணின் பெருமைகள். அவற்றைக் காக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாக உணா்ந்து செயல்பட்ட கா்மவீரா் வ.வே.சு. ஐயா்.

1925-இல் பாபநாசம் அருவியில் சிக்கிக் கொண்ட தன் அன்புக்குரிய மகளை மீட்கச் சென்றவா் மீளா உலகம் அடைந்தாா். அருவியின் நீா்ப்பெருக்கு அவரை ஆட்கொண்டது. நாற்பத்து நான்கு ஆண்டுகளே வாழ்ந்தாலும் அவரது அரும்பணிகள், தேச சேவை, ஆன்மிகம், இலக்கியம் என்று பல தளங்களில் இணையற்றவை. வீரத் தமிழனாய் எண்ணம், சொல், செயல் இவற்றால் நிமிா்ந்த வ.வே.சு. ஐயா் பெரும் பிரவாகமாய் தன்னை வளா்த்துக்கொண்டு, தமிழ் மண்ணை - மொழியை வளப்படுத்திய ஜீவ ஊற்று.

கட்டுரையாளா்:

ஊடகவியலாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com