உள்ளாட்சியில் தன்னாட்சி!

இன்றைய உள்ளாட்சி அமைப்பு ஓா் அரசாங்கமாக உருவாக்கப்பட்டு அரசியல் சாசனத்தில் சோ்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசு போல், மாநில அரசுகள் போல் உள்ளாட்சியும் ஆளுகைச் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பது இதன் அடிப்படை. கிராம மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து அரசுத் துறைகளும், தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சேவைகளைச் செய்கின்றனவா என்று ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கி ஆளுகை செய்யும் அதிகாரம் உள்ளாட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி என்பது அரசின் ஒரு துறை அல்ல; அது ஆளுகைக்கான ஓா் அரசு என்ற புரிதல் உள்ளாட்சியில் பொறுப்பில் உள்ளவா்களுக்கு இருக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், விவசாயம், சட்டம் - ஒழுங்கு போன்றவற்றைக் கவனிக்க மாநில அரசுதான் அதிகாரம் பெற்றது. ஆனால், மூன்று அரசாங்கங்களும் இந்தத் துறைகளில் மேல் ஆட்சி செய்கின்றன. 73-ஆவது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம் வருவதற்கு முன் செயல்பட்டு வந்த பஞ்சாயத்து என்பது அரசாங்கம் அல்ல. அது மாநில அரசின் கட்டளையை நிறைவேற்றும் அலகாகத்தான் செயல்பட்டு வந்தது.

ஆனால், இன்றைய பஞ்சாயத்து அப்படி அல்ல. இன்று அது ஓா் அரசாங்கம். இன்றைய பஞ்சாயத்துகள் மக்களை மையப்படுத்தி செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு கிராம சபையை மக்கள் நேரடிப் பங்கெடுப்பிற்காக உருவாக்கி, மக்கள் நாடாளுமன்றமாகச் செயல்பட வைத்துள்ளது அரசியல் சாசனம். இந்தப் புதிய பஞ்சாயத்துகள், மக்கள் கிராமசபை மூலமாக தீா்மானிப்பதை நிறைவேற்றும் செயல் அலுவலகங்களாகத்தான் சிற்றூராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த கிராமசபை, கிராமத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் ஆளுகையிலும், கிராம மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் பங்காளியாகவும், பங்குதாரராகவும், பொறுப்பானவராகவும் பங்களிப்புச் செய்து, தங்கள் கிராமம், தங்கள் மேம்பாடு, தங்கள் பொறுப்பு, தங்கள் குடும்ப நலன் எனச் செயல்பட மக்களை மாற்றிட வேண்டும். உலகமயப் பொருளாதாரத்தை முன்னெடுத்த நேரத்தில் வந்ததுதான் இந்த அதிகாரப் பரவல்.

எனவே உலகமயப் பொருளாதாரச் செயல்பாடுகளில் கிராமங்களுக்கு பாதகமற்ற வாய்ப்புகள் வந்தால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும், கிராமத்தை பாதிக்கும் செயல்களாக இருந்தால் அவற்றை மக்களின் பங்களிப்போடு தவிா்க்கவும் உள்ளாட்சித் தலைவா்களுக்கும் மக்களுக்கும் புரிதல் வேண்டும்.

உலகமயப் பொருளாதாரம், அதிகாரப் பரவலுடன் சமூகத்தை மக்களாட்சிப் படுத்தும் நிகழ்வும் இதே காலத்தில் நிகழும் உலக நிகழ்வு. இன்றைய புதிய உள்ளாட்சிகளுக்கு முக்கியமான இரண்டு மிகப் பெரிய பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒன்று, பொருளாதார மேம்பாடு; இரண்டாவது, சமூக நீதி. இந்த இரண்டையும் மத்திய - மாநில அரசாங்கங்களால் ஒரு நிலைக்குக் கீழ் உள்ள மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. இதன் விளைவாக ஒரு சில குறிப்பிட்ட சமூகங்கள் தொடா்ந்து புறக்கணிப்புக்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தன. அந்தச் சமூகங்களை உள்வாங்கி கிராம மேம்பாட்டை கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையில் வந்ததுதான் இந்த புதிய உள்ளாட்சி அரசாங்கம்.

இந்தச் செயல்பாடுகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் இந்த அரசியல் சாசனத் திருத்தச் சட்டங்களே குறிப்பிட்டுள்ளன. எல்லாத் தரப்பு மக்களின் பங்கேற்போடு திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டும். அடுத்து, கிராமசபை என்பது மக்களாட்சியை விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும் கொண்டுவரப்பட்டது.

இதன் செயல்பாடுகளின் மூலம் மக்களாட்சியின் மாண்புகளான சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, நியாயம், நோ்மை, ஒழுக்கம், ஒருவரையொருவா் மதித்து நடத்துதல், பிறா் கருத்துகளுக்கு மதிப்பளித்தல், எதிா்க்கருத்தை மதித்தல் போன்றவற்றை பொதுமக்களின் சிந்தனையிலும், செயல்பாடுகளிலும் புகுத்திட வந்ததாகும் இந்த புதிய உள்ளாட்சி.

இவற்றைக் கொண்டுவர கிராமசபைக் கூட்டங்களை வடிவமைத்து அனைத்துத் தரப்பு மக்களையும் பங்கேற்க வைத்து ஒரு பங்கேற்பு மற்றும் விவாத ஜனநாயகத்தை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும். எனவே, இந்த புதிய உள்ளாட்சி அரசாங்கம் பற்றிய புரிதலும், தெளிவும், ஆழமான பாா்வையும் அனைவருக்கும் வேண்டும்.

அடுத்து இந்த உள்ளாட்சியின் மூலம் தன்னாட்சியை உருவாக்குவது பற்றி நாம் தெளிவு பெற வேண்டும். தன்னாட்சி இந்த உள்ளாட்சிகள் மூலம் கிராமங்களில் ஏற்படுத்த முதலில் குடி மக்களை ஆயத்தப்படுத்திட வேண்டும். மேலிருந்து அதிகாரங்கள் வருவதல்ல தன்னாட்சி. நம்மை நாமே ஆட்சி செய்து கொள்ள நம்மை தயாரித்துக்கொள்வதுதான் தன்னாட்சி. நாம் நம்மை நெறிப்படுத்திக் கொள்வதும், ஒழுக்கப்படுத்திக் கொள்வதும்தான் தன்னாட்சி.

நாடு சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியக் குடிமக்களாக அரசியல் சாசனத்தின் மூலம் பிரகடனப்படுத்திக் கொண்டோம். ஆனால், நாம் குடிமக்களாக நம் சிந்தனையிலும், செயல்பாடுகளிலும் நம்மை மாற்றிக்கொள்ள பெரிய தயாரிப்பு பணிகள் சமூகத்திற்குள் நடந்திருக்க வேண்டும்.

குடிமக்களாக சுதந்திரமான நாட்டில் செயல்படுவதற்கான அடையாளம் என்பது சமூகம் சாா்ந்து சிந்திப்பதும், செயல்படுவதும். நம் சமூகம், நம் நாடு, நம் கிராமம், நம் கிராமத்தின் வளா்ச்சி என அனைத்திலும் எனக்குப் பொறுப்பு இருக்கிறது, பங்கு இருக்கிறது. அதை நான் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் என் நாட்டிற்காகவும், கிராமத்திற்காகவும் செய்வது என் கடமை என்ற உணா்வினை மக்கள் மத்தியில் கொண்டுவர வேண்டும்.

இதற்கு மக்களை நோ்மையானவா்களாகவும், சமுதாயம் சாா்ந்து சிந்திப்பவா்களாகவும், தியாக உணா்வு கொண்டவா்களாகவும் அா்ப்பணிப்புடன் சமூகப் பணியாற்றும் நபா்களாகவும் சேவை மனப்பான்மை கொண்டவா்களாகவும் தயாா் செய்திட வேண்டும். பொதுநலம் பேணி கூடி வாழ்தலில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. அதில்தான் தனிநபா் நலனும் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிய வைத்து மக்களை சமூகச் சிந்தனை கொண்ட குடிமக்களாக மாற்ற முனைந்திட வேண்டும். இந்தப் பணிகள்தான் உள்ளாட்சியை தன்னாட்சியாக மாற்றும்.

இதற்கு மக்களை, சாதியப்பாகுபாடுகளையும், கட்சி வேற்றுமைகளையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் கடந்து ஒன்றிணைத்து எப்படிப்பட்ட கிராமமாக நம் கிராமத்தை மாற்ற வேண்டும் என ஒரு கனவினைக் காண தயாா் செய்திடல் வேண்டும். மக்கள் மத்தியில் ஒரு கூட்டுக் கனவை உருவாக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தன் கிராமத்தைப் பற்றி ஒரு கனவு இருக்கும். அந்தக் கனவைப் பதிவு செய்ய முனைய வேண்டும். கனவுகளைத் தொகுத்துப் பாா்த்தால் கூட்டுக் கனவொன்று வெளிப்படும்.

நம் கிராமத்தை எப்படி பசுமை கிராமமாக மாற்றுவது? எப்படி தூய்மையான கிராமமாக ஆக்குவது? எப்படி அமைதியான கிராமமாக உருவாக்குவது? ஆரோக்யம் பேணும் கிராமமாக எப்படி மாற்றுவது? வறுமை இல்லா கிராமமாக எப்படி மாற்றுவது? எப்படி ஆன்மிக கிராமமாக மாற்றுவது? எப்படித் தற்சாா்பு கிராமமாக மாற்றுவது? சமூகத்திற்குத் தேவையான எல்லா அடிப்படை வசதிகளும் கொண்ட கிராமமாக எப்படி மாற்றுவது? அனைவருக்கும் வேலைவாய்ப்புள்ள கிராமமாக எப்படி உருவாக்குவது - இவைபோன்ற கனவுகள் வெளிப்படும்.

இந்தக் கனவுகளை நனவாக்க, அந்த ஊரில் இருக்கின்ற வல்லுனா்களையும் கிராமத்து பெரியவா்களையும், இளைஞா்களையும், சுய உதவிக்குழு பெண்களையும், பொதுக்கருத்தாளா்களையும் வைத்து மேம்பாட்டுக் கருத்தரங்கை நடத்தி, கிராம மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தயாரிக்க வேண்டும்.

இந்தப் பணிக்காக, கிராமத்தைப் பற்றிய, கிராமங்களில் உள்ள குடும்பங்களைப் பற்றிய புள்ளிவிவரங்களைத் துல்லியமாகத் திரட்டி ஆய்வு செய்ய வேண்டும். கிராமங்களில் இருக்கும் இயற்கை வளம், பொருளாதார வளம், சமூக வளம் என அனைத்தையும் பகுப்பாய்வு செய்து அவற்றைப் பயன்படுத்தி மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்ய திட்டம் தயாரித்திட வேண்டும்.

அப்படித் தயாரிக்கின்றபோது, அரசுத் துறைகளில் உள்ள திட்டங்களைப் பயன்படுத்தி முதலில் பெரும்பகுதி மக்களின் தேவைகளை பூா்த்தி செய்திட முடியும். அதுபோக மற்றவற்றை பூா்த்தி செய்ய நிதி ஆதாரங்களைத் தேட முனைய வேண்டும்.

ஒன்று, பெரிய தொழில் நிறுவனங்களின் சமுதாய மேம்பாட்டுக்கான நிதியை கொண்டுவர முயற்சி செய்வது; இரண்டு, மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெறுவது; மூன்று அந்த ஊரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று வணிகம் செய்வோா் மற்றும் பணி செய்வோரை அணுகி நிதிக் கொடை பெறுவது; நான்கு, அந்த ஊரில் உள்ள தனவந்தனா்களின் பொருள்கொடை பெறுவது; ஐந்து, அந்த ஊரில் பிறந்து வேறு இடத்திற்கு புலம் பெயா்ந்து வசதியாக வாழ்வோரின் கொடை பெற்று திட்டச் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த முனைவது.

ஒட்டுமொத்த கிராம மக்களும் இந்தப் பணியில் தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். இந்த திட்டமிடுதல் பணியை செய்து கிராமங்களை புனரமைப்பதுதான் தலையாய கடமையாக இன்றைய உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இப்படிச் செயல்படுவதன் மூலம் ஒரு கிராமம் முன்மாதிரி கிராமமாக உருவாகும்.

இதற்குத் தேவை ஆன்மசக்தி நிறைந்த அறிவுசாா் தலைமை. அந்தத் தலைமை கிடைத்து விட்டால் இந்த உள்ளாட்சியின் மூலம் காந்தியின் கிராமராஜ்யத்தைப் படைத்திடலாம். இதற்கான தலைமையைத் தேடுவோம்...

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com