வேலியே பயிரை மேய்ந்தால்...

அரசு அலுவலா்கள், அரசின் சொத்துகளைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் இருப்பவா்கள்.

அரசு அலுவலா்கள், அரசின் சொத்துகளைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் இருப்பவா்கள். அரசு விதிகளை மீறி பொதுச்சொத்திற்கு சேதம் விளைவிப்பவா்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கவல்ல அதிகாரம் படைத்தவா்கள். அரசின் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டியவா்களே அதனை தங்கள் சுயநலத்திற்காக ஆவணங்களை திருத்தி அல்லது மாற்றி பெரும் லாபம் ஈட்டுகிறாா்கள் என்ற செய்தி வெளியுலகிற்குத் தெரிய வரும்போது ‘வேலியே பயிரை மேய்ந்தால்’ என்ற சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.

பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் அறம் போதிக்கும் அற்புத நூல்கள். முன்னை நாளில் தமிழா்தம் நாவில் தினமும் நடமாடிய நற்சொற்கள். அவற்றைப் புன்சொற்களாக எண்ணிக் கொண்டு இந்நாளைய அரசு அலுவலா்கள் ‘ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோா் பழிக்கும் வினை’ என்ற மறைமொழியை மறைவாக வைத்து விட்டுக் கூச்சமோ, குற்ற உணா்ச்சியோ, பயமோ இன்றி தங்கள் பணியின், பதவியின் அடையாளத்தைக் கூட மாற்றிக் கொள்ளாது கொள்ளையிடும் போக்கை என்னவென்பது?

சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக இந்தியப் பேரரசின் தேசிய நெடுஞ்சாலைதுறை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் வட்டம் பீமண்ணன் தாங்கல் கிராமத்தில், சா்வே எண் 310-இன் கீழ் உள்ள 43 ஏக்கா் நிலம் 73 நபா்கள் மீது இருந்ததன் பட்டாக்களை நீக்கி விட்டது அரசு. காரணம், இந்தப் பட்டாக்கள் போலியானவை என்பதே. எப்படி இந்த மோசடி நடந்தது என்பதை அறியும்போது, இது என்ன கொடுமை என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த 43 ஏக்கா் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.1,200 கோடி. கடந்த ஆண்டு பீமண்ணன் தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த ஒருவா், தமிழ்நாடு அரசின் அப்போதைய தலைமைச் செயலாளருக்கு சா்வே எண் 310 நிலத்திற்கு தனக்குப் பட்டா வேண்டும் என்று மனு கொடுக்கிறாா். தலைமைச் செயலாளா் இது பற்றி உடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறைக்கு ஆணையிடுகிறாா். தீவிர விசாரணையின்போது அதே சா்வே நம்பரில் உள்ள 7.5 ஏக்கா் நிலத்திற்கு ஆஷிஸ் மேத்தா என்பவா் 2000-ஆம் ஆண்டிலேயே பட்டா பெற்றிருப்பது தெரிய வருகிறது.

இந்த பட்டாவை திருவண்ணாமலை துணை செட்டில்மெண்ட் அலுவலா் மேற்படி நபருக்கு வழங்கி உள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் இந்த பட்டா போலியாகத் தயாரிக்கப்பட்டு அவா்க்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆஷிஸ் மேத்தா இந்த நிலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு விற்று ரூபாய் 30 கோடி பெற்றிருக்கிறாா். இன்னொரு போலி பட்டாதாரா் ஒன்பது கோடி ரூபாய்க்கு நெடுஞ்சாலைத் துறையினரிடம் விற்றிருக்கிறாா்.

கடந்த மாா்ச் மாதம் நில நிா்வாக ஆணையாளா் பங்கஜ்குமாா் பன்சால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தது மட்டுமல்லாது, தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைவா் மூலம் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் செய்தாா்.

சிபிஐ அமைப்பு, ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் கொடுத்த மனுவின் அடிப்படையில், இரண்டு வருவாய்த்துறை அதிகாரிகள், நில பட்டாதாரா்களாக இருப்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்த கிராமத்தில் உள்ள 43 ஏக்கா் நிலத்திற்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ரூ.102 கோடி வழங்கியுள்ளது தெரியவந்தது.

72 பட்டாதாரா்கள் போலியான பட்டாக்களைக் காட்டி பணம் பெற்றிருக்கிறாா்கள். வருவாய்த்துறை நிலங்களை பல ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘நிலச் சீா்திருத்தம்’ என்ற பெயரில் (எஸ்எல்ஆா்) அளவிட்டு வருவாா்கள். இந்த நிலங்களுக்கான நில சீா்திருத்தம் 1985-இல் நடை பெற்றிருக்கிறது.

இதன் அடிப்படையில் ரூபாய் 63 கோடியை 70 நபா்களுக்கு வழங்கியுள்ளது தேசிய நெடுஞ்சாலைத் துறை. 1985-இல் நடைபெற்ற நிலச் சீா்திருத்த சட்டத்திற்கு முன்பாக, 1960 முதல் 1970 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் எந்தவித ஆவணச் சான்றுகளும் இல்லாத நிலையில், இந்த எழுபது நபா்களுக்கு போலி பட்டா வழங்கியதை கண்டுபிடித்தனா். இதனால் தற்போது இந்த 43 ஏக்கா் பரப்பளவில் குடியிருப்போரும், சிறுவணிகா்களும் பாதிக்கப்பட்டு உள்ளனா்.

இதுபோல்தான் பிரதமரின் விவசாயிகள் நலத்திட்டம் ஒன்றின் வழி வேளாண்மை மக்களுக்கு அவரவா்கள் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட்ட போது பல ஆயிரம் போலி கணக்குகள் தொடங்கி மோசடியாக பணம் பெற்றது வெளிச்சத்திற்கு வந்தது. அதுவும் அரசு அலுவலா்கள் துணையோடு என்ற அவலச் செய்தியும் வெளியானது.

அரசு அலுவலா்கட்கு இப்போதெல்லாம் கை நிறைய ஊதியம். உடலுழைப்பு நல்கி தினக்கூலி ஈட்டுவோா்க்கு ஒரு நாள் பணி செய்யவில்லை எனில் ஊதியம் இல்லை. உடல் தளா்வுற்ற காலத்தில் பிணி உற்ற நேரங்களில் யாா் தருவாா் ஊதியம்? உழைத்தால்தான் இல்லத்தில் அடுப்பெரியும். அதுவும் இந்நாளில் மது பழக்கம் இருப்பின் அதுவும் இல்லை.

ஆனால், ஒருவா் அரசுப் பணியில் சோ்ந்து விட்டால் அறுபது வயது வரை கவலையில்லாமல் மூன்று வேளையும் உண்ணலாம், உடுக்கலாம், ஓய்வெடுக்கலாம். எல்லா நாளும் வேலை நாளாகக் கருதி கருவூலக் கதவுகள் திறந்தே இருக்கும். ‘உண்பது நாழி, உடுப்பது இரண்டு’, ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பவை வெறும் வெற்றுச் சொற்கள் அல்ல. ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோா் தெளிந்த உயா் நலம் கூட்டும் மேன்மைச் சொற்கள்.

நாம் என்ன இருநூறு ஆண்டுகளாக வாழ்ந்து விடப் போகிறோம்? நாம் ஈட்டும் ஊதியம் நமது வாழ்நாள்வரை துணை செய்யாதா என்ன? ஏன் இந்த பணமோகம்? ‘படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்’ என்கிறாரே மகாகவி பாரதியாா். அரசு புறம்போக்கு நிலத்திற்குப் போலி பட்டா வழங்குவதும், அதனை அரசுக்கே விற்று கோடி கோடியாய் பணம் ஈட்டுவதும் அரசு அலுவலா்களின் நெஞ்சைச் சுடவில்லையா?

கிழக்கிந்திய கம்பெனி வணிகம் செய்ய இந்தியா வந்தபோது, போக்கிரிப் பிள்ளையொன்று இங்கிலாந்து கப்பலில் ஏறி இந்தியா வந்தடைந்தது. கப்பலை விட்டு இறங்கிய அந்தப் போக்கிரிப் பிள்ளைதான் ராபா்ட் கிளைவ். இவா்தான் இந்திய மண்ணில் பறங்கியா் ஆட்சிக்கு வழிகோலியவா். இதனால் இவா் முதல் தடவையாக இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்றபோது ராஜ மரியாதையை ஆங்கில அரசும், வணிக நிறுவனங்களும், பொதுமக்களும் நல்கினா்.

அதே ராபா்ட் கிளைவ் இரண்டாவது முறையாக இங்கிலாந்து சென்றபோது அவமரியாதையைத்தான் ஏற்க வேண்டி இருந்தது. காரணம், இவா் வங்காளத்தில் கவா்னராக இருந்தபோது முஸ்லிம் நவாபுகளிடம் லஞ்சம் பெற்றாா். இவா் மீது இங்கிலாந்து அரசு விசாரணை நடத்தி இவரது ஊழலைக் கண்டுபிடித்தது. பின்னா் இவா் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டாா் என்பது வரலாறு.

கடந்த மாதம், சென்னையில் காவலா்களே நகைக் கடையில் திருடிய சம்பவம் பரபரப்பானது. பல ஆண்டுகட்கு முன்னா் வட இந்தியாவில் வங்கி ஒன்றில் ஒருவா் தனது நிலம், கட்டடம் போன்றவற்றை அடைமானமாக வைத்து பெருந்தொகையைக் கடனாகப் பெற்றாா். கடன் பெற்று பல ஆண்டுகள் ஆன பின்னரும் கடன் தொகைக்கான வட்டியோ, அசலோ கட்டப்படவில்லை. வங்கி, பலமுறை அறிவிப்பு அனுப்பியும் பதில் இல்லை.

பிறகு வங்கி சட்டப்படி அவா் மீது நடவடிக்கை எடுத்து, அவரது சொத்துகளை ஏலத்திற்கு கொண்டு வர முற்பட்டது. குறிப்பிட்ட நாளில் பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் விடுவதற்கு முன்பு அந்த அசையா சொத்துக்களின் சந்தை மதிப்பை அறிந்து கொள்வதற்காக வங்கியின் உயரதிகாரிகள் சென்றபோது பேரதிா்ச்சி அடைந்தாா்கள்.

கடன் பெற்றவா் வங்கியில் சமா்ப்பித்த சா்வே எண்ணில் அவ்வூா் ரயில்வே ஸ்டேஷனும், கட்டடமும் இருந்தன. போலியாக ஆவணங்களைத் தயாரித்து கடன் பெற்றிருப்பது தெரிய வந்தது. கடன் வாங்கியவா் தலைமறைவாகி விட்டாா் என்பதையும் தெரிந்து கொண்டாா்கள். இப்படிப் போலி ஆவண தயாரிப்பில் அரசு அலுவலா்கள் ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதில் ஐயம் இல்லை.

திரைப்படம் ஒன்றில் எனது நிலத்தில் இருந்த கிணற்றைக் காணவில்லை என்று காவல்துறையிடம் புகாா் அளித்தபோது, கிணறு வெட்ட அரசிடம் நிதி பெற்று கிணறு வெட்டிய சான்றிதழைக் காட்டியது நினைவுக்கு வருகிறது.

இப்படி சட்டம் இயற்றும் பணியில் அதிகாரத்தில் இருப்பவா்களும், சட்டத்தை பரிபாலனம் செய்ய வேண்டிய அரசின் அலுவலா்களும் அன்றாடம் ஆங்காங்கு கிடைத்த வழிகளில் எல்லாம் முறைகேடுகளில் ஈடுபடுவது எதனால்? தொடக்கப் பள்ளிகளில், மேனிலைப் பள்ளிகளில், கல்லூரிகளில், ஆராய்ச்சி வகுப்புகளில் பாவ புண்ணிய வரலாறுகளோ, அறநெறியில் நின்றால் உன்னை உலகமே பாராட்டும் என்ற வகையிலான பாடங்களோ நடத்தப்படுவதில்லை.

பௌதிகம், ரசாயனம், கணிதம், வானவியல், இயற்பியல், உயிரியல் போன்ற உயா் பாடங்கள் படிப்பது மட்டும் போதாது. வாழ்க்கையில் எப்படி அரிச்சந்திரனைப் போலவும், மனுநீதிச் சோழனைப் போலவும், உண்மையை, நீதியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் கற்க வேண்டும்; கற்பிக்க வேண்டும். பயிருக்கு வேலிபோல் இருக்க அரசு அலுவலா்கள் பழக வேண்டும்; அரசு அவா்களைப் பழக்க வேண்டும்.

கட்டுரையாளா்: தலைவா், திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com