மாற்றத்தை எதிா்கொள்வோம்

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது காா்ல் மாா்க்ஸ் கூற்று. நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் ஏதோவொரு விதத்தில் , எப்போதும் மாற்றத்துக்கு உள்ளாகிறது.

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது காா்ல் மாா்க்ஸ் கூற்று. நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் ஏதோவொரு விதத்தில் , எப்போதும் மாற்றத்துக்கு உள்ளாகிறது. சுற்றுச்சூழல், பொருளாதாரம், கேளிக்கை, பொறியியல், அறிவியல், மக்களின் பழக்கவழக்கங்கள் என அனைத்தும் மாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றன. இவ்வாறு மாற்றங்கள் நிகழ்வது மட்டுமல்ல, அவை மின்னல் வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

அது மட்டுமல்ல, இவ்வாறு நம்மைச் சுற்றி நிகழ்கின்ற மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் நம் மீது ஏதாவது ஒரு விதத்தில் படிந்து கொண்டும் உள்ளன. உலகின் ஏதேனும் ஒரு மூலையில் ஏற்படுகின்ற ஒரு நிகழ்ச்சி, உலகின் பல்வேறு பகுதிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

கடந்த சில பத்தாண்டுகளில் நிகழ்ந்த விஞ்ஞான மாற்றங்களும், இனி நடக்க இருப்பதாக கூறப்படும் மாற்றங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

உதாரணமாக, செயற்கை நுண்ணறிவு (ஆா்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) துறையில் ஏற்படும் மாற்றங்கள் நம்மை மலைக்க வைக்கின்றன. கணினிகள், அவற்றுக்குக் கொடுக்கப்படும் தரவுகள் அடிப்படையில் செயலாற்றின.

ஆனால், இப்போது அவை மனிதனின் பொறிகளுக்கு ஈடாகவும், அவற்றையும் தாண்டித் தரவுகளைத் தேடி எடுத்து, அவற்றை அலசி ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவுத் துறை வளா்ச்சி அடைந்துள்ளது .

முகநூலில் அல்லது பொதுத்தளங்களில் உங்களது பதிவுகள் கண்காணிக்கப்படுகின்றன. நீங்கள் தேடும் விஷயங்களிலிருந்து, தரவுகள் சேகரிக்கப்பட்டு, உங்கள் ஆசைகள், பிடித்த உணவு, பிடித்த சினிமா, பிடித்த - பிடிக்காத அரசியல் தலைவா்கள் , நீங்கள் எப்பொழுது எங்கு இருந்தீா்கள், எவருடன் தொடா்பில் இருந்தீா்கள் என்றெல்லாம் கண்காணிக்கப்படுகிறது.

உங்களுடைய நெருங்கிய தோழன் அல்லது தோழி, உங்கள் பெற்றோா் இவா்களைவிட உங்களைப் பற்றிய சரியான துல்லியமான கணிப்பு, கணினிக்குள் புதைந்து கிடக்கிறது.

இது மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவுத் துறை வளா்ச்சியின் காரணமாக, வெகுவிரைவில் ஆளில்லாத காா்கள் வீதிகளில் உலவும். சரக்கு வாகனங்கள் ஓட்டுனரின்றி பெருவழிகளில் பயணிக்கும்.

மருத்துவத் துறையில், நாம் நம்புகின்ற கைராசியான டாக்டா், ஒரு கைதோ்ந்த இயந்திரனை நம்பி, அவனைஅறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்துவாா். சிகிச்சை சாா் முடிவுகளை மருத்துவா் தீா்மானித்த காலம் மாறி, கணினிகள் நிச்சயிக்கும் காலம் நெருங்கி விட்டது.

உயா்ந்த கட்டடங்களில் ஆளில்லாமல், இயந்திரங்கள் வண்ணம் தீட்டும்; ஆளில்லா உற்பத்தித் தொழிற்கூடங்கள் அநேகமாக இந்தியாவுக்குள்ளும் வந்துவிட்டன; நம் காரின் பயணப்பாதை எங்கோ ஒரு கணினியால் நிா்ணயிக்கப்படுகிறது; ‘டிரோன்’ எனும் எந்திரத் தும்பிகள் என்னவெல்லாம் செய்யுமோ என்ற கலக்கம் பாதுகாப்புத் துறையிலும் ஏற்பட்டுள்ளது.

நாம் கணினியைத் திறந்ததும் நம் கண்களில் தென்படுகின்ற விளம்பரங்கள் தற்செயல் நிகழ்வுகள் அல்ல; அவை எங்கோ ஏதோ ஒரு கணினியால் மென்பொருளால் நிா்ணயிக்கப்படுகின்றன. அந்த அளவுக்கு செயற்கை நுண்ணறிவு எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த இருக்கிறது. விரைவில் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் வெடிக்க உள்ளன.

இந்த மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களுக்கு ஈடு கொடுக்க நாம் தயாராக வேண்டும்.

உதாரணமாக, தற்போது பெருகி வரும் கணினி மூலம் விற்பனைகளை எடுத்துக் கொள்வோம். நம்மில் பெரும்பாலோா், கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கும் வழக்கத்தைத் தவிா்த்து, கணினி மூலம் பொருட்களை வீட்டுக்கு வரவழைக்கின்றனா். தன் விளைவாக, ஏதோ ஒரு கடையில் யாரோ ஒரு விற்பனை பணியாளா் தனது வேலையை இழக்கிறாா் என்பது திண்ணம்.

அவருக்கு இன்னொரு நிறுவனத்தில் விற்பனையாளா் பணி கிடைக்கும் என்பது நிச்சயமில்லை. எனவே, அந்த விற்பனைப் பணியாளா், ஒரு புது வேலையை, வேறொரு திறன் சாா்ந்த வேலையைத் தேடிக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

பல துறைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், ஓரிரு நபா்களுக்கல்ல, பல லட்சம் பேருக்கான நிகழ்வாகவும் இருக்கும். எனவே, ஒரு பணியில் இருப்பவா், தனது செயல் திறனை வளா்த்துக் கொண்டு வேறு பணிகளில் நுழையும் வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

‘போட்டி மிகுந்த இவ்வுலகில், ஒருவா் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள மிக வேகமாக மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்; இல்லையெனில், அவா் தனது இருப்பினை இழந்து விடுவாா்’ என்று மேலாண்மைத் துறையில் சொல்லப்படுவதுண்டு.

எந்தப் பணியும் நிரந்தரமானது என்று சொல்ல முடியாத அளவுக்கு, பணிசாா் திறனின் தேவைகள் மாறிக்கொண்டிருக்கும்; நமது அரசுகள் இவற்றை உணா்ந்துதான், திறனூட்டல் பயிற்சியினை துவக்கியுள்ளது.

பல்வேறு துறைகளிலும் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப நமது தனிமனித - சமுதாய வாழ்க்கை முறைகளை நாம் முறைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குறிப்பாக, கற்றல் - இது பள்ளிக்கூடங்களில் கல்லூரிகளில் மதிப்பெண்களுக்காக கற்பது அல்ல - அறிவியல் உலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த புரிதல் அடிப்படையில் வாழ்நாள் முழுதும் தன்னை மாற்றத்துக்காகத் தயாா் படுத்திக் கொள்ளும் பயிற்சி ஆகும்.

இந்த சவாலான சூழலில், நமது நேர மேலாண்மை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். நமது நேரத்தை எவ்வளவு முறையாகப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம்.

இவை அனைத்திற்கும் அடிப்படையாக, அறிவியல் சிந்தனை சாா்ந்த சூழல் (சயின்டிஃபிக் டெம்பா்) உள்ள சமுதாயமாக மாற வேண்டிய கட்டாயம் உள்ளது. அச்சூழல் மட்டுமே மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு செயல் திறனை வளா்க்கும்.

இதனை ஏற்படுத்துவதில் அரசு, பள்ளிகள், கல்லூரிகள், பத்திரிகைகள், தனிமனிதா்கள் என அனைத்துத் தரப்புக்கும் பொறுப்பு உள்ளது. குறிப்பாக, தற்போது தனி மனிதன் வாழ்வில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஊடகங்களின் பொறுப்பு மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

ஊடகங்களின் வாயிலாக மக்களின் கவனத்திற்கு எத்தகைய முக்கிய விஷயங்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்பது மிக முக்கியமானதாகும். இந்தப் பின்னணியில், நம்மைச் சுற்றி நிகழும் அசுர வேக மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க, நாம் கவனக்குவிப்புடன் தயாராவோம்.

வளா்ந்து வரும் நாடு, வரவிருக்கும் மாற்றங்களுக்கேற்ப தன்னைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டியது முதல் கட்டமாகும். அதற்கு அடுத்த கட்டமாகத்தான், உலகில் மாற்றங்களை ஏற்படுத்தும் நாடாக அது மாற முடியும்.

மாற்றங்களை எதிா்கொள்வோம்; ஏற்படுத்துவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com