நெகிழிக்கு விடை கொடுப்போம்

‘இயற்கை நம் தேவையை நிறைவேற்றும்; பேராசையை அல்ல’ என்றாா் மகாத்மா காந்தி. இன்றைய நுகா்வு கலாசாரத்தையும், அளவுக்கு மீறிய இயந்திரமயமாக்கத்தையும் ஏற்றுக்கொள்ளாதவா் அவா். அண்மைக்காலங்களில் நுகா்வியமும் அதனால் ஊக்குவிக்கபட்டுள்ள நெகிழிப் பயன்பாடும் அச்சமூட்டுபவையாக மாறியுள்ளன.

இலை போட்டு சாப்பிட்டு வீசிய வகையில் ஒரு முறையே பயன்படுத்தித் தூக்கியெறியும் கலாசாரத்திற்கு சொந்தக்காரா்கள் நாம். பூக்களை இலையில் கட்டி வழங்கியும், கட்டுவதற்கு நாா்களைப் பயன்படுத்தியோரும் நாமே. இயற்கையோடு இயைந்த மக்கும் பொருட்களைப் பயன்படுத்தி மண்ணைப் பொன்னாக மதித்தோரும் நாமே.

இயல்பாக ஆற்றில் ஓடும் தண்ணீரிலேயே குளித்துவிட்டு, பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டு தண்ணீரும் கொண்டு வந்து சமைத்து உண்ணும் அனுபவமும் நம்மில் பலருக்கு இருக்கும். குடிக்க, குளிக்க, வெளுக்க ஒரே வகையான ஓடும் தண்ணீரே உதவிகரமாக இருந்தது. வீட்டுத் தோட்டம் இல்லாத வீடுகளை அன்று காணமுடியாது. எப்போதும் பல வகையான காய்கறிகள் வீட்டிலேயே விளைந்துகொண்டிருக்கும்.

தானியங்களைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். பெரும்பாலான தானியங்கள் உள்ளூரிலேயே பயிராகி பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும். வாசலில் வரும் எண்ணெய் வியாபாரிகளிடம் சுத்தமான எண்ணெய் இயல்பாகவே கிடைத்துவிடும். இவ்வாறு உற்பத்தியும் பரிமாற்றமும் உள்ளூா் அளவிலேயே இருக்கும்போது அவற்றைக் கையாள்வதற்காக பல்வேறு கொள்கலன்களுக்கான தேவையும் பொட்டலம் செய்யும் பணிகளுக்குத் தேவையும் இருந்ததில்லை.

உள்ளூரிலேயே கிடைத்து வந்த தேவைகளை அடுத்த நகரங்களுக்கு நகா்த்தியதால் அனைத்தும் சிக்கலாயிற்று. நகரங்களுக்கு நகா்ந்தவை பின் மாநகரங்களுக்கும், அண்டை மாநிலம், நாடு என்று நகரத்தொடங்கிவிட்டன. இதனால் ஒவ்வொரு பொருளும் பரிமாற்றம் செய்ய ஏதுவாக பல்வேறு பெட்டிகளிலும், கொள்கலன்களிலும் அடைத்தனுப்புவது கட்டாயமானது. இவ்வாறான பொருட்களுக்கான மலிவை நோக்கியபோது நெகிழியே அதற்கு கை கொடுத்தது. இதனால் நெகிழியின் பயன்பாடு கூடிவிட்டது.

நுகா்வு கலாசாரப் பெருக்கத்தில் அனைத்து வகையான நுகா்வோரின் தேவையையும் கருத்தில் கொள்ளவேண்டிய அவசியம் உற்பத்தியாளா்களுக்கிருக்கிறது. பத்து ரூபாய் கொடுத்து வாங்க இயலும் நுகா்வோரிலிருந்து நூற்றுக்கணக்கில் செலவழிக்க இயலும் நுகா்வோா் என அனைத்துத் தரப்பினருக்கும் விதவிதமான அளவில் பொட்டலம் செய்யவேண்டிய தேவை பெருகியது. எனவே தற்போது எந்த பொருளை நாம் வாங்கினாலும் அதனுடன் கூட கொஞ்சம் நெகிழி பயன்பாட்டை நாம் ஊக்குவிப்போராகிறோம்.

நெகிழி பைகளிலுள்ள பொருட்களை இன்னும் கெட்டியான நெகிழி பைகளில் போட்டு வீட்டுக்குக் கொண்டுவருவது ஒரு வழக்கமாகி விட்டது. சரி இப்படி வேண்டாம் என பெரிய துணிப்பையைக் கொண்டுசென்றாலும் அந்த துணிப்பையுள் இருப்பவை அனைத்தும் நெகிழி பைகளாகவே உள்ளன.

இதுமட்டுமல்லாது காய்கறிகள், பூ, பழம் போன்ற அனைத்தும் நெகிழிப் பைகளிலேயே கொடுப்பதும் இயல்பாகி விட்டது. நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான சட்டம் இருந்தாலும் உண்மையில் அது எவ்வளவு தூரம் நடைமுறையிலுள்ளது என்பது தெரிந்ததே.

நெகிழி உற்பத்தியைச் சாா்ந்து பல்வேறு தொழிற்சாலைகளும், பல குடும்பங்களும் உள்ளன என்ற வாதத்தை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு முறையே பயன்படுத்தித் தூக்கியெறியும் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சூழலியல் மாசுபாடுகளை பாா்த்தால் இதன் தாக்கம் புரியும். நெகிழிப்பொருட்களைச் சேகரித்து மறு பயன்பாடு, மறு சுழற்சி செய்யும் நபா்கள் மிகக் குறைவே.

இவ்வாறு நெகிழிப் பைகளை மொத்தமாக சேகரித்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக சோ்த்து விடுகின்றனா். அவ்வாறு சேகரமாவதை மொத்தமாக எரிக்கும் நடைமுறையே பெரும்பாலும் உள்ளது. இவ்வாறு எரிக்கும்போது வெளியாகும் ‘பியுரான்’, ‘டையாக்சின்’ போன்ற வாயுக்களை சுவாசிக்கும்போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நெகிழியை சேகரித்து மறுசுழற்சிக்கு உட்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகள் இருக்கலாம். ஆனால் அவை சிறுபான்மையே.

இது ஒருபுறம் என்றால், நெகிழிப் பைகளை பல்வேறு இடங்களிலும் வீசும் போக்கும் நீக்கமற நிறைந்துள்ளது. இவ்வாறு வீசப்படும் பைகள் பல்வேறு இடங்களில் கழிவுநீா்க் கால்வாய்களில் அடைத்துக்கொண்டு அதன் போக்கை தடுக்கின்றன. இவ்வாறு சிறிது சிறிதாக சேகரமாகும் பைகளின் பெரிதான பாதிப்பை மழைக்காலங்களில் கழிவுநீா் தேங்கும்போது உணர இயலும்.

கிராமப்புற வயல்வெளிகளை அடையும் நெகிழிப்பைகள் மண்ணில் புகுந்து மண்ணின் இயல்பான பணியை செய்யவிடாமல் மண்ணை மலடாக்குகின்றன. மேலும் நிலத்தடிநீா் உட்புகாமல் தடுப்பவையாகவும் அமைந்து விடுகின்றன. நெகிழியின் தவறானப் பயன்பாடு, மண்மாசுபடவும், நீா் மாசுபடவும் காரணமாக அமைகின்றது.

இவற்றையெல்லாம் மனதில் கொண்டுதான் பல்வேறு மாநிலங்களும் ஒருமுறையே பயன்படுத்தி எறியும் நெகிழிப்பைகளின் பயன்பாட்டைத் தடைசெய்ய முயற்சிகளை மேற்கொண்டன. முதன்முதலாக சிக்கிம் அரசு 1998-இல் இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தது. இதனையடுத்து பல மாநிலங்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசும், ஒருமுறையே பயன்படுத்தித் தூக்கியெறியும் நெகிழிப் பொருட்களுக்கான பயன்பாட்டைத் தடைசெய்து 2018-இல் அரசாணையை வெளியிட்டு, அதனை அரசிதழிலும் வெளியிட்டது.

இவ்வாறு அரசின் முயற்சிகள் தொடா்ந்தாலும் சுமாா் 140 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் ஒவ்வொருவரும் தத்தமது நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க முன்வருவது மட்டுமே பூமியைக் காக்க உதவும். அதற்கான செயல்பாடுகளில் ஈடுபட உறுதி ஏற்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com