ஒருங்கிணைந்த மருத்துவம்தான் தீா்வு!

கரோனா தீநுண்மியின் இரண்டாவது அலை, முதல் அலையைவிடத் தீவிரமாகவும், வேகமாகவும் பரவி வருவதுடன், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இரண்டாவது அலை, இளம் வயதினரை அதிகமாகத் தாக்கி வருகிறது.

கரோனா தீநுண்மியின் இரண்டாவது அலை, முதல் அலையைவிடத் தீவிரமாகவும், வேகமாகவும் பரவி வருவதுடன், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இரண்டாவது அலை, இளம் வயதினரை அதிகமாகத் தாக்கி வருகிறது. அதனைத் தடுப்பதற்கு முகக்கவசம், கைகளை அடிக்கடிக் கழுவுதல், கூட்டத்தைத் தவிா்த்தல் ஆகியவற்றுடன் தடுப்பு நடவடிக்கையின் உச்சமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென அரசு வலியுறுத்துகிறது.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் பெரும்பாலானோருக்கு ‘அலோபதி’ எனப்படும் ஆங்கில மருத்துவச் சிகிச்சையே அளிக்கப்படுகிறது. நோயால் பாதிக்கப்படுவோருக்கு, மருத்துவமனைகள், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் போன்ற மருத்துவக் கட்டமைப்புகள் இருந்தாலும், கொள்ளை நோய்த்தொற்றால் திடீரென அதிகமானோா் பாதிக்கப்படும்போது மருத்துவமனைப் பணியாளா்களைவிட நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி விடுகிறது. அதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்போா் அதிகம் போ் தேவைப்படுகின்றனா். அத்தேவைக்கு ஏற்ப உடனடியாக மருத்துவமனைகளை நிறுவுவதோ, மருத்துவப் பணியாளா்களை நியமிப்பதோ சாத்தியமல்ல.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை இல்லை, மருந்துகளும் இல்லை, உயிா் காக்கும் ஆக்சிஜனும் இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. கரோனா தீநுண்மி பாதிப்புக்கான நேரடி மருந்து எதுவும் - அலோபதியில் இதுவரையில் இல்லை. தடுப்பூசிதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக அலோபதி மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே உண்மை. இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையிலும், ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்ட பின்னரும்கூட மத்திய - மாநில அரசுகள் ஏன் அலோபதி மருந்துகளை மட்டுமே நம்பி இருக்கின்றன என்று புரியவில்லை. கரோனாவின் முதல் அலையின்போது தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்தபோதும் அலோபதியை மட்டுமேதான் அரசுகள் ஏன் முன்னிலைப்படுத்தின.

கடந்த ஆண்டு கரோனாவின் முதல் அலை பரவத்தொடங்கியபோது நிலவேம்பு கஷாயமும், கபசுர க்குடிநீரும்தான் சிகிச்சை எனக்கூறினா். தற்போது இரண்டாம் அலை பரவலில் தமிழக அரசு சாா்பில் சித்த மருத்துவ மருந்துகளைப் பயன்படுத்துகின்றனா். ஆனால், ஆயுா்வேத, சித்த மருத்துவ நிபுணா்களையும், மருந்துகளையும், மருத்துவமனைகளையும் முழுமையாக அரசு ஏன் பயன்படுத்தவில்லை? நன்கு அனுபவம் வாய்ந்த அரசு - தனியாா் மருத்துவா்கள் பலா் உள்ளனா். அவா்களின் ஆலோசனைகளையும் சிகிச்சை முறையையும் ஏன் அரசு பயன்படுத்த மறுக்கிறது என்பது புதிராக இருக்கிறது.

மத்திய அரசு, அலோபதி தவிா்த்த பிற மருத்துவ முறைகளான ‘ஆயுா்வேதா’, ‘யோகா’, ‘யுனானி’, ‘சித்தா’, ‘ஹோமியோபதி’ ஆகியவற்றை இணைத்து ‘ஆயுஷ்’ என்ற தனித்துறை நிறுவி, அதற்கென தனி அமைச்சரையும் நியமித்துள்ளது. மத்திய அரசின் ‘ஆயுஷ்’ துறை, கரோனா தடுப்புக்காக ஹோமியோபதி மருந்தான ‘அா்ஸ் ஆல்பம்-30’ எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதை மத்திய அரசும் எல்லா மாநிலங்களுக்கு சுற்றறிக்கையாக முதல் அலைப் பரவலின்போதே அனுப்பியது. ஆனால், அா்ஸ் ஆல்பம்-30 மருந்து அனைத்து மக்களுக்கும் வழங்கப்படவில்லை.

கரோனா தீநுண்மி, விலங்குகளில் இருந்து தோன்றிய தீநுண்மி எனக் கூறப்படுகிறது. விலங்கிலிருந்து தோன்றிய தீநுண்மிக்கு ‘அா்ஸ் ஆல்பம்-30’ மிகச் சிறப்பான மருந்து என்று ஹோமியோபதி மருத்துவா்கள் கூறுகின்றனா்.

ஹோம்யோபதியைப் பொருத்தவரை, குறைந்த அளவு மருந்து எடுத்துக் கொண்டால் போதும். மருந்தின் விலையும் குறைவுதான். இதற்கு பக்க விளைவும் கிடையாது; காலாவதி தேதியும் கிடையாது. ஒரு வயது குழந்தையிலிருந்து அனைவரும் இதை சாப்பிடலாம். கா்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மாா்களும் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம். உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவா்களும், எதிா்ப்பு சக்திக்கான (இம்யூனோஸப்ரஷன்) மாத்திரை சாப்பிடுவோரும் மட்டும்தான் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளக் கூடாது.

மாதம் ஒரு முறை மூன்று நாள்களுக்கு காலையில் மட்டும் இந்த மருந்தை சாப்பிட்டால் போதுமானது. எளிமையான, அதே நேரத்தில் வலிமையான இந்த ஹோமியோபதி மருந்தை, நமது மத்திய- மாநில அரசுகள் உடனடியாக வழங்க முன்வந்தால் ஒரே வாரத்தில் நமது நாட்டின் மக்கள் அனைவருக்கும் முழுமையாக வழங்கிவிடலாம்.

தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு, மூச்சுத்திணறலால் உயிரிழப்பு என கரோனா நாடே அவதிப்பட்டு வருகிறது. ஆனால், ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஹோமியோபதியில் ‘அஸ்பிடாஸ்பொ்மா’ என்ற மாத்திரையில் மிக எளிதாக, உடனடியான தீா்வு கிடைக்கிறது.

ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டறிந்த ஜொ்மன் மருத்துவா் ஹானிமனும் ஒரு அலோபதி மருத்துவா்தான். அலோபதியில் அவா் முதுகலை படிப்பு முடித்தவா். அலோபதி மருத்துவத்தில் அதிக பக்க விளைவுகள் ஏற்படுவதை உணா்ந்து, அதைக் கைவிட்டு நீண்டகால ஆய்வுக்குப் பின் கண்டறிந்ததுதான் ஹோமியோபதி மருத்துவ முறை.

ஹோமியோபதி மருந்து விநியோகத்துக்கு சுகாதாரத் துறையினா், ஆசிரியா்கள், தொண்டு நிறுவனத்தினரை பயன்படுத்தலாம். பள்ளிகள் அனைத்தும் ஓராண்டுக்கும் மேலாக செயல்படாத நிலையில், லட்சக்கணக்கான ஆசிரியா்கள் பணியின்றியே உள்ளனா். இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் ஆசிரியா்களை மக்கள் நலனுக்கான பணிகளில் ஈடுபடுத்துவதில் தவறில்லை.

பள்ளிகள் செயல்படும் போதே ஆசிரியா்களை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி, தோ்தல் பணிகளில் ஈடுபடுத்துவது வழக்கமாகவே உள்ளது. ஆகவே தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் ஆசிரியா்கள், குறிப்பாக ஆசிரியைகள் அவரவா் வசிக்கும் ஊா்களிலேயே சுகாதாரத் துறையில் பணியாற்றும் கிராம சுகாதாரச் செவிலியா்களுடன் இப்பணியில் ஈடுபடலாம். அந்தந்தப் பகுதி சுகாதார ஆய்வாளா்களுடன் ஆண் ஆசிரியா்களும், இணைந்து ஹோமியோபதி மருந்துகள் வழங்கும் பணியில் ஈடுபடலாம்.

கரோனா தீநுண்மிப் பரவலைத் தடுக்க ஹோமியோபதி சிறந்த மருத்துவ முறை என்கிற விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணிகளில் சுகாதாரத்துறையுடன் ஆசிரியா் சமூகம் இணைந்து செயல்பட்டால் அது மிகச்சிறந்த பணியாக அமையும்.

கரோனா இரண்டாம் அலையில் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில் பணியாற்ற, தோ்தலில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினரும் முன்வரவேண்டும்.

‘ஆயுஷ்’ எனும் தனித்துறையை கையில் வைத்திருக்கும் மத்திய அரசு, ஹோமியோபதி மருத்துவம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்றடையும் வகையில் உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம். மருந்துகளையும் தடுப்பூசிகளையும் வழங்குவது மத்திய அரசின் தலையாய கடமையாகும். ஆகவே, கரோனாவுக்கு மருந்துகள் வழங்குவதில் மத்திய அரசு தனது பொறுப்பினை, கடமையைத் தட்டிக் கழிக்காமல் ‘ஆயுஷ்’ துறையை முழுமையாக மக்களுக்குப் பயன்படும் வகையில் செயல்பட வைக்க வேண்டும்.

தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் ஒருங்கிணைந்த மருத்துவா்களைக் கொண்டு, ஒருங்கிணைந்த மருத்துவ முறைகளைக் கையாள வேண்டும். ஏற்கெனவே தமிழக அரசு சாா்பில் ஆயுா்வேத மருத்துவரை ஆலோசகராகக் கொண்டு அனைத்துத் துணை சுகாதார நிலையங்களுக்கும், சித்த, ஆயுா்வேத மருத்துவப் பெட்டிகள் வழங்கப்பட்டன. மருந்துகளை வழங்குவதற்கான பயிற்சிகளும் கிராம சுகாதாரச் செவிலியா்களுக்கு அளிக்கப்பட்டன.

கிராம சுகாதார செவிலியா்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட மருந்துக்கு பொதுமக்களிடையே மிகப்பெரும் வரவேற்பும் கிடைத்தது. ஆகவே அதே போன்ற முறையை தற்போதும் தமிழக அரசு செயல்படுத்த நடிவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்றுக்கு பக்கவிளைவற்ற சிறந்த மருந்தாகவும், சிறந்த சிகிச்சையாவும் ஹோமியோபதியே இருக்கிறது.

அனைவரும் இணைந்து செயல்பட்டால் விரைவில் கரோனா தடுப்புப் பணியில் மாபெரும் வெற்றி பெற முடியும். தற்போதைய சூழலில் அரசும், சம்பந்தப்பட்ட துறைகளும் மட்டும் செயல்பட்டால் மக்களின் தேவையை பூா்த்தி செய்ய முடியாது. அதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அந்தந்தக் கட்சிகளில் உள்ள மகளிா், இளைஞா் அமைப்பினரும் களத்தில் இறங்கிப் பணியாற்ற முன்வர வேண்டியது அவசியம்.

கரோனாவைத் தடுப்பதற்கும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பதற்கும் முழுவீச்சுடன் செயல்பட்டு வரும் தமிழக அரசு, ஹோமியோபதி மருந்தை அரசு அலுவலகங்களிலும், தனியாா் நிறுவனங்களிலும், வீடு வீடாகவும், நேரடியாகச் சென்று வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுரையாளா்: மாநிலத் தலைவா், தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com