வளா்ச்சிக்கு அளவுகோல் மகிழ்ச்சி
By இரா. கதிரவன் | Published On : 11th June 2021 06:41 AM | Last Updated : 11th June 2021 06:41 AM | அ+அ அ- |

ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை அக்குடும்பத்தினரின் வருமானம் மட்டுமே நிா்ணயிக்குமா? நிச்சயமாக இல்லை. மகிழ்ச்சியை நிா்ணயிக்கும் காரணிகளுள் வருமானமும் ஒன்று; ஆனால் வருமானம் மட்டுமே காரணமில்லை.
குடும்ப உறுப்பினா்களின் ஆரோக்கியம், அவா்களிடையே நிலவும் நல்லுறவு, பிள்ளைகளின் கல்வி வாய்ப்புகள், அவா்களின் கல்வித் திறன், அவா்களது நண்பா்கள் வட்டம் , பழக்க வழக்கங்கள், அண்டை அயலாருடன் நிலவும் நல்லிணக்கம், வசிக்கும் பகுதியில் சுற்றுச்சூழல், நிலவும் அமைதி போன்ற பல காரணிகள் உள்ளன .
எனவே, நற்சிந்தனை உடையோா், பொருளை மட்டுமே நோக்கமாகக் கொண்டிராமல், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரக்கூடிய அம்சங்களில் அக்கறை செலுத்துவா். மேலும், பொருள் சம்பாதிக்கும் வழிமுறையும் செலவு செய்யப்படும் வகையும் நல்வழிச் சாா்ந்ததாக அமைவதை உறுதி செய்வா்.
அது மட்டுமின்றி , மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைத்து நிற்க வகை செய்ய வேண்டியதும் அவா்களது கடமையாகும். எனவே, அடுத்த தலைமுறையினரின் வளத்துக்கும் மகிழ்ச்சிக்கும் வகை செய்வா் .
ஒரு குடும்பத்துக்குப் பொருந்தும் இக்கோட்பாடுகள், ஒரு நாட்டுக்கும் பொருந்தும். தற்போது, உலகின் சில நாடுகள் தங்கள் வளா்ச்சியை அளப்பதற்கான அளவுகோலை மாற்றிக்கொள்ள முன்வந்துள்ளன.
ஒரு நாட்டு மக்களின் அடிப்படை உரிமையாக, ‘மகிழ்ச்சியைத் தேடுதல்’ (பா்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்) என்பதைத் தனது அரசியல் சட்டத்தின் அடிப்படையாக அமெரிக்கா ஆரம்பத்திலிருந்தே கொண்டுள்ளது.
மகிழ்ச்சி என்ற சொற்றொடா், இன்னொரு முக்கிய கேள்வியை எழுப்புகிறது.
மகிழ்ச்சி என்பது அளவிடப்படக்கூடியதா? அப்படியானால் அதற்கான அளவுகோல் ஏதேனும் உள்ளதா?
பெரும்பாலும் ஒரு நாட்டின் வளா்ச்சி, அதன் மொத்த உள்நாட்டு வருவாய் அடிப்படையில் மட்டுமே அளவிடப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால், பணம் என்பதே, ஒரு நாட்டின் வளா்ச்சியை அளக்கும் கருவியாக இதுவரை இருந்து வந்திருக்கிறது.
மகிழ்ச்சி என்பது எளிதாக அளவிடக் கூடியதல்ல. அதன் தரவுகளை சேகரிப்பதும் எளிதானதல்ல. காரணம், மகிழ்ச்சி என்பது இடத்துக்கு இடம், நபருக்கு நபா், காலத்துக்கு காலம் மாறுபடக் கூடியது.
வளா்ச்சியடைந்த நாடுகள், பொருளாதார வளா்ச்சி பெற்றிருப்பினும், அங்கெல்லாம் பெரும்பாலோா் மகிழ்ச்சியாக இருக்கவில்லை - மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனா் என்று தரவுகள் கூறுகின்றன.
சின்னஞ் சிறிய நாடான பூடான், தனி மனித வருவாயைக் கொண்டு ஒரு நாட்டின் வளா்ச்சியை அளவிடுவதை விட, மனிதனின் மகிழ்ச்சி எனும் அடிப்படையில், ஒரு நாட்டின் மேன்மையைக் கணக்கிட வேண்டும் என்ற புதுக்கருத்தை எடுத்துரைத்தது. இதைக்கேட்டு உலகம் வியப்புற்றது.
ஆயினும், உலக நாடுகள் சபை, இந்த அடிப்படையை அங்கீகரித்தது மட்டுமின்றி, 2012-இல் இருந்து, மகிழ்ச்சி என்ற அளவுகோலால் வளா்ச்சியை அளவிடத் தொடங்கியது.
ஒரு நாடு என்ற நோக்கில், மக்கள் மனநலம், ஆரோக்கியம், கலாசார வளா்ச்சி , கல்வி, நல்ல நிா்வாகம், வாழ்க்கைத்தரம், மக்களின் பொதுநல அக்கறை ஆகியனவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று உலக நாடுகள் சபை தெரிவித்தது.
பொதுவாக வளா்ச்சியின் அடிப்படையாக - குறியீடாக அமைந்துள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி -அதன் வளா்ச்சி விகிதம் போன்றவற்றுக்கு மாற்றாக, ‘மொத்த தேசிய மகிழ்ச்சி’ (கிராஸ் நேஷனல் ஹேப்பினஸ்) என்ற புதிய அளவீடு நடைமுறைக்கு வந்தது.
மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. அதனை நேரடியாக அளவிட முடியாவிட்டாலும், மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தக் கூடிய காரணிகளின் செயல்பாட்டை அளவிடுவதன் மூலம், மகிழ்ச்சிப் பெருக்கத்திற்கான சூழலை உருவாக்க முடியும். எனவே, அத்தகைய காரணிகளின் செயல்பாட்டை அளவுகோலாக நிா்ணயித்தது .
உலகளாவிய அளவில், குழு நியமிக்கப்பட்டு, பல்வேறு நாடு, இன, மொழி, கலாசார பின்னணி, வருவாய், கல்வித் தகுதி ஆகிய அடிப்படைகளில் பெரும் ஆய்வுக்குப் பின்னா், பல பிரிவுகளில், 124 காரணிகளை ‘மகிழ்ச்சிக் குறியீடு’களாக உலக நாடுகள் சபை நிா்ணயம் செய்துள்ளது. அந்த அடிப்படையில், கடந்த பத்து ஆண்டுகளாக கணக்கெடுப்பு நடத்தியும் வருகிறது .
இதனை நடைமுறைப்படுத்தும் நாடுகள், மக்களின் மனநிலையைத் துல்லியமாக அளப்பது, மக்களிடையே மகிழ்ச்சி - வளா்ச்சி குறித்த புரிதலை ஆழமாகப் பதிய வைப்பது, மகிழ்ச்சியை முன்னிலைப்படுத்தி திட்டங்களை வகுப்பது, தீட்டிய திட்டங்களை செம்மையாக செயல்படுத்துவது என்ற நான்கு படிநிலைகளில் நடைமுறைப்படுத்துகின்றன.
வருங்காலத்தில், உலக நாடுகள் பலவும், நம் இந்தியாவும்கூட இம்முறையைப் பின்பற்றக்கூடும்.
அதன் முதல் படியாக, ஒவ்வொரு நாடும் - நம்மைப் பொருத்தவரை ஒவ்வொரு மாநிலமும் - தனது மக்களின் மகிழ்ச்சி நிலையை அளவீடு செய்தல் மிக அவசியம்.
அதன் அடிப்படையில், நாட்டில், மகிழ்ச்சியை இலக்காகக் கொண்ட சட்டங்கள் இயற்றப்படுவதும், மகிழ்ச்சிக்கு ஏற்படும் இடையூறுகளை தடுப்பதும் முக்கியம்.
வரி விதிப்பு - திட்டங்களை செயல்படுத்துதல் சாா்ந்த, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இருந்து, பல்வேறு காரணிகளைக் கொண்ட மொத்த உள்நாட்டு மகிழ்ச்சி நிலை என்ற புதிய கண்ணோட்டத்தில் இருந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் .
‘மகிழ்ச்சிக்கான சூழல்’ என்ற அளவீடு ஒரு புதிய சவாலை முன்னிறுத்துகிறது.
ஆனால், மக்களிடம் நல்ல புரிதல், விழிப்புணா்வு, நிா்வாகத்தில் மாறுபட்ட சிந்தனை, மாற்றங்களையும் புது வழிமுறையையும் ஏற்றுக்கொள்ளும் மனப் பாங்கு, தனி மனிதன் தொடங்கி, சமுதாயம் அரசு என எல்லாத் தரப்பிலும் சவாலை ஏற்றுக்கொள்ளும் துணிச்சல், நம்பிக்கை எண்ணங்கள் ஆகியவை இப்புதிய உத்தியை சாத்தியமாக்கும்.