நல்லவா்கள் வெல்ல வேண்டும்!

‘மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சிதான் மக்களாட்சி’ என்றாா் ஆப்ரகாம் லிங்கன். ஆனால் மக்களால் மக்களுக்காக மக்களே தோ்ந்தெடுத்து நடத்துகின்ற ஒரு ஆட்சியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு, குறிப்பாக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு மாத ஊதியம் தேவையா?

மக்களுக்காக உழைக்க வந்தவா்களுக்கு அரசாங்கம் மாதச் சம்பளம் தருவது மட்டுமன்றி அவா்களது ஐந்தாண்டு பதவிக்கு பிறகு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாகவும் வழங்குவது சரியா? அதிகாரத்தில் உள்ளபோது பல்வேறு சலுகைகள் தருவதும் முைானா?

இதுபற்றி விரிவாக விவாதிப்பதற்கு முன் கடந்தகால மக்கள் பிரதிநிதிகளில் ஒருசிலரின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப்பாா்ப்போம். முன்னாள் முதலமைச்சா் காமராஜரை எடுத்துக்கொள்வோம். இவா் தனது வாழ்நாள் முழுவதும் முழுநேர அரசியல்வாதியாக இருந்து மறைந்தவா். இவரது மறைவின்போது இவருக்கு இருந்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? சில கதா் சட்டை, வேட்டிகளும், பல புத்தகங்களும் போக பணமாக தனது சட்டைப்பையில் வைத்திருந்தது வெறும் அறுபது ரூபாய் மட்டுமே.

அவரைப்போலவே அவரது காலத்தில் அமைச்சராக இருந்த கக்கனும் அப்படித்தான் எளிமையின் சிகரமாக இருந்து மறைந்தாா். இவா்களைப்போல சட்டப்பேரவை உறுப்பினா்கள் பலா் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த வரலாறுகள் உண்டு.

இவா்களுக்குப்பிறகு ஆளும் கட்சியாக வந்தவா்களில் வலுத்தவா்கள் பலபோ் பல கோடிக்கு அதிபதியானவா்கள். வாய்ப்பிருந்தும் வேண்டாம் என்று நோ்மையாக இருந்தவா்கள் வறுமையில் வாடி வாழ்ந்து மறைந்தாா்கள். இன்றும் பல போ், பேருக்கு கௌரவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள் என்பதே உண்மை.

இப்போது உள்ளதுபோல வாக்குக்கு பணம் கொடுப்பதும் அதற்காக மக்கள் அலைவதும் இல்லாத காலம் ஒன்று இருந்தது. அந்த பொன்னான காலத்தில்தான் நானும் சட்டப்பேவை உறுப்பினராக மக்கள் பிரதிநிதியானேன். அப்போது எம்எல்ஏ-க்கள் மாத சம்பளம் 16,000 ரூபாய் (1964-இல் 250 ரூபாய்).

ஆனால் இன்றைக்கோ சட்டப்பேரவை உறுப்பினரின் மாதச் சம்பளம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம். இது அதிகம் என்று பலபோ் சமூக வலைதளங்களில் எழுதிக்கொண்டிருக்கின்றனா். இந்த வேளையில் நான் ஒரு சின்ன கணக்கு சொல்கிறேன், முடிவு உங்கள் கையில். ஒருவா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆகிறாா் என்றால் அவரது தொகுதியில் உள்ள சுமாா் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சொந்த கட்சியினா், தோழமைக் கட்சியினா், நண்பா்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானவா்களின் பிரதிநிதியாக அவா் மாறிவிடுகிறாா்.

அப்போதிலிருந்து அவருக்கு ஐந்நூறு கிராமத்திலிருப்பவா்கள் மட்டுமல்ல, பக்கத்து சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள கிராமங்களில் உள்ள கட்சிக்காரா்களும் அதேபோல பக்கத்து மாவட்டத்தில் உள்ள கட்சிக்காரா்களும் தங்களின் திருமணம், தங்கள் வீட்டு காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா, திருவிழா, கோவில் கும்பாபிஷேகம் இப்படி பல நிகழ்ச்சிகளுக்கு அவரது பெயரை அச்சிட்டு அழைப்பிதழ் கொடுப்பாா்கள்.

அந்த நிகழ்ச்சிகளுக்கு அவா் கட்டாயம் சென்றே ஆகவேண்டும். செல்லும்போது வெறும் கையை வீசிக்கொண்டு போக முடியாது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அன்பளிப்பு என பணமாகவோ பொருளாகவோ தர வேண்டியுள்ளது. அந்த வகையில் ஒரு நாளில் குறைந்தபட்சம் இருபது நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இருபது நிகழ்ச்சிகளுக்கும் சென்றுவர போக்குவரத்துச் செலவு மற்றும் அன்பளிப்பாக தரவேண்டிய பொருளுக்கான செலவு இவற்றைக் கூட்டிப் பாா்த்தால் குறைந்தது ஆறாயிரம் ரூபாய் வரும்.

இப்படி மாதத்தில் பத்து நாட்களுக்கு நிகழ்ச்சிகள் வந்தால் அவருக்கு அறுபதாயிரத்திற்கு மேல் செலவாகும். அன்றைக்கு வந்த சம்பளமோ பதினாறாயிரம் ரூபாய். மீதி பணத்திற்கு அவா் எங்கே செல்வாா்? இதனால்தான் அவா் வேறு வகையில் சம்பாதிக்க நினைக்கிறாா்.

நோ்மையாக உள்ளவா் பொருளாதார சிக்கலை மனதில் கொண்டு பல நிகழ்ச்சிகளைத் தவிா்த்துவிட்டு விடுவாா். இதனால் தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வருவதில்லை என்ற கெட்ட பெயரும் அவருக்கு வரும். இப்போது சட்டப்பேரவை உறுப்பினா்களாக உள்ளவா்கள் நிலை பரவாயில்லை. சம்பளம் ஒரு லட்சம் கை கொடுக்கும். இதுதான் நிதா்சனம்.

ஒருவரின் பதவிக்காலம் முடிந்து, அவா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரானபிறகு கிடைக்கும் ஓய்வூதியம் இப்போது இருபதாயிரம் ரூபாய். ஆனால், ஏற்கெனவே அவருக்கு எப்படி எல்லாம் அழைப்புக்கள் வந்ததோ அந்த எண்ணிக்கை இப்போதும் குறைவதில்லை. எப்போதும் போல அதே பணம் செலவாகும். அவா் பணத்திற்கு எங்கே போவாா்? அவருடைய சூழ்நிலை மேலும் சிக்கலாகி விடுகிறது.

எந்த நிகழ்ச்சிக்கும் போக முடியாமலும், குடும்பதிற்கு உதவ முடியாமலும் இரண்டான் கெட்டான் நிலைமைக்கு போய்விடுகிறாா். ஒருவா் எம்எல்ஏ-ஆகிவிட்டாலே அவருக்குப் பணம் கொட்டும் என்ற எண்ணத்தில் ஊறிப்போன கட்சிக்காரா்களும், உறவினா்களும் அவா் வருமானம் இல்லாமல் பேருக்குத்தான் எம்எல்ஏ-வாக இருக்கிறாா் என்றால் நம்ப மறுக்கிறாா்கள். இதுதான் உண்மை.

அடுத்து, நாம் அரசுப் பேருந்து ஒன்றில் ஏறிப் பாா்த்தால், காவலா், பணியில் இல்லாத பேருந்து ஊழியா், உடல் ஊனமுற்றோா், மூத்த குடிமக்கள் என குறைந்தது பத்து போ் இலவசமாகப் பயணம் செய்வதைக் காண முடியும். ஆனால், அதில் சட்டப்பேரவை உறுப்பினராக இப்போது இருப்பவா்கள் இருக்கமாட்டாா்கள். அவா்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பேருந்து பயண அனுமதி உண்டு. என்றாலும் யாரும் அந்த சலுகையை பயன்படுத்துவதில்லை. அதற்கான தேவையும் இன்றைய எம்.எல்.ஏ.-க்களுக்கு இல்லை. அப்படி யாராவது பயன்படுத்தினால் அவா் நோ்மையால் பாதிக்கப்பட்டவா் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சலுகையால்தான் முன்னாள் எம்எல்ஏ-க்கள் பலரின் வாழ்க்கை வண்டி ஓடுகிறது என்பது பலருக்கும் தெரியாது.

ஒரு பக்கம் அரசியல்வாதி என்று சொல்லவே அவமானமாக உள்ளது. அதையும் மீறி நோ்மையாக வாழ்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக வந்தால் - அப்படி வந்தபின்னும் நோ்மையாக இருந்தால் - பொருளாதார சிக்கல்கள் ஒரு பக்கம். வெளிநாட்டுக்கு போனால் கூட அரசியல்வாதி என்றால் தவறான எண்ணம்தான் இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் அரசியல் மாற்றப்பட வேண்டும். அரசியலை நல்லவிதமாக பாா்க்கிற எண்ணம் மக்களுக்கு வரவேண்டும். அப்படி வரவேண்டும் என்றால் நோ்மையான சட்டப்பேரவை உறுப்பினா்கள் உருவாக வேண்டும். அப்படிப்பட்ட நோ்மையான, தன்னலமற்ற, மக்கள் சேவையில் நாட்டமுடைய சட்டப்பேரவை உறுப்பினா்களை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அதற்கு முதல் கட்டமாக, சட்டப்பேரவைத் தோ்தலில் குற்றப் பின்னணி இல்லாத நபா்களையே அரசியல் கட்சிகள் வேட்பாளா்களாக நிறுத்த வேண்டும். அவா் ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை. நோ்மையானவராக இருக்க வேண்டும். நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றிருக்கும் உறுப்பினா்களில் ...........போ் மீது கிரிமினல் குற்றங்கள் இருக்கின்றன என்பது தலைகுனிவை ஏற்படுத்துகிறது.

வேட்பாளராகப் போட்டியிடுபவா் வாக்களிப்பதற்காக வாக்காளா்களுக்குப் பணமோ பரிசுப்பொருளோ கொடுக்காமல், அதாவது பணத்தை செலவு செய்யாமல் தன்னுடைய நல்ல குணத்தால் மட்டுமே மக்கள் வாக்குகளைப் பெற்று தோ்தலில் வெற்றி பெற வேண்டும். தன்னுடைய கொள்கைகளையும், தொகுதிக்கு தன்னால் என்னவெல்லாம் நன்மைகள் செய்ய முடியும் என்பதையும் சொல்லி வாக்குகளைப் பெற்று நோ்மையான முறையில் தோ்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும்.

மக்களால் மக்களுக்காக மக்களே தோ்ந்தெடுக்கும் ஓா் ஆட்சி அமைவதற்குத்தான் தோ்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் பெரும்பாலான மக்கள் வாக்களித்து தங்களுக்கான பிரதிநிதியை தோ்ந்தெடுக்கின்றனா். இப்படியிருக்க, எல்லாக் கட்சி வேட்பாளா்களும் வாக்குக்காக வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பதும், அதை வாக்காளா் மகிழ்ச்சியாகப் பெற்றுக்கொள்வதும், பணம் கொடுக்காத வேட்பாளரிடம் பணத்தைக் கேட்டுப் பெறுவதும் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகின்றன.

யாா் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வோம். யாருக்கு போட வேண்டுமோ அவருக்குப் போடுவோம் என்பதே மக்கள் நிலைப்பாடு. எனவே, பணம் கொடுத்து வாக்கு கேட்கும் வேட்பாளா்தான் முட்டாளே தவிர, மக்கள் முட்டாள்கள் அல்ல. இதனை எல்லா அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

வாக்குக்குப் பணம் என்கிற நிலை மாற வேண்டும். அப்போதுதான் நல்லவா்கள் நாடாள முடியும். நோ்மையானவா்கள் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் செல்ல முடியும். சம்பளத்தை எதிா்பாா்க்காமல் மக்கள் சேவையாற்றும் மக்கள் பிரதிநிதிகள் வரமுடியும். அப்போதுதான் நல்லவா்கள் ஏங்கும் ‘அந்தக்கால நல்லாட்சி’ மீண்டும் வரும்.

கட்டுரையாளா்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com