கிராமம் உயர பொருளாதாரம் உயரும்

மே 1 முதல் 24 வரை இந்தியாவில் புதிய கரோனா நோயாளிகள் கிட்டத்தட்ட 78 லட்சம் பேர் இருந்தனர். இது இதற்குமுன் எந்த மாதத்திலும் பதிவாகாத உட்சபட்ச எண்ணிக்கையாகும்.

இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50 கோடி பேர் கிராமப்புறங்களில் வசிப்பதால் நம் நாட்டினில் ஏற்பட்டுள்ள இரண்டாம் அலை கரோனா தீநுண்மித் தொற்று, "உலகின் முதல் கிராமப்புறப் பெருந்தொற்றாக' இருக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மே 1 முதல் 24 வரை இந்தியாவில் புதிய கரோனா நோயாளிகள் கிட்டத்தட்ட 78 லட்சம் பேர் இருந்தனர். இது இதற்குமுன் எந்த மாதத்திலும் பதிவாகாத உட்சபட்ச எண்ணிக்கையாகும். இந்த காலகட்டத்தில் உலக அளவில் பதிவான புதிய நோயாளிகளில் இருவரில் ஒருவர் இந்தியர். அப்போது உலகில் இந்நோயால் நிகழ்ந்த மரணங்களில் ஒவ்வொரு மூன்றாவது மரணமும் இந்தியாவில் நிகழ்ந்தது. 

நமது நாட்டில் ஒவ்வொரு இரண்டாவது புதிய நோயாளியும் கிராமப்புற மாவட்டங்களில் கண்டறியப்பட்டனர். அதேபோல்  பதிவான ஒவ்வொரு இரண்டாவது மரணமும் இந்திய கிராமப்புறங்களில் நிகழ்ந்தது. 
இந்தியாவில் ஆறு கோடியாக இருந்த  ஏழைகளின் எண்ணிக்கை கரோனா தீநுண்மியினால் கடந்த ஒரு வருடத்தில்13.4 கோடியாக (சுமார் இரு மடங்கு) அதிகரித்துள்ளது என்று உலக வங்கி தரவுகளின் அடிப்படையிலான ஆய்வு கூறுகிறது. கரோனா தீநுண்மியின் முதல் அலை கிராமப்புறங்களில் பெரும் பாதிப்பு  ஏற்படுத்தவில்லையாதலால், பெரும்பாலானோரின் கருத்து இது நகர்ப்புறங்களில் பரவும் ஒரு நோய் என்றே இருந்தது. சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு கொண்ட இந்திய நகர்ப்புறங்களே அதிகப்படியான நோயாளிகளால் திணறிய நிலையில், கிராமப்புறங்களில் இரண்டாவது அலை ஏற்படுத்திய பாதிப்பு மிக மோசமாக இருந்தது.

ஏழைகள் அதிகமாக இருக்கும் இந்திய கிராமப்புறங்களில் கரோனோ தீநுண்மியின் பரவலைக் கணிப்பதும்  கட்டுப்படுத்துவதும் கடினமாக இருப்பதால் கடந்த ஆண்டை விட இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் என்பது பொருளாதார வல்லுனர்களின் கணிப்பு. ஒரு நாட்டின் உழைக்கும் வயது மக்கள்தொகையின் விகிதமான தொழிலாளர் பங்கேற்பு விகிதம் நமது நாட்டில் கரோனா தீநுண்மியின் முதல் அலைக்கு பின்  2019-20-ஆம் ஆண்டில் சராசரி அளவான 42.7 சதவீதத்திலிருந்து 39.9 சதவீதமாகக் குறைந்தது என்று இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
வேலை இழப்பு, வேலையின்மை ஆகியவை முதல் அலை  போலன்றி இம்முறை  கிராமப்புறங்களில் அதிக அளவில் காணப்படுவதாக  "இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்' கூறுகிறது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் சமீபத்திய தகவல் 2021, மே மாதம் மூன்றாவது வாரத்தில் நமது நாட்டின் நகர்ப்புறங்களில் வேலையின்மை 14.71 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 14.34 சதவீதமாகவும் இருந்ததாகத் தெரிவிக்கிறது.

இந்தியாவிற்கு ஏறத்தாழ 46% வருவாய் தரும் கிராமப்புறங்களில் நீடிக்கும் கரோனா தீநுண்மியின் இரண்டாவது அலை, அங்கு வசிக்கும் முறைசாரா, குறைந்த வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள் மீது பொருளாதார தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய கிராமப்புற முறைசாரா தொழிலாளர்கள்  தீநுண்மியின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உத்தரவாதமற்ற வேலைகளை செய்து வாழ்ந்து வருகின்றனர். தீநுண்மிப் பரவல் அவர்களுக்கோ அவர்கள் குடும்பத்தாருக்கோ பாதிப்பை ஏற்படுத்தும்போது அவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியினை சந்திக்க நேரிடும். 

நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள்தொகையைக் கொண்டிருக்கும்  கிராமப்புறங்களில் தேவையிலும் நுகர்விலும் உண்டான பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் ஆழ்ந்த முடங்கு நிலையினை நோக்கி நகர்வதற்கு முக்கிய காரணம் என்று தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் 2020-21 நிதியாண்டிற்கான  மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவு கூறுகிறது.  இந்த காலகட்டத்தில் விவசாயத்துறை மட்டுமே 20.40 லட்சம் கோடி ரூபாயுடன் சாதகமான வளர்ச்சியினை பதிவு செய்தது.

விவசாயத் துறையின் வளர்ச்சி, கிராமப்புற அரசாங்க திட்டங்கள் காரணமாக முதல் அலையின் போது கிராமப்புற பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.  ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்பியதால் விவசாயத்துறையில் வேலைவாய்ப்பு 3% அதிகரித்தது. அதிக விளைச்சல் இருந்தபோதிலும் சாதகமற்ற வர்த்தகம் குறைந்த வருமானத்தையே விவசாயத்துறைக்கு வழங்குகிறது. குறைந்த வருமானமும் நுகர்வும் சாதகமற்ற வர்த்தகத்திற்கு காரணமாக அமைகின்றன. 

2019-20, 2020-21 நிதியாண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.10.56 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  அதாவது 7.3% வீழ்ச்சி அடைந்துள்ளது. தனியார் நுகர்வு இல்லாமல் பொருளாதார வளர்ச்சி இருக்காது என்ற சூழலில், பொருளாதார மந்தநிலை தனியார் நுகர்வு பெருமளவில் குறைய வழிவகுத்தது. 

இந்தியாவில் 50 சதவீத தொழிற்சாலைப் பணி, கட்டுமான பணிகள் கிராமப்புறங்களில் நடைபெறுகின்றன.  குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பினை தரும் இத்துறைகள் பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டன. இதுவும் கிராமப்புறத் தொழிலாளர்களின் வருமானத்தில் சரிவினை ஏற்படுத்தியது. இதனால் தனியார் நுகர்வும் குறைந்தது.

நம்நாடு நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் சூழலில் 2019-20-ஆம் ஆண்டில் ரூ.83,21,701 கோடியாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57.1 சதவீதம்) இருந்த தனியார் நுகர்வு செலவு 2020-21-ஆம் ஆண்டில் ரூ.75,60,985 கோடியாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56 சதவீதம்) குறைந்துள்ளது.  நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் தனியார் நுகர்வு செலவு 2019-20-ஆம் ஆண்டில் ரூ.62,056 ஆக இருந்தது. அதுவே  2020-21ஆம் ஆண்டில் ரூ.55,783 ஆக குறைந்தது. 

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். விவசாயம் போற்றும் கிராமங்களே நமது தேசத்தின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தி. விவசாயம் போற்றுவோம்; கிராமம் காப்போம்; இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com