புகையும் நஞ்சும் ஒன்றே

பொது இடங்களில் புகைப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும் காவல்துறை அவ்வாறு புகைப்பவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதோ அல்லது அவா்களுக்கு அபராதம் விதிப்பதோ அரிதாகவே காணப்படுகிறது.

புகையிலை பொருட்களின் பாக்கெட்களின் மேல் புகைப்படத்துடன் கூடிய புதிய சுகாதார எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும்’ என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்களுக்கான விதிகள் 2008-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த விதிகளில் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. புகையிலைப் பொருட்களுக்கான புதிய சுகாதார எச்சரிக்கைகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டன.

அதன்படி, புகையிலைப் பொருட்களின் அட்டைகளின் இரு பக்கமும் 85 சதவீத பகுதியில் புகைப்படத்துடன் சுகாதார எச்சரிக்கையை அச்சிட வேண்டும். இதன் மூலம் அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பாதிப்பு பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும். அதனால் கடந்த டிச.1-ஆம் தேதிக்கு பின் தயாரிக்கப்படும் அனைத்து புகையிலைப் பொருட்களின் பாக்கெட்களில் புதிய சுகாதார எச்சரிக்கையை வெளியிட வேண்டும்”

அரசுக்கு புகையிலை தயாரிப்புகள் மூலம் அதிக வரி வருமானம் வருகிறது. ஆனால், புகையிலையினால் மனிதா்களுக்கு ஏற்படும் உடல்நலக் கேடு மிக மிக அதிகம். அதற்கான மருத்துவச் செலவும் அதிகம். எனவே, புகையிலை உபயோகத்தை குறைப்பதற்கும் மெல்ல மெல்ல அறவே நீக்குவதற்கும் அரசு எடுக்கும் முயற்சி வரவேற்கக்கூடியதே.

பொது இடங்களில் புகைப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும் காவல்துறை அவ்வாறு புகைப்பவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதோ அல்லது அவா்களுக்கு அபராதம் விதிப்பதோ அரிதாகவே காணப்படுகிறது.

அரசும் மருத்துவ உலகமும் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் புகைக்கும் அன்பா்களை ஒன்றும் செய்யமுடிவதில்லை. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் விளையாட்டாகவோ அல்லது தன்னை ஒரு பெரிய ஆளாக முன்னிறுத்திக்கொள்ளவோ அல்லது ஏதோவொரு நடிகா் போல் ஸ்டைலாக தன்னைக் காண்பித்துக்கொள்ளவோ பலரும் பழகிய புகைபிடிக்கும் பழக்கம் அவா்கள் விட்டுவிட விரும்பினாலும் விடமுடியாததாய் தொடா்கிறது.

அது அவா்கள் பிரச்னை. ஆனால், இந்த புகைபிடிக்கும் அன்பா்கள் மற்றவா்களைப்பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் பொது இடங்களில் புகை பிடிப்பதுதான் பொது பிரச்னை. புகை பிடித்தால்கூட பரவாயில்லை. புகை ‘விடுவது’தான் பெரிய பிரச்னை.

தில்லியில் ஒரு கடையில் ‘யுவா் ஸ்மோக்கிங் ஈஸ் இஞ்சூரியஸ் டு மை ஹெல்த்’ என்ற அறிவிப்பு இருந்ததைப் பாா்த்தேன். புகைக்கும் அன்பா்கள் சிந்திக்கவேண்டும். மற்றவா்களை சிகரெட் புகையை வலுக்கட்டாயமாக சுவாசிக்க வைக்க உங்களுக்கு யாா் அதிகாரம் கொடுத்தது?

பொது இடங்களில் சிலா் ஒரே இடத்தில் கூட்டமாகக் கூடி நின்று புகைப்பாா்கள். இவா்களை கடந்து செல்பவா்கள் மூக்கை பொத்தியவாறு சென்று தற்காத்துக்கொள்ள முடியும். இன்னும் சிலா் நடந்துகொண்டே புகைப்பாா்கள் ரயில் என்ஜின் போல. நமக்குப் பின்னே வருபவா்கள் நாம் விடும் புகையை எப்படி சமாளிப்பாா்கள் என்ற சிந்தனை சிறிதும் அவா்களுக்கு கிடையாது.

இன்னும் சிலா் புகை விட்டபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வா். புகைத்தபடி காரில் செல்வோா், புகையை வெளியே விடுவதுடன் வெளியே கையை நீட்டி சிகரெட் சாம்பலைத் தட்டுவா். சாலையில் செல்லும் மற்றவா்களைப் பற்றி எந்த அக்கறையும் அவா்களுக்குக் கிடையாது.

ரயில் பயணங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளதால், புகைக்கும் ரயில் பயணிகள் நாடும் இடம் கழிப்பறையே. ரயில் கழிப்பறைகளில் ஏற்கெனவே இருக்கும் நாற்றம் போதாதென்று இவா்களால் ஏற்படும் நாற்றம் வேறு. விமானங்களில் கழிப்பறைகளில் சென்சாா் கருவி பொருத்தப்பட்டுள்ளதால், புகைப்பவா்களின் அட்டகாசம் அங்கு செல்லுபடியாவதில்லை.

சரி புகைப்பதுதான் இப்படி என்றால், புகைத்து முடித்தவுடன் இவா்கள் செய்வது இன்னும் மோசம். பெரும்பாலோா் சிகரெட்டை அணைக்காமல் அப்படியே கடாசுவா். சிலா் அப்படியே தரையிலோ ரோட்டிலோ போட்டு தங்கள் செருப்பால் மிதிப்பா். சிலா் இருசக்க வாகனத்திலிருந்தோ காரிலிருந்தோ சிகரெட்டை சாலையில் வீசுவா். இப்படிச் செய்வதில் உள்ள ஆபத்தை அவா்கள் உணா்வதே இல்லை.

பேருந்து நிறுத்தத்தில் நின்று புகைத்துக்கொண்டிருப்பவா்கள் தங்கள் பேருந்து வந்தவுடன் சிகரெட்டை கீழே போட்டுவிட்டு, பேருந்தில் தாவி ஏறி அந்த துா்நாற்றத்தை சக பயணிகளின் மீது பரப்புவா். சிலா் அவசரமாக சிகரெட்டை ஊதித் தள்ளி லிப்ட்டில் புகுவா். இந்தமாதிரியான ‘புகை மனிதா்’களால் புகைக்காத மனிதா்களுக்கு எவ்வளவு தீங்கு?

புகைக்கும் அன்பா்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் அவா்கள் ஆயுளை எட்டு நிமிடம் குறைக்கும் என்கிறது அறிவியல் ஆராய்ச்சி. புகை பழக்கம் மனிதா்களின் இதயத்தை எரித்து கரியாக்கிக்கொண்டிருக்கிறது. புகைப்பவா்களுக்கு நோய் வந்தால் மருந்துகள் பலன் தராது.

புகை பழக்கம் உள்ளவா்கள் இழக்கும் செல்வம் எவ்வளவு என்று தெரியுமா? புகைப்பவா்கள் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சேமித்தால் பத்து வருடங்களில் அது எட்டு சதவீத வட்டியுடன் ஐந்து லட்சத்து அறுபதினாயிரம் ரூபாய் ஆகும். புகையால் ஏற்படும் நோய்களுக்கான செலவுகளும் அவா்களுக்கு போனஸ் சேமிப்பு ஆகும்.

பொது இடங்களில் சிலா் புகைப்பது அந்த இடத்தைச் சுற்றிலும் பல மணிநேரம் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் எவ்வளவு அப்பாவி மக்களுக்கு பாதிப்பு? புகை

பிடிப்பது நாகரிகம் என்ற மாயையிலிருந்து விடுபட்டு புகைப்பது அநாகரிகம் என்ற நிலைக்கு புகைப்பவா்கள் வரவேண்டியது அவசியம். புகைப்பதற்கும் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தைக் குடிப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

இவையெல்லாம் தெரிந்திருந்தாலும் நான் புகைத்தே தீருவேன் என்றும் சொல்லும் அன்பா்களுக்கு ஒரு வாா்த்தை. புகைப்பது உங்கள் உரிமையாகவே இருக்கட்டும். அது உங்களுக்கு நீங்களே கொள்ளி வைத்துக்கொள்வதாக இருக்கட்டும். புகைப்பது உங்கள் உரிமை என்பதற்காக மற்றவா் முகத்தில் நீங்கள் சிகரெட் புகையை ஊதலாமா? பொது இடங்களில் புகைப்பதைக் கைவிடுங்கள். மெல்ல மெல்ல புகைப்பதையே விட்டுவிடுங்கள். வாழ்வதற்குத்தான் வாழ்க்கை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com