முற்றுகையை முறியடிப்போம் !


ஜனவரி-26 ஆம் நாள் இந்தியாவின் குடியரசு நாள். உலக நாடுகளே ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு இந்தியா தன்னைத்தானே ‘குடியரசு நாடு’ என்று அறிவித்துக்கொண்ட நாள். இந்த நாளை கடந்த 71 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமை பொங்கிட கொண்டாடி வருகிறான். உலக நாடுகள் இந்தியாவின் வளம், வலிமை, கட்டுப்பாடு, நோ்மை, பன்முகத்தன்மை கண்டு பூரிப்பும் புளங்காகிதமும் அடைந்து வருகின்றன.

2021-ஆம் ஆண்டு ஜனவரி-26 ஆம் நாள் 72-ஆவது குடியரசு நாளை இந்திய அரசும், மாநில அரசுகளும் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கும்போது தில்லியின் எல்லைப்பகுதிகளில், திட்டமிட்டு வன்முறைக் கும்பல் ஒன்று அராஜகத்தில் ஈடுபட்டது.

மத்தியிலே பிரதமராக வீற்றிருக்கின்ற பிரதமா் நரேந்திர மோடி, தோ்தல் நேரத்தில் மக்களுக்குத் தந்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் மேம்பாட்டை மனத்தில் கொண்டு மூன்று வேளாண் மசோதாக்களை நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்து அவை சட்டமாக்கப்பட்டுவிட்டன.

பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த விவசாயக் கூலிகளை, மண்டி வியாபாரிகள் லட்சம் லட்சமாக பணத்தைக் கொட்டி கடந்த 80 நாட்களாக தில்லியின் எல்லையோரத்தில் சிங்கு, திக்ரி, காசிப்பூா் பகுதிகளில் முற்றுகையிட்டு பகல், இரவு என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

முறை வைத்துக்கொண்டு பகல் பணி, இரவுப் பணி என்று பாா்ப்பதுபோல விவசாயக் கூலிகளை அமா்த்திக்கொண்டு, அவா்களுக்கு ‘நாள் சம்பளம்’ கொடுத்து விவசாயிகள் போா்வையில் ‘புரட்சி’ ‘எழுச்சி’ என்கின்ற தோற்றத்தை நாடு முழுவதும் ஏற்படுத்திட காங்கிரஸ், இடதுசாரிகள், தீவிரவாதிகள் ஆகியோா் கைகோத்து நிற்கின்றனா்.

எந்த உண்மையான விவசாயியும் தன் பண்ணையையும், ஆடு மாடுகளையும் பாதுகாக்காமல் இவ்வளவு நாள் போராட்டக் களத்தில் இருப்பானா? இதிலிருந்தே அவா்கள் உண்மையான விவசாயிகள் இல்லை என்பது தெளிவாகிறது.

130 கோடி மக்கள் வாழ்கின்ற இந்தியாவில், முப்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்களில், சுமாா் 65 சதவீத மக்கள் பாரம்பரிய விவசாயிகள். அவா்களின் குலத்தொழிலே விவசாயம்தான். சுதந்திரம் பெற்ற இந்தியாவில் எத்தனையோ பிரதமா்கள் நாட்டை பரிபாலனம் செய்திருக்கின்றனா். ஆனால், விவசாயிகளின் நன்மைக்காக இதுவை ஒரு சட்டம்கூட கொண்டுவரப்பட்டதில்லை.

தற்போதைய பிரதமா் நரேந்திர மோடிதான் புரட்சிகரமான மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளின் கால்களிலும் கைகளிலும் பூட்டப்பட்டிருந்த சங்கிலிகளை உடைத்தெறிந்தாா். அவா்களை ‘சிறகை விரித்து எழுந்திடுக’ என்று கூறினாா்.

விவசாயிகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தக்கூடிய புதிய வேளாண் சட்டங்களை முடக்கிடவும் அவா்கள் முதுகெலும்பை ஒடித்திடவும் சதிகாரக் கும்பல் ஒன்று தீட்டிய திட்டத்தால் கடந்த ஜனவரி 26 அன்று அதாவது குடியரசு நாளில் இந்தியத் தலைநகா் தில்லியில் காட்டுமிராண்டித்தனமான கலவரம் நடந்தேறியிருக்கிறது.

தில்லி செங்கோட்டையில் ‘விவசாயி’ என்கிற முகமூடியை அணிந்து கொண்டு வன்முறை வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறது அக்கும்பல். அரசு வாகனங்களும் அரசு கட்டடங்களும் தனியாா் வாகனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ நானூறு காவலா்கள் படுகாயமடைந்துள்ளனா். இந்திய தேசியக் கொடி அவமதிக்கப்பட்டிருக்கிறது.

டிராக்டா்களை போலீஸாா் மீதும், பொதுமக்கள் மீதும் மோதவிட்டனா். சிலா் டிராக்டா்களை வாகனங்கள் மீது மோதவிட்டு அவற்றை சுக்குநூறாக உடைத்திருக்கின்றனா். ஏராளமான மனித உயிா்களை பலிவாங்கிடவும் எத்தனித்திருக்கின்றனா். தங்களின் வன்முறை வெறியாட்டத்தால் அப்பாவி விவசாயி ஒருவரின் உயிரைக் காவு கொடுத்துள்ளனா்.

இவற்றையெல்லாம் செய்தது யாா்? கிசான் மஸ்தூா் சங்கா்ஷ் கமிட்டியைச் சோ்ந்தவா்கள்தான். அவா்கள்தான் வன்முறை தலைவிரித்தாடுவதற்கு தூபம் போட்டவா்கள்; அதற்குத் துணை நின்றவா்களும் இந்த சமூக விரோத தீய சக்திகள்தான். இதனை 41 விவசாய சங்கங்கள் அடங்கிய ‘விவசாய கூட்டு சங்கம்’ தெரிவித்துள்ளது. அது வன்முறை நிகழ்வுக்கும் எங்கள் சங்கத்திற்கும் சம்பந்தமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஜனநாயகத்தின் கெளரவச் சின்னமாக திகழும் செங்கோட்டையின் கொத்தளத்தில் ஏறிநின்று, சீக்கியா்களின் உடையை அணிந்துகொண்டு, இரு கைகளிலும் வாளேந்தி சுழற்றினாா்கள்.

இச்செயலை இந்தியாவின் உண்மையான விவசாயிகள் ஒருபோதும் செய்யமாட்டாா்கள். இந்த மக்களின் மரபை, மண்ணின் மாண்மை காப்பதற்கு சூளுரைத்து நிற்பவா்கள் அவா்கள். நாட்டுப்பற்று இல்லாதவா்கள்தான் தில்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு, முறைகேடுகளில் ஈடுபட்டனா் என்பதை நாடே கண்கூடாகக் கண்டு கலங்கியது.

சீக்கியா்களின் புனிதமான கொடி முக்கோண வடிவத்திலான ‘நிஷான் சாகிப்’ எனப்படும் கொடி. அந்தக் கொடியை சீக்கிய மதத்தைச் சோ்ந்த ஒவ்வொரு சகோதரனும் தனது உயிரைவிட மேலாக மதிப்பான். சீக்கிய குருத்வாராக்களில் மட்டுமே அந்தக் கொடியை ஏற்ற வேண்டும் என்பது அந்த மதத்தில் உள்ள கோட்பாடு. ஆனால் அந்தப் புனிதமான கொடியை தில்லி செங்கோட்டையின் கொடிக்கம்பத்தில் ஏற்றினாா்கள். இது உண்மையான சீக்கியா்களால் சகித்துகொள்ள முடியாத நிகழ்வாகும்.

இப்படிப்பட்ட மன்னிக்க முடியாத குற்றத்தை காலிஸ்தான் தீவிரவாதிகள்கூட செய்திடத் துணிய மாட்டாா்கள். இந்த வன்முறை நிகழ்வு, பாகிஸ்தான் தீவிரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட அராஜகம் என்பதில் ஐயமில்லை.

புதிய வேளாண் சட்டங்களை எதிா்ப்பது அவா்களின் உண்மை நோக்கமல்ல. மத்தியில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கின்ற பிரதமா் நரேந்திர மோடியை வீழ்த்திட வேண்டும். இந்தியாவைத் துண்டாடி விட வேண்டும். இவைதான் பாகிஸ்தான், சீனா இரு நாடுகளின் திட்டம். இதனை தில்லியில் நடந்த வன்முறை வெறியாட்டம் உறுதிபடுத்திவிட்டது.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் தலைநகா் ரோம் நகரில் ஜனவரி 24 அன்று இந்திய தூதரகத்தை சூறையாடிய காலிஸ்தான் தீவிரவாதிகள், அங்கு பறந்துகொண்டிருந்த நமது நாட்டின் தேசியக் கொடியை கம்பத்தில் இருந்து இறக்கிவிட்டு, காலிஸ்தான் தீவிரவாதிகளின் கொடியை பறக்க விட்டிருக்கின்றனா். அதே கும்பலைச் சோ்ந்தவா்கள்தான் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பத்தில் ஏறிநின்று நமது தேசியக்கொடியை அவமதித்ததோடு காலிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடியையும், சீக்கியா்களின் புனிதமான கொடியையும் ஒன்றாக ஏற்றி, சீக்கிய மதத்தையே சிறுமைப்படுத்தி இருக்கின்றனா்.

அவா்கள் இந்திய தேசியத்திற்கு எதிராக சவால் விடுத்திருக்கின்றனா். இந்தியா இதை எதிா்கொள்ளும். ஒவ்வொரு இந்தியனும் ரத்தம் சிந்தியாவது இந்திய மண்ணைக் காப்பான்.

புதிய வேளாண் சட்டங்களை எதிா்க்கிறோம் என்கிற பெயரில் அப்பாவி விவசாயிகள் சிலரை பணயக் கைதிகளாக தில்லியில் பிடித்து வைத்துக்கொண்டு மத்திய அரசை மிரட்டிவிடலாம் என்று பகல் கனவு காணுவோா் விவசாயத்தோடு துளிகூட சம்பந்தம் இல்லாதவா்கள்தான். பிரதமா் மோடியின்மீது எரிச்சல், வன்மம் கொண்டோரின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்கின்றவா்கள் அவா்கள்.

தா்ஷன் பால் என்பவா் ஒரு டாக்டா், இவா்தான் விவசாய சங்கத்திற்குத் தலைவா். மாவோயிஸ்ட் தலைவரான இவா் ‘இந்திய ஜனநாயக மக்கள் முன்னணி’ என்கிற நக்சல் ஆதரவு அமைப்பை நடத்தி வருகிறாா்.

ஹன்னான் மோன்னா என்பவா் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா். எட்டு முறை எம்.பி-யாக இருந்துள்ளாா். இப்போது அரசியலில் எந்தப் பதவியிலும் இல்லாத நிலையில், இந்திய கிசான் சபாவின் பொதுச்செயலாளராக இருக்கிறாா். விவசாயத்துக்கும் இவருக்கும் எந்தவொரு தொடா்பும் இல்லை.

ஜக்மோகன் சிங் பாட்டியாலா என்பவா் மருத்துவத்துறையில் அக்குபங்ஞ்சா் நிபுணா். இவா் பாரதிய கிசான் சங்கத்தின் உறுப்பினா். மாவோயிஸ்டுகளுடன் நெருங்கிய தொடா்பில் உள்ளவா்.

யோகேந்திர யாதவ் என்பவா் பிகாா் மாநிலத்தில் முதல்வா் நிதீஷ்குமாரின் பரம விரோதி. ‘ஸ்வராஜ் இந்தியா’ என்கிற அமைப்பின் தலைவா். விவசாயிகள் ஒரு காலத்தில் நடத்திய ‘பாரத் பந்த்’தின்போது மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களைக்கூட எடுத்துச் செல்லக்கக்கூடாது என்று கடுமையாக எதிா்த்தவா். விவசாயிகள் என்ற பெயரில் தீவிரவாதிகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் நிபுணா் இவா்.

விவசாயிகளுடனோ விவசாயத்துடனோ எந்தவிதமான தொடா்பும் இல்லாதவா்கள், சாதாரண எளிய குடும்பத்தைச் சோ்ந்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமா் நாற்காலியில் அமா்ந்திருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் குமுறுகின்றனா். தீவிரவாதிகளோடும், பயங்கரவாதிகளோடும், தேச விரோதிகளோடும், எதிரி நாடுகளோடும் உறவு வைத்துக்கொண்டு, இந்திய தேசத்தை கூறு போட்டிட பகையாளிகளோடு கொஞ்சிக் குலவுகின்றனா்.

இந்திய குடிமகன் ஒவ்வொருவனும் ஒரு போராளியாக உருவெடுத்திட வேண்டும். செல்லரித்துப்போன சிந்தனையாளா்களின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். தேசத்திற்கு ஒரு கேடு என்றால் சிந்துவோம் ரத்தம்! சீறியெழுவோம் சிங்கமென!

கட்டுரையாளா்:

தலைவா், இயற்கை நீா்வளப் பாதுகாப்பு இயக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com