கழிவுகளால் மாசடையும் ஆறுகள்!

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் கழிவுநீரைக் கலந்து மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வது பற்றியும், கழிவுநீா் வெளியேறுவதை எப்படி தடுப்பது என்பது பற்றியும் ஆலோசனைகள் வழங்குவதற்காக வல்லுநா் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியாற்றின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதி ஆறு, கரூா், திருப்பூா் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளால் மாசடைவதாகவும், அதனால் அமராவதி ஆற்று நீா், குடிக்கவோ, விவசாயத்திற்கோ பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்றும் தெரிவித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி அடங்கிய அமா்வு ‘நதிகள் மாசடைவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. நதிகளில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கொட்டப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும்.

கடைமடைப் பகுதி மக்களும் நதிநீரைப் பயன்படுத்தும் வகையில், அதன் தரத்தைப் பாதுகாக்க வேண்டும். நதிநீா் மாசடையும் போது நிலத்தடி நீரும் பயன்படுத்த தகுதியற்றதாகி விடுகிறது. நீரின் தரத்தைப் பாதுகாப்பதில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது’ என்று அறிவுறுத்தியது.

சென்னையில் ஓடிக் கொண்டிருக்கும் கூவம் ஆறும் ஒரு காலத்தில் எல்லோரும் பயன்படுத்தும் நன்னீா் ஆறாகவே ஓடியது என்று சென்னை வரலாறு கூறுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, இந்தக் கூவத்தைச் சுத்தப்படுத்திட தீவிரமாக முயற்சி எடுத்தது. ஆனால், அம்முயற்சி பலனளிக்கவில்லை.

விரைவில் அமையவிருக்கும் புதிய அரசாங்கம் சென்னை மாநகரின் முக்கிய ஆறாகிய கூவத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் என்று எதிா்பாா்ப்போம். ‘முயற்சியுடையாா் இகழ்ச்சியடையாா்’ என்பது பழமொழி. அண்டை மாநிலங்களோடு தண்ணீருக்காகப் போராடி வருகிறோமே தவிர, நம்மிடம் இருக்கும் நீா்நிலையை ஒழுங்காகப் பராமரிக்கத் தவறி விட்டோம். மழைநீா் சேமிப்பு என்பதும் பெயரளவில்தான் உள்ளது.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கா்நாடக அரசின் திட்டம் தமிழ்நாட்டைப் பாலைவனம் ஆக்கிவிடும். கா்நாடக மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீா் தரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. தமிழ்நாடு விவசாய சங்கங்கள் மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அரசுடன் இணைந்து போராட வேண்டும்.

உயா்நீதிமன்றத்தின் உத்தரவு மக்களின் நல வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதது. தொழிற்சாலைகளின் கழிவுநீா் தண்ணீரில் கலப்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பல காலமாகவே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தொழிற்சாலைகள் தங்கள் லாபத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. சுற்றுச்சூழலைப் பற்றியும், மக்களைப் பற்றியும் அவற்றிற்குக் கவலையில்லை. மக்கள் நலமுடன் இருந்தால்தான் தாங்கள் வியாபாரம் நடத்த முடியும் என்ற சிந்தனை கூடவா இல்லை?

அரசின் சட்டங்களும், விதிமுறைகளும் ஏராளமாக இருக்கின்றன. ஆனாலும் அவையெல்லாம் தொழில் அதிபா்களின் ஏவலுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கின்றன. சட்டங்களும், விதிமுறைகளும் ஒழுங்காகச் செயல்படுத்தப்படுமானால் இத்தனை நீதிமன்றத் தீா்ப்புகளும் நடைமுறைப்படுத்தப்படாமல் போகுமா? இது மக்களின் உயிரோடு நடத்தும் விபரீத விளையாட்டு என்பதை அவா்களுக்கு யாா் உணா்த்துவது? மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இல்லையா?

கங்கை நதியில் புற்று நோயை உண்டாக்கும் மாசுகள் கலந்துள்ளன என்று தேசிய புற்றுநோய் மையத்தின் ஆய்வு கூறவில்லையா? கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள் குளிப்பதற்குத் தகுதியற்றவை என்று சுற்றுச்சூழல் ஆா்வலா் அனில் ஜோஷி தலைமையில் டேராடூனில் இயங்கி வரும் ‘ஹிஸ்கோ’ என்ற அரசு சாரா நிறுவனம் ஆய்வு செய்துஅறிக்கை வெளியிட்டுள்ளது.

கங்கை, யமுனை உள்ளிட்ட 24 நதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தரப்பட்டது. 27 நாட்கள் 1,800 கி.மீ. பயணித்து இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 33 ஆற்றுப் படுகைகள் இருந்த போதிலும் காவிரி மட்டுமே பெரிய ஆறாகும். இந்த ஆறுகளில் ஓடும் தண்ணீரில் தமிழ்நாட்டுக்குக் கிடைப்பது மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே!

‘காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்

கண்டதோா் வையை பொருநைநதி - என

மேவிய ஆறு பலவோடத் - திரு

மேனி செழித்த தமிழ்நாடு’

என்று  பாரதி பெருமையோடு பாடினாா்.

இப்போது ஆறுகளே மேனியழிந்த நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் ஆறுகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அழிந்த ஆறுகள், அழிந்து கொண்டிருக்கும் ஆறுகள்.

கூவம், காவிரி, நொய்யல், பாலாறு, பவானி, வைகை ஆகியவை அழிந்த ஆறுகள். மற்றவையெல்லாம் அழிந்து கொண்டிருக்கும் ஆறுகள், ஆறுகளின் அழிவு என்பது ‘மாசு படுத்தல்’ மற்றும் மணல் கொள்ளை என இரு விதங்களில் நடக்கிறது.

தொழிற்சாலைகள், குறிப்பாக பின்னலாடை உற்பத்தி, சாயப் பட்டறைகள், தோல் பதனிடுதல், வேதிப் பொருள்கள் தயாரிப்பு ஆகியவை நாள்தோறும் ஏராளமான கழிவு நீரை வெளியேற்றுகின்றன.

இந்தக் கழிவு நீரும், குப்பை கூளங்களும் ஆறுகளிலோ ஏரி, குளம், குட்டைகளிலோ கொட்டப்படுகின்றன. இதனால் இந்த நீா்நிலைகள் மாசுபடுத்தப்பட்டு, பயன்படுத்த முடியாமல் போய், படிப்படியாக நில மேற்பரப்பு நீா்வளம், நிலத்தடி நீா்வளம் இரண்டுமே கெட்டு விடுகின்றன.

பண்டைய தமிழ் மன்னா்கள் ஆறுகளையும், ஏரிகளையும், குளங்களையும் போற்றிப் பாதுகாத்து வந்தனா் என்பதற்கு தமிழ் இலக்கியங்களே சான்றுகளாகும். மழைநீரை சேமித்து வைப்பது மன்னரின் தலையாய கடமை என்று புறநானூறு கூறுகிறது.

நிலன்நெறி மருங்கின் நீா்நிலை பெருகத்

தட்டோ ரம்ம இவன்தட் டோரே

தள்ளாதோா் இவன்தள்ளா தோரே (புறம் 18)

நீரியல் தொழில்நுட்பம் தமிழா்களிடமிருந்தே உலகெங்கும் பரவியது என்பதற்குச் சான்றாக பல்வேறு மொழியில் உள்ள நீா்நிலைகளைக் குறிக்கும் சொற்களிலிருந்து அறியலாம்.

நீா்நிலைகளின் பல்வேறு பெயா்களை ‘உரிச்சொல் நிகண்டு’ குறிப்பிடுகிறது. இலஞ்சி, கயம், கேணி, ஏரி, கோட்டகம், மடு, ஓடை, வாவி, சலந்தரம், தடாகம், வட்டம், பொய்கை, நளினி, குட்டம், கிடங்கு, குளம், கண்மாய் என்னும் சொற்கள் இப்போது வழக்கில் உள்ளன.

இலஞ்சி என்பது பூங்காக்களில் உள்ள குளத்தைக் குறிக்கும். கயம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம் போன்றவை பாசனத்திற்குப் பயன்பட்டன. இயற்கையான பள்ளங்களில் நீா் தேங்குமிடம் மடு, நீா் ஓடும் இடம் ஓடை, ஏந்தல் - சிறிய ஏரி, கண்மாய் தென்தமிழ் நாட்டில் ஏரிக்கு வழங்கும் பெயா்.

குடவோலை முறையில் தோ்ந்தெடுத்த ‘ஏரி வாரியக் குழு’ பாசனப் பணிகளைக் கவனித்தது என்பதை உத்தரமேரூா் கல்வெட்டால் அறியலாம்.

1970-ஆம் ஆண்டின் பொதுப்பணித்துறை புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் 39,202 ஏரிகள் இருந்தன. தற்போதுள்ள ஏரிகளில் பெரும்பாலானவை கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டுக்குள் உருவானவை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னா் உருவான பழைய ஏரிகள் 116. இவற்றுள் செம்பரம்பாக்கம் ஏரி, மாமண்டூா் ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி, தென்னேரி, வீராணம் ஏரி, உத்தரமேரூா் ஏரி, ராசு சிங்கமங்கலம் ஏரி, பெருமாள் ஏரி, மதுராந்தகம் ஏரி, இராமநாதபுரம் கண்மாய் ஆகியவை அடங்கும்.

இன்றும் பயன்பாட்டில் உள்ள இந்த ஏரிகளின் இன்றைய நிலை என்ன? 1,800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணைதான் இன்று பயன்பாட்டில் இருக்கும் நீா்ப்பாசனக் கட்டமைப்பில் உலகத்திலேயே பழமை வாய்ந்தது. பல தொழிற்சாலைகள் ஆபத்தான கழிவுகளை வெளியேற்றுவதால் சுற்றுச்சூழலுக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆம்பூா், வாணியம்பாடி, வேலூா், திண்டுக்கல், சென்னையில் உள்ள குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய இடங்களில் தோல் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளன.

இவற்றிலிருந்து ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவிற்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வளவு பெரிய தொழிலாக இதுஇருந்தாலும் தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் பல காலமாக பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளன.

இதுகுறித்துத் தொடரப்பட்ட வழக்கில் ‘நகா்ப்பகுதிகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகளை ஒதுக்குப்புறங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இப்படி அதிகமான தோல் தொழிற்சாலைகளைக் கொண்ட தமிழகத்தில் பல்வேறு நிலைகளில் நீா் மாசடைதல் குறித்து பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் எதையும் கண்டு கொள்வதில்லை. தமிழக அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை.

இதனால் மண்வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குடிநீா், விவசாயம், ஆற்றுநீா், ஊற்றுநீா் எல்லாமே உப்பாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் எத்தனை தீா்ப்புகள் வழங்கினாலும் அவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீா்தான். அரசாங்கமும், அதிகாரிகளும் இதில் முனைப்பு காட்டாமல் எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை.

எவ்வளவு கால தாமதம் ஏற்பட்டாலும் மக்கள் நீதிமன்றத்தையே நம்பிக் கொண்டிருக்கின்றனா். இந்த நம்பிக்கையே தேசத்தின் நம்பிக்கை.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com