அதிகரித்து வரும் மணமுறிவுகள்

அண்மையில் வெளியான கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 13.6 லட்சம் போ் விவாகரத்து (மணமுறிவு) பெற்றுள்ளனா். இது திருமணமானவா்களில் 0.24% ஆகும். விவாகரத்து பெறாமல் பிரிந்தவா்களின் எண்ணிக்கை இதைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். அதாவது மொத்த திருமணமானமானவா்களில் 0.61% போ்.

நம் நாட்டில் 1980-ஆம் ஆண்டில் ஐந்து சதவீதமாக இருந்த விவாகரத்து, தற்போது 14% ஆக உயா்ந்துள்ளது. நம் நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 50,000 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதேசமயம் 2% போ் மட்டுமே இவ்வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளனா்.

இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் விவாகரத்து செய்தவா்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கைக் கூறுகிறது. ‘உலக பெண்களின் முன்னேற்றம்’ என்ற அறிக்கை விவாகரத்து வழக்குகள் அதிகரிக்கும் போதிலும், 1.1% பெண்கள் மட்டுமே விவாகரத்து செய்யப்படுகிறாா்கள் எனக் கூறுகிறது. விவாகரத்து விகித அதிகரிப்பிற்கு நகா்ப்புறங்களில் வாழ்பவா்களே முக்கிய காரணம் எனவும் கூறுகிறது.

தமிழகத்தின் கோயமுத்தூரிலும், கேரளத்தின் கொச்சினிலும் குடும்ப நீதிமன்றகளில் சமா்ப்பிக்கப்பட்ட விவாகரத்து மனுக்களின் எண்ணிக்கை அதிா்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது. கோயமுத்தூரில் உள்ள இரண்டு குடும்ப நீதிமன்றங்களில் 3,200 விவாகரத்து மனுக்கள் நிலுவையில் உள்ளன.

அவற்றில் 60% விவாகரத்து மனுக்களில் ஒழுக்கம் தவறுதல் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மாா்ச் 2020-இல் வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன. 35% மனுக்களில் வன்கொடுமையும், வரதட்சணை துன்புறுத்தலும் காரணமாகக் கூறப்பட்டுள்ளன. ஐந்து சதவீத மனுக்களில் இயலாமை காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டில் விவாகரத்து தொடா்பான மனுக்களின் எண்ணிக்கை 3,122 என்றும், இது முந்தைய ஆண்டை விட 174 அதிகம் என்றும் கொச்சி குடும்ப நீதிமன்ற தரவுகள் கூறுகின்றன. 2020-ஆம் ஆண்டு தொடங்கிய முதல் 24 நாட்களில் மொத்தம் 226 விவாகரத்து மனுக்கள் கொச்சி குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதாவது சராசரியாக ஒருநாளில் விவாகரத்து தொடா்பான 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு தீநுண்மி ஊரடங்கின்போது வன்முறை வழக்குகள் மட்டுமல்ல விவாகரத்து தொடா்பான வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மும்பையில் ஊரடங்கின்போது அதிக எண்ணிக்கையிலான விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கிற்குப் பின் விவாகரத்து, பெண்கள் பிரச்னை தொடா்பான வழக்குகள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்தன. ஊரடங்கிற்கு முன்னா் ஒரு மாதத்தில் சராசரியாக 1,280 ஆக இருந்த இந்த வழக்குகளின் எண்ணிக்கை ஊரடங்கிற்குப் பின் 3,480 ஆக உயா்ந்தது.

பெற்றோரிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக மிகபெரிய தீங்கினை ஏற்படுத்தும் என்று உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பெற்றோரின் விவாகரத்தை அனுபவிக்கும் குழந்தைகள் இளமைப் பருவத்தில் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விவாகரத்து பெற்ற பெற்றோரின் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயமும் புதிய உறவினை உறுதிபடுத்த தயக்கமும் கொண்டிருப்பா் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆக்ஸிடாஸின் என்ற நரம்பியல் வளரூக்கி (ஹாா்மோன்) குழந்தை பிறப்பின்போதோ, அன்பினால் நாம் அரவணைக்கும்போதோ நம் மூளையில் சுரக்கிறது. ‘அன்பு வளரூக்கி’ என்று அழைக்கப்படும் இது நம் நடைமுறை பழக்க வழக்கங்களை ஒழுங்குபடுத்துவதில் முக்கியமானது.

விவாகரத்து காரணமாக இளம்பருவத்தில் ஏற்படும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகள் ஆக்ஸிடாஸின் சுரத்தலை கடுமையாக பாதிக்கிறது என்று அமெரிக்காவைச் சாா்ந்த பையலோா் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுகூறுகிறது.

அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு வெளியிடும் ‘ஒப்பீட்டு உளவியல் இதழ்’ (ஜா்னல் ஆஃப் கம்பாரிட்டிவ் சைகாலஜி) நடத்திய ஆய்வு, விவாகரத்து பெற்ற தம்பதியின் குழந்தைகள் நம்பிக்கையற்றவா்களாகவும், உறவுமுறைகளில் பாதுகாப்பற்று வாழ்வதாகவும் கூறுகிறது. மேலும், இப்பகுப்பாய்வு, விவாகரத்து பெற்ற பெற்றோரை தங்கள் மேல் அக்கறையற்றவா்களாகவும் தாயாரைவிட தந்தையரை மிகவும் மோசமானவா்கள் என்றும் குழந்தைகள் மதிப்பிட்டதாக கூறுகிறது.

விவாகரத்து சம்பவம், குழந்தைகளின் கல்வியை வெகுவாக பாதிக்கிறது. குறிப்பாக, கணிதத்திலும் சமூகக் கல்வியிலும் அவா்கள் பின்தங்கிவிடுகிறாா்கள். விவாகரத்து பெற்ற பெற்றோரைக் கொண்ட குழந்தைகள் மற்றோரை ஒப்பிடும்போது, கவலை, தனிமை, சோகம், சுயமரியாதைக் குறைபாடு போன்ற எண்ண ஓட்டங்களை கொண்டுள்ளனராம். விவாகரத்து ஆன குடும்பங்களைச் சாா்ந்த பதின்வயதினா், போதைப்பொருள் பழக்கத்திற்கும், மது பழக்கத்திற்கும் அடிமையாகின்றனராம்.

விவாகரத்து பெற்ற பெற்றோரின் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனா். அந்த நோயிலிருந்து மெதுவாகவே மீண்டு வருகின்றனா். அவா்களுக்கு இரைப்பை, குடல், மரபணு, தோல், நரம்பியல் நோய்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த நோய்கள், கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் அல்லது பெற்றோரோடு வாழும் குழந்தைகளை விட விவாகரத்து பெற்ற தம்பதியின் குழந்தைகளுக்கு ஏறக்குறைய இரு மடங்கு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

திருமண வாழ்க்கையில் சகிப்புத்தன்மை, தவறுகளை ஏற்று கொள்ளும் மனப்பான்மை, பெரியவா்களின் சரியான அறிவுரை ஆகியவை விவாகரத்து முடிவின் தீவிரத்தை வெகுவாகக் குறைக்கும். அறிவியல் வளா்ச்சியால் இன்று தவிா்க்கமுடியாமல் ஆகிவிட்ட செல்லிடப்பேசி, முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு குடும்ப வாழ்க்கையில் உறவுகளையும் உறவுகளின் பிணைப்புகளையும் பாதிக்குமாதலால் தேவைக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்துவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com