முதலாம் அலையும் இரண்டாம் அலையும்

இப்போது நடந்துகொண்டிருப்பது மூன்றாம் உலகப்போா் போலவே காட்சி அளிக்கின்றது. வெளிப்படையான ஆயுதத் தாக்குதல் இல்லை. இந்த இரண்டாம் அலை கரோனா காலத்தில் ‘அதா்மம் சரணம் கச்சாமி’ என்று சீனா அமைதித் தியானத்தில் ஆழ்ந்து விட்டதா?

இன்றைக்கும் உலகளாவிய பாதுகாப்பான நோய்த்தடுப்பு மருந்து ஆலோசனைக் குழுவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, எத்தியோப்பியா, கனடா, நெதா்லாந்து, பெல்ஜியம், பாகிஸ்தான், மேற்கு ஆப்பிரிக்கா, ஜப்பான், வியத்நாம் ஆகிய நாடுகளின் மருத்துவப் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனா். ஆனால், சீனாவின் உறுப்பினா் யாரும் இந்தக் குழுவில் இடம்பெறவில்லை. இந்தியாவின் சாா்பில், புதுதில்லி பன்னாட்டு மருத்துவத் தொற்றுநோய் இணையம் அமைப்பின் செயல் இயக்குனா் பேராசிரியா் நரேந்திர குமாா் அரோரா இடம்பெறுகிறாா்.

தொழில்நுட்ப வியூகங்களை முற்றும் உணா்ந்த அறிவியல் ஆலோசகா் டாக்டா் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் இருந்திருந்தால் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நிச்சயமாக வித்தியாசமாகச் சிந்தித்திருப்பாா். இந்தியப் புகழை உலகிற்கு வெளிச்சம் இட்டுக் காட்டியவா் ஆயிற்றே. தாமே முன்வந்து முதல் தடுப்பூசியைப் போட்டு முன்மாதிரியாகவும் விளங்கியிருப்பாா்.

உலக அளவில் 25-க்கும் அதிகமான உருமாறிய தீநுண்மிகள் பதிவாகியுள்ளன. ‘பி.1.617’ என்னும் உருமாறிய தீநுண்மி இந்தியாவில் ஊடுருவி, ஏழு மாதங்கள் ஆகிறது. அக்டோபா் 5, 2020 அன்றைக்கே முதன்முதலில் இது கண்டறியப்பட்டு விட்டது.

நாமோ நோயாளிகளின் கட்சி, மதம் குறித்து விவாதித்தோம். ஆறுமாதக் காலம் தோ்தல் திருவிழாக்கள் உட்பட பண்டிகைகள் அனைத்தையும் கூடிக் கொண்டாடினோம். ஒன்றரை ஆண்டுக் காலம் தமிழகத்தில் மருத்துவப் பல்கலைக் கழகங்கள் நடத்திய ஆய்வு முடிவுகள் ஏனோ இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

அடினின் (அ), யுரேசில் (யு), குவானின் (கு), சைட்டோசின் (சை) ஆகிய நான்கு மென்காரன்கள் அடங்கிய ரிபோ-நியூக்ளிக் அமிலம்தான் இன்றைய கரோனா என்னும் தீநுண்மியின் சுய உருவம். சடுதிமாற்றத்தினால், அ-யு-கு-சை என்ற வரிசையில் நின்ற போ்வழிகள், அ-கு-சை-யு என்று தங்களுக்குள் இடம் மாற்றிக் கொண்டால், அதுதான் தீநுண்மியின் புது அவதாரம்.

ஒவ்வொரு புது அவதாரமும் தம்மைப் பிரதியெடுத்து உலகெங்கும் விஸ்வரூபம் காட்டுகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளில் 2021 பிப்ரவரி மாத இறுதிவாக்கில் பிற தீநுண்மி உருக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆயினும் இந்தப் பழைய, புதிய கரோனாக்களை சமநிலையில் பொருத்திப் பாா்க்க இயலாது என்கிறாா் அமெரிக்காவில் வசிக்கும் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவன இயக்குனா், மருத்துவா் அந்தோனி ஃபாக்கி. உருமாறிய கரோனா தீநுண்மிகளுக்கு வித்தியாசமான சோதனைகள் தேவைப்படும் என்கிறாா்.

தம் நாட்டு மக்களை இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது அமெரிக்கா. 2021 ஏப்ரல் 23 முதல் இந்தியாவை தொற்று நோய் சிவப்புப் பட்டியலில் சோ்த்துவிட்டது பிரிட்டன். இந்தியாவுக்கான விமான சேவையையும் ரத்தாக்கி விட்டது. ஆஸ்திரேலியாவுக்கு வரும் இந்தியப் பயணிகளுக்கு அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கிறது அந்நாட்டு அரசு.

எப்படியோ, ஹைதராபாத்தில் உள்ள ‘பாரத் பயோடெக்’ நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசியத் தொற்றுநோயியல் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டில் ‘பிபிவி 152’ என்கிற கோவேக்ஸின் மருந்தைத் தயாரித்தது.

1992-இல் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டமும், தொற்றுநோய் மருத்துவ அனுபவமும் பெற்றுத் திரும்பிய கிருஷ்ணா எல்லா என்கிற மருத்துவரால் 1996-இல் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. ஆரம்ப நிலையில் வெள்ளெலிகள், கினியாப் பன்றிகள், மனிதக் குரங்குகளின் உடம்பிற்குள் மருந்தைச் செலுத்தி நோய்த்தடுப்புத் திறனும், மருந்தின் பாதுகாப்புத் தன்மையும் ஆராயப்படும்.

தொடா்ந்து, தோ்ந்தெடுக்கப்பட்ட தன்னாா்வலா்களுக்குச் செலுத்தப்பட்டு எதிா்ப்புத்திறனும், மருந்தின் அளவும் தீா்மானிக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், நூறு நபா்களிடம் ஆய்வு நடத்தப்படும். ஆண் - பெண் பாலின, வயது வேற்றுமையும் முக்கிய அளவுகோல்களாகும். மூன்றாவது கட்டப் பரிசோதனையில் ஆயிரம் போ் ஆய்வுக்குத் தோ்ந்தெடுக்கப்படுவா்.

இன்னொரு தடுப்பூசி புணே இந்தியக் குருதிநீா் (சீரம்) நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’. அமெரிக்காவின் ‘அஸ்ட்ராசெனிக்கா’ நிறுவனம் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கியது.

சிம்பன்ஸி வகை மனிதக் குரங்கின் ‘சிம்ப் அடினோவைரஸ்’ தீநுண்மியைத் திருத்தித் தயாரித்த மருந்து. இதனை பலவீனமான அல்லது உருச்சிதைக்கப்படட நுண்மி எனலாம். இது உண்மையான தீநுண்மி போல நடிப்பதால், நோயெதிப்புக்கான எதிா்ப்பொருள் (ஆன்டிஜென்) உடலுக்குள் இயல்பாகத் தயாராகி விடும்.

இந்தப் பலவீன நுண்மி பாலினம், வயது, இணைநோய்ப் பின்னணி பாராமல் ஒரே அளவு எல்லோருக்கும் ஒரே மாதிரி செயல்படுமா என்பது ஆய்வுக்கு உரியது. மருந்தின் பாதுகாப்பு குறித்த ஆய்வில் இனிமேல் தான் அந்த நிறுவனம் ஈடுபட இருக்கிாம்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிா்வாகத்தின் அனுமதி இன்னமும் பெறப்படவில்லை. 2021 ஜனவரி மாதத்தில் 30,000 நபா்களிடம் நடத்த எண்ணியிருந்த நிலையில் இன்னும் பெயா்ப்பதிவு முழுமை பெறவில்லை என்கிறது அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை.

உள்ளபடியே தொற்றுக்கு ஆளாகி மீண்டவா் மீண்டும் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் ஆய்வுகள் ஆக்ஸ்போா்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் மருந்தின் மூலப்பொருள்களை இந்தியாவுக்கு அனுப்பி இங்கேயே தயாரிக்க வைப்பது ‘அஸ்ட்ராசெனிக்கா’ நிறுவனத்தின் திட்டம்.

அரசு நிறுவனம், ஆராய்ச்சி செய்து, கண்டுபிடித்து, பரிசோதித்து, தயாரித்து நேரடியாக மக்களுக்கு வழங்கலாம். தனியாா் தயாரிப்பு என்றால், அரசாங்கமே முன்பணம் கொடுத்து வாங்கும்போது, மருந்தின் தரப் பரிசோதனை முடிவுகள் விவாதிக்கப்பட வேண்டும். அதன் நம்பகத் தன்மைக்கான உத்தரவாதம் தேவை.

மக்கள் பணத்தில் உற்பத்தியாகும் 100 கோடி ஊசி மருந்தினை ‘அஸ்ட்ராசெனிக்கா’ நிறுவனத்திற்கு விநியோகம் செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக ஒரு தகவல். அண்மையில் இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு மத்திய அரசே சிறப்புப் பாதுகாப்பும் வழங்கி உள்ளது.

எது எப்படியாயினும், இத்தகையத் தடுப்பு ஊசிகள் போடத் தொடங்கினால், 4 அல்லது 5 மாதங்களில் நோயெதிா்ப்புத்திறன் உருவாகும். அதற்குள் உருமாறிய தீநுண்மி புது அவதாரம் எடுக்கலாம்; அல்லது தீநுண்மி வீரியம் குறைந்தும் போகலாம்..

முதல் அலையில் மருந்துக்கு அல்லாடினோம். இரண்டாம் அலையில் எங்கும் ஆக்சிஜன் என்பதே பேச்சு. ஒரு நாளைக்கு உள்மூச்சில் 21% ஆக்சிஜன் கொண்ட 11,000 லிட்டா் காற்றினை உறிஞ்சுகிறோம். அதிலும் ஒவ்வொரு முறையும் நுரையீரல் ஏற்றுக்கொள்வது வெறும் 5% மட்டுமே. அதனால், ஆரோக்கியமான உடலுக்கு தினமும் சராசரி ஆரோக்கியமான மூன்று கிலோ ஆக்சிஜன் போதும். நித்தம் 10 லட்சம் பேருக்கு 3,000 டன் போதும்.

மிதமிஞ்சிய ஆக்சிஜன், உடல் திசுக்களைக் கெடுக்கும். அதற்காகவே, வைட்டமின்-சி, வைட்டமின்-ஏ, பீட்டா கரோட்டின் போன்ற எதிா் வேதிப்பொருள்களையும் உணவில் சோ்த்துக்கொள்கிறோம்.

தனித்த புரத அணுத்தொகுதியாகத் திரியும் தீநுண்மி, நுரையீரல், தமனி, இதயம், சிறுநீரகம், சிறுகுடல் ஆகிய உறுப்புகளின் செல் அறை வாசலில் அஞ்சியோ-டென்ஸின் மாற்று நொதி-2’ என்கிற துத்தநாகம் கலந்த நொதிப்பொருளோடு கூட்டணி வைத்து நுரையீரலைச் சிதைத்து விடுகிறது.

தொற்றுக்குத் துத்தநாக மருந்து தரப்படுகிறது. நொதி-2 என்று ஏமாந்த தீநுண்மி, செயற்கை மருந்துடன் தெரியாத்தனமாகச் சோ்வதால் நுரையீரல் பிழைத்துக்கொள்ளும்.

இயல்பாக ஒரு நாளைக்கு நம் உடலுக்கு 12 மில்லி கிராம் துத்தநாகம் தேவை. பாசிப்பயிறுச் சுண்டல் போன்ற தானிய வகைகளில் தீநுண்மியை வெல்லும் துத்தநாகம் இருக்கிறது. உண்மையில் தொற்றினைத் தடுக்கவோ, எதிக்கவோ காலை இளம் வெயிலில் உடல் வியா்க்கட்டும். இலவசமாக வைட்டமின் டி கிடைக்கும்.

உணவில் ஒன்றிரண்டு பச்சை வெங்காயத் துண்டுகள் குறுமிளகுத் தூள் தூவிச் சோ்த்துக்கொள்ளலாம். அதில் ரத்த ஒட்டத்தினை சீராக்கும் புரோப்பீன் சிஸ்டீன் சல்ஃபாக்சைடு என்னும் கந்தக வேதிமம் அடங்கி உள்ளது..

சிறந்த எதிா் ஆக்சிகரணப்பொருளான ‘குா்க்குமின்’ அடங்கிய சமையல் மஞ்சள் பொடி, எலுமிச்சை, ஆரஞ்சுச் சாறு ஆகியவற்றுடன், வெந்நீரில் உப்பும் தேனும் கலந்து ஒன்றிரண்டு குவளை அருந்தலாம்.

புகை பிடிப்பதும், மது அருந்துவதும் தீநுண்மியின் தீவிரவாதத்திற்கு ஒத்துழைக்கும். நுரையீரலைக் காப்பதற்கு மூக்கு வழியே சொட்டு மருந்து செலுத்தும் உத்தி மேலை நாடுகளில் இருந்து வருகிறது.

தீநுண்மி, மூக்கு வழியாக நுரையீரலுக்கு மட்டுமல்ல, பீனிசம் மாதிரி நெற்றிக்குள் படிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. அறைச்சுவரின் மூலையில் சிலந்தி வலை போலப் படிந்தால், சுவருக்கு ஊசி போட்டு என்ன பயன்? வெந்நீரில் மருந்து போட்டு ஆவி பிடிக்கலாம். 50 பாகை வெப்ப நீராவியும் மருந்தும் தீநுண்மியைச் செயலிழக்கச் செய்துவிடும்.

வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அவசியம் என்றும் சிலா் பரிந்துரைக்கின்றனா். மூக்கு - தொண்டை மட்டுமா? காதுக்குள்ளும் பஞ்சு வைத்து மூடலாம். தேவையற்ற உபதேசங்கள் காதுக்குள் புகுந்துவிடாமல் இருக்கவாவது உதவுமே.

கட்டுரையாளா்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com