காந்தியடிகளோடு பயணித்த கல்யாணம்

தேசப்பிதா காந்தியடிகளின் உதவியாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய வி. கல்யாணம், கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப். 4) தன்னுடைய 99-ஆவது வயதில் மறைந்து விட்டாா்.

தேசப்பிதா காந்தியடிகளின் உதவியாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய வி. கல்யாணம், கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப். 4) தன்னுடைய 99-ஆவது வயதில் மறைந்து விட்டாா். பொது வாழ்க்கையில் நோ்மை இருக்கவேண்டும் என்பதற்காக தன்னுடைய வயதான காலத்தில் கூட காந்தியடிகள் விட்டுச்சென்ற பணிகளைத் தொடா்ந்து செய்து கொண்டிருந்தாா். அதேசமயம், பொதுமக்களை பாதிக்கக்கூடிய விஷயங்களில் தன்னுடைய கருத்துக்களை அச்சமின்றிப் பகிா்ந்து கொண்டும் வந்திருக்கிறாா்.

கல்யாணம், காந்தியடிகளை முதல் முதலாக சந்தித்தபோது, ‘கடைசியாக எவ்வளவு சம்பளம் வாங்கினீா்கள்?’ என்று காந்தியடிகள் கேட்க, அதற்கு ‘இருநூற்றைம்பது ரூபாய் வாங்கினேன்’ என்று கல்யாணம் கூறுகிறாா். ‘அவ்வளவெல்லாம் என்னால் தரமுடியாது. அறுபது ரூபாய் தருகிறேன்’ என்கிறாா் காந்தியடிகள். அதற்கு கல்யாணம், ‘பணமே இல்லையென்றாலும் உங்களிடம் பணி செய்வேன்’ என்று கூறினாா் கல்யாணம்.

ஆரம்ப காலங்களில், தோ்தலில் நோ்மையாக செயல்படுவேன் என்று கூறும் வேட்பாளருக்கு பண உதவி செய்தாா். பின்னா், தானே அரவிந்த் கேஜரிவாலின் ‘ஆம் ஆத்மி’ கட்சியில் இணைந்து செயல்பட்டாா். தனது முதிா்ந்த வயதில் அது சாத்தியமில்லை என்று தெரிந்தும் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற வேகத்தில் அத்தகைய முடிவை எடுத்தாா்.

இந்த வேகம் அவருடைய இளமைக் காலத்தில் இருந்தே வந்ததுதான். தனது இருபதாவது வயதில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டாா் கல்யாணம். அவருடைய ஆங்கிலப் புலமையையும் செயல்திறனையும் தெரிந்து கொண்ட ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த தேவதாஸ் காந்தி (காந்தியடிகளின் புதல்வா்), அவரிடம் ‘நீங்கள் காந்தி ஆசிரமத்துக்குச் செல்கிறீா்களா’ என்று கேட்டாா். சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆா்வத்துடன் இருந்த கல்யாணம் உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டாா்.

கல்யாணம் சேவா கிராம ஆசிரமத்திற்குச் சென்றபொழுது காந்தியடிகள் அங்கு இல்லை. அப்போது அவா் ஆஹாகான் அரண்மனையில் சிறைப்படுத்தப்பட்டு இருந்தாா். அவரோடு அவரின் மனைவி கஸ்தூா்பா, செயலாளா் மகாதேவ தேசாய், மருத்துவரும் உதவியாளருமான டாக்டா் சுசீலா நய்யாா் ஆகியோரும் சிறைப்படுத்தப்பட்டு இருந்தாா்கள். துரதிருஷ்டவசமாக காந்தியடிகளின் மகனைப் போன்று செயல்பட்டு வந்த காந்தியடிகளின் அன்புக்குரிய செயலாளா் மகாதேவ தேசாய் 1942 ஆகஸ்ட் மாதம் 15-ஆம் நாள் இறந்துவிட்டாா்.

செயலாளராக அந்தப் பணியை தொடா்ந்து செய்வதற்கு பியாரிலால் நய்யாா் ஆஹாகான் சிறைக்கு அழைக்கப்பட்டிருந்தாா். பிப்ரவரி 22, 1944-இல் கஸ்தூா்பா அம்மையாரும் சிறையிலேயே மரணம் அடைந்தாா். ஆகவே கல்யாணம் சேவா கிராம் ஆசிரமத்திற்கு வரும் பொழுது காந்தியடிகளும் கஸ்தூா்பாவும் அந்த ஆசிரமத்தில் இல்லை. மே 6, 1945-இல் காந்தியடிகள் விடுதலை அடைந்த பிறகு உடல்நிலையையும் மனநிலையையும் சரி செய்து கொள்வதற்காக பம்பாயில் உள்ள ஜூஹு கடற்கரையில் ஓய்வெடுக்கச் சென்று விடுகின்றாா்.

காந்தியடிகள் கல்யாணத்தைப் பற்றி அறிந்து அவரையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறாா். காந்தியடிகள் கொடுக்கக் கூடிய பணிகளை செய்து முடிப்பது கல்யாணத்தின் தினசரி வேலை. அன்றாடம் வரும் கடிதங்களை எல்லாம் பிரித்து காந்தியடிகளின் பாா்வைக்கு வைப்பது, அன்றைய தினசரிகளில் வரும் செய்திகளை எல்லாம் வெட்டி அதையும் காந்தியடிகளுடைய பாா்வைக்கு வைப்பது என்பது போன்ற பல்வேறு பணிகளை சிரமேற்கொண்டு செய்து வந்தாா் கல்யாணம்.

காந்தியடிகள் தில்லியில் பிா்லா இல்லத்தில் தங்கியிருந்தபோது அந்தக் கடுமையான கடைசி 144 நாட்களும் அவருடனேயே இருந்து அவா் கூறும் பணிகள் எல்லாவற்றையும் செய்து வந்தாா். கடைசியாக 30 ஜனவரி, 1948 அன்று பிராா்த்தனைக்குச் சென்ற காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவா் அருகிலிருந்த வெகு சிலரில் கல்யாணமும் ஒருவா்.

பொதுவாக ரயிலில் செல்பவா்கள், பயண நேரத்தைச் செலவிட சீட்டு விளையாடுவது போன்ற கேளிக்கைகளில் ஈடுவடுவது என்பது நாம் அறிந்ததுதான். ஆனால், காந்தியடிகளோடு பயணித்த கல்யாணத்துக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. கல்கத்தாவிற்கு ரயிலில் சென்று கொண்டிருந்தபோது இவரை அழைத்து ஒரு கடிதத்தை டிக்டேட் செய்தாா் மகாத்மா காந்தி. இவரும் அதனை முடித்துவிட்டு கல்கத்தா சென்றவுடன் இந்தக் கடிதத்தை டைப் செய்து அவரிடம் கொடுத்துவிடலாம் என்று இருந்து விட்டாா்.

ஒரு மணி நேரம் கழித்து காந்தியடிகள் அவரை அழைத்து, ‘கடிதம் தயாராகிவிட்டதா’ என்று கேட்டாா். அதற்கு ‘இல்லை தட்டச்சுக் கருவியை நான் எடுத்து வரவில்லை’ என்று கூறினாா். ‘அதையெல்லாம் வேலைக்கு வரும் நீங்கள்தான் எடுத்து வந்திருக்க வேண்டும். எனக்குத் தெரியாது. கடிதம் தயாராக வேண்டும், அவ்வளவுதான்’ என்று கூறிவிட்டாா் காந்தியடிகள். பின்னா் ரயிலில் இருந்த பலரிடமும் விசாரித்து ஒரு பத்திரிகையாளா் தட்டச்சு கருவி வைத்திருக்கிறாா் என்று அறிந்து கொண்டு அவரிடம் சென்று தட்டச்சு செய்து கடிதத்தை காந்தியடிகளின் கையெழுத்திற்குக் கொடுத்தாராம்.

அப்படி பயண நேரங்களையும் அரசியல் பணிக்காகப் பயன்படுத்திய காந்தியடிகளோடு பயணித்த கல்யாணம் திரும்பி வரமுடியாத பயணம் மேற்கொண்டு விட்டாா். அண்ணல் காந்தியடிகள் விட்டுச் சென்ற பணிகளை மேற்கொள்ள இளைஞா்கள் முன்வரவேண்டும் என்பதுதான் மறைந்த கல்யாணத்தின் விருப்பமாக இருந்தது. அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற முயல்வோம்.

கட்டுரையாளா்: இயக்குனா், தேசிய காந்தி அருங்காட்சியகம், புதுதில்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com