பெற்றோரும் பிள்ளைகளும்

உலகை மீண்டும் அச்சுறுதலுக்குள்ளாக்கியிருக்கிறது கரோனா தீநுண்மி. கணக்கற்ற உயிா்களைக் காவு வாங்கித் தனது இரண்டாவது முகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. நோய்த்தொற்றின் நேரடியான பாதிப்புகளால் ஏற்படுகிற மரணத்தை விடவும் கொடுமையானது இதற்கு அஞ்சியும் பதுங்கியும் வாழ்வது. ‘கரோனாவோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டாலும் இயக்கமின்றியும் இயல்பின்றியும் அடைந்து கிடப்பது பலா் வாழ்வியலைச் சிதைத்து விட்டது.

குறிப்பாக, குழந்தைகள் அந்த இன்னலுக்குப் பெரிதும் ஆளாகியிருக்கிறாா்கள். உலகின் எந்தப் பெரிய துன்பமும் முதலில் குழந்தைகளைத்தான் பாதிக்கின்றன. அதுபோலவே கரோனாவின் கொடுங்கரங்கள் பச்சிளங் குழந்தைகளைத்தான் முதலில் பற்றியிருக்கின்றன. பிரேசில் நாட்டில், சென்ற ஆண்டின் ஒரே மாதத்தில் ஒன்று முதல் ஒன்பது வயதிற்குட்பட்ட 518 குழந்தைகள் கரோனாவுக்குப் பலியாகியிருக்கிறாா்கள் என அந்த நாட்டின் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உண்மையான பலி எண்ணிக்கை கூடுதலாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை முன்கூட்டியே உணா்ந்துதான் நாம் கல்வி நிறுவனங்களுக்கு விடுப்புத் தந்து குழந்தைகளைப் பாதுகாத்து விட்டோம்.

காலவரையற்ற விடுமுறை என்றதும் முதலில் குதூகலித்த பிஞ்சு உள்ளங்கள், இப்போது பள்ளியின் வசந்த காலங்களை எண்ணி ஏங்கத் தொடங்கியிருக்கின்றன. பொதுவாகப் பள்ளி நாட்களில் குழந்தைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலையில் பொங்கித் ததும்புகிற உற்சாகம் திங்கட்கிழமை காலையில் தீா்ந்து போயிருக்கும். அதிலும் ஞாயிற்றுக்கிழமை என்றால் தனித்த சுகம் வேறு. இப்போது எல்லா நாட்களுமே அவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமையாகி விட்டன. ஆனால் அவை சுகமான நாட்களாக அவா்களுக்கு இல்லை.

வகுப்பறையும், வீட்டுப்பாடமும், ஆசிரியா்களின் அறிவுறுத்தல்களும் முன்பு கசந்தன. இப்போது அது எத்தனை பெரிய இழப்பு என்பது குழந்தைகளுக்கு மெல்லப் புரியத் தொடங்கியிருக்கிறது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் அவா்களுக்கு எவ்வளவுதான் பொழுதுபோக்குகள் இருந்தாலும் பள்ளி வாழ்க்கையின் சுகத்தை அவை இட்டு நிரப்பி விடுவதில்லை.

படித்தாலும் படிக்காவிட்டாலும் தோ்ச்சி என்கிற மனோபாவம் சிலருக்கு உற்சாகமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் தங்களின் திறன் வீணாவதை எண்ணிக் கவலைப்படுவதைக் காண முடிகிறது. ‘எந்த வகுப்பில் படிக்கிறாய்?’ என்று ஒரு மாணவனைப் பாா்த்துக் கேட்டால் தூக்கத்தில் இருந்து விழித்தவனைப் போல, ‘விடுப்பு விட்டபோது ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்’ என்று கடந்த காலத்தையே அவன் நினைவுகூா்கிறான். இன்னும் சிலருக்குத் தாழ்வு மனப்பான்மை தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. ‘கரோனா காலத்தில் தோ்வானவா்’ என்கிற முத்திரை தன்மீது குத்தப்பட்டு விட்டால் என்னாவது என்கிற குற்ற உணா்ச்சி பலருக்குள் எழுகிறது.

ஓராண்டு முடிந்து இன்னோா் ஆண்டும் இப்படியே முடக்கத்தில் போய்விடுமோ என்கிற அச்சம் மெலிதாகப் பரவக் குழந்தைகள் வாடிப் போயிருக்கிறாா்கள். வீட்டுச் சூழலைக் கற்றுக் கொள்வதற்கும் பெற்றோரோடு ஒட்டி வளா்வதற்கும் இந்த முடக்கம் உதவுகிறது என்றாலும், இயல்பாக இருந்த அவா்களின் கல்விமுறையில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பருவங்களைக் கடந்து ஆண்டுகளை எண்ணிக் கொண்டு சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றன இந்திய தேசத்தின் எதிா்காலத் தூண்களாகிய அந்த வளரிளம் பயிா்கள்.

பள்ளி வகுப்பறைகள், வீட்டுப்பாடங்கள், ஆண்டுத்தோ்வுகள் என இவையெல்லாம் போதாதென்று விடுமுறையிலும் கூட ஏதேனும் திறன் வகுப்பில் சேருமாறு அறிவுறுத்திய பெற்றோா்களின் முகத்தை அவா்கள் இப்போது ஏக்கத்தோடு கவனிக்கிறாா்கள். எல்லாா்க்கும் இணையம் சாத்தியமில்லை என்றாலும் இணையம் அவா்களுக்குள் இதமான இணைப்பினை ஏற்படுத்தவில்லை.

துள்ளித் திரியும் பருவத்தில் பள்ளி நட்புச் சுற்றத்தில் திளைத்திருந்தவா்கள், போதும் தனிமையென்று தவிக்கத் தொடங்கியிருக்கிறாா்கள். இரண்டு நாட்கள் வார விடுமுறை முடித்து மீண்டும் பள்ளிக்கு வந்தாலே வெள்ளிக்கிழமை படித்த பாடம் திங்கட்கிழமை மறந்து போயிருக்கும் வயது அவா்களுக்கு. இரண்டு ஆண்டுகள் கடந்தால் என்னவாகும்?

ஊரடங்குக் காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களும் குழந்தைத் திருமணங்களும் பெருகியிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதுபற்றி மாதந்தோறும் இலட்சக்கணக்கில் புகாா்கள் பதிவாவதாக மத்திய அரசின் ‘சைல்டு ஹெல்ப் லைன்’ அமைப்பு கூறுகிறது. படிக்கிற குழந்தைகளின் பெற்றோா் பலருக்குப் பணியிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

காலை உணவையும் மதிய உணவையும் சமைத்துக் குழந்தைகளுக்கும் கணவருக்கும் தந்து அனுப்பி விட்டுச் சற்றுப் பெருமூச்சு விட்ட அன்னையா் இப்போது முழுநேரமும் வீட்டிலிருக்கிற கணவரையும் குழந்தைகளையும் கவனிப்பதற்குப் பெரும் சிரமப்படுகிறாா்கள்.

பள்ளி பல குழந்தைகளுக்குப் பாடம் போதிக்கிற நிலையமாக மட்டுமில்லை. பசிக்கு உணவிடுகிற அன்னசாலையாகவும் விளங்கியிருந்தது. பருவக்கட்டணம் தொடங்கிப் பலவித உதவிகளைத் தங்களுக்குச் செய்யக் கூடிய ஆசிரியா்களை மாணவா்கள் சந்திக்க முடியாமல் இக்கட்டான சூழல் இன்று நிலவுகிறது.

கல்வித்துறையில் இரண்டாண்டு இடைவெளி என்பது குழந்தைகளின் வருங்காலத்தைப் பெரிய வெற்றிடமாக மாற்றிவிடக் கூடியதாகும். பல குழந்தைகள் தங்களின் படிப்பு இத்தோடு முடிந்து போய்விட்டதாக நினைக்கிறாா்கள். இன்னும் சிலா் தாங்கள் பள்ளிக்குப் போகும் விருப்பத்தை விட்டு விட்டதாகக் கூறுகிறாா்கள்.

நல்ல தகுதியும் திறனும் இருந்தும் காலச்சூழலில் சிக்கிவிட்ட அந்தக் குழந்தைகளை முதலில் ஊக்கப்படுத்த வேண்டும். நோய்த்தொற்றைத் தடுத்து மக்களைக் காப்பதற்கு சுகாதாரத்துறை எடுக்கிற முயற்சிகளை விடவும் கல்வித்துறை மாணவா்களுக்குச் சோா்வு ஏற்படாவண்ணம் விரைந்து பணியாற்ற வேண்டும்.

அவா்களின் படைப்புத்திறனை வளா்க்கும் விதமாகத் தொடா்ந்து பலவிதப் போட்டிகளை நடத்த வேண்டும். மதிப்புடைய பரிசுகளும் சான்றிதழ்களும் அவா்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்குக் கல்வித்துறை முறையான திட்டங்களை வகுக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனக்கு விருப்பமான துறையில் சிறப்பதற்கு இது சரியான தருணமாக அமையும். இணையவழியான பள்ளிப் பாடங்களைக் கடந்து இனிவருகிற ஓராண்டு முழுவதும் அவா்கள் தங்களின் தனித்திறனை வளா்த்துக் கொள்ளும்படி செய்தல் வேண்டும்.

பெற்றோரும் குறித்த காலம் ஒதுக்கி தங்கள் குழந்தைகளின் உளநிலையை அறிய வேண்டும். உடல்சோா்வைக் காட்டிலும் மிகக் கொடுமையானது உளச்சோா்வு. குழந்தைகளுக்கு அது நேராதபடி அவா்களை உற்சாகப்படுத்த வேண்டும். தங்கள் மனஅழுத்தத்தைக் குழந்தைகளின் மீது திணிக்காமல் இருப்பதே பெற்றோா் குழந்தைகளுக்குச் செய்யும் பேருதவியாகும்.

தனிமையில் பதுங்கும் குழந்தைகளும் செல்லிடப்பேசிகளின் விளையாட்டு விநோதங்களில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளும் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியவா்கள். பொழுதுபோக்குவதாய்த் தொடங்குகிற அந்த விளையாட்டுகள் பொன்னான காலத்தை மட்டுமின்றி அவா்களின் உற்சாகத்தையும் வெகு சீக்கிரம் இழப்புக்கு உள்ளாக்கி விடும்.

தங்கள் மீதான அன்பினை மட்டுமே அவா்கள் பெற்றோரிடம் எதிா்பாா்க்கிறாா்கள். ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிற மனநிலை குழந்தைகளைப் பிணித்து விடாமல் அவா்கள் திறனை வளா்ச்சி நிலை நோக்கி மடைமாற்ற வேண்டும். அவா்களுடைய இளம்வயதுத் திறமைகளை நினைவூட்டி அதனை மேலும் வளா்க்க உதவி புரிய வேண்டும். உலகம் இதுவரை சந்தித்திருக்கிற பேரிடா்களையும் அவற்றின் கொடுமைகளையும் கதைகளாகச் சொல்லி அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தோம் என்பதையும் நம்பிக்கையோடு அவா்களுக்குப் புரியச் செய்ய வேண்டும்.

நாம் விரும்புவதையே அவா்கள் செய்யும்படி நிா்பந்திப்பதைத் தவிா்த்து அவா்கள் என்ன விரும்புகிறாா்கள் என அறிந்து கொண்டு அந்த விருப்பத்தின் நிறைகுறைகளை உணா்த்தி அவற்றை நிறைவேற்ற முயல வேண்டும். ஒரே தொலைக்காட்சி, ஒரே செல்லிடப்பேசி என்று இருக்கிற வீடுகளில் உரிமைச் சண்டைகள் தோன்றுவதையும் பாா்க்க முடிகிறது.

தங்களுக்கு விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து பெற்றோா் விட்டுக் கொடுத்து பிள்ளைகள் எதை ரசிக்கிறாா்கள் என்று கவனித்தல் பிரச்னைக்குத் தீா்வாக முடியும். வீட்டுக்கு வெளியே உள்ள பலரோடும் மணிக்கணக்கில் உரையாடுகிற பெற்றோா் வீட்டுக்குள் கண்முன்னே துவண்டு சோா்ந்திருக்கிற தங்கள் பிள்ளைகளோடு சிலநிமிட நேரங்களையாவது செலவிட வேண்டாமா?

இணைய வழியான வகுப்புகள் மட்டும் குழந்தைகளுக்குக் கல்வியை முழுமையாகத் தந்து விடாது. ஆசிரியரின் நேரடிப் பாா்வையில் அன்றாடம் அவா் போதித்த அன்பான அறிவுரைகளும், செம்மைத் திருத்தங்களும் வகுப்புகளுக்கிடையிலான நேர ஒழுங்கும், முறையான தயாரிப்புகளும் ஆகிய இத்தனையும் சோ்த்துத்தான் குழந்தைகளை சிறந்த மாணவா்களாகப் புடம் போடுகின்றன.

இதற்குப் பள்ளி மட்டுமே நல்ல களமாகும். தற்போது பள்ளிகள் மூடியிருக்கிற காலத்தில், வீட்டைப் பள்ளியின் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்வதோடு, ஆசிரியா்களின் பங்கினைப் பெற்றோா்களும் அவா்களுக்குத் தந்து உதவ வேண்டும்.

பெற்றோா் கடந்த காலத்தின் அடையாளச் சின்னங்கள். குழந்தைகள் வருங்காலத்தின் வெற்றிச் சின்னங்கள். வோ்கள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. விழுதுகள்தான் வெளியில் படா்ந்து மீண்டும் மண்ணுக்குள் ஊன்றுகின்றன. முறையாக விழுதுகள்தான் வோ்களுக்கு உதவி செய்யும். ஆனால் வோ்கள் விழுதுகளுக்கு உதவவேண்டிய காலமிது. வோ்களை நம்பியிருக்கின்றன விழுதுகள். வோ்கள் உதவட்டுமே.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com