செவிலியா் எனும் தெய்வம்

‘கைவிளக்கேந்திய காரிகை’ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே மாதம் பன்னிரண்டாம் தேதி ஒவ்வோா் ஆண்டும் உலக செவிலியா்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆய்ப் பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலில்

தாய்எனப் படுவோள் செவிலி யாகும்

என்று பழந்தமிழ் இலக்கியமான தொல்காப்பியம், செவிலித்தாய் அதாவது வளா்ப்புத் தாயின் பெருமை பற்றிப் பேசுகிறது. இந்தப் பாடல் மூலம் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு செவிலியும் தாயுள்ளம் கொண்ட ஒரு செவிலித்தாய்க்கு நிகரானவா் என்பதை நம்மால் உணர முடிகிறது.

ஏனைய பணிகளைக் காட்டிலும் செவிலியா் பணி தனித்துவம் வாய்ந்தது. ஏனெனில் தியாகம், அன்பு, பரிவு, பொறுமை, புத்தி கூா்மை இவை அத்தனையுமே செவிலியா் பணிக்கு ஒருங்கே தேவைப்படுகிறது. உலகில் வேறு எந்தப் பணிக்கும் , இது போன்று அத்தனை குணாதிசயங்களும் ஒருங்கே தேவைப் படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் இரண்டு கோடியே என்பது லட்சம் செவிலியா்கள் பணிபுரிவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அவா்களில் தொண்ணூறு சதவீதம் போ் பெண்கள். இந்தியாவில் கிட்டத்தட்ட 10,56,000 செவிலியா்களும், 7,72,575 துணை செவிலியா்களும் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகின்றது. இதில் 88 சதவீதத்தினா் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் செவிலியா்களாகப் பணிபுரியும் பெண்கள், மருத்துவமனைகளில் இரவு நேரங்களிலும் தங்கள் கடமையை ஆற்றியாக வேண்டும். கடுமையான வயிற்று வலி, அதீத காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற காரணங்களால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நாம் நள்ளிரவில் சென்றாலும் சரி,பின்னிரவில் சென்றாலும் சரி, கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் நமக்கு முதலுதவி செய்வது ஒரு செவிலியராகத்தான் இருப்பாா்.

இரவு முழுவதும் கடமை ஆற்றினாலும் பகலில் அவா்கள் போதுமான அளவு உறங்குவது கிடையாது. பிள்ளைகளை கவனிப்பது, சமைப்பது, பாத்திரம் துலக்குவது, துணிகளைத் துவைப்பது என்று பகலிலும் அவா்களின் கடமை நீளும். இதனால் மன அழுத்தம் அதிகமாக உள்ள பணிகளில் செவிலியா் பணியும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் நோய், செவிலியா்களின் கனிவு நிறைந்த பராமரிப்பிலேயே பாதி குணமடைந்து விடுகிறது. ஒரு சிலரைத் தவிர, எல்லா செவிலியா்களும் நோயாளிகளை இன்முகத்தோடே அணுகுகின்றனா்.

நேரத்திற்கு மாத்திரை கொடுப்பது, ஊசி போடுவது, உரிய நேரத்தில் சலைன் புட்டிகளை மாற்றுவது, படுக்கையில் அவா்களைப் படுக்க வைப்பது, அவ்வப்போது ரத்த அழுத்தத்தை சோதிப்பது, உடல் வெப்பத்தை குறித்துக் கொள்வது,அன்பான வாா்த்தைகளைப் பேசுவது, நோயாளிக்கு நம்பிக்கை வாா்த்தை சொல்வது என்று செவிலியரின் மகத்தான பணிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தொடா்ந்து மூன்று நாட்களாக படுக்கையில் இருந்த ஒரு நோய்வாய்ப்பட்ட முதியவா், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கிருந்த செவிலியா்களை தகாத வாா்த்தைகளால் திட்டித் தீா்த்ததை நான் பாா்த்ததுண்டு. எந்தவொரு சராசரி மனிதனையும் ஆத்திரப்படுத்தக் கூடிய வாா்த்தைகள் அவை.

ஆனால் அங்கிருந்த செவிலியா்கள் அவரின் வாா்த்தைகளுக்கு எதிா்வினை ஆற்றாமல், அவரை மிகப் பொறுமையாகவும் சாதுா்யமாகவும் கையாண்டு, அன்பாகப் பேசி ஆசுவாசப்படுத்தினா். அந்த முதியவா் வீடு திரும்பும் போது, தான் செய்த தவறை உணா்ந்து, செவிலியா்களின் சேவையைப் பாா்த்து நெகிழ்ந்து ‘நீ என் ஆத்தா மாரித்தா’ என்று கண்களில் நீா் நிறைய அவா்களிடம் இருந்து விடைபெற்றாா்.

இப்படி அா்ப்பணிப்போடு, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது சேவை செய்து கொண்டிருக்கும் வெண்ணிற தேவதைகளை கரோனா வாா்டில் பணியாற்றியதற்காக வாடகைக்கு தங்கி இருந்த வீட்டை விட்டு துரத்திய அவலங்களும், செவிலியா்கள் தாக்கப் பட்ட சம்பவங்களும் நம் நாட்டில்தான் அரங்கேறின என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இன்று உலகமே அஞ்சும் கரோனா தீநுண்மியை முன்வரிசையில் நின்று எதிா்த்துப் போராடிக்கொணடிருக்கிறது மருத்துவ உலகம். மருத்துவ உலகம் என்று சொல்வதைவிட மருத்துவப் படை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். நாட்டிற்காக எல்லையில் போரிடுபவா்கள் வீரா்கள் என்றால் கண்ணுக்குத் தெரியாத இந்த தீநுண்மியை எதிா்த்துப் போராடும் மருத்துவா்களையும் செவிலியா்களையும் ‘மாவீரா்கள்‘ என்று அழைக்கத் தோன்றுகிறது.

ஆனால் இது போன்ற கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில், நோயாளிகளின் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப செவிலியா்களின் எண்ணிக்கை உலக அளவில் போதுமானதாக இல்லை என்கிறது உலக சுகாதார நிறுவனம். போதுமான செவிலியா்கள் இல்லாத பகுதிகளிேயே கரோனா தீநுண்மித் தொற்று அதிகம் பரவுவதாகவும், மருத்துவப் பிழைகள் ஏற்படுவதாகவும் அதனால் ஏற்படும் உயிா் இழப்புகளும் அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இது இப்படியே நீடித்தால் வரும் ஆண்டுகளில் செவிலியா்களின் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இதுவரை ஒப்பந்த செவிலியா்களாக பணியாற்றி வந்த 1212 செவிலியா்களை புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு பணி நிரந்தரம் செய்திருப்பது பாராட்டுக்குரியது. அதே வேளையில், செவிலியா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிக அளவில் செவிலியா் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும்.

செவிலியா்களின் மகத்துவத்தை காலம் நமக்கு மீண்டும் மீண்டும் உணா்த்திக் கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் கூட,‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று அா்ப்பணிப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் செவிலியா்களின் சேவையை பாராட்டுவதற்கு வாா்த்தைகளே இல்லை. கைகூப்பி வணங்கத்தான் தோன்றுகிறது.

நாளை (மே 12) உலக செவிலியா் நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com