ஜனநாயகத்தை வீழ்த்திய பணநாயகம்!

 'ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்க அமைப்பு முறை அல்ல. ஒரு கூட்டு வாழ்விற்கான, ஒன்றிணைந்த கருத்துப்பரிமாற்ற அனுபவத்திற்கான வழிமுறையாகும். சகமனிதர்கள் மீது மரியாதை மற்றும் பெருமதிப்பு காட்டும் அணுகுமுறையே இதன் அடிப்படை' என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.
 ஜனநாயக முறைமைகளில் மக்களின் முடிவு என்பது மகத்தானது. அவ்வாறு எடுக்கப்படும் மக்களின் முடிவு எவ்வித தலையீடுமற்ற, சுய அறிவு மற்றும் சுய சிந்தனையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பது மிகமிக முக்கியமானது.
 ஆனால், பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிற தமிழகத் தேர்தல்களில் வாக்குக்குப் பணம் கொடுப்பது என்பது மிக முக்கியமான ஒரு சடங்காக மாறிவிட்டது என்கிற உண்மை, ஜனநாயக விழுமியங்களின் மீது நம்பிக்கை கொண்டோரை களைப்படைய செய்து வருகிறது என்பது கசப்பான உண்மை.
 எடுத்துக்காட்டாக, கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளிலும், கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலிலும், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலிலும் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்பட்டது என்பதைக் காரணமாகக் காட்டி, அத்தேர்தல்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது என்பது, தமிழகத் தேர்தல் வரலாற்றின் அவமானச் சின்னமாக நிலைபெற்று நின்றுவிட்டது.
 வாக்காளர்களுக்கு வாக்குக்காகப் பணம் வழங்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு எல்லாத் தேர்தல்களிலும் எழுப்பப்படுகிறது. ஆனால், இதுவரைத் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் யார் யார் என்கிற கேள்விக்கு யாரிடத்திலும் பதில் இல்லை.
 இந்தியத் தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 30 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை செலவிடலாம். அது தொடர்பான கணக்கு விவரங்களை, தேர்தல் செலவுகளை ஆய்வு செய்யும் அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும்.
 கட்சித் தலைமைகளால் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு ஒரு வேட்பாளர் செய்கின்ற அனைத்துச் செலவினங்களும் தேர்தல் செலவு கணக்கில் வரும் என்றெல்லாம் விதிமுறைகளை உண்டாக்கி வைத்திருக்கிற இந்தியத் தேர்தல் ஆணையத்தால், வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க முடியவில்லை என்பது ஜனநாயகத்தின் படுதோல்வி அன்றி வேறில்லை.
 ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் ஆணையத்தால் 80-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதிக்கும் ஆறுக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அனுப்பப்படுகின்றன. இத்தனை கண்காணிப்புகளுக்குப் பிறகும் கூட வாக்குக்குப் பணம் கொடுக்கப்படுவது நிறுத்தப்படவில்லை.
 கடந்த 2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய நாடு முழுக்க 60,000 கோடிவரை செலவிடப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் சமயங்களில் முறைகேடாகக் கொண்டு செல்லப்பட்ட பணமானது கடந்த 2019-ஆம் ஆண்டு 3,500 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டதாக தேர்தல் ஆணையமே தெரிவிக்கிறது.
 ஆனால், இத்தொகை யார் யாரிடமிருந்து கைப்பற்றப்பட்டது? அதன் பேரில் எவரெவர் தண்டிக்கப்பட்டார்கள் என்பது குறித்தான எந்தத் தகவலும் இதுவரை இல்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதா? எந்த நீதிமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்தான வழக்குகள் நடக்கின்றன என்பது குறித்து எந்தத் தகவலும் யாரிடத்திலும் இல்லை. சொல்லப்போனால், இது எப்படிப்பட்ட மோசமான நிலை என்பதைப் பற்றிச் சிந்திக்கக்கூட இங்கு யாரும் இல்லை என்பதுதான் கொடுமையானது.
 இங்கே மாறி மாறி ஆளுங்கட்சி, எதிர்க் கட்சியாக அறுபதாண்டு காலமாக இருந்து வரும் கட்சிகளும், அவற்றோடு கூட்டணி வைக்கும் கட்சிகளும் என யாவுமே வாக்காளர்களைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் மக்களாட்சிக்கு எதிரான இழிசெயலைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன.
 மக்களும், காவல்துறையும், ஊடகங்களும், தேர்தல் ஆணையமும், ஏன், நீதிமன்றங்களுமே கூட இந்த ஜனநாயக விரோத தமிழ்நாட்டு அரசியல் போக்கைத் தரவுகளோடும் காணொலிகளோடும் கண்டாலும் கூட அதை ஒரு விவாதக் களமாக முன்னெடுத்து தூய அரசியலை நிலைநாட்ட முன்வருவதில்லை.
 வாக்கிற்குப் பணம் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு யாரேனும் தண்டிக்கப்பட்டதாக வரலாறு இருந்தால்தான் ஜனநாயகத்திற்கு எதிரான இந்த மாபெரும் குற்றம் ஓரளவாவது தடுக்கப்படும். ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குக்குப் பணம் கொடுத்த எவரும் தண்டிக்கப்படுவதே இல்லை. மாறாக, அதுவே ஒரு தகுதியாகக் கருதப்பட்டு தேர்தலில் வெற்றிபெற அதுவே மிக முதன்மையான காரணியாகவும் திகழ்கிறது.
 பொருளாதார வசதி இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியுமென்பது வாக்குக்குப் பணம் கொடுக்கிற கீழ்மைச் சிந்தனையின் விளைவாக எழுகிறது. முதலீடு செய்து பணம் சம்பாதிக்கிற தொழிலாகத் தேர்தல் அரசியல் மாறிவிட்டது என்பதைத்தான் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களும் தெளிவாகக் காட்டுகின்றன.
 ஒரு தேர்தலில் வெற்றி பெற அடிப்படைக் காரணமாக கட்சி முன்வைக்கிற கொள்கைகள் மற்றும் ஆட்சி வரைவுத் திட்டங்கள் அல்லது குறைந்தபட்ச எதிர்கால இலக்குகள் போன்ற எதுவும் இல்லாமல் இலவசம், மானியம் போன்ற சலுகைகள், வாக்குறுதிகள் மற்றும் வாக்குக்குப் பணம் கொடுப்பது போன்றவைதான் காரணங்கள் என்றாகிவிட்ட பின்னர், எதற்குத் தேர்தல் முறை?
 இதுபோன்ற தேர்தல் முறைகளை எல்லாம் கைவிட்டுவிட்டு பொது ஏலம் போன்று ஒன்றை நடத்திப் பெரும்தொகை கொடுப்பவரிடம் தொகுதிகளை விற்றுவிடலாம்தானே? இப்படி ஒரு அயற்சி வந்ததினாலேயே இன்னும் எல்லா வாக்காளர்களையும் மக்களாட்சி மீது நம்பிக்கையோடு வாக்குச்சாவடியை நோக்கி இந்நாட்டின் அமைப்பு முறைகளால் கொண்டுவர முடியவில்லை.
 500 ரூபாய் கொடுத்த கட்சிக்கு மூன்று வாக்குகள், 300 ரூபாய் கொடுத்த கட்சிக்கு இரண்டு வாக்குகள் என்று வீட்டில் உள்ள வாக்குகளைச் சரியாகப் பிரித்தளிக்கும் அளவுக்கு வாழ்வியலில் நேர்மையையும் உண்மையையும் கடைப்பிடிக்கும் ஏழை மக்கள், தாங்கள் கை நீட்டி வாங்கிய பணத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற மக்கள், வாக்களித்த மக்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணமில்லாத அரசியல்வாதிகளிடம் சோரம் போய்விடுகின்றனர்.
 தேர்தல் நடைமுறைகள் நம்பகத்தன்மையுடன் இருக்கும் பட்சத்தில் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதை இயல்பான ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், பணபலம்தான் இங்கே வெற்றி, தோல்விகளைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணியாக இருக்கும் நிலையில், அரசியலை மக்களுக்கான சேவையாக மட்டும் முன்னெடுத்து, மக்களாட்சியின்பால் உண்மையான பற்றோடும், நம்பிக்கையோடும் களத்தை எதிர்கொள்பவர்களுக்கு எப்படி அவை இயல்பானதாக இருந்துவிட முடியும்? நியாயமான இந்தக் கேள்வியை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நல்லோர் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
 தேர்தலுக்குத் தேர்தல் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் வேட்பாளர்கள் மீதும், அவர்கள் சார்ந்த கட்சிகள் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, அவர்களைத் தண்டிக்க வேண்டும்.
 வாக்களிக்கப் பணம் கொடுத்த அந்த வேட்பாளரை குறைந்தபட்சம் தேர்தல் களத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதற்கான அதிகாரங்கள் இல்லை என்றால் அந்த அதிகாரங்களை உருவாக்கித் தந்து தேர்தல் ஆணையத்தை வலிமையான தன்னதிகாரம் கொண்ட அமைப்பாக மீள் கட்டமைப்புச் செய்ய வேண்டும்.
 அரசும், தேர்தல் ஆணையமும் தவறவிடும்போது மக்களாட்சி முறைமையின் மீது நம்பிக்கை இழக்காமல் காத்து நிற்கும் ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களாக விளங்கும் நீதித்துறையும், ஊடகத்துறையும், அறத்தின் வழி நின்று நெஞ்சுறுதியோடும், நேர்மைத் திறத்தோடும் இந்த மாபெரும் ஜனநாயகப் படுகொலையினைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
 அதிலும் குறிப்பாக, முன்னெப்போதையும்விட பாமர மக்களின் குரலாக விளங்கக்கூடிய ஊடகங்கள் எளிய மக்களிடம் வெளிப்படையாகவும், வெகு வேகமாகவும் அரசியல் தெளிவை ஊட்ட வேண்டும். விலை மதிப்பற்ற வாக்கை விற்கும் போக்கினை மாற்றுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முனைய வேண்டும். அது குறித்தத் தொடர் விவாதங்களை முன்னெடுக்க வேண்டும்.
 கடந்த கால இந்திய ஒன்றிய வரலாற்றில் பல்வேறு இக்கட்டான காலகட்டங்களில் ஜனநாயகத்திற்குப் பேராபத்து விளைந்தபோதெல்லாம் அதனைக் காப்பாற்றியதில் பெரும்பங்கு வகித்த பெருமையை உடைய நீதிமன்றங்கள் இந்தச் சீர்கேட்டிலிருந்தும் இந்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.
 அப்பொழுதுதான் எங்களைப் போல எதிர்காலத்தில் அரசியல் களத்திற்கு வரும் கட்சிகளுக்கும் மக்களாட்சியின் மீதான நம்பிக்கை தகர்ந்து விடாமல் காக்கப்படும். உலகத்தின் மாபெரும் மக்கள்தொகை மிகுந்த நாடு நடத்துகிற தேர்தலின் ஜனநாயகம் முழுமையாகப் பேணப்பட வேண்டும்.
 அதிகாரம் படைத்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற அவைகளில் ஆளுங்கட்சிகள், எதிர்க்கட்சிகள், அவற்றின் கூட்டணிக் கட்சிகள் என எல்லாத் தரப்பிலும் பணம் கொடுத்து வாக்குகள் வாங்கி வெற்றி கண்ட பெரும்பான்மையானவர்கள் நிறைந்திருப்பதால்தான், வாக்குக்குப் பணம் தருவது குறித்த விவாதங்களே எங்கும் எழாமல் பார்த்துக்கொண்டபடி கள்ள மெளனம் காக்கிறார்கள் என்பது பரிதாபகரமான எதார்த்த உண்மை.
 இந்த இழிநிலை நீடிக்க இன்னும் எத்தனைக் காலம் அனுமதிக்கப் போகிறோம் என்ற கேள்வி மக்களாட்சியை விரும்பும் ஒவ்வொருவர் நெஞ்சையும் துளைக்கக் கூடிய கேள்வியாக உள்ளது. கண்ணுக்கு முன் நடக்கும் இத்தவற்றினைத் தடுக்கத் தவறும் நாம் ஒவ்வொருவரும் குற்றவாளிகளே.
 
 கட்டுரையாளர்:
 தலைமை ஒருங்கிணைப்பாளர்,
 நாம் தமிழர் கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com